“சித்தாடை கட்டிகிட்டு.. சிங்காரம் பண்ணிகிட்டு” என்று ஓர் அந்தக் கால சூப்பர் ஹிட் குத்துப்பாட்டு. இன்று பாடினாலும் அம்பதையும் ஆட வைக்கும் பாட்டு அது. (சந்தடி சாக்கில் நம்ம வயசு குத்து
மதிப்பா வந்திடுதே!!)
சித்தாள் என்பது சின்ன ஆள் என்பதின் மருவாக இருக்கலாம். அதுக்கு எதிர் அணி ஆள் நிமிந்தாள் … அதாவது நிமிர்ந்த ஆள்..உயரமான ஆள்…ஆண் தொழிலாளி.
என்ன தான் சட்டம் சொன்னாலும், சம்பள வித்தியாசம் இருக்கத்தான் செய்யுது.. சின்ன ஆள் என்றால் என்ன மட்டமா???
கடுகு சிறுத்தாலும் காரம் பெருசு என்பார்கள்…
ஆனால் நம் மக்களோ… மேக்கப் பாத்தே ஏமார்ந்து போகும் ரகம்.. அப்பொவே உருவு கண்டு எள்ளாமை வேண்டும் என்றும் சொல்லி வைத்தார் வள்ளுவர்.
நல்ல லட்சமனா ஒரு பெண் வந்திருக்கா… பாத்த ஆளு..இது என்ன குதிரை மூஞ்சி.. என்று விரட்டி விட்டார். அது அப்புறம் பாம்பே வரை ஓடி ஹேமமாலினி ஆகி திரைஉலகையே கலக்கியது சரித்திரம்.
பாக்பான் என்ற படத்தில் அமிதாபின் இணையாக வாழ்ந்தே காட்டிய முகம் அது..
இந்த தப்பை நாம ஏன் செய்யனும்னு நெனெச்ச தமிழ் திரையுலகம் , ஒரு நடிகைக்கு ஓகே சொல்லி அந்த முகம் இன்னும் சீரியல் வரை வெளுத்து வாங்குது.
சரி..அமிதாப் மட்டும் என்னவாம்.. உயரம் அதிகம் என்று விரட்டி விடப்பட்டவர் தானே!
அப்புறம் … லம்பு என்ற ஹிந்தி வார்த்தை, அமிதாப் வருகைக்குப் பின் லம்பூஜி என்று மரியாதையுடன் சேர்த்து பேசப்படுது.
லம்பூ என்று அமிதாப்பை வெளியே தள்ளிய அதே டைரக்டர் ஒரு தடவை கால்சீட்டுக்காய் அமிதாப்பின் வீட்டு வாசலில் நிற்க வைத்தது தான் கால விளையாட்டு.
ஆனால் குள்ளமாய் இருப்பவர்களை கொஞ்சம் அதிகமாவே கிண்டல் பண்றோம்… குட்டையனை நம்பக்கூடாது என்ற விதி நியூட்டனின் நாலாம் விதி போல் சொல்லப்படுது.
அது சரி நியூட்டனின் ஐந்தாம் விதி என்ன தெரியுமா?? அமைதியா சாந்தமா இருக்கிறவனை நம்பக்கூடாது.. (அடப் பாவிகளா..அதுக்காக நான் ஏதாவது அலம்பல் பண்ணிட்டே இருக்கனுமா
என்ன??)
என்னைக் கேட்டால் குள்ளமாய் இருப்பவர்கள் அறிவாளிகளாய் இருப்பர். காரணம் பெரிசா
ஒண்ணும் கெடையாது. அவர்கள் எப்போதும் முதல் ரோ பெஞ்சில் இருப்பாங்க… கவிதை எழுதுறது,
வாத்தி எத்தனை தடவை ஸோ சொல்றாருன்னு எண்றது, ராக்கெட் விட்றது, படம் வரையறது, பெஞ்சில் சிற்பம் செதுக்குறது அதெல்லாம் அவர்களால் முடியாது.. (உயரமா இருந்து பல கலைகள் செஞ்சது இப்பொ உங்களை எழுதி கலாய்க்க உதவுது..)
