இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது… நானும் வரமாட்டேன்… இது வருத்தப் படாத வாலிபர் சங்க தலைவர் கட்டபுள்ளை உதிர்த்த தத்துவம். இது ஒரு பயில்வானிடமிருந்து தப்ப போட்ட கோடு.. இதை காமெடி என்கிறோம்.
ஆனால் வாழ்க்கையில் ஒரு எறும்புக்குப் பயந்து நாம் கோடு கிழிக்கிறோம்.. செம காமெடி என்று எறும்புகள் சிரிக்கலாம்… எறும்பு பாஷை யாருக்காவது தெரிந்தால் கேட்டு எழுதுங்கள்.
முன்பெல்லாம் இது ஒரு நடு நிலை நாளிதழ் என்று விளம்பரங்கள் எல்லாம் வரும்.. ஆனால் இப்போ அப்படி எல்லாம் வருவதில்லை.. டிவீ க்கள் விடுகளில் புகுந்த பின்னர் ஒவ்வொரு கட்சி சார்பில் சேனல்கள் வந்த பின்னர் இப்படி நடு நிலை தேவைப்பட்டால் நாம் பொதிகை தான் பார்க்க வேண்டும்.
அதிலும் சென்சேஷனல் செய்திகளை கவர் செய்வதில் கவனம் செலுத்தும் ஆட்கள் ஹஜாரேவின் உண்ணா நோண்பு முடியும் போது லேசான வருத்தத்தில் இருந்ததை காண முடிந்தது. ஆமா 12 நாட்கள் அங்கேயே டேரா போட்டு இருந்தவர்கள் இனி என்ன செய்வது என்று இருந்ததில் உண்மை இருக்கத்தான் செய்கிறது..
அரசு அதிகாரிகள் ஆளும் கட்சியின் கைப்பாவைகள் என்ற கருத்து பரவலாய் இருக்கத்தான் செய்கிறது. அது தான் இங்கே நடு நிலைமை…
இங்கே அந்தமானில் ஓரளவுக்கு அதிகாரிகள் அனைவரிடமும் நன்கு நண்பர்களாய் பழகி விட்டு அமெரிக்கா சென்றார் நமது நண்பர் கார்த்திக்பாபு.. அவர் அதே நினைப்பில் மதுரையில் ஒரு அலுவலகத்தின் உள்ளே நுழைய, பெரும் வாய்சண்டையாய் முடிந்ததாம். எனக்கு உடனே போன் வந்தது.. என்ன அதிகாரிகள் இப்படி இருக்காய்ங்க?? நான் சொன்னேன்.. இப்படித்தான் இருப்பாங்க..அது தான் அதிகாரிகளின் (நடு) நிலைமை. நீங்கள் இங்கே இருப்பது மாதிரி இருப்பார்கள் என்ற நினைப்பு தான் தவறு என்றேன்.. (ஏண்டா போன் செய்தோம் என்று ஆயிருக்கும்)
Facebook ல் ஒரு நாள் காக்கா குருவிகளுக்கு உணவு வைங்கள், என்றும் பின்னர் தண்ணியும் காட்டுங்க.. என்றும் தகவல் வந்தது.. நானும் பொறுப்பா… கிட்டத்தட்ட 10 மாதகாலமாய் தினமும் ஒரு பிடி அரிசியும் ஒரு கோப்பையில் தண்ணியும் வைக்கிறேன்..
நான் சொல்ற ஒரு வேளை செய்ய நான் பத்து தடவை சொல்ல வேண்டியிருக்கு.. யாரோ..(எவளோ) fb ல் சொன்னதை விடாம செய்றீங்களேன்னு என் இனியபாதி அடிக்கடி குத்திக் காட்டுவதும் உண்டு.. அது அவர்கள் நிலை… சாட்டிங்க் போய் மாட்டிக் கொண்ட கதைகள் தான் எல்லா அவள் விகடன், சினேகிதி, மங்கையர் மலர் ஆகியவற்றிலும் விடாமே செய்திகள் வருதே… நானு இங்கே அப்பாவியா கம்பராமாயணம் பத்தி எழுதுவதை எப்படி வீட்டில் நம்ப வைப்பது??
