இப்போதெல்லாம் எந்த வீட்டிற்கு சென்றாலும் அங்கே
வரவேற்பரையில் தவறாமல் இருக்கும் ஒரு பொருள் (லாஃபிங் புத்தா) சிரிக்கும் புத்தர் சிலை தான்.
விதம் விதமான வடிவங்களில் நிறங்களில் அளவுகளில் இருந்தாலும் மாறாது பொதுவாய் இருப்பது அந்த ஒரு
சிரிப்பு மட்டும் தான்.
எந்த விழாவாக இருந்தாலும் தவறாது பரிசுப்பொருள்
பட்டியலில் இருக்கவும் இந்த சிரிக்கும் புத்தர் தவறுவதில்லை. சிலர் அதனை பூஜை அறையில் வைத்து வணங்குவதையும் பாத்திருக்கேன்.
அதுவும் தோளின் மேல் பையை சுமந்திருக்கும் சிலைக்கு
வியாபார நிறுவனங்களில் நல்லாவே கிராக்கி இருக்கு.
தத்துவம் தான் என்ன? வாய் விட்டு சிரிச்சா… நோய்
விட்டுப் போகும். அட்லீஸ்ட் இந்த சிரிக்கும் புத்தா
பொம்மை பாத்தாவது சிரிச்சி நாம சந்தோஷமா இருக்க மாட்டோமா என்ற ஒரு சின்ன நப்பாசை தான்.
சிரிக்கும் புத்தா சரி… அது என்ன சிரிக்கும் சிவன்? இதென்ன
புது கலாட்டா?? என்று கேக்கீகளா?? அதுக்குத்தானே
இவ்வளவு பெரீய்ய்ய்ய்ய பீடிகையோடு ஆரம்பிக்கேன்.
வடிவேல் அய்யோ.. அய்யோ என்று கெக்கே பெக்கேன்னு சிரிக்கிற மாதிரி திருவதிகை – ங்கிற ஊரில இருக்கிற கெடில நதிக்கரையில நம்ம சிவன் சிரிக்கிறாராம்.
அதை தன்னோட அந்தக்கால மொபைல் கேமிராவில் திருநாவுக்கரசர் படம் பிடிச்சி வச்சிருக்கார்.
அது சரி… ஏன் சிவன் சிரித்தார்??
காரணம் இது தானாம். இடப்பக்கம் இருக்கும் பார்வதி சட்டென எதுக்காகவோ திரும்பி இருக்கிறார். மயில் தான் கொத்த வருதோன்னு அப்பொ சிவன் கழுத்தில் இருக்கிற பாம்பு கொஞ்சம் பயந்து பின் வாங்கிச்சாம். சிவன் தலை மேலே இருக்கிற சந்திரனும் ஐயயோ தன்னை விழுங்கப் போவுதோன்னு பயந்துகிச்சாம்.
அடப்பாவிகளா… எல்லாருமே எனக்குள்ளே தானே கீரீங்க…
அப்படியும் ஏன் தான் பயந்து சாகுறீங்களோன்னு
சிரிக்கிறாராம் சிவன்…
பாட்டு பாக்கலாமா:
கிடந்த பாம்பு அருகுகண்டு அரிவை பேதுற
கிடந்த பாம்பு அவளையோர் மயிலென்று ஐயுற
கிடந்த நீர்ச்சடைமிசை பிறையும் ஏங்கவே
கிடந்து தான் நகுதலை கெடில வாணரே
மக்களே இனி சிரிக்கும் புத்தரோடு சிரிக்கும் சிவனையும் தேடிப் பிடியுங்கள்…