சமீபத்தில் வாத்தியார்களுக்கு பட்டப் பெயர்கள் வைப்பது பத்தி ஒரு தனியார் தொலைக்காட்சி அறிவிப்பு கொடுத்தாலும் கொடுத்தது, நீயா நானான்னு மக்கள் முகநூல் வாட்ஸ் அப் என்று பொங்கி எழுந்து விட்டார்கள். ஒரு வேளை அடுத்த மேடை விவாதத்துக்கு ”இந்த மாதிரி தலைப்பு தேவையா? இல்லையா?” என்றே வச்சிருவாகளோ? செஞ்சாலும் செய்வாய்ங்க. ”விஜய் அப்பா” ன்னா யாரு தெரியுமா? ஷோபாவோட புருஷர்ன்னு சொல்லுவீங்க..சாரி..அது என்னோட பேருங்க. எப்படி??
வாத்தியாருங்களுக்கு பட்டப் பெயர் இருக்கோ இல்லையோ, நம்ம பசங்க பேரெடுக்கிறாங்களோ இல்லையோ, அவங்க சப்ஜாடா நம்ம பேரெ எட்த்துட்றாங்க. அவங்க அவங்க பேரோட அப்பான்னு சேத்து சொல்ல வேண்டிய நெலமை நம்மது இருக்கு. அம்மாக்கள் தினத்திலெ அவங்களுக்கும் இதே கதிதான் என்கிறதையும் சொல்லியே ஆகணும்.
ஆனா பேரு வைக்கிறதுக்கும் ஒரு நோக்கம் இருக்கணும். நாம படிக்கிறச்செ ரிசர்வ் பேங்க் கவர்னர் பேரு மன் மோகன் சிங். இப்பொல்லாம் எல்லா மீடியாக்களில் அந்தப் பெயர் வருவது போல் இந்தப் பெயர் அவ்வளவு பாப்புலர் ஆகாத காலம். கூடப் படிக்கும் ஒரு அறிவுள்ள (அழகானவளும் கூட) மாணவிக்கு எம் எம் எஸ் என்று பட்டப் பெயர் வைத்தோம். அடிக்கடி பேசி அந்தப் பெயர் மனதிலும் இருக்கும். [ஆனா இப்பொ அந்தப் பொண்ணு பேரு மன்சுலெ இல்லீங்கொ] அதே போல் அல்டாமிஷ் என்றும் ஒரு பட்டப்பெயர் இன்னொருத்திக்கு வைத்தோம். உங்களில் எத்தனை பேருக்கு குதுப்மினாரைக் கட்டி முடித்தவர் பேரு தெரியும்? அட அது தாங்க அல்டாமிஷ். அலட்டிக்காமெ இப்படி பட்டப் பேரு எல்லாம் வச்சி பட்டமெல்லாம் வாங்கினதெல்லாம் பழங்கதைங்க.
பட்டப் பெயரெல்லாம் கூட பரம்பரெ பரம்பரெயா வரும் போலிருக்கு. சமீபத்தில் கும்பகோணம் போனபோது, ”என் பையன் கொஞ்சம் அதிகம் தூங்குறான்” என்றேன். உன் புள்ளெ உன்னெய மாதிரிதானே இருப்பான் என்று உடன் பதில் வந்தது. ஒரு வேளை அப்பவே கும்பகர்ணன் என்று பேரு வச்சிருப்பாங்களோ? [அப்பாடா… ராமாயணம் வந்தாச்சி ஒரு வழியா. கம்பரை கொண்டு வந்திடலாமா? ம்..ம்… டைட்டிலுக்கு மேட்ச் இன்னும் வரலியே??… அப்பொ இன்னும் கொஞ்ச நேரம் சுத்திட்டு கம்பருக்கு வரலாம்]
அப்படியே காரில் போகும் போது நமக்கெல்லாம் ”பழைய பாட்டு கேட்போர் சங்கம்” ன்னு பேரு வச்சிட்டாங்க இப்போதைய தலைமுறை. ”அர்த்தம் புரியாத பாட்டு கேட்போர்” என்று நாமளும் பேரு வச்சோம் பசங்களுக்கு. [நாமெல்லாம் அப்பவே பட்டப் பேரு வச்ச கதையும் சொன்னோம் என்பதை எதுக்கு மறைக்கணும்?] அதெல்லாம் கெடையாது. அர்த்தம் இருக்கு பாருங்க என்று, அழுக்கு மூட்டை மீனாட்சி மொகத்தெக் கழுவி நாலாச்சி என்று விளக்கமும் வந்தது ஒரு புதுப்பாட்டின் மூலம்.
