நாங்களும் கவிதையும் எழுதுவோம்லெ…


Image

சில தினங்களுக்கு முன்னர் அந்தமானில் உள்ள அரசுக் கலைக் கல்லூரியின் ஹிந்தி துறைத் தலைவரும், அதன் பேராசிரியரும் என் (அரசு) அலுவலகம் வந்தனர். தமிழ் கவிதை பாடும் வல்லமை பெற்ற இருவரின் முகவரி தேடி வந்தவர்கள் அவர்கள். ”நாங்களும் கவிதை எழுதுவோம்லெ” என்று சொல்ல, ”யாரோ வந்து கவிதை பாடுவதற்க்கு, நீங்களே வந்து கவிதை பாடுங்கள்” என்று நினைத்தோ என்னவோ, ”அதனாலென்ன பேஷா கவிதை பாடுங்க” என்பதாய் வந்தது கவியரங்க அழைப்பு.

அந்தமான் தீவின் தேசீய ஹிந்தி அகடமி தான் நிகழ்வினை நடத்தினாலும், பல மொழி  பேசும் மக்களை, கவிஞர்களை ஒன்றினைக்கும் பணி சத்தமின்றி (கைதட்டல் சத்த்த்துடன்) அரங்கேறியது. அழைப்பு வந்த பிறகு தான் தெரிந்தது, என்னை முன்னிலை வகிக்கவும் அழைத்திருப்பது. [நிகழ்சிக்குத் தலைமை வகிப்பவர், ஒரு அரை மணி நேரத்தில் போய் விடுவார். முழு நிகழ்ச்சியையும் நடத்த ஒரு பொறுமைசாலி தேவை என்ற கட்டாயத்தில் அவர்கள் என்னை ஏற்பாடு செய்திருந்தது பின்னர் தான் புரிந்தது].

ஹிந்தி, தமிழ், மலையளம், பஞ்சாபி, போஜ்பூரி, ராஜஸ்தானி, சோட்டா நாக்பூரி, பெங்காளி கவிதையில் பின்னிப் பெடலெடுத்தனர். ஏனோ தெரியவில்லை மராட்டியமும் ஆந்தரமும் கைவிரித்து விட்டிருந்தது.

காலை 10.30க்கு தொடங்கிய விழா என் கைக்கு முடித்து வைக்க வரும் போது 2.15. செவிக்கு உணவில்லாத போது தான் சிறிது வயிற்றுக்கு யோசிக்கப்படும் என்பது போல் எல்லோரும் (மாணவர்கள் உட்பட) இருந்தனர். (வாத்தியார் யாரும் வெளியே ஓடிவிடாதபடி கதவு பக்கத்திலேயே இருந்ததுதான் நிகழ்வின் வெற்றிக்கு காரணம் என்று ஒருவர் பின்னர் மேடையிலேயே போட்டு உடைத்தார்).

லேட்டா வந்தா சோறு கிடையாது என்று திருமதியிடமிருந்து எஸ் எம் எஸ் வர, நான் மைக் பிடித்தேன். இரண்டு நிமிடம் பேசி முடிக்க அறிவிப்பு வந்தது. ”அதெப்படி எல்லாரோட கவிதையையும் நான் கேட்டேன். என்னோட கவிதை கேட்க ஒரு அஞ்சு நிமிஷம் இருக்க மாட்டீகளா என்ன?” இப்படி நான் கேட்க, சரி என்பது கைதட்டல் வாக்கு மூலம் கிடைத்தது. [தலைக்கு மேலே போயிடுச்சி. ஜான் போனா என்ன? முளம் போனா என்ன? என்று எல்லாரும் நினைத்திருப்பார்களோ!!]

அப்படி பீடிகை போட்டு, ஹிந்தி மொழி பெயர்ப்பும் அப்பப்பொ செய்து வாசித்த கவிதை இதோ உங்கள் பார்வைக்கும்….

என் பார்வையில் கம்பர்

கவியால் உலகை வென்றவன் கம்பன்
கனவாய் இங்கே வந்தவன் இவ்வம்பன்
கம்பன் கவியால் அனைவருமே தஞ்சம்
வம்பன் பெயரோ இங்குதமிழ் நெஞ்சன்

வால்மீகி படைத்திட்ட இராமகாதையை
டப் செய்தவனல்ல கம்பன்
இராமரை அனுமனை வேட்டிகட்டி
ரீமேக் செய்தவன் கம்பன்

என்ன இல்லை இந்தக் கம்பனிடம்?

