படவா கோபியும் ஐயோ கம்பனும்…


Kuwait
என் பொறியியல் கல்லூரித் தோழரும், குவைத் தமிழ் சங்க தலைவருமான பழனிகுமாரிடமிருந்து ஒரு நாள் தொலைபேசி அழைப்பு வந்தது. அங்கு நடக்கும் ஆண்டு விழாவில் கலந்து கொள்ள, நல்ல பேச்சாளர்கள் பெயர் சொல்லேன் என்று கேள்வியுடன் ஆரம்பித்தது அந்த உரையாடல். நானும் என் சிற்றறிவுக்கு எட்டிய, கேள்விப்பட்ட சிறிய, பிரபலமான பெயர்கள் எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தேன். ஏறக்குறைய என்னால் பரிந்துரை செய்யப்பட்ட அனைவரின் பேச்சுக்களையுமே குவைத் தமிழ்வாழ் மக்கள் நேரில் கேட்டு இன்புற்றிருந்தனர் (நம்ம சரக்கும் அவ்வளவு தான் என்பதும் சொல்லனுமா என்ன).

 நான் ஒரு பெயர் சொல்வேன். சிரிக்கக் கூடாது என்று நண்பர் பழனி தொடர்ந்தார் (இப்பொல்லாம் வில்லங்கம் போன்லெ கூட வருமாமே?). நானும் லேசாக சிரித்தபடியே, சொல்லுப்பா என்றேன். ”அந்தமான் கிருஷ்ணமூர்த்தியை பேச அழைத்தால் என்ன?” என்றார் என் நண்பர். எனக்கு வந்த சிரிப்பை அடக்கவே முடியவில்லை. “என்னெயெ வச்சி காமெடி கீமெடி பன்னல்லையே” என்றேன் நான். லீவு வாங்கி, வெளிநாடு செல்ல அனுமதி வாங்கி (வீட்டுக்காரி கிட்டேயும் பெர்மிஷன் வாங்கி).. விசா வாங்கி… இப்படி இத்தனை….வாங்கி… இதெல்லாம் சாத்தியமா என்று தலை சுற்றியது. குவைத்லே வெயில் அதிகம் என்பதால் ஏதாவது கோளாறோ என்றும் யோசித்தேன். அத்தனையும் கச்சிதமாய்,  அதுவும் மிகக் குறுகிய நாளில் மளமளவென்று எல்லாம் முடிந்தன. மனைவியிடம் நல்ல பேர் வாங்க இந்த டிரிப்பை யூஸ் செய்யவும் ஒரு ஹிட்டன் அஜெந்தா மனதிற்குள் உருவானது.  ஹனிமூனுக்கு நல்ல எடமாக் கூட்டிட்டு போகலையே என்ற இல்லத்தரசியின் ஏக்கத்தை (கல்யாணம் ஆகி இவ்வளவு ஆண்டுகள் பின்னர்) அந்த இலக்கியப் பயணம் நிறைவேற்றியது.

 குவைத் முக்கிய நிகழ்வில் நான் மட்டும் வேட்டி கட்டிப் போய் நிற்க, எல்லாரும் கோட் சூட் என்று வந்து என்னை Odd Man Out ஆக்கி விட்டார்கள். (சமீபத்திய காரைக்குடி கம்பன் விழாமேடையில் நான் மட்டும் ஜீன்ஸ் போட்டுப் போய் அங்கும் வித்தியாசமாய் உணர்ந்தேன்..) டிரஸ் என்பதை எப்படி போடுவது என்று சொல்லிக் கொடுக்க கமல் ஆளை வச்சிருக்கிற மாதிரி நாமளும் ஆள் தேடனுமோ…. அல்லது கூட இருக்கும் ஆளை இதுக்கும் தயார் செய்யனுமோ??.

 பொதுவா விழா ஆரம்பித்தவுடன் சிறப்புப் பேச்சாளர் பேச அழைப்பு வரும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கலை நிகழ்ச்சிகள் கலைகட்டி செமெ கலகலப்பா போயிட்டு இருந்தது. படவா கோபியின் மிமிக்ரியும் இசை நிகழ்ச்சியும் டாப் கியரில் போய்க் கொண்டிருந்த போது லேசா பிரேக் விட்டு, என்னைப் பேச அழைத்தார்கள்.

