வம்பன் பார்வையில் வம்பன்


வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 97
(25-08-2019)

அவனவன் நூத்துக்கணக்கான ஃப்ரெண்ஸோட ரொம்ப நிம்மதியா இருக்காணுவ… நானு ஒரே ஒரு ஆளெ வச்சிகிணு படாத பாடு படும் அவத்தைகளின் (அவஸ்தை தாணுங்கோ… நான் தூய தமிழ் வாரத்தைகளை தவிர்க்கிறேன் என்ற புகாரை தவிர்க்கும் விதமாய் பயன் படுத்தியது) புலம்பல் கேட்டிருப்பீங்க. எனக்கு என்னவோ, இலக்கியக் கூட்டங்களில் போகும் போது ஒரு விதமான தாழ்வு மனப்பான்மை வந்து சேரும். பின்னே சந்திக்கும் இலக்கியவாதிகள் எல்லாமே நூத்துக்கும் அதிகமான நூல் எழுதியோர் தான். எப்படி இது சாத்தியம்? என்ற கேள்வியை முந்திக் கொண்டு, ’எப்படி அவுக சம்சாரம், இதையெல்லாம் கண்டுக்காமெ இருக்காக?’ என்ற கேள்வி வந்து விழும்.

கம்பன் பற்றிய முதல் நூலான “பாமரன் பார்வையில் கம்பன்” வெளியிட நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். அதெல்லாம் தாண்டி இப்பொ மூன்றாவது நூலாக ’வம்பன் பார்வையில் கம்பன்’ என்றதும் இதுவரை ஆதரவு தந்த பிரசுரமே யோசிக்கிறது. ”வம்பன்” என்பது ஏதோ லோ பட்ஜெட் படம் மாதிரி இருக்கு போல, ஏதேதோ காரணம் சொன்னார்கள். வம்பன் பேர் வச்சி 100 தொடர் வரும் இந்த நேரத்தில், இப்படி ஒரு சிக்கல். (சிக்கல் என்பது மூணு முடிச்சிலும் வரலாம்; நூறு பதிவிலும் வரலாமோ?

ஆமா… தெரியாமத்தான் கேக்கேன்? பாமரன், சாமாண்யன் மாதிரி வம்பன் ஒரு ஃப்ளோவிலெ வந்திடுச்சி. நல்லாத்தானே இருக்கு? வம்பன் என்ன கெட்ட வாரத்தையா என்ன?

சொல்லப்போனா “கம்பன் ஒரு வம்பன்” என்று அண்ணா காலத்து, மீம்ஸ் மாதிரி, அப்பவே சொல்லி இருக்காய்ங்களே…? போதாக்குறைக்கு, பாரதிக்கே ’கம்பனைப் புகழ்ந்த வம்பன்’ என்று பெயரும் இருக்கே! (அது நல்ல பெயரா? கெட்ட பெயரா? தெரியலையே? இதில் தானே சிக்கலே உள்ளது அமைச்சரே)

அமைச்சர் என்றவுடன், மெத்தப் படிச்ச அமைச்சர் நமக்குத் தெரிந்து, மாணிக்கவாசகர் தான் இருக்கார். அவர் கிட்டெ கேட்டாக்க, அவரே தன்னை ஒரு வம்பர் என்று சொல்லிக்கிறார். (என்ன இந்த அமைச்சர்கள் செய்யும் கூத்து?) “வம்பனேன் வினைக்கிறுதி இல்லையே” என்று ஆனந்தாதீதத்தில் புலம்புகிறார். ஒண்ணுக்கும் லாயக்கில்லாதவன் என்பதாய் பயனிலி என்பது தான் வம்பன் என்பதற்க்கு பொருள் சொல்கிறார்கள். மாணிக்கவாசகர் தன்னை ஒரு வம்பன் எனச் சொல்லும் போது, அதை எப்படி புறம் தள்ளிட முடியும்?

