மணியடிச்சாச் சோறு அது மாமனாரு வீடு என்பார்கள். அப்படீன்னா.. அந்தக் காலத்து கடிகாரங்களில் அரை மணிக்கு ஒரு தரம் மணி, அடிச்சிக்கிட்டே இருக்கும். அப்போ மாமனார் வீட்டுக்குப் போன மாப்பிள்ளைக்கு, அரை மணிக்கு ஒரு தரம் ஏதாவது திங்கத் தீனி வரும் என்று அர்த்தமா? ஒரு வேளை மணியடிச்சாச் சோறு அது மாமியாரு வீடா இருக்குமோ!! அங்கே வேணும்னா மணி அடிச்சா சோறு தருகிறார்களோ என்னவோ. அந்தமானில் கைதிகளை ஏற்றி வந்த கப்பலில் இதே வழக்கம் இருந்திருக்குமோ.? இன்றும் கூட பயணிகள் கப்பலில் மணி அடித்துச் சோறு போடும் வழக்கம் மாறாது இருக்கிறது. மற்ற பயணிகள் கப்பலில் எப்படி என்பதை வேறு யாராவது விபரம் தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாய் இருக்கும்.
என்னோட மாமனார் வீட்டு சமாச்சாரம் கொஞ்சம் சொல்றேனே.. அந்தமானை இன்னும் பலர் வெளிநாடு என்று தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். (ஒரு வேளை எனக்கும் இதே தப்பான அபிப்பிராயத்தில் தான் பொண்ணு குடுத்திருப்பாரோ?). அந்தமானை பல நேரங்களில் இந்திய வரைபடத்தில் காட்டாதது ஒரு காரணமாய் இருக்கலாம். (ஆமா டீவி அளவுக்கு இந்தியா மேப்பைச் சுறுக்கினாலே, அதில் அந்தமான் மங்கலாத் தெரியும். அதில் டீவி விளம்பரத்துக்கு இடம் விட்டு காட்டும், இந்தியா மேப்பில் அந்தமான் கானாமலே போயிடும்). பாஸ்போர்ட் வாங்கிட்டுதான் அந்தமான் வரணுமா? ரூபா அங்கே செல்லுபடியாகுமா? அங்கும் இங்கும் எவ்வளவு டயம் வித்தியாசம்? என்று பாமரத்தனமாய் கேள்விகள் கேட்கும் எத்தனையோ விவரமானவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எல்லார் கிட்டேயும் சொல்லிட்டேவா இருக்க முடியும்? அவனவன் எடுக்கிற முடிவு, நமக்கு சாதகமா இருக்கு என்று விட வேண்டியது தான்.
அந்தமானில் அதிகாலை காலை 4.30 க்கே நல்லா விடிய ஆரம்பித்து விடும். அதே மாதிரி மாலை 4.35 வாக்கில் இருட்டத் தொடங்கிவிடும். இங்கே தொழிலளர்கள் 6 மணிக்கே வேலைக்கு வருவர். (டியூசன் கலாச்சாரம் 4.30க்கே ஆரம்பித்து விட்டது) இந்த மாதிரியான நேரங்களில் சாப்பிட்டு தூங்கிப் பழகிய (25 வருடங்களுக்கும் மேலாய்) எனக்கு மாமனார் வீட்டுக்கு போனால் சிரமம் தான். காலை 5 மணிக்கே நான் மட்டும் முழித்து.. திரு திரு முழித்துக் கொண்டு கிடப்பேன். இரவு 10.30 க்கு படுக்க தலையணை தேடுவேன். எல்லா சீரியலும் முடிந்தால் தான் சமயல் அது தமிழக கலாச்சாரம். பத்தாக் குறைக்கு, மதுரையில் தண்ணீ வருவது நள்ளிரவு 12 மணிக்கு. மணியடிச்சா சோறு எனக்கு சரிப்படலை.
