தெருவெல்லாம் நாடு மாதிரி….
இளமையில் கல்.. என்பார்கள்.. எனக்கு என்னமோ இளமையில் பார்த்த சினிமா கல் மாதிரி பதிந்து போயிருக்கு. அப்பொ எல்லாம் வீடுகளில் டிவி இலவசமாய் இல்லாத காலம். இலவசமாய் படம் பார்க்க அப்பப்பொ வாய்ப்பு கிடைக்கும். ரஷ்யாவைப் பற்றி காட்டுவார்கள். கூடவே கறுப்பு வெள்ளை தமிழ் படமும் காட்டுவார்கள். அப்படி பாத்த ஒரு படம் தான் “புன்னகை”. உண்மையோடு போராடும் ஒரு சிவில் இஞ்சினியரின் வாழ்க்கை தான் படக் கரு. வருங்காலத்தில் சிவில் இஞ்சினியர் ஆகப் போகிறோம் என்பதாலோ என்னவோ, அந்தப் படம் என்னை அந்த அளவுக்கு கவர்ந்து விட்டது.
நேற்று நண்பர் ஒருவர், வாங்களேன் துப்பாக்கி படம் பாக்கலாம் என்றார். அப்பொத்தான் சன் லைஃப்பில் புன்னகை படம் ஆரம்பித்தது. நான் புன்னகையுடன் வர முடியாது என்று சொல்லி அமர்ந்தேன். பாத்த படம் தான். இருந்தாலும் அசைய விடாமல் இருக்க வைத்த பாலசந்தரின் சாமர்த்தியம். பாடல்களில் கூட ஏதோ தவற விட்டு விடுமோமோ என்ற நினைப்பில் தான் பார்க்க முடிந்தது. ஊழலற்ற வாழ்வு புன்னகை இன்றி முடியும் என்ற தகவலை (மெசேஜை) புன்னகையுடன் தெரு முழுதும் சொன்ன படம் அது.
தெருத்தெருவாய் எங்கே சுத்தினாலும் கடைசியில் (நான் கம்பரிடம் போவது போல்) வீட்டுக்கு வந்து தானே ஆகணும். எட்டாம் வகுப்பில் ஓர் ஆசிரியர் கட்டுரையினை எப்படி ஆரம்பிப்பது என்பது பற்றி ஒரு டிப்ஸ் கொடுத்தார். எந்தத் தலைப்பாக இருந்தலும் தலையெப் பிச்சிக்காமெ ஜாலியா… “நாட்டுக்கு அடிப்படை வீடு. வீடு செழிப்பாய் இருந்தால் தான் நாடு செழிப்பாய் இருக்கும். நாடு வளமோடு இருந்தால் தான் வீடும் வளமாய் இருக்கும்.” இதை பொத்தாம் பொதுவா எழுதிடனும். பொங்கல் தீபாவளி பத்தி கட்டுரை எழுதனுமா? அப்படிப்பட்ட வீடு மகிழ்வோடு இருக்க பண்டிகைகள் வேணும் என்று மொக்கை போட ஆரம்பிச்சிரலாம். காந்தி நேரு பத்தி எழுதனுமா? அத்தகைய வளமான வீட்டில் பிறந்தவர் தான் என்று ஆரம்பிச்சா போச்சி..
சரி நாமளும் கொஞ்சம் தெருவை விட்டு வீட்டுக்கு வருவோம். வெறும் செங்கல் கட்டிடம் வீடு என்ற பெயர் பெறுவதற்கு அங்கு உயிரும் அதில் சில அன்பும் கலந்து இருக்க வேண்டும். கோவை சிஐடி கல்லூரி விடுதியை முதன் முதலில் பார்த்த போது பிடிக்கவே இல்லை. ஆனா உள்ளே குடியேறிய பிறகு… அதை விட்டிப் பிரிய மனசே வரலை. ஐந்து வருஷ பிஇ யை, ஏன் தான் இப்படி நான்கு வருடம் ஆக்கினார்களோ என்ற கவலையும் தான் கடைசியில் மிஞ்சியது.