அப்பொ இலங்கைக்கே போய் அங்கே இருக்கும் கம்பவாரிதி ஜெயராஜ் அய்யாகிட்டெ விளக்கம் கேக்கலாம்ணு போனா, அங்கே அவருக்கு கருப்பு கொடி காட்டிகிட்டு இருக்காய்ங்க.. (அவருக்குமா….?) கம்ப வாரிதிக்குப் பதிலாக வம்ப வாரிதி அல்லது வம்ப வாரிசு எனப் பட்டம் தரலாமா என்று கி.பி. அரவிந்தன் அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார். (கி பி யோசித்து, க வா யா? அல்லது வ வா ஆ? என முடிவு செய்தாரா? என்பது பற்றி தகவல் இல்லை.) கிமூ ரேஞ்சில் 1894 இல் ராஜமையர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவல்லெ கூட வம்பன் வர்துங்கோ…; அதில் வம்பர் பகாசபைக்குத் தலைமை தாங்கும் சுப்பம்மாள் கேரக்டெர் செய்யும் வம்புகளுக்கு அளவே இல்லையாம். (முழு நாவலும் நெட்டில் கிடைக்கிறது; நான் வம்பன் குறிப்பு மட்டும் படிச்சேன்)

இலக்கிய உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான ஜெயமோகன் அவர்களும், இலக்கிய வம்பர்கள் என்ற பட்டியலில் அசோக மித்ரனையும் சேர்த்துள்ளார். (ஆக வம்பன் என்பதில் சகட்டு மேனிக்கு A to Z எல்லாரும் இருப்பாகளோ?). பொதுவா இணைய உலக விளக்கப்படி அடிக்கடி கேள்வி கேட்பவர்களுக்கு பொத்தாம் பொதுவாய் வம்பர் என்பார்களாம். கூகுள் பொய் சொல்லாதுங்கோ… (நன்றி: கோமாளி திரைப்படம்.)

பெரிய பெரிய் கோயில் எல்லாம் கட்டிய சோழர்களின் தாத்தாவுக்குத் தாத்தா, உருவப் பல்தேர் இளஞ் சேட் சென்னி (பெயர் மட்டும் சிறுசா இருக்குமா என்ன?) வம்பர், வடுகரை ஜெயிச்சவர் என்று அகநாணூறு சொல்லுது. (கூகுலே பொய் சொல்லாது என்றால், அக400 மட்டும் பொய் சொல்லுமா என்ன?) அப்பொ வம்பர் என்பது ஏதோ ஒரு குட்டி(க்கு) ராஜாவையாவது குறிகலாம். (காலரை தூக்கி விட்டுக்கலாமா அப்பொ?)

ஒரு எட்டு கருப்புச் சட்டைக்காரர்கள் பக்கமும் போய் விசாரிச்சேன்.. வட சொல் தமிழ்ச்சொல் அகராதியில் துஷ்டன் என்பதற்க்கு தமிழாக தீயவன், பட்டி, வம்பன், பொல்லான், கொடியோன் என்ச் சொல்லி இருக்கு. ஏனுங்க என் மொகத்தெப் பாத்தா அப்படியாங்க இருக்கு? [என் பதிவுகளை ஹிந்தி ஆக்கம் செய்ய வேண்டுகோள் வருது. வடிவேலின், ’வடெ போச்சே?’, ’ஆணியே புடுங்க வேணாம்’ என்பதை எப்படி ஹிந்தியில் சொல்வது என முழிக்கிறேன்) ஐய்யய்யோ தப்பான எடத்தில் ஹிந்திட்டேனோ? என்னது வம்பன் காலனியா? வம்பன் நால் ரோடா? புதுக்கோட்டை மதிமுக பெரும்புள்ளி இருக்கும் இடமா.. என்ன இது பெரும் வம்பா போச்சி?

”என் இனிய வம்பனே! வம்பனுக்கு இன்னொரு பொருளும் இருக்கு தெரியுமா?” கம்பர் கிளைமாக்ஸில் வரும் ரவிகுமார் போல் வந்தார்.

”தெரியாதே சாமீ… “ வழக்கம் போல் நான்.

“அப்போ… தம்பி உடையான்….”

”படைக்கு அஞ்சான்…” முந்திக்கொண்டு முடித்தேன்.

“அதான் இல்லை. தம்பி உடையான் பகைக்கு அஞ்சான்… அதே பாட்டில் வம்புக்கு வேறு பொருள் கிட்டும். பாரு கிட்டு… “ சொல்லி மறைந்தார் கம்பர்.