எல்லை தாண்டிய தமிழ் பற்றி பேசினேன்… நடுவே, கடவுளையே திட்டும் தைரியம் கொண்ட தேவார ஆசான்கள் பற்றியும் குறிப்பிட்டேன். படவா கோபி பக்கத்தில் இருந்தார். பெயரே வித்யாசமாகப் பட்டது. படவா என்பதை திட்டுவதற்க்குத் தானே பயன் படுத்துவார்கள். அதுவே எப்படி பெயராக ஆகிவிட்டது.. அல்லது ஆக்கிக் கொண்டார். இவரைப் போல் கம்பர் இப்போது இருந்தால், ஐயோ கம்பன் என்று ஆகி இருப்பார் என்று கம்பரையும் சேர்த்து முடித்தேன். (இப்பொ எல்லாம் ஆஃபீஸ் காரியமாய் இருந்தால் கூட கடைசியில் கம்பராமாயணம் வந்து விடுகிறது)

 குவைத்தை இத்தோடு விட்டு விட்டு ரிவர்ஸ் கியரில் கொஞ்சம் கோவை பொறியியல் கல்லூரிக்கே போலாமே… அந்தக் காலகட்டம் தான் கவிஞர்வைரமுத்துதிரைக்குபாடல்எழுதத் தொடங்கிய நல்ல நேரம்.அவர் வரிகளில் மாணவர்கள் மத்தியில் ஒரு பலமான ஈர்ப்பு இருந்தது என்பதைமறந்திருக்கமுடியாது. அப்போதும்சரி இப்போதும் சரி எவ்வளவுக்கு வரவேற்பு இருந்ததோ, அதே அளவுக்கு எதிர்ப்புகள் இருந்ததையும் பார்க்கத்தான் முடிந்தது. 
நான் மட்டும் விதிவிலக்கா என்ன? ராதா அம்பிகா (இந்தக் கால சீரியலில் வரும் அம்பிகாவையும், ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சியில் வரும் ராதாவையும் பாத்து ”என்ன அந்தக் காலத்து ரசனை?” என்று சண்டைக்கு வரவேண்டாம்) என்று ஜொள்ளு விடுவோர் மத்தியில் என் அறை முழுக்க வைரமுத்துவின் படம் ஒட்டி வைத்திருந்தேன்.. ஒரு அபிமானம்..& ஈர்ப்பு தான்.

 அலைகள் ஓய்வதில்லை படத்தில் “விழியில் விழுந்து இதயம் நுழைந்து…” என்ற வைரமுத்துவின் வைரவரிகள் வரும். பாடலின் முடிவில் “…காதல் மீன்கள் ரெண்டில் ஒன்றை கரையில் தூக்கிப் போட்டான்” என்று முடியும். என்ன தான் வைரமுத்துவின் பரம ரசிகன் என்றாலும் ஒரு நல்ல கவிதையின் ஊடே, (கடைசியிலாகட்டும் இப்படி) ”போட்டான்” என்று கவிஞர் போட்டதை ஒப்புக் கொள்ளவே முடியவில்லை அப்போது.

 இப்பொ அப்படியே…. கம்பன் கவிதைகளை மேலோட்டமாய் படித்தபோது (எதையுமே முழுசா படிக்க மாட்டியா? – என்று யாரும் கேட்டு விட வேண்டாம்) ’போட்டான்’ போலவே ’போனான்’ என்பதும் கொஞ்சம் சறுக்கின மாதிரி தெரியுது… (கொழுப்புடா உனக்கு…அவனவன் 40 50 வருஷம் கம்பனைப் படிச்சிட்டு சும்மா இருக்காய்ங்க… நீ குத்தமா சொல்றே… இதுவும் வேண்டாமெ ப்ளீஸ்..) ஏதோ மனசுலெ பட்டது. சொல்றேன்.. அவ்வளவு தான்.

அடிக்கடி வந்து தலையைக் காட்டி விடாமல் போனாலும், இந்த ’போனான்’ கம்பனின் கவிதையிலும் அவ்வப்போது தலை காட்டுகிறான் தான். “குன்றுக்கப்பால் இரவியும் மறையப் போனான்”, ”..பழிச்சொடும் பெயர்ந்து போனான்”. இப்படி சிலவும் வந்து போகுது. கம்பரின் பாடல்களில் அதிகம் எடுத்தாளப்படும் ஒரு பாட்டிலும் அந்தப் போனான் வருது என்பது தெரியுமா? அதையும் தான் பாப்போமே…

 வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறைய
பொய்யோவெனும் இடையாளுடன் இளையோனுடனும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயொ இவன் வடிவென்பது அழியா அழகுடையான்..

