கேக்காமெக் குடுக்கிற சாமி இது..


”ஆத்துலெ போட்டாலும் அளந்து போடு” ன்னு சொல்லுவாங்க. ஆத்திலெ கொட்ற அல்லது போட்றதுங்கிற முடிவுக்கு வந்தாச்சி.. அப்பொ எதுக்கு அளக்கும் அளவை எல்லாம்? அவங்க அந்தக் காலத்திலெ, எந்த அர்த்தத்திலெ சொன்னாங்களோ தெரியலை. ஆனா.. எனக்கு என்னமோ ஆலைக் கழிவுகள் எல்லாமே கணக்கு வழக்கு இல்லாமல் கொட்டிடக் கூடாதுங்கிற நல்ல மெஸேஜுக்காக சொல்லி இருப்பாங்களோ?? கொட்டுறது ஒரு பக்கம் இருந்தாலும், அதே ஆத்திலிருந்து மணல் அள்றதும் ஒரு வகையில் கணக்கு வழக்கு இல்லாமத்தான் நடந்துட்டு வருது. துட்டு பாக்குறதுக்கும் அது தான் நல்ல வழியாவும் இருக்கு.

ஆத்துலெ போட்றது, எடுக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா வீட்டுக்கு பணம் அனுப்பும் ஆட்களுக்கும் இது பொருந்தும் தெரியுமா உங்களுக்கு? என் நண்பனின் கதை சொல்றேன் கேளுங்க. கஷ்டப்பட்டு படிச்சி வேலைக்கு சேந்தவன் அவன். செலவுக்கு கொஞ்சூண்டு வச்சிட்டு அம்புட்டும் வீட்டுக்கு அனுப்பினான் அந்த அப்பாவி. ரெண்டு வருஷம் கழிச்சி தங்கச்சி கல்யாணத்துக்கு தயார் ஆனது. இருக்கும் காசு எல்லாம் அனுப்பிய ஆசாமி, வீட்டிலெ எவ்வளவு இருக்குதுன்னு கேட்டா, கை விரிச்சிட்டாங்களாம். அப்புறம் கடனெ ஒடனெ வாங்கி கல்யாணம் நடந்தது. நீதி: எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், வேணும்கிற மட்டும் அனுப்புங்க.. அது அப்பா அம்மாவாக இருந்தாலும் கூட.

கேட்டாக் கொடுக்கிற பூமி இது. கேக்காமெக் கொடுக்கிற சாமி இது. இது ஒரு சினிமா பாட்டு. (அப்பாடா டைட்டில் வந்தாச்சி..அப்பொ கம்பரை இழுத்து வச்சி போஸ்டிங்கை முடிச்சிரலாமா? அதான் கிடையாது. அதுக்கு இன்னும், கடைசி வரை நீங்க வெயிட் செய்தே ஆகணும்). எந்த பூமி கேட்டதெல்லாம் கொடுக்குது? அந்தமான் பூமியில் பேரீட்சம்பழம் விளையுமா என்ன? நம்ம மக்கள் எப்படியோ காலிபிளவர் வரைக்கும் அந்தமானிலெ விளைய வச்சிட்டாங்க என்பது ஒரு கொசுறுத் தகவல்.

கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சிகிட்டுக் கொடுக்கும் என்றார்கள். கூரைகளே நாட்டிலெ இருக்கவே கூடாது என்பது அரசின் திட்டம். இந்த மாதிரி இருக்கறச்சே கொடுக்க நினைக்கிற கடவுள் கூட கான்கிரீட் கட்டர் மிஷின் எல்லாம் கொண்டு வந்து தான் கொடுத்தாகனும். ஆமா.. அப்பிடியே குடுத்தாலும் கூட, அப்புறம் முதல் செலவே, அந்த ஒடைச்ச Slab ஐ சரி செய்யும் வேலை தான் இருக்கும். என்கிட்டெ யராவது, ”கடவுள்கிட்டெ என்ன கேப்பீங்க” என்று கேட்டால், நான் என்ன சொல்வேன் தெரியுமா? ”எனக்கு என்ன தேவை?” என்பது அந்தக் கடவுளுக்கு தெரியாமலா இருக்கும்? ஆனா அழும் பிள்ளைக்குத் தானே பாலு?? தட்டுங்கள் திறக்கப்படும் என்றார்கள். மாணிக்கவாசகர் கொஞ்சம் வித்தியாசமானவர். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பனிந்து என்பார். பால் வேணும் என்று புள்ளை நெனைச்சாலே தாய் வருவாங்கலாம்.. அந்தக் காலத்து அம்மா…