வடிவேல் ஒரு படத்தில் மணியடிப்பவராக வருவார். இந்திக் காரர்களிடம் ஏதோ எக்கு தப்பாகச் சொல்ல அந்த ”பெல்பாய்”, என இருந்தவர் உடனே “Bad Boy” ஆக பெயர் பெறுவார். அந்த மாதிரி Bell Boy பற்றிய ஒரு கதை அனேகமா எல்லாரும் கேட்டிருப்பீங்க. அதாங்க், படிக்கலைன்னு அவரை சர்ச் விட்டு விரட்டப் போக, அவர் சூப்பரா, சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சி கோடீஸ்வரன் ஆயிட்டார். படிக்காமெயே இப்பிடி ஆயிட்டீகளே, நீங்க மட்டும் படிச்சிருந்தா?…. அவர் சொன்ன பதில் “நான் பெல்பாயா இருந்திருப்பேன்.
அந்த பெல்பாய் வேலையை விட்டு விரட்டி அடிக்கப்பட்டது ஒரு மைனஸ். வியாபாரத்தில் ஈடுபடுதல் ஒரு ப்ளஸ். இப்போது பழைய நிலமையை விட முன்னேறி இருப்பது ப்ளஸ். [ஆகக்கூடி, மைனஸ் ப்ளஸ் ப்ளஸ் = ப்ளஸ் என்று தானே ஆகிறது என்று கணக்குப் புலிகள் சண்டைக்கு வர வேண்டாம்.]
இந்த டிசம்பர் வந்து விட்டாலே அந்த சுனாமி வந்து சென்ற அந்தக் கருப்பு ஞாயிறு ஞாபகம் வந்து விடும். 2004 டிசம்பரில் வானம் பார்த்து நடுத்தெருவில் படுத்தது இன்னும் நினைவில் இருக்கு. உயிர் பொருள் இழப்புகள் அத்தனையும் அந்தச் சுனாமி தந்து விட்டுச் சென்றது. இப்போது அனைவருக்கும் வீடு என்ற அளவில் அரசின் சலுகையினை அந்தத் துயரில் கலக்கம் அடைந்தோர்க்கு கிடைத்துள்ளது. இருக்க இடமின்றி இருந்த, ஒப்பந்தக் கூலித் தொழிலாளர்களுக்குக் கூட இப்போது வீடு சொந்தமாய் விட்டது. இங்கும் அதே கணக்குப் பார்முலா தான். [ Minus X Plus = Plus].
ஒட்டு மொத்தமாய் சொல்வதென்றால், வீழ்வது தவறே இல்லை. வீழ்ந்தே கிடப்பது தான் தவறு. அந்த துயரிலிருது வெளியே வர நாம் எடுக்கும் முயற்ச்சிகள் .. அதுவும் பாசிட்டிவான முயற்சிகள், நம்மை நிச்சயம் மேலே கொண்டு வரும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் வர வேண்டும் என்பது தான் இங்கே சொல்ல வரும் சேதி. தவறி விழுந்து நடை பயிலாத குழந்தை உண்டா என்ன? ஆனால் நம்மில் பலர் ஏதாவது சோதனை வந்தால் உயிரே போன மாதிரி ஆகின்றனரே! சமீபத்தில் காதல் தோல்வியில் இருவரும் தற்கொலச் செய்தி வந்தது. இந்த மனிதப் பிறவி எடுத்ததின் நோக்கமே அந்த காதல் கத்தரிக்காய் திருமணம் தானா?? (நான் காதலுக்கு எதிரி இல்லை. காதல் தற்கொலையால், காதலை கொலை செய்பவர்களுக்கு எதிரி).
