மன்மதலீலையை வென்றார் உண்டோ….


manmadaleelai

சாதனை படைத்த இந்த பாடல் வரிகளின் பேக்கிரவுண்ட் தெரியுமா உங்களுக்கு? வீட்டில் யாரும் பெருசுகள் (தப்பி பிழைத்து) இருந்தால் கேட்டுப் பாக்கவும். அது காஃபி ஷாப் எல்லாம் இல்லாத ஒரு கற்காலம். தெருவில் நின்னு டீ சாப்பிடும் போது, இந்தப் பாட்டு போட்டால் அந்தத் தெருவே அந்தக் கடைக்கு வந்து டீ குடிச்சிட்டு போகுமாம். எலெந்தெப்பழம், ஓரம் பொ தொடங்கி தற்கால கொலவெறி பாடலுக்கெல்லாம் இல்லாத ஒரு ஸ்பெஷல் அட்ராக்ஷன் அந்தப் பாட்டுக்கு இருந்திருக்கிறது. எளிய வார்த்தைகள், இனிய ராகம், எல்லாத்தையும் தாண்டி, தியாகராஜ பாகவதர் குரலும் ஓர் இனிய காரணம். அக்காலத்திலேயே பலரும் அந்தப் பாகவதரின் கிராப்பை வைத்துக் கொண்டனர். இன்றளவும் ”பாகவதர் கிராப்” என்று அந்த பாகவதருக்கு மரியாதை தந்தபடி உள்ளது.

manmadaleelai old

அதே பாடலை சில வருஷம் கழித்து ரீமிக்ஸ் (அப்போதே) செய்து பரமக்குடிக்காரனை குதிரை மீது ஏற வைத்து பின்னோக்கிப் பயணம் செய்ய வைத்தார் பாலசந்தர். இதைப் பத்திப் பேசும் முன்னர் சினிமாவும் சினிமா சேர்ந்த நிலமுமான பரமக்குடிக்கும் அதன் சினிமா தொடர்பும் ஒரு டச் செய்திட்டுப் போகலாம். கமலஹாசன் மூலம் சினிமாவுக்கும் பரமக்குடிக்கும் தொடர்பு வந்ததா? அல்லது சினிமாவில் ஊறிப்போன பரமக்குடியால் கமல் புகழ் பரவினதா? என்பதெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகள்.

பரமக்குடியின் கிழக்குப் பகுதி முழுக்க நெசவாளர்கள் வசிக்கும் பகுதி. செவிக்குணவில்லாத பொது வயிற்றுக்கும் ஈயப்படும் என்பதெல்லாம் அங்கே செல்லுபடியாகாது. வயித்துக்கு உணவே இல்லாத போதும், சினிமா பார்க்கும் உழைப்பாளர் உலகம் அது. அம்மாவின் மடியில் சவாரி செய்தும், முந்தானையைப் பிடித்து சண்டை போட்டு அரை டிக்கெட் எல்லாம் வாங்கி (நல்ல வேளை அந்த Date of Birth Proof எல்லாம் கேட்டு நச்சரிக்கவில்லை அப்போது) அப்புறம் மீசை முளைத்ததும் தனியே பார்க்கவும் வந்தது தான் எனது சினிமா பார்க்கும் வளர்ச்சிப் படிகள்.

வீட்டில் சினிமா பற்றிய விவாதங்கள் சொந்தக்காரர்கள் பற்றிப் பேசுவது மாதிரி எல்லாம் நடக்கும். (இப்பொல்லாம் குடும்பத்தோடு படத்தையே சேந்து பாக்க முடியறதில்லெ…அப்புறம் எங்கிட்டு அதெப் பத்திப் பேச….? ). பேச்சு வாக்கில், மன்மதலீலை படம் வந்திருக்காமே? என்று கேள்வி வர, நானும் வெளையாட்டாக, அதே பாகவதர் படம் தான்… புத்தம் புதிய காப்பியாக புதுப் பெயரில் ரிலீஸ் செஞ்சிருக்காக என்று சொல்லி வைத்தேன். வீட்டில் இருந்த அத்தனை டிக்கெட்டுகளும் அன்று சினிமா டிக்கெட் எடுத்தன.

பாலசந்தர் இயக்கத்தில் கமல் நடித்த வில்லங்கமான மன்மதலீலை படம் பத்தித்தான் உங்களுக்குத் தெரிந்திருக்குமே? கமலின் கேரக்டர் ஒரு ஸ்திரிலோலர் (நம்மூர்காரருக்கு மரியாதை தராமல் இருக்க முடியுமா என்ன?), சின்ன சபலபுத்தி அல்லது லேடீஸ் வீக்னஸ் என்பது போன்ற சாயலில் வெளுத்து வாங்கிய படம். அழகான மூஞ்சியெ அலங்கோலமாக்கியே பின்னிப் பெடலெடுக்கும் நபர்… இந்தக் கேரக்டரை சும்மா விடுவாரா என்ன?