ஃப்ரீயா கொடுத்தா நம்மாளுங்க ஃப்னாயில் கூடக் குடிப்பாய்ங்க. அந்தமானிலிருந்து தமிழகம் போகும் போது ஒவ்வொரு வீட்டிலும் அந்த இலவச டீவியின் பயன்பாடுகள் பாத்தா ஆச்சரியமா இருக்கும். டேபிள் மாதிரி, டீப்பாய் மாதிரியாவும், எத்தனை விதங்கள். கேக்காமெக் குடுத்ததினாலெயே இந்த நிலை என்று சொல்ல முடியுமோ??

சமீபத்தில் லிட்டில் அந்தமான் தீவில், பார்த் நிர்மான் விளக்க விழா நடந்தது. அதில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பொது மக்களுக்கு விளக்கும் வேலை என் கைக்கு வந்தது. வழக்கம் போல் லெக்சர் முடித்து கேள்வி நேரம் வந்த்து. கேள்விகள் கேட்டாத்தான் குடுப்பாகளா?? கேக்காமெயே தரும் வசதி இல்லியா? (ஒரு வேளை தெரிந்தே கேட்டிருப்பாரோ?? ஒரு இஞ்ஜினியர் Right to Information – RTI Act பத்தி சொல்றதில், இந்த மாதிரியான குறுக்குக் கேல்விகள் தவிர்க்க முடியாதவை. எனக்கு சரக்கு இருக்கா இல்லையா என்று டெஸ்ட் செய்யும் உலக இயல்பு அது)

ஏன் இல்லை?. இதுக்காக செக்சன் 4 என்றே தனியா இருக்கு. பொதுமக்கள் கேக்காமலேயே, மக்களுக்கு தேவையான தகவல்களை அவர்களுக்கு புரியும் மொழியில் (புரியாட்டியும் கூட ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ) வெளியிட வேண்டுமாம். இதே செக்சன் 4 ல் இரண்டு உட்பிரிவுகள் இருக்கின்றன. Section 4(1)(c) & 4(1)(d) தான் இவைகள். இதிலெ என்ன சொல்றாங்க தெரியுமா? அரசு தயாரிக்கும் திட்டங்களின் விவரங்கள் அனைத்தும், அதில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு சொல்ல வேண்டும். அதே போல் அரசின் முடிவுகளுக்கான காரணங்களையும் அதனால் பாதிக்கப் பட்ட மக்களுக்கும் சொல்லியே ஆக வேண்டும். சொல்லலையா, ஒரு RTI போட்டு இந்த செக்சன் சொல்லிக் கேளுங்க.

இந்த சமாச்சரங்களை எல்லாம் ரொம்ப சூப்பரா அந்தக் காலத்திலெ நம்ம கம்பர் சமாளிச்சிக் காட்டி இருக்கார். (2005ல் வந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்துக்கும் கம்பருக்கும் என்ன சம்பந்தம் என்பீர்கள்). நம்ம சட்டம் சொல்லுது: முடிவு எடுத்து விட்டு மக்களுக்கு தகவல் சொல்லு. ஆனா கம்ப(ர்)சட்டம் என்ன சொல்லுது தெரியுமா? முடிவு எடுக்கிறதுக்கு முன்னாடியே, கலந்து ஆலோசித்து விட்டால் அந்த சிக்கலே வராதே?? இராமாயணத்தில் ஒரு சூப்பர் சீன் வருது. (எல்லாமே சூப்பர் சீன் தானா??)

விபீஷணன் அடைக்கலம் புக வந்திருக்கும் நேரம். ராமர் தான் தலவர். அவர்கிட்டெ முழு அதிகாரமும் இருக்கு. அவரு ஒரு முடிவு எடுத்துட்டா,யாரும் எதுவும் சொல்லப் போறதில்லெ. ஆனா.. நம்ம தலைவர் அப்படி செய்யலையே.. பாதிக்கப்படப் போகும் குரங்குப் படைகளிடம் கருத்துக் கேட்கிறார். மயிந்தன் என்ற புத்திசாலி வானரம் (நமக்கெல்லாம், அனுமன், வாலி சுக்ரீவன், அங்கதன் இவர்களை விட்டால் வேறு யரையும் தெரியாது) வீடணன் நல்லவரு, வல்லவரு என்று சொல்கிறார். அப்படிச் சொன்ன பிறகு, இவரை பக்கத்திலெ வச்சிக்கலாமா? தூரமா வெரட்டி விட்டு விடலாமா? யோசிச்சி சொல்லுங்க.. என்று வானரப் படைத் தலைவரிடமே (சுக்ரீவன்) கேட்கிறார்.