கம்பன் சொல்ல வந்தது ராமகதை
கனிவாய் சொன்னது தனிக்கதை
கண்டெடுத்துத் தந்தது இனியபாதை
கட்டுத்தறிக் காரனின் புதியகீதை

காரியம் ஆகணுமா? பிடியுங்க காக்கா..
காக்கா பிடிக்கத் தெரியலையா?
படியுங்க நம்ம கம்பரை.

முனுக்கென்றால் கோபம் வரும் முனி
அவர்  பேசிய வார்த்தைகள் விட
விட்ட சாபங்கள் தான் அதிகம்.
சாமானியர்கள் அவர் இருக்கும் திசையே
சாதாரணமாய் பாரார்.
இப்படி வந்தவர் விசுவாமித்ர முனி
சொன்னவர் வான்புகழ் கவி.

மனதினிலே பட்டதை பட்டென்று சொல்லாமல்
சற்றே அரசனை ஏற்றிச் சொல்லி
தனக்கென உதவிட சொன்னான் மெல்ல.
வரம் கெட வந்திடும் அரக்கியின்
சாவுமணி அடித்திட அங்கே- இங்கு
வாசல் மணி அடித்தவன் அம்முனி.

உன்னை விட்டா யாரிருக்கா
எங்களை இப்படிப் பாதுகாக்க?
கேட்டதெல்லாம் குடுப்பியாமே!
எங்கே ராமனை குடு பாக்கலாம்!

காக்கா பிடித்துக் கேட்ட முனி
பாலகனை கவர்ந்து சென்றது இனி
சீதைவசம் சேர்த்த கதை தனி
சேர்ந்து சொன்ன கவியெலாம் கனி.

                                                      *********

சாபம் வரமான கதையும் இனி சற்றே பார்க்கலாம்.
சங்கடங்கள் வரும்போது எதிர்கொள்வதெப்படி?

சாபமான சங்கடங்கள் சொல்லிக்கொண்டு வருவதில்லை
கோபமான தருணங்கள் தள்ளிடவும் முடிவதில்லை
இனமான உணர்வுகள் கேட்டு வாங்கிக் கொண்டதில்லை
உதயமான எல்லாமும் விரட்டிடவும் வழியில்லை.

வந்த பின்னர் என் செயலாம்?
இதுவன்றோ இன்னலான கேள்வி!
சாபம்தனை வரமாக்கிடு
விடையாய் தந்திட்டார் எம் கவி
வரமாய் தந்திட்ட வார்த்தை அது.

சாபம் சாபம் என்றே கலங்கிட்டால்
விலகிடுமோ அச்சாபம்?
வரமாய் அச்சாபம் நினைந்திட்டால்
அகன்றிடுமே துயர் அச்சமயம்.
வாழும் கலை தனையே
கம்பன் கதை வழியே
தந்தவன் அக்கவி.

தசரதன் அம்பு சிரவணன் மேல்படவே
புத்திரன் பிறந்து சிரமம் மிஞ்சிட
சிரவணன் தோப்பனார் சொல்லிய சாபம்
மைந்தன் இன்றியே மயங்கிய மன்னனுக்கு
வரமாய் பெற்றதாய் மகிழ்ந்தான் அரசன்.
ராமன் பெறா தாயிடம் சொன்ன சேதி அது.

*************

அரசின் உள்ளறைக்குள் நடப்பதை அறிந்திடவே
வந்த திட்டம்; அரசின் ஒரு சட்டம்; அதுவே
தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

பாமரன் கேட்ட தகவலதனை
பாங்குடனே பார்த்திட்டு,
வேண்டுவன எல்லாமே
முயன்றே முடிச்சிடனும்
முப்பது நாட்களில்.

தன்கைக்கு வந்திடவே ஒரு மாதாம் ஆகிடுமே
எப்படித்தான் தருவதிது?
யோசிக்கவே நேரமின்றி பலர்
யோசிக்காமல் கேட்ட கேள்வி இது.

அந்தமானில் அடியேன் தான்
அச்சட்டம் பயிற்றுவிக்கும் வளநபர் நான்.
கம்பன் கவிதனையே அங்கும் எடுத்தேன் யான்
முப்பது நாட்களில் முடிந்திட்ட கதை தனையே
முன்னுதாரணம் காட்டி சொல்லிட்டேன்.

ராமன் கூட்டிய பொதுக் குழுவில்
அனைவரும் கூடிச்செய்த முடிவு அது.
முழுதும் படித்தால் முடிவாய் தெரியும்
நிர்வாக ஆசான் கம்பன் என்று.