ஸ்பெல்லிங் மிஸ்டேக். நாளாச்சின்னு தான் வருது; நாலாச்சி இல்லை என்றேன். கூடவே விளக்கமும் வந்தது. மீனாட்சி என்ற ஒரு நபர் முகத்தைக் கழுவக் கழுவ, முதல் நபர் நான்கு நபரா மாறி பாக்கிறவங்க கண்ணுக்கு தெரிஞ்சாகளாம். இதெத்தான் அயிக்கு மூட்டெ மீனாச்சி மூஞ்சி கய்வி நாலாச்சி என்று பாடியிருக்காய்ங்க என்று கோணார் இல்லாமல் உரை வந்து விழுந்தது. கூடவே நீங்களும் இப்படி கம்பன் பாட்டிலும் ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் பாருங்களேன் என்று அட்வைஸ் வேறு.
நானும் விவேக் ஸ்டைலில், அடப்பாவிகளா இப்பொத்தான் கம்பன் விழாக்கள் நடக்கும் இடங்கள்லெ ஏதோ இன்விட்டேஷனாவது வந்துட்ருக்கு. இப்படி கம்பனில் எழுத்துப் பிழைன்னு தேட ஆரம்பிச்சோம், அதுக்கும் ஆப்பு தான்.
ஆனா, ஒரு மாதிரி எழுத்துப் பிழை சாயல்லெ ஒரு கம்ப மேட்டர் சிக்கினதெச் சொல்லாட்டி, எனக்கு எப்படி தூக்கம் வரும்? [கம்பனை கரைத்துக் குடித்தவர்கள் தயவு செய்து மன்னிக்கவும்]
மொதெல்லெ சிச்சுவேஷன் சொல்லிட்றேன். வாலி வதம் முடிந்ததுக்கு அப்புறம், இராமன் சுக்ரீவனுக்கு அறிவுரை சொல்லும் இடம். சுக்ரீவன் கிரீடம் எல்லாம் போட்டுகினு, பொய்யே சொல்லாத இராமன் கால்லெ தபால்னு விழுகிறார். கட்டிப்புடி வைத்தியம் மாதிரி மொழியின் எல்லையை அறிந்த இராமன், கொஞ்சம் அட்வைஸ் சொல்லும் இடம். ”ஆமா… எல்லாம் சரியாத்தானே இருக்கு?” என்று தருமி மாதிரி சொல்லப்படாது. இப்பொ இந்த நக்கீரன் எண்ட்ரி ஆகும் இடம் வருது.
இராமன் காலில் விழும் போது, அந்த நேரத்தில், அந்த தாழும் வேளையில் என்று தானே இருக்க வேண்டும். வம்படியா கம்பன், அந்த தாழும் வேலையில் என்று மிஸ்டேக்கா சொல்றதா இந்த சாமான்யன் பார்வை சொல்லுது. கால்லெ விழுவதே வேலையாகச் செய்த என்று எடுத்துக்கலாமா? அல்லது வேல் மாதிரி காலில் பாய்ந்து வணங்கினான் என்று சொன்னாரோ?, இது அந்தக் கம்பருக்கே வெளிச்சம்.
இதோ அந்தப் பாடல் வரிகள்…
பொன் மா மௌலி புனைந்து பொய் இலான்
தன் மானக் கழல் தாழும் வேலையில்
நன் மார்பில் தழுவுற்று நாயகன்
சொன்னான் முற்றிய சொல்ல்ன் எல்லையான்.
மூஞ்சி கழுவி நாலாச்சிக்கும், தாழும் வேளைக்கும் நம்ம போட்ட முடிச்சு எப்படி??
எது எப்படி இருந்தாலும், எல்லா புகழும் கம்பனுக்கே…
அட போங்க ! தமிலே இப்படித்தான் பேசறாங்க சில பேரு !
எது சந்தோஷம் தருகிறதோ அதைச் செய்கிறார்கள். அப்படியே பேசுகிறார்கள். சந்தோஷம்..ரொம்ப முக்கியம்…. ஆமா நீங்க சதோஷமா கீறீங்களா?
என் வழி தனி வழி என்கிற மாதிரி,
உங்கள் பார்வையே தனி பார்வையா இருக்கிறது.
விழுந்து விழுந்து படிச்சா விமர்சனம் தானா வரும் !
இன்னும் உங்க விமர்சனம் வரலியே சாமி…
Kamal Hasan oru padathil solvathu pol, artham parkak koodathu, Rasichitu poite irukkanum. Anyway your connecting Kambar with Ayukku mootte line is super. Antha Kambar mannikkattum.
பழமொழி சொன்னா அனுபவிக்கணும்…ஆராய்சி செய்யக் கூடாது என்பது கமல் பாணி. எதிலாவது எப்படியாவது கம்பரைக் கொண்டு வருவது டி என் கே ஸ்டைல்.
சுவடியில ஒலுங்காத்தான் எலுதுநாரு
பிறிண்ட்டிங் மிஸ்டேக்
ஓஹோ..அப்படியும் இருக்கலாமோ…யோசிக்கலையே??