இப்படி ஒரு பழைய பாடல் வந்தபோது ஏனோ அதில் அவ்வளவு கவனம் போகவில்லை.
ஆனால் அதே சேதி பின்னாளில் ஒரு புதுக் கவிதையாக வந்த போது இதயத்தைத் தைத்துவிட்டது.
என் என் தலைமுடி
கலைந்திருக்கிறது..
எங்கே காட்டு
உன் கன்னத்தை!!!
இப்படி படித்த போது தான் அட.. கன்னம் ஒரு கண்ணாடியோ என்று மண்டையில் உரைக்கிறது.
முகத்தில் முகம் பார்க்கும் சங்கதி இருக்கட்டும்… முகம் பார்த்து ஆளை எடை போட முடியுமா?? ஒரு காலத்தில் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். ஆனால் இப்பொவெல்லாம் அந்தக் கதை நடக்காது. ஏனென்றால் தமிழ் சினிமா எப்படி நடந்தால் எப்படி ரியாக்சன் தர வேண்டும் என்பதை விலாவாரியாக கோணார் நோட்ஸ் சொல்வது போல் கிளாஸ் எடுக்கிறது.
பெரிய விஷயத்தைச் சொல்லி முடித்தவுடன் இந்த மேட்டருக்கு முகத்திலெ காட்டுர ரியாக்சன் இவ்வளவு தானா? என்பதும்.. ஒரு ரியாக்சனும் இல்லையே என்பதும் அடிக்கடி கேட்டு மகிழும் டயலாக்குகள்.
தாயை ஆத்தங்கரையில் பாத்தா மகளை வீட்டிலா போய் பாக்க வேண்டும் என்று கேட்டவர்களை இப்போது யாரும் பாத்துவிட முடியாது. அப்படி சிலர் இருந்தாலும் கூட அவர்கள் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா?? இது மட்டும் உண்மையானால் நமக்கு எத்தனையோ காந்தி கிடைத்திருக்கனுமே?? கிடைக்கலையே??
உன் நண்பர்களைக் பற்றிச் சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்றார்கள். அப்படியே அதை நினைத்தபடி கோவில் பக்கம் போனா.. என் நண்பன் கடவுளிடம் முறையிடுகிறான் இப்படி…
ஆண்டவனே… நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாத்து.. என் எதிரிகளிடமிருந்து என்னை நானே பாத்துக் கொள்கிறேன்.. இது எப்படி இருக்கு?? (நண்பன்டா…)
அப்பொ வேறெ வழியே இல்லையா?? ஆட்களைப் புரிந்து கொள்ள??
Allen & Barbara Pease எழுதிய Body Language படிக்கலாம் என்றால் அதுக்கு 275 ரூபாய் செலவு செய்ய வேண்டும். 380 பக்கங்களுக்கு மேல் படிக்க வேண்டும். அப்படி படித்தாலும் மேல் நாட்டவரைத்தான் நாம் புரிந்து கொள்ள முடியும்? கழுவுற மீனில் நழுவும் மீனான நம்மாட்களை புரிந்து கொள்ள அநத யுத்தியும் உதவாது.. அப்பொ என்ன செய்யலாம்??
சமீபத்திய தகவல் தொழில் நுடப உலகில் இதுக்கு வழி கிடைக்குமா என்று யோசிப்பதில் என்ன தவறு இருக்கிறது??
இருங்க ஒரு நிமிஷம் போன் வருது… அப்புறம் வந்து தொடர்கிறேன். ஆமா.. இப்படி செஞ்சா என்ன?? எப்படி??
ஒரு மனுஷன் வச்சிருக்கும் போனில் இருக்கிற ரிங்க்டோன் வைச்சி ஆள் எப்படின்னு சொல்ல முயற்சிக்கலாமே?? இதோ ஒரு டிரையல்..
கௌசல்யா சுப்ரஜா (சுப்ரபாதம்) காயத்ரி மந்திரம் போன்றவை இருந்தால் அவர் பக்திமான் தான் (வெளி அர்த்தம்). உள் அர்த்தம் தான் நல்லவன் என்பதை வெளியே காட்டிக் கொள்ளும் குணம்.
குன்றத்திலே குமரணுக்கு கொண்டாட்டம்: ஆர்ப்பாட்டமான பக்தி.. கொஞ்சம் முரட்டுத்தனமும் இருக்கும்.
Why dis Kolaveri? : அடிக்கடி மாறுவார்கள்.. கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்க்னும் இந்த மாதிரி ஆட்களிடம்.