படம் பார்த்து திரும்பி வந்த, வீட்டில் உள்ள மகளிர் படை எல்லோருமா சேந்து என்னையெ உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாங்க… இனிமே நீ சொல்ற படமே நாங்க போகமாட்டோம் என்று சத்தியப்பிரமானம் வேறு நடந்தது தான் டாப். சின்னப் பையன் நீ எல்லாம் போயிடாதே, என்று அட்வைஸ் அம்புஜமாய் மாறினர் சிலர். எதையுமே செய்ய வேணாம்னு சொல்றச்சே, அதெச் செஞ்சே பாக்கும் குணம் தான் நம்ம ஜீன்லெயெ இருக்கே?? குருப் ஸ்ட்டி என்று (வழக்கமா எல்லோரும் சொல்ற பொய் தான்) சொல்லிட்டு மன்மதலீலைக்குள் நுழைந்தேன்.

ஓரளவு புரிந்த மாதிரி இருந்த்து. அதிகமாய் புரியாத மாதிரியும் இருந்தது. அந்தக் கேரக்டெரின் நீள அகல ஆழ உயரம் புரியாத வயதில் இன்னும் குழப்பங்கள் அதிகரித்தன. காமம் பற்றி புரிஞ்சும் புரியாமலும் இருந்த அந்த நேரத்தில் (இன்னும் அதன் நெளிவு சுழிவுகள் முழுசாய் தெரியும் என்று தைரியமாய் வெளியில் சொல்ல முடியவில்லை) மேலும் குழப்பங்கள் அதிகரித்தன படம் பார்த்த பின்னர். அதில் உச்சகட்ட குழப்பத்தில் ஆழ்த்திய காட்சி ஒன்று. கமல், தன் மனைவி உடை மாற்றுவதையும் கூட சாவி துவாரம் வழியாக எட்டிப் பார்ப்பது போன்ற காட்சி தான் அது. வீக்னஸின் உச்சகட்டமாய் சொன்னது, அந்த வயதில் புரியவில்லை. ஏன் இப்படி இருக்கிறார்கள்?

kamal eddipaar

தண்ணி அடித்தவர்கள் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் கொட்டுவதும், போதையில் கூட்டு பலாத்காரம் செய்வதும் ஏன் நடக்கிறது? அது தான் அவர்களின் இயல்பு நிலை என்று படுகிறது. சமூக நிர்பந்தங்கள், தானே தனக்குள் செய்து கொண்ட வேலிகள், சரி தவறு என்பதை நிர்ணயம் செய்யும் எல்லைக் கோடுகள், இமேஜ் இப்படி எல்லாமும் சேர்ந்து நல்லவனாக்கும் முயல்வில் வாழ்கிறான் ஒவ்வொரு மனிதனும். குடி, உள்ளே போன போது அதெல்லாம் மறந்து அப்படியே, இயல்பான சமூக விலங்காய் வாழ்பவன், சமூகம் மறந்த விலங்காய் மாறிவிடுகிறான்.

சுருக்கமாய், சுகி சிவம் ஐயா சொன்னது ஞாபகத்துக்கு வருது. மனுஷன் எப்பவுமே அறிவுக்கும் உணர்ச்சிக்கும் நடக்கிற சண்டையில் தான் வாழ்றான். பெரும்பாலும் அறிவு தோத்துப் போயிடும். நீங்களும் உங்களையே சின்னதா ஒரு டெஸ்ட் செஞ்சி பாத்துகிடுங்க. அதுக்குள்ளெ கம்பர் கிட்டே இருந்த்து ஓர் எஸ் எம் எஸ் வந்திருக்கு. பாத்திட்டு வந்திட்றென்.

தற்சமயம் கவரத்தி தீவில் (இலட்சத்தீவுகளின் தலைநகரே தான்) இருப்பதால் நெட் எல்லாம் சொதப்பி விட்ட்து. அப்படி இருந்தும் கம்பர் SMS மூலம் தொடர்பில் வந்துவிட்டார்.

”என்னப்பூ….இப்படி கதவு இடுக்கிலெ பாக்குறது நாமலும் எழுதி இருக்கோன்லெ….”

”ஐயோ…ஐயனே…. நானு ஏதோ சின்னப்புள்ளெத் தனமா கிறுக்குறேன்…நீங்க ஏதோ சீரியஸா சொல்ல வாரீக…”

கம்பர்: இப்பத்தானே… சுகி சிவம் மெஸேஜ் சொன்னே… அறிவுக்கும் உணர்ச்சிக்கும் நடக்கும் போராட்டம்னு… நீ உணர்ச்சியில் மயங்கி ரசிச்ச ஸீன் அது… நான் அறிவு பூர்வமா எழுதின, எட்டிப் பாக்குற ஸீன் இருக்கு படிச்சிப் பாரு…

எங்கே டூர் போனாலும் கூடவே கொண்டு செல்லும் (மனைவி திட்டுவதையும் பொருட்படுத்தாமல்) கம்பராமாயணத்தை தேடினேன். அடெ..அடடெ.. அதே எட்டிப் பாக்கும் ஸீன். எங்கே? யாரு? எப்பொ?