வீடுகளின் தேவைகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும். தின்னைகள் வைத்து கட்டிய வீடுகள் ஒரு காலம். இப்பொ பார்க்கிங்க் இருக்கா என்று தான் பாக்க வேண்டும். வீடு கட்டும் ஆட்களிடம் மட்டும் போய் ஆலோசனை சொல்லிவிட முடியாது.. அவரவர்களுக்கு ஆயிரம் தேவைகள். (சிவில் இஞ்சினியர்கள் தான் பாவம் முழி பிதுங்கி இருப்பர்). இப்படித்தான் அந்தமானில் மீட்டர் வட்டி எல்லாம் விட்டு சூப்பரா ஒரு வீடு கட்டினார் ஒருத்தர். கட்டின இடம் மேலூர் பக்கத்துலெ கிராமம். மாமியோட முகம் தெரியும் என்ற அளவுக்கு டைல்ஸ் போட்டு கட்டினார். ஒரு வருஷம் கழிச்சி வந்து பாத்து நொந்தே போனார். கிராமத்து மக்கள் அந்த வீட்டில் வைக்கோலும் எருவும் தான் அடுக்கி வைத்திருந்தனர். அவர்களின் தேவை அது தானே..
கும்பகோணத்தில் பட்டு நெசவுக்காரர்களின் வீடு நீள நீளமாய் இருக்குமாம். ஐந்து சேலை நெய்யத் தேவையான பாவுகளை வீட்டில் நீட்ட வசதியாய் நீளமாய் வீடுகள் இருக்கும். ஆனா இப்பொ போகிற போக்கைப் பாத்தால் எவ்வளவு அகலம் ரோடு போட்டாலும் பத்தாமல் போகுதே… ஆனா டோல் வாங்கிக்கிற இடம் மட்டும் இம்புட்டு அகலமா எப்படி எடம் கேட்டு வாங்குவாங்களோ!!!
அப்படி தெருத் தெருவா அழைஞ்சி அப்படியே…இலங்கைக்கு போலாமே… அங்கே தெரு எப்படி இருந்ததாம்? ஒரு தெரு தாண்டி அடுத்த தெரு போவதுக்குள்ளாற தாவு தீந்து போயிடுமாம்… அது எப்படி இருக்காம்??? ஒரு நாடு விட்டு நாடு போற மாதிரி இருக்காம்.. எல்லார் கிட்டேயும் நல்ல பேர் வாங்கும் ஒரே டைரக்டர் நம்ம கம்பர் தான். யாரையும் குறைவா சொல்லி வைக்கவில்லை…
காயத்தால் பெரியர்; வீரம் கணக்கு இலர்; உலகம் கல்லும்ஆயத்தர்;வரத்தின் தன்மை அளவு அற்றார்; அறிதல் தேற்றாமாயத்தார்; அவர்க்கு எங்கேனும் வரம்பும் உண்டாமோ மற்று ஓர் தேயத்தார்தேயம் சேறல் தெருவிலோர் தெருவில் சேறல்.
கம்பர் எப்பவும் ஓவர் பில்டப் செய்பவர் தானே… கவிஞர்களுக்கு அதுக்கு அனுமதி இருக்கு. அந்தக்காலத்தில் நாடெல்லாம் சின்னதா இருந்திருக்கும்னு நெனைச்சிக்கலாமே…
ஜேம்ஸ் பாண்ட் படத்துலதான் .. அவரு வானூர்தியில் இருந்து குதித்து கப்பல் ல விழுவாறு …அப்புறம் படகை பிடிச்சு நெடுஞ்சாலையில் இறந்குவரு …அப்படியே டைவு அடிச்சு ..சோப்பு நுரையில் புதைந்து இருக்கும் கதாநாயகிடம் போய் சேருவாறு….காட்சிக்கு காட்சி மாற்றம் இருக்கும்
நீங்களும் …அதே பார்முலா ….கடைசில …காம்பினை போய் கட்டி பிடித்து விடுகின்றிர்கள் …கலக்கல் ( உங்களுக்கு விமர்சனம் எழுததான் எனக்கு நேரம் கிடைக்க வில்லை …)
சுடச்சுட கருத்துகள் பதித்த நம்ம நெல்லை அன்னாச்சிக்கு எல்லாருமா ஒரு ஓ போட்றலாமோ…