 இதில் ஐயோ என்பது கவிஞர்கள் பயன்படுத்த தயங்கிய ஒரு வார்த்தை. கம்பர் ஐயோவும் பயன் படுதுகிறார். கூடவே போனான் என்பதையும் பயன்படுத்தி, அப்பாடா.. வைரமுத்துவுக்கும் வக்காலத்து வாங்கிட்டார்.. அது சரி நானு இப்பொ கம்பருக்கு என்னும் கொஞ்சம் வக்காலத்து வாங்கிட்டு வாரேன்..

 ஏதோ..இராமன், சீதை இலக்குவன் ஆகியோருடன் போனான்… என்று மட்டும் பார்க்காமல், இராமன் அழகை வர்ணிக்கத் திணறும் கம்பர் என்பதையும் தாண்டி, கம்பர் ஒரு குறுந்தாடி வைக்காத சைண்டிஸ்ட் என்று சொன்னால் நம்ப மாட்டீங்க… வெளக்கம் சொன்னா நம்புவீக தானே..

 முதல் வரியின் பொருள் கொஞ்சம் பாக்கலாம். கதிரவனின் ஒளி, தன் உடம்பிலிருந்து வரும் கதிர். ரெண்டும் சண்டை போட்டு சூரியன் செத்துப் போச்சாம்.. கருப்பான (இராமன் கலருதான்) உடலில் சூரியக் கதிர்கள் ஈர்க்கும் என்பதை அன்றே சொன்னவன் கம்பன்..

அடுத்து ராமனுக்கு உதாரணம் சொல்லும் மூன்றாவது வரி பாருங்களேன்..

மையோ, மரமகதமோ, மறிகடலோ, மழைமுகைலோ… ஏதோ கம்பன் மானாவுக்கு மானான்னு கிறுக்குனமாதிரி நம்ம மர மண்டைக்குத் தோணும். ”ம” சீரீஸில் வரனும். கருப்பாவும் இருக்கனும். ஏதோ சொல்லனும்னு வருகிறார் நம் கம்பர்.

மரகதம் – ஒரு திடப் பொருள்;

மறிகடல் – திரவம்

மழைமுகில் – வாயு

அட..அடடெ… அப்புறம் மை – செமிசாலிட்..

ஐயோ இப்படி ஒன்னுலையுமே ஒன்னையே கம்பேர் செய்ய முடியலையே ராமா…என்று முடிக்கிறார்.
[ரெண்டாவது வரி என்ன பாவம் செய்தது? அதிலும் வெளெயாடுகிறார் கம்பர்… ”பொய்யோ எனும் இடையாளொடும்” – இடை இருக்கு என்றால் அது பொய்யாம்…ஐயோ..ஐயோ…]

கம்பரா கொக்கா..

இனிமே யாரும் ஐயோ ஐயோன்னா…சிரிக்காதீங்க..சிந்திங்க

நீங்களும் ஆகலாம் சைண்டிஸ்ட் கம்பர் மாதிரி..

 

8 thoughts on “படவா கோபியும் ஐயோ கம்பனும்…

  1. நுட்பமா கலக்குறீங்க !
    படிக்கிறத்துக்கு நல்லாவே இருக்கு !!

  2. ulaganathan says:

    அவலச் சுவையில் தான் ஐயோ-வை இதுவரை அறிந்திருந்தோம்,ஆனால்,கம்பன் ஆச்சரியத்தின் உச்சத்தில்,ஐயோ-வை மங்கலச்சுவையில் காட்டுகிறான்.

    • Tamil Nenjan says:

      இந்த ஐயோவுக்குள் இத்தனை அர்த்தமா என்று கம்பனைப் படிக்க..இல்லை பார்க்க ஆரம்பித்த போது தான் தெரிகின்றது…உங்கள் கருத்துக்கு நன்றி ஐயா…

  3. thiagarajan.JK says:

    aiyayyO krishnamoorthy..

  4. Ayya, ayyo ayyo ayyo enru sollum alavukku thamizhil pugunthu vilaiyadugireergal……kambaridam vambu pannum alavukku thembanai irukkireergal… ungal thamizhukku en iniya putthaandu vazhtthukkal.

  5. Tamil Nenjan says:

    நன்றி..நன்றி…

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s