கற்போம் கம்பனில் – 4
(28-09-2019)
அடைமொழி சேத்துகினு, அல்டாப்பா பேசிக்கினு, ஓவரா பில்டப் செய்யும் காமெடியன்களைப் பாத்திருப்பீங்க. சில சமயங்களில், வில்லன் ஹீரோக்கள் கூட அப்படி இருப்பது உண்டு. (வீட்டில் கணவன்/மனைவி கூட இப்படி அமைவதை எல்லாம் எதுக்கு சொல்லிகிட்டு?). ஆனா அந்த ஓவர் பில்டப்பில் கொஞ்சம் உண்மை ஒட்டிட்டு இருக்கத்தான் செய்யும். நேற்று சென்னை ஐஐடி பேராசிரியர் அந்தமான் வந்திருந்தார். ”போர்ட் பிளேயர் வரை விமானத்திலும், உங்க ஆஃபீஸுக்கு கப்பலிலும் வந்தேன்” என்றார். ஓவரா (நிஜமாகவே) பெய்த மழையில் காரணமாய் ரோடு படுமோசமாகி, கப்பல் ஆட்டம் போல், கார் ஆடி வந்ததை ஓவர் பிலடப்பில் சொன்னார் அவர்.
வீடுகளில் குழந்தைகளை பேய், பிராணனை வாங்கும் பிசாசு எல்லாமாய் ஏகமாய் பில்டப் செய்து திட்டும் தாய்மார்களைப் பாத்திருப்பீங்க. (தந்தைமார்களும் ஒத்து ஊதியபடி – வழக்கம் போல் இருந்திருப்பர்). ஆனா அதே குழந்தை தேமேண்ணு ரகளை எல்லாம் செய்யாமெ இருந்தாக்கா, அப்பொவும் டாக்டர்கிட்டே ஓடுவாய்ங்க. ஐயன் வள்ளுவர் காதிலும் இந்த குழந்தைகள் செய்யும் சேட்டைகள் விழுது; அதை அப்படியே பில்டப் செய்வதைப் பாருங்களேன். அந்தக் குரல் குழல் யாழைவிட இனியதாம். குறளில் சொன்னது
குழl இனிது
யாழ் இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்!
அதே மாதிரி, நேரம் காலம் தெரியாமல் லோன் வாங்கச் சொல்லித், துன்றுத்தும் பன்மொழிப் புலவர்களை பேங்கில் வேலைக்கு வைத்திருப்பார்கள். எந்த மொழிக்கு மாறினாலும் பதில் வருது. அதை ஒரு உதவி என (ஒரு பில்டப்புக்குத்தானே எல்லாம்) வச்சிக்கிட்டா, அத்தகைய உதவி வானகமே, வையகமே தருவதற்கு ஈடாகுமாம். அய்யனின் இந்த பில்டப்பும் சூப்பர் தானே?
செய்யாமற்
செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்ற லரிது!
நாம் ஒருவர்க்கு உதவி செய்யாத போதும், நமக்குத் தேவைப்படுங்கால் நாம் அழைக்காமல் தானாய்வந்து உதவி செய்பவரின் உதவி சிறந்ததுதான். ஆமா பேங்க் லோன் நச்சரிப்பு இதில் சேர்த்தியா?
கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது உலகளவு என்பதும் ஒரு வகையில் பிலடப் தான்.
அண்ணன் தங்கை பாசத்தை உலகுக்கு காட்டிய ஒரு படத்தில், தங்கக் கடியாரம் வைர மணியாரம் (அதுவும் ஒரு பில்டப் தானே?)தந்து பேசுவதாய் பாடல் வரிகள் வரும். இப்ப இப்படி ஏதும் பேசினா, வரன் வருதோ இல்லையோ, இன்கம் டாக்ஸ் ரெய்டு தான் வரும்.
வைரமுத்துவின் ஆரம்ப கால காதல் வரிகளை லேசா நோட்டம் விடலாம்: (ஆரம்பகால காதலியையும் சந்தர்ப்பம் கிடைத்தால் நோட்டம் விடுங்களேன். யாரு வேணாம்ணு சொன்னாக?) ”நீ சிரிக்கும் போது பௌர்ணமி நிலவு அத்தனை திசையிலும் உதிக்கும்”…அட.. அட.. அடடா…ம்… அப்புறம்…?
”நீ மல்லிகைப் பூவைச் சூடிக் கொண்டால் ரோசாவுக்குக் காய்ச்சல் வரும்” (அந்த ஆந்திரத்து
அரசியல்வாதி ரோஜா இல்லீங்கோ, நேரு மாமா கோட்டில் இருக்குமே, அந்த அசல் ரோசாவுக்காம்).
செமெ பில்டப்பில்லே…
காதலி மேல் உள்ள பாசம் (வழுக்கி விழவும் வைப்பதால்) போல், ஊர்ப் பாசத்தையும் கூட சேத்துக்கலாம். காவிரி நாட்டிலெ மீன் கூட கரையேறி வந்து விளையாடுமாம். வாவ்..
கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு – எங்கள்
உறையூரின் காவலரே வாழிய நீடு
காதல் வந்தாக்கா அப்புறம் வீரம் வரலைன்னா எப்படி? வாங்க அப்படியே ஒரு ரவுண்டு… (ஹலோ..ஹலோ… ஏன் இவ்வளவு உற்சாகம் உங்க முகத்திலெ? ரொம்பத்தான் அந்த டாஸ்மாக் கெடுத்திருக்கு உங்களை) புறநானூறு சொல்லும் போர்க் காட்சி பக்கம் போவோம். ராசா நலங்கிள்ளியோட படை ரொம்ம்ம்ம்ம்ம்ம்பவே பெருசாம். (நம்மாலெ இம்படி மட்டும்தான் சொல்ல முடியும்) ஆனா ஆலத்தூர் கிழார் சொல்லும் விதமே தனி..
தலையோர் நுங்கின்
தீங்சோறு மிசைய,
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்,
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர,
தேர்தல் காலத்தில் நம்மாளுக ஊர்வலம் போடுவாய்ங்க, 5 மணி நேரம் ஆச்சு ஓர் இடத்தைக் கடக்க என்பார்கள். ஆழத்தூரார் அந்த படையெப் பாத்து சொல்றார். முன்னே செல்லும் படை பனங்காய் நுங்கு தின்னும் காலத்தில் இருக்காம். நடுவில் போகும் படை, போகும் போது பனம்பழம் வரும் காலமாகிவிடுமாம். (ய்ப்பா..என்ன பில்டப்பு?) கடைசியில் வரும் படை வரும் போது, பனம்பழம் பொதெச்சி, வரும் கெழங்கை சாப்பிட்டே வருவாகளாம். (நினைக்கவே முடியாத ஓவர் பில்டப்பா கீதே)
”என்ன ஒரே பில்டப் பிலடப்பா போகுது இன்றைய மேட்டர்?” கேட்டபடி வந்தார் கம்பர். அப்புறம் நோட்டம் விட்டார். நான் கேட்காமலேயே ஒரு பாட்டு குடுத்து கம்பி நீட்டி விட்டார். அதையும் தான் பார்ப்போமே…
பருதிவானவன் நிலம் பசை அறப் பருகுவான்
விருது மேற்கொண்டு உலாம் வேனிலே அல்லது ஓர்
இருது வேறு இன்மையால். எரி சுடர்க் கடவுளும்
கருதின் வேம் உள்ளமும் காணின் வேம் நயனமும்
[பால காண்டம், கையடைப் படலம்]
[சூரிய தேவன், நிலத்திலே சிறிதளவு ஈரமும் இல்லாதபடி குடித்து விடுவதற்கு தன் வெற்றிக் கொடியை மேலே உயர்த்திக் கொண்டு திரிகின்ற முதுவேனிற் காலமே அன்றி வேறொரு பருவம் அங்கே இல்லை. அவ்விடத்தை நினைத்தால் அவனுடைய நெஞ்சும் வெந்து போகும்]
மண்டெயெப் பிளக்கும் உச்சி வெயில். நாமெல்லாம் குடை எடுக்க
ஓடுவோம். கம்பனுக்கு கற்பனைக் குதிரை ஓடுது. (அந்தச் சூட்டிலுமா…?) இது தான் கம்பனில் நாம் இன்று கற்க இருக்கும் அணிப்பாடம்:
உயர்வு நவிற்சி அணி
உள்ளது உள்ளபடி சொல்லாமெ, கொஞ்சம், லேசாவோ, ஓவராவோ பில்டப் செய்து சொல்வது எல்லாமே இந்த அணியில் அடங்கும். ஆக (ஏன் உங்களுக்கு இப்பொ அனாவசியமா தளபதி ஞாபகம் வருது?), உள்ளது உள்ளபடி உரையாமல் மிகைப்படுத்திக் கூறுவன யாவும் உயர்வு நவிற்சியணியாகும். (இலக்கணப் பாடம் நடத்தும் போது ஒரு வாக்கியமாவது இலக்கணத் தமிழில் சொல்லாட்டி எப்புடி???)
ஒரு பொருளின் தன்மை இருக்கணும். (பூ மணக்கும்; இது பூவின் தண்மை)
அதை கொஞ்சம் பில்டப் செய்து சொல்லணும். (பூ சூடியதால் அவள் மணக்கிறாள்… சூப்பரில்லே. நினைக்கும் போதே மணக்குதோ?)
முக்கியமான இன்னொரு விதி, இரசிக்கும்படியா பில்டப் செய்து சொல்லணும். பூவோடு சேர்ந்த நார் மணக்கும் ஓகே. பன்றியோட சேர்ந்த பசுவும்… நோ..நோ..பேட் வேர்ட்ஸ்…
கற்றலும் கற்பித்தலும் தொடரும்.
அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்.