நாட்டை ஆளணுமா? பிரித்து ஆளு
நாம் கண்ட காட்சி.
நிர்வாகம் சீராக்க
பகிர்ந்தளி ஆளுக்கொரு பணி
கம்பன் கவியில் சொன்னதிப்படி.

அலக்கேஷன் கொடுத்திட்டா போதுமா?
செய்துமுடிக்க ஆள்படை வேண்டாமா?
தந்திட்டார் கேட்டதெல்லாம்.
தென்திசை போகச் சொல்லியே
தன்மனையாளைத் தேடிடவே
அனுமனை அனுப்பி வைத்தார்.

முப்பது நாள் கெடு வைத்தார்
தகவல்தனைத் தந்திடவே..
சேட்டலைட் மொபைல் கூகிள்
டைரக்‌ஷன் இத்யாதி இல்லாத காலமது
முயன்று முப்பது நாளில்
முடிந்திட்ட கதைதான்
கம்பன் சொல்லிய கதை.

தத்தம் அறையிலே உறங்கிடும் தகவலை
உறங்காது தந்திடவே நாம் உழைத்தால்
பாமரனும் ஆகிடலாம் அரசின் அங்கமாய்
உரக்கச் சொன்னவன் கம்பன்.

**************

அரசின் முடிவில் சங்கடம் எப்பொ வரும்?
மக்கள் மனம் கோணும் சமயம் அப்பொ வரும்.
முடியாட்சியில் தேவையில்லை அது
கம்பன் கவி கண்டால்
அங்கும் காணலாம் அதனை
முடியாட்சியில் குடியாட்சி தத்துவம்
முன்னரே தந்த மூத்தவர் கம்பன்.

மாற்றான் படை தாண்டி
வந்தவீரன் வீடணன்;
சேத்துக்கலாமா வேண்டாமா?
சிக்கலான கேள்வி அது.
மன்னருக்கு முடிவெடுக்க
முழுதுமாய் அதிகாரம்.
சொன்ன சொல்லுக்கெதிராய்
சொல்லாத அவர் கூட்டம்.

என்ன முடிவு செய்தார் ராமர்?
பாதிப்புக்கு உள்ளாகும் பொடியனை விளித்தார்.
நன்மை தீமை பாத்துரைக்கப் பனிந்தார்.

தெரியலையே என்றுரைத்தான்
காலாட்படை மயிந்தன் – அவன்
குரங்குப் படையின் முதல் வரிசை அங்கம்.

வீடணன் துரோகம் நமக்கெல்லாம் பாடம்
ஒருபோதும் வேண்டாம்
நமக்கும் வரலாம் அச்சோகம்.
சொன்னவன் வானர அரசன்.
ராமன் துணையுடனே
கெட்ட பெயரும் இலவச இணைப்பாய்
வாங்கி மரத்தின் பின் மறைந்து நின்று
வாலியை வென்ற சுக்ரீவன்.

அனுமன் தான் உன்மையினை
உரக்கச் சொன்னான்.
வானிலிருந்து கண்ட நல்சாட்சி.
ஆதாரமதனை அடுக்கடுக்காய் அடுக்கி
சொல்லால் வரவேற்பு வளையம்
அமைத்தவன் வால் வைத்த வானரம்
அகிலமே வணங்கும் அனுமன் கடவுள்.

கலந்து பேசி ஒரு முடிவு
கடைசியில் எடுத்தவன் ராமன்.
அரசு யந்திரம் எப்படி இருந்திட
அரசு யந்திரம் இப்படி இருந்திட
அன்றே சொன்னவன் எம்கவி கம்பன்.

கம்பரைப் போற்றுவோம்
வந்தனம் சொல்வோம்
இன்றைய நிகழ்வுக்கும்
ஏற்போம் அவரை.

7 thoughts on “நாங்களும் கவிதையும் எழுதுவோம்லெ…

  1. அகண்ட ராமாயணம் என்பார் பலர்
    கம்பன் கண்ட ராமாயணத்தை
    அப் பெரும் காப்பியத்தை
    ஐந்து நிமிடக் கதை ஆக்கி விட்டீர்
    அருமை அருமை அருமை

  2. swami Tattvabodhananda says:

    nice one krishnamoorthy dha

  3. Asokan says:

    Good one keep it up Kittu

  4. தூள் கிளப்பிட்டீங்க ! தமிழில் எழுதுவது போல், தங்கள் தாய் மொழியான ஸுந்தர ஸௌராஷ்ட்ர மொழியிலும் எழுதவேண்டுமென்பது என் கோரிக்கை !

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s