ஊர் தேடு படலத்தில், கம்பர் படைப்பில் எட்டிப் பார்க்கும் ஹீரோ அனுமன். கமல் கேரக்டர் தான் (மன்மதலீலை படத்தில் தான்) எல்லாருக்கும் தெரியுமே? கம்பரின் அனுமனோ, பொருள்களை விரும்பும் ஆசை என்னும் கொடிய வினையையே வேரோடு பொசுக்கியவனாம் (எவ்வளவு வித்தியாசம் பாத்தீயளா?)

கமல் அப்படியே எட்டிப்பாத்தா, நம்ம அனுமனோ, நூல் மாதிரி… அடெ..அதுக்கும் மெல்லிஸா காத்தெவிட கம்மியா உரு மாறி சாவி துவாரத்திலெ பூந்து பாத்தாராம்.

இன்னிசை மழை மாதிரி, ரொம்ப ஒளி மழை பெய்யும் மாணிக்கத்தில் செஞ்ச சாவித் துவாரமாம் அது…. ம்… இலங்கை எப்படி எல்லாம் இருந்திருக்கு?

தேடியது சீதா தேவியாரை.. என்று சொல்லவும் வேண்டுமோ…
எஸ் எம் எஸ் குடுத்த்துக்கு தேங்க்ஸ் கம்பரே… இதோ உங்க பாட்டு உங்களுக்கே…

தழைந்த மொய் ஒளி பெய்ம் மணித் தாழ் தொறும்
இழைந்த நூழினும் இன் இளங்காலினும்
நுழைந்து நொய்தினின் மெய் உற நோக்கினான்
விழைந்த வெவ்வினை வேர் அற வீசினான்

இன்னும் வேறு எங்காவது எட்டிப் பாத்துட்டு வாரேன்…

7 thoughts on “மன்மதலீலையை வென்றார் உண்டோ….

  1. ulaganathan says:

    கள்ளப் பார்வை கண்ணுக்கு இன்பம்;கிருஷ்ணமூர்த்திக்கோ அது கம்ப(ம்) ரசம்.

    • Tamil Nenjan says:

      நன்றி…. நன்றி…

      அந்தக் கள்ளப் பார்வைக்கு சொந்தக்காரன் நானல்ல… கமல்தான். ஆகவே கம்பரசம் என்பதற்க்குப் பதிலாக, கமல் ரசம் என்று சொல்லலாம்…

  2. “தண்ணி அடித்தவர்கள் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் கொட்டுவதும், போதையில் கூட்டு பலாத்காரம் செய்வதும் ஏன் நடக்கிறது? அது தான் அவர்களின் இயல்பு நிலை என்று படுகிறது. சமூக நிர்பந்தங்கள், தானே தனக்குள் செய்து கொண்ட வேலிகள், சரி தவறு என்பதை நிர்ணயம் செய்யும் எல்லைக் கோடுகள், இமேஜ் இப்படி எல்லாமும் சேர்ந்து நல்லவனாக்கும் முயல்வில் வாழ்கிறான்”

    வணக்கம் அய்யா… மேற்கண்ட பதிவை நான் இப்போதுதான் (1855) படித்தேன். என் கணக்கில் ஏன் தவறுகள் நிகழ்கின்றன் என்று, 1455 மணிக்கு நடந்த நிகழ்வினை வைத்து எழுதியதை இணைக்கிறேன். (சத்தியமாய் இலக்கியத்திற்கும், வேறு எதற்கும் நோ.. சம்பந்த்ஸ்..)

    “களம்: கே. வி. பள்ளியின் பாதை.
    பொறி: மஞ்சள் சுடிதார் மங்கை.
    கவிதை: யாவும் நீ!

    இப்போது
    எனக்குப் புரிந்தது,
    ஏன் நாட்டில்-
    களவு, கொள்ளை
    கற்பழிப்பு
    கணக்கில்லாமல்
    போனது என்று…

    பெண்ணே,
    உன்னைப் படைத்ததும்
    இறைவன்
    ஓய்வெடுக்கப் போனான்.
    இத்தனை அழகாய்
    இனியொரு பெண்ணை
    படைக்கா முடியாதென்று
    விருப்பப் பணி
    ஓய்வெடுத்து
    வீட்டிற்குப் போனான்.

    பார்த்துப் போ,
    பாவம்,
    நீயென்ன செய்வாய்!
    1455280814
    போர்ட் ப்ளேயர்.

    • Tamil Nenjan says:

      நன்றி… ஆனால் கவிஞர்கள் என் கருத்திலிருந்து விலக்கு பெறுகின்றனர்….

  3. T.L.Rajendran says:

    just thing the story supper

  4. Tamil Nenjan says:

    பாராட்டியமைக்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s