இது அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று ராமரின் சொல் வழியாக கம்பர் சொல்வதாகத் தான் எடுத்துக் கொள்கிறேன். உங்களுக்கு எப்படிப் படுது?? அதுக்கு முன்னாடி பாட்டுப் பாத்துருவோமா??

அப்பொழுது இராமனும் அருகில் நண்பரைஇப்பொருள் கேட்ட நீர் இயம்புவீர் இவன்கைப்பிகற்பாலனோ கழியற்பாலனோஒப்புற நோக்கி நும் முணர்வினால் என்றான்

இப்பொ சொல்லுங்க… கேக்காமலேயே குடுக்கணுமா வேணாமா?? அது சரி..நீங்க கேக்காமலேயே, என்னோட போஸ்டிங்கள் தொடரும்.

10 thoughts on “கேக்காமெக் குடுக்கிற சாமி இது..

  1. jayarajanpr says:

    //இது அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் //

    jananayagam malarnthathey RTI Act karanamathan. Ithu indiya makkalukku pakalil kidaitha irandavathu suthandiram…

    • Tamil Nenjan says:

      நல்லா சொன்னீங்க.. பகலில் கிடைத்த சுதந்திரம்… ஆனா இந்த விஷயத்தை அரசு அதிகாரியாய் இருந்து சொல்வதை பலர் விரும்புவதில்லை.

  2. G RAJENDIRAN says:

    Let the postings continue without asking TO ENLIGHTEN THE FACTS.

    • Tamil Nenjan says:

      நன்றி. தொடரும் ஆதரவிற்கு. எனது பதிவுகளும் தொடரும். நேரம் கிடைக்கும் போதெல்லாம்.

    • Tamil Nenjan says:

      உங்களின் ஆதரவு இப்படி தொடர்ந்தால், என் பதிவுகளும் தொடரும்

  3. கேட்காமலே போஸ்டிங் போடுவது என்பது உங்கள் பிற்விக் குணம் என்று தெரிந்த பின்பு நாங்கள் ஏன் போஸ்டிங் எங்கே என்று கேட்கப் போறோம் !

  4. well நீர் சுட்டும் வழி எல்லாம் சுடரே
    காட்டும் தீப ஒளி எம் வழி
    மொழிக்கு ஒரு கம்பன்
    மொழிய ஒரு தமிழ் நெஞ்சம்
    வாழி வாழி

    யான் யாரென க் கண்டு பிடிக்கவும்

    • Tamil Nenjan says:

      அட..நீங்க தானே… நீங்க ஒரு நாள் போஸ்டிங் போடலை என்றால் ஃபேஸ்புக் ஓனரே வந்து குசலம் விசாரிப்பார்.. இது தான் உங்களின் முகவரி. என் பெயரிலும் பாதி உங்களிடம். என்ன சரியா??

  5. ஆஹா! அடுக்கடுக்கா பழமொழியை சொல்லி, அதற்கு தகுந்தாற்போல் கருத்துகளை சொன்ன விதம் ரொம்ப ரொம்ப அருமை!
    கலக்கிட்டீங்க போங்க..அருமையான பதிவு.

    உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது பக்கமும் வந்து போகவும்.
    http://semmalai.blogspot.com

    உங்களுக்கும், உங்களது குடும்பத்திற்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

    • Tamil Nenjan says:

      உங்களின் பார்வைக்கும் பதிவுக்கும் நன்றி. உங்கள் வலைப்பக்கமும் சென்றேன். கலைவானரின் செய்தியோடு கலக்கல் தான். தமிழகம் தாண்டி இருந்தும், தமிழோடு காதலுடன் இருப்பது அறிந்து மகிழ்வு. தொடர்வோம்.

Leave a reply to Tamil Nenjan Cancel reply