அந்த குருவியை விட்டோமே… ஒரு நாள் அரிசி வைக்காட்டி வீட்டில் வந்து..என்னப்பா..நீ மட்டும் துன்றே?..எனக்கு இல்லையான்னு..கேக்கிற மாதிரி வந்து கீ..கீ..என்று கத்து கத்தி விட்டு ஓடிப் போகும். கிலோ 44 ரூபாய்க்கு வாங்கிய அரிசி, குருவிக்குப் போடுவதில் என் மனைவிக்கு உடன்பாடு இல்லை.
(ஆமா.. Economics அதுவும் Spl Ecomonomics படிச்சவங்களுக்குப் பிடிக்குமா என்ன??). பொன்னி புலுங்கலரிசி, பச்சரிசி, சாதா அரிசி, ரேஷன் அரிசி என்று 44, 40, 20,10 ரூபாயில் அந்தமானில் கிடைக்குது.. ஒரு வழியா நடு நிலையில் 20 ரூபாய் அரிசி குருவிக்குப் போட முழுமனதாய் தீர்மானம் ஆகி விட்டது.
இவ்வளவு மாதங்கள் 44 ரூபா அரிசி சாப்பிட்டு ஜாலியாய் இருந்த அந்த குருவிகள்..இந்த 20 ரூபா அரிசியை தீண்டுவதில்லை.. ஒருபிடி அரிசியை ஒரு நாளில் காலி செய்த குருவிகள், மூணு நாளாயும் ஒரு பிடியை சாப்பிடாமல் ஹஜாரே செய்து கொண்டிருக்கின்றன. ஏதோ இன்று காலை மட்டும் ஒரு குருவி வந்து ஒரு வாய் சாப்பிட்டு ஓடி விட்டது. (Below Poverty Line – குருவியாய் இருக்குமோ)
நடு நிலமைக்கு நல்ல உதாரணம் சொல்லனும்னா புதிதாய் கல்யாணம் ஆன கணவனைத் தான் சொல்லலாம். ஒரு பக்கம் புது மனைவி..மறுபக்கம் அம்மா…நடு நிலையில் அவன்.. அப்போது மட்டும். அப்புறம்… எல்லாருக்கும் தெரிஞ்ச்சதை எதுக்கு எழுதனும்??
தேர்தலில் ஜெயிக்கவும் இந்த நடு நிலையாளர்கள் தான் உதவுவார்கள். எப்படி தெரியுமா?? கட்சி சார்பு இருக்கிறவங்க ஓடிப் போய் காலங்காத்தாலே ஓட்டுப் போட்றுவாங்க.. ராமன் ஆண்டா..ராவணன் ஆண்டா என்னனு இருக்கிறவங்க… ஏதாவது கிடைச்சா ஒட்டு போடுவாங்க… ஆனா அந்த நடுநிலை ஆட்கள் அன்றைக்கு என்ன முடிவு செய்கிறார்களோ..அது தான் தேர்தல் முடிவாய் அமையும்.
ஹாலோ..எக்ஸ்கியூஸ்மீ…
திரும்பினால்… கம்பர்… ஏன் நான் சொன்ன நடுநிலை மட்டும் உன் கண்ணில் படலையா???
சொல்லுங்க ஐயனே…
ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்கனும்? எதிர்கட்சி, நடுநிலையினர், ஆளும் கட்சி இவங்களுக்கும் நாலு விஷயம் நல்லது செய்யனும். எவனாவது ஏதாவது கன்னா பின்னானு சொன்னா, அதை அப்படி இல்லே கண்ணா என்று உட்றனும். அடுத்தவன் கிட்டே என்ன புடுங்கலாம்னு நெனைக்காம..நாம என்ன தரலாம்னு இருக்கனும்.. அப்புடி இருந்தா..இந்த உலகத்துக்கும் நல்லது செய்யும்… மேல் உலகமும் நல்லா இருக்கும்.
செய்வன செய்தல் யாண்டும் தீயன் சிந்தியாமை
வைவன வந்த போதும் வசையில இனிய கூறல்
மெய்யன வழங்கல் யாவும் மேவின வெஃகல் இன்மை
உய்வன ஆக்கித் தம்மோடு உயர்வன உவந்து செய்வாய்.
இது சுக்ரீவனின் நல் வானர ஆட்சி செய்ய இராமன் சொன்ன புத்திமதிகள்.. இது நம் ஆட்சியாளர்களுக்கும் நச்சுன்னு பொருந்துறதைப் பாத்தீகளா???