அந்தந்த போன் வாங்கும் போது இருந்த அதே ரிங்க்டோன்: அதிகமாக அலட்டாத பார்ட்டிகள். கஞ்சத்தனமும் கூட அப்டேட் ஆகாத ஆட்களாகவும் இருப்பார்கள்..
முன்னி பத்னாமு ஹுஇ.. போன்ற ஆட்கள் ஜாலிப் பேர்வழிகள்.. அவர்களால் நமக்கு பாதிப்பு வராது… நாம் அவர்களை சீண்டாத வரை.
குழந்தை அழும் குரல்: வக்கிரமான புத்தியும் குழ்ந்தைத்தனமும் இருக்கும் ஆட்கள் என்றும் இவர்களை வகைப் படுத்தலாம்.
இப்படியே யோசிச்சிட்டே போகலாம்.. ஏன் நீங்களும் யோசிச்சி எழுதுங்களேன்..
இந்த ரிங்க்டோன் பல இடங்களில் தொல்லை தருவதுண்டு.. ஜாலியா சினிமா பாக்கப் போனா… பக்கத்தில் அசிங்கமான ரிங்க் டோன்… அப்புறம் தியேட்டரில் இருக்கிறோம் என்பதையே மறந்து தன் கூட்டாளியோ அல்லது மேனஜரையோ காட்டுத்தனமாய் திட்டுவதும் தியேட்டர் Dts மீறி ஒலிக்கும்..
அந்தமானில் ராஜ்பவனில் மீட்டிங்க் நடக்கும் முன்னர் மொபைல் போங்களை எடுத்துக் கொண்டு தான் உள்ளே விடுகின்றனர். நல்ல முன் உதாரணம். அனைவரும் கடைபிடிக்கலாம்.
சமீபத்தில் தில்லியில் ஒரு Workshop சென்ற போது எனக்கு ஒரு போன் வர பாடம் நடத்தியவர் தனக்கு எரிச்சல் வருவதாய் சொன்னார். ஆனால் அவரும் தனக்கு வரும் கால்களை எடுத்துப் பேசி வந்திருக்கும் 37 நபர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கினார்.
போன்களை Silent mode ல் வைப்பது என்பது ஒரு குறைந்தபட்சம் நாகரீகம் சம்பந்தப் பட்ட விஷயம்.
இப்படித்தான் அந்தக் காலத்தில் ஒரு சைலண்ட் மோட் பற்றிய ஒரு சேதி இருக்கு..
கம்பராமாயணம் தானே என்று கேட்பவர்களுக்கு என் பதில் “இல்லை” என்பது தான். ஆனால் பாதி உண்மை இருக்கு.. ராமாயணம் தொடர்பானது தான்.
தற்சமயம் புயலால் அடையாளம் தெரியாமல் இருக்கும் தனுஷ்கோடியில் ரகசிய ஆலோசனை நடக்கிறது.. இலங்கைக்குப் போய் இராவணனை அழிப்பது எப்படி என்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம். அப்போது இப்போதைய செல்போன் போல் தொல்லைகள் செய்தன ஆலமரத்தின் பறவைகள். (நாட்டாமை போல் ராமரும் ஆலமரத்தின் கீழ் தான் உக்காந்திருக்கனும். செம்பு இருந்திருக்காது..)
கடுப்பான ராமர்… கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா என்று சொல்ல பறவைகள் தங்கள் Volume களை குறைத்தனர் என்று அகநானூறில் ஒரு பாடல் சொல்லுதாம்.
கடுவன் மன்னனார் என்ற சங்கப் புலவர் சொன்ன அந்த பாடலின் வரிகள் இப்படி:
வெள்வேல் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிடும் பௌவம் இரங்கு முன்றுறை
வெல்போர் இராமன் அருமறைக் கவித்த
பல்வீழ் ஆலம்போல ஒலிஅவிந்து அன்றால்.
இந்த மாதிரி சேதியை கம்பர் சொல்லாமல் விட்டது…. வால்மீகியின் ராமயணத்திலும் இப்படி இல்லையாம்.. மகாவித்வான் ரா இராகவையங்கார் எழுதிய கவிச்சக்கரவர்த்தி கம்பர் என்ற நூலை ஆதாரமாய் வைத்து எழுதியது இந்த போஸ்ட். அவர்க்கு என் தலை தாழ்த்திய வணக்கங்கள்..
என்ன உங்களுக்குப் பிடிச்சதா??