திரைப்பட இயக்குனர் கஜேந்திரன் குள்ளமான உருவம். ஆனால் உயர்ந்த சிந்தனை உள்ளவர்.. சினிமாவில் குள்ளமானதை வைத்து பார்த்திபன், செமையா கிண்டல் செய்து கொண்டிருப்பார்…
ஏன் இப்படி நாமெள்ளாம் ஒரே மாதிரி கிண்டல் செய்றோம்??
யாருப்பா அது.. பின்னாடி… சொல்லாம கொள்ளாம தோள்லெ கை போட்றது??
அட… நம்ம கம்பர்..??
என்ன ஒரு மாதிரி சிரிக்கிறீங்க…!! நீங்களும் ஏதாவது கிண்டல் செஞ்ச்சிருக்கீங்களா – ன்னு கேட்டேன்..
ஒரு பாட்டை கொடுத்துட்டு உன் பாடு உன் குரூப் பாடு என்று அப்படியே நைஸா நழுவிட்டார்..
கம்பர் கொடுத்த பாட்டில் ஓர் அபூர்வ சகோதரர்கள் பாணியில் இருவர் சந்திக்கும் காட்சி வருது.
ஒருவர்: அகத்தியர் (அதே குள்ளமுனியே தான்).
மற்றொருவர் : இராமன்.
பார்த்திபன் கஜேந்திரனை கலாய்கும் போது, எல்லாரும் நிக்கும் போது நீ மட்டும் ஏன் உக்காந்திருக்கே? – என்பார்.
அய்யோ .. நான் நிக்கிறேன் … என்று குதித்து பதில் வரும்.
கம்பர் பாக்கும் போதும், அகத்தியர் உக்காந்த மாதிரி தெரியுது. பக்கத்திலெ வந்து பாக்கும் போது தான் தெரியுது… அவர் உக்காரலெ.. நிக்கிறாரு.
சரி அடுத்து பாத்தா … பக்கத்திலெ இராமன் நிக்கிறாரு..
என்ன தான் அகத்தியர் முனியா இருந்தாலும், ஹீரோ ராமன் தானே!!
ஹீரோவை தூக்கி வைக்கனும். அதே சமயம் அகத்திய முனிக்கு கோவமும் வந்துறக்கூடாது..
இருகோடுகள் படம் பாத்தவங்க.. கொஞ்சம் யோசிங்க… ஒரு கோட்டை சின்னதாக்க… பக்கத்திலெ.. ஓரு பெரிய கோடு போடணும்.. அம்புட்டுத்தான்.
கம்பரும் அதே தான் செய்கிறார்.
இராமனைப் பாத்து “நிமிந்தாளு” – நெடியோன்னு சொல்லிவிட்டார். அதாவது அமிதாப்பை லம்பு என்று சொல்வது போல்..சொல்லி.. நிக்கிற ஆளு தான் அகத்தியர் என்றும் கிண்டல் செய்து.. நமக்கென்ன
வம்புன்னு ஓடிப் போயிட்டாரு பாருங்க..
கம்பர் ரகசியமா கொடுத்த பாட்டு இது தான்:
நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான்
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால்
நன்று வரவு என்று பல நல் உரை பகர்ந்தான்
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசைகொண்டான்.
[நின்ற அகத்தியனை இராமன் வணங்கினான். அப்போது எக்காலத்திலும் நிலைத்து நிற்கும் இனிய தமிழுக்கு இலக்கண நூல் எழுதிய அகத்தியன் ராமனைத் தழுவி வருக..வருக.. வரவு நல்வரவாகுக என்றான்]
அதாவது நிமிந்தாளை அகத்தியர் கட்டி தழுவிய கதை தான் இது.
கிண்டல் தொடருதோ இல்லையோ..
கம்பன் தொடர்கள் தொடரும்..