திருப்பதி ஏழுமலை வெங்கடேசா…


கிட்டத்தட்ட எல்லா இந்துக் கடவுள்களும் ஏதோ ஒர் ஆயுதத்தினை கையில் வைத்துத்தான் இருக்கிறது. பக்தி என்பது பயந்து கொண்டாவது வரட்டும் என்ற நல்ல எண்ணத்தில் இருக்கலாம்.

ஏதாவது தப்பான காரியம் செஞ்சா சாமி கண்ணைக் குத்திடும், நாக்கை அறுதிடும் என்ற பயத்தில் கொழந்தையா இருக்கறச்செ ரொம்ப சமர்த்தா.. நல்ல புள்ளையா இருக்கோம்..

விவரம் புரிஞ்ச்சி சாமி ஒண்ணும் செய்யாது என்று தெரிஞ்ச்ச பிறகு உண்டியல் திருட்டு, சிலை கடத்தல் எல்லாமே தொடருது.

ஆனா இந்த திருப்பதி சாமி பத்தி பயமுறுத்தும் பல கடிதங்கள் அந்தக் காலத்தில் வரும். இதை 20 காப்பி எடுத்து அனுப்பலை…நீ ரத்தம் கக்கி சாவே என்று மோடி மஸ்தான் ரேஞ்சுக்கு மிரட்டும் அவை.

இன்றும் சில ஈ மெயில்களில் அதே மிரட்டல் தொடர்கிறது என்பது தான் வேதனை. திருப்பதி சாமி என்ன Multi Level Marketting ல் இறங்கச் சொல்லி விட்டாரா என்ன??

கல்கத்தா காளி கதையே தனி தான்.. அந்தமானில் மிக விமரிசையாக (தமிழர்கள்… முஸ்லீம்கள் கூட சேர்ந்து) கொண்டாடும் விழாவாய் துர்க்கா பூஜை இருக்கும். துர்க்கை கையில் ஏகே 47 துப்பாக்கி இல்லாத குறைதான்..

காளீயை நேரில் தரிசித்த இராமகிருஷ்ணரை பாத்தா எவ்வளவு சாந்தமா இருக்காரு??? என்ன ஒரு Contrast?? நம்ம முகத்திலும் அந்த சாந்தம் வரவழைக்கும் முயற்சி தான் இந்த மிரட்டலோ… இருக்கலாம் அந்த காலத்தில் எது செஞ்ச்சிருந்தாலும் ஏதாவது அர்த்தம் இருக்கும்.

திருப்பதியை வச்சி செய்யும் காமெடிகள் செம ஹிட் ஆகும். திருப்பதி லட்டுக்கு பதிலா ஜிலேபி கையில் கிடைப்பதும், சொப்னாவுக்காய் அதை விவேக் சாப்பிடுவதும், சந்திரபாபு நாயுடுவே சொல்லிட்டாரா…அப்பொ சரியாத்தான் இருக்கும் என்பதும் செம காமெடிகள்.

No Entry Take Diverson என்று சொல்லி சொல்லி சென்னை தொடங்கி திருப்பதி வரும் விஜய் & விவேக் ஜோடி கலாட்டா எப்பவுமே பாக்கலாம்.. என்னடா இது கையிலெ லட்டு கொடுத்துட்டு ஜிலேபியை பிச்சி போட்டிருக்காங்க என்று விவேக் சொல்வது சலிக்காத காமெடிகள்.

திருப்பதி சென்று திரும்பி வந்தால் என்று ஒரு பழைய பாட்டு வரும். திருப்பம் வரும்… விருப்பம் நிறைவேறும்.. இதெல்லாம் சரி தான். ஆனா திரும்பி வந்தால்… என்றது எதுக்கு?? (சும்மா எதுகை மோனை சமாச்சாரத்துக்காய் எழுதி இருப்பாகளோ)

வருஷக்கணக்கா போகணும்னு சொல்லி திருப்பதி போக முடியாத ஆட்களும் இருக்காக. வருஷாவருஷம் திருப்பதி போகும் ஆட்களும் உண்டு. 24 மணி நேரமா லயன்லெ தர்ம தரிசனம் பாக்க நின்னுட்டு ஓரிரு செகண்ட்களில் ஜருகண்டி ஜருகண்டி என்று தள்ளு முள்ளுவில் சிக்கி வெளியே வருவதோடு திருப்பதி தரிசனம் முடியுது. கண்ணை மூடி சாமி கும்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு திருப்பதி தரிசனம் கோவிந்தா கோவிந்தா தான்..

ஆமா இந்த கோவிந்தா என்பதை இறுதி யாத்திரைக்கும் பயன் படுத்துறோம். முடிஞ்ச்சு போகும் விஸ்ஜயத்தை கோவிந்தா என்கிறோமா?? அல்லது இறைவன் அடி சேர்வதைத்தான் அப்படி சொல்றோமா??? தெரியலையே கோவிந்தா..

திருப்பதியின் அருமை பெருமைகளைப் பத்தி யார் கிட்டெயாவது கேக்கலாமா?? பெரியார் கிட்டெ கேக்க முடியாது. யாராவது பெரியவா கிட்டெ கேக்கலாம். எனக்குத் தெரிஞ்ச்ச பெரியவர் கம்பர் தான்.

ஹலோ மிஸ்டர் கம்பர் திருப்பதி பத்தி ஏதாவது எடுத்து விடுங்களேன்… (நீங்க ஒண்ணும் தப்பா நினைக்காதீங்க.. நானும் கம்பரும் ரொம்ப டிக்கிரி தோஸ்துங்க..ஆமா..சொன்னா நம்புங்க)

கம்பர் பாத்த திருப்பதி மலை எப்படி இருக்கு தெரியுமா??

ஆறுகள் இருக்குமாம்.. அதிலெ குளிச்சா வஞ்சனையெல்லாம் போகுமாம்..

அந்தணர்கள் எல்லாம் குளிக்கிறாகளாம்.

தவம் செஞ்ச முனிவர்கள் எல்லாம் இருக்காங்களாம்

இசை எப்போதும் கேக்குமாம்..

என்ன வாத்தியம் தெரியுமா?? கின்னரம்.. (பேரைக் கேட்டாலே கிக்கா இருக்கா???)

இதிலெ என்ன பியூட்டி தெரியுமா?? வாசிக்கவே வேண்டாம்..சும்மா அதை தடவினாலே போதும்.. சிம்பொனி மாதிரி இசை களை கட்டுமாம்..

கிளைமாக்ஸ் என்ன தெரியுமா?? யானைகுட்டியும் புலிக்குட்டியும் ஒண்ணு சேந்து தூங்குதாம்…

அன்பும்மா..அன்பு..எங்கே பாத்தாலும் அன்பு.

சூது அகற்றும் திரு மறையோர் துறை ஆடும்

நீறை ஆறும் சுருதித் தொல் நூல்

… அம்மா…

(பெரிய்ய பாட்டு அதனாலெ சாம்பிள் போட்டேன்)

இது சரிதானான்னு அடுத்த லீவில் திருப்பதி போய் பாக்கனும்.. ஆமா நீங்களும் வர்ரீங்களா??

நீதி: வாழ்க்கை ஒரு சுயிங்கம் மாதிரி… பாக்க அழகா இருக்கும்..கொஞ்ச நேரம் இனிக்கும்..மத்தபடி ரொம்ப சவ..சவ தான்… ஆக இனிப்பான வாழ்வு நீடிக்க, திருப்பதி போய் வாங்க.