இந்த மேட்டரை இந்த வெத்து வேட்டே இப்படி நீட்டி முழக்கி எழுதினா, கம்பர் அதனை கம்பராமாயணத்தில் டச் செஞ்சிருக்க மாட்டாரா என்ன?? இருக்கே… அனுமன் இலங்கையில் முதல் சுற்றில் துவம்சம் செய்து திரும்பிய நேரம். பார்க்கிறார் இராவணன். (நம்ம சுனாமி துவம்சம் செய்ததை சரி செய்ய TRP – Tsunami Rehabilitation Programe ஆரம்பித்த மாதிரி இராவணன் ARP – Anuman Rehabilitation Programe ஆரம்பித்திருப்பாரோ). தெய்வத் தச்சன் மயனோட மேற்பார்வையில், பிரம்மனே களத்தில் இறங்கி, இராவணன் சொன்ன படி, சொன்ன Target Date ல் செய்து முடித்தாராம். எல்லா வேலையும் முடிச்சிட்டு, இலங்கேஸ்வரன் அப்படியே அன்னாந்து பாத்தார். அந்த வானலோகத்தில் இருக்கும் அமராவதியை விட இலங்காபுரி சூப்பரா இருக்காம். கடைசியா ஒரு பன்ச் டயலாக் வேற… அட.. ஏற்கனவே இருந்த இலங்கையை விடவும் நல்லா இருக்கே!!!!. இப்பொ நீங்களே சொல்லுங்க… Minus X Plus =????
பொன்னினும் மணியுனும் அமைந்த பொற்புடைநன்னகர் நோக்கினான் நாகம் நோக்கினான்முன்னையின் அழகு உடைத்து என்று மெய் கழல்மன்னனும் உவந்து தன் முனிவு மாறினான்.
மிஸ்டர் கம்பர் அவர்களே, அந்த மயன் அவர்களோட மெயில் ஐடி எப்படியாவது வாங்கிக் கொடுங்க.. இன்னும் சில TRP வேலைகள் அந்தமானில் முடிக்கனும்.
அருகில் ஒரு அந்தமான் படம் + புதிய இலங்கை படம் இருப்பின் நன்றாக இருக்குமே ? கட்டுரை நன்று .கறுப்பு பகுதி (இடது புறம்) காண்க) நீளமாக வெற்றிடமாக ஊள்ளதே ?
ஆரா( என் இமெயில் ஜிமெயிலிற்கு தொடர்பு ஆனாலிதில் யஹொ மெயில் என்றால் தான் பதிய முடிகிறது.யாஹு-சும்மா வைத்து உள்ளேன்.
நான் மிகக் குறைவான வேகத்தில் இயங்கும் இணைய வசதி கொண்ட தீவில் இருப்பதால் படங்கள் இணைக்க முடிவதில்லை. காலம் வரும்.. அதையும் செய்ய இயலும்.
நான் அந்தமான் பற்றி கேட்க நினைத்ததை எல்லாம் நீங்களே சொல்லி விடீர்கள் …..வரட்டுமா?….ஞானமூர்த்தி பொன்னையர்
அவசியம் வரவும்.
மிக அழகான விதமாக கம்பனை வெளிக்காட்டியுள்ளீர்கள். வாழ்த்துகள். ராவணனுக்காக பிரும்மா என்னவெல்லாமோ செய்துள்ளார்.. (அவன் உயிரைக் காப்பாற்றியது முதற்கொண்டு) இதைச் செய்யமாட்டாரா என்ன..
உங்களின் வாழ்த்துக்கு நன்றி. உங்களின் நம்ம ஆழ்வார் நம்மாழ்வார் படித்து அட, அடடே என்று வியந்து நின்றேன். நான் கம்பரை வம்புக்கு இழுப்பதும், உங்கள் அடி ஒற்றித் தான்..(என்ன கொஞ்சம் கூடுதல் மசாலா..). உங்களைத் தேடித்தான் மின் தமிழ் குழுவில் வந்தேன். மீண்டும் நன்றிகள்.
இத…இதத்தான் நான் எதிர்பாத்தன். கம்பர், வடிவேல், உங்கள் அனுபவம் எல்லாம் சரி…. நம்பிக்கையை, வாழ்வில் விதைக்கும், வளர்க்கும் கட்டுரைகள் நிறைய (அ) சிலவாவது எழுதுவீர்கள் என்று நம்பிக்கை வைக்கிறேன்.
அதுவும் அவ்வப் போது வரும்.