ஆமா… வம்பு என்றால் வாசனை எனவும் பொருள் இருக்காமே… அப்பொ வம்பன் என்றல், மணமுள்ள கிட்டுவா நான்? ஆஹா… பாரதிராஜா படத்து ஹீரோயின்களின் தோழிகள் கூட வார மாதிரியே இருக்கே…!!!

வாங்க… அதே வாசத்தோட, பாசத்தோட அந்த வம்பு பற்றிச் சொன்ன பாட்டும் படிக்கலாம் … வாங்களேன்.

‘கம்ப மதத்துக் களி யானைக் காவல் சனகன் பெற்றெடுத்த
கொம்பும் என்பால் இனிவந்து குறுகினாள் என்று அகம் குளிர்ந்தேன்;
வம்பு செறிந்த மலர்க் கோயில் மறையோன் படைத்த மாநிலத்தில்,
”தம்பி உடையான் பகை அஞ்சான்” என்னும் மாற்றம் தந்தனையால்.
[யுத்த காண்டம் – இந்திரசித்து வதைப் படலம்]

[(இலக்குவ! நீ இந்திரசித்தனை வென்றதனால்) அசைந்தாடும் இயல்புயை மதக்களிப்பு மிக்க யானை போன்று தன் இனத்தைக் காக்கும் காவற்சிறப்பினை உடைய சனகன் பெற்ற பூங்கொம்பு போன்றவளாகிய சீதையும் இனி என்னிடம் வந்து நெருங்கிவிட்டாள் என்று மனங் குளிர்ந்தேன்; மணம் நிறைந்த தாமரை மலரைக் கோயிலாகக் கொண்ட பிரமன் படைத்த இப்பெரிய உலகத்தில் ”தம்பியை உடையவன் பகைக்கு அஞ்சமாட்டான்” என்னும் சொல்லை எனக்குத் தந்தனை” (என்று பாராட்டினான்).]

வம்பன் பார்வைகள் தொடரும்

அந்தமானிலிருந்து
தமிழ்நெஞ்சன்

4 thoughts on “வம்பன் பார்வையில் வம்பன்

  1. jayarajanpr says:

    பாமரனாக கம்பனைச் சுற்றி வலம் வந்தவர், தற்போது வம்பனாக மாறி கம்பனை விடாமல் துரத்துவது அறிந்து சற்றே அச்சமாகத்தான் உள்ளது. உங்க பாஷையிலே சொல்றதா இருந்தா, “ஏதோ பாத்து செய்யுங்கோ…. வச்சி செஞ்ச்சுராதீங்கோ…” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. மற்றபடி கட்டுரை வழக்கம் போல. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
    -PRJ

    • Tamil Nenjan says:

      நன்றி.

      பாமரனில் ஆரம்பித்து
      சாமாணியனில் தொடர்ந்து
      வம்பனில் இருக்கிறேன்…

  2. upamanyublog says:

    உங்கள் மொழி என்ன பிரவாளம்?
    மணிப்பிரவாளத்திற்கு மாற்றாக ஒரு பிரவாளத்தை உருவாக்கியிருக்கிறீர்கள்.

    ஓ.எஸ்.ஸுப்ரமண்யன்.

    On Sun, 25 Aug 2019 at 23:57, அந்தமான் தமிழ் நெஞ்சன் wrote:

    > Tamil Nenjan posted: ” வம்பன் பார்வையில் கம்ப சூத்திரம் – 97 (25-08-2019)
    > அவனவன் நூத்துக்கணக்கான ஃப்ரெண்ஸோட ரொம்ப நிம்மதியா இருக்காணுவ… நானு ஒரே ஒரு
    > ஆளெ வச்சிகிணு படாத பாடு படும் அவத்தைகளின் (அவஸ்தை தாணுங்கோ… நான் தூய தமிழ்
    > வாரத்தைகளை தவிர்க்கிறேன் என்ற புகாரை தவிர்க்க”
    >

    • Tamil Nenjan says:

      அந்த மாதிரி எல்லாம் நினைத்து எழுத ஆரம்பிக்கவில்லை. இது போல் கம்பனை இழுத்து யாரும் எழுதலை… அதான் தொடர்கிறேன்.

Leave a reply to jayarajanpr Cancel reply