மனைவிக்கு இடம் கொடேல்


”இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி, எங்கெங்கோ அலைகிறான், ஞானத் தங்கமே..” என்று ஞானம் தங்கத்தை தேடுவதையோ, ஞானத்தங்கம் இடம் தேடுவதையோ கணீர் குரலில் சீர்காழி பாடுவார்.

இருக்க இடம் குடுத்தால் படுக்க பாய் கேட்பான் என்பார்கள். இடம் கொடுத்த பிறகு, கொஞ்சம் படுக்க பாய் இருந்தால் நல்லாத் தானே இருக்கும்? அதுக்காக வெல்வெட் வைச்ச மெத்தையா கேட்டாங்க.. வெறும் பாய் தானே! குடுக்காமெ என்ன பழமொழி வேண்டி இருக்கு?

பரமசிவன் கழுத்திலிருக்கும் பாம்பு என்று ஒரு ரகம் இருக்கு. அப்புறம் பல் புடுங்கப்பட்ட பாம்பும் இன்னொரு ரகம். முதல் ரகமாய் இருப்பவர்கள் எப்போதுமே அதில் நிலைத்து இருக்க ரொம்பவே பிரயத்தனப் பட வேண்டும். அப்படி இல்லாட்டி, இப்படி ரெண்டாவது ரகத்துக்கு வந்திடுவாய்ங்க.

வீட்டில் புலி. வெளியில் எலி என்பார்கள். சிலரை சிலர். வீட்டிலும் புலி. வெளியிலும் புலி. சிலரை சிலர் சொல்வர். வீட்டில் எலி. வெளியில் எலி. இது பலர் பலரைப் பற்றிச் சொல்லாததாக இருந்தாலும் அது தான் உண்மையே. எலி புலியை Find செய்து Replace with ராமர், கிருஷ்ணன் என்று கூட சொல்லலாம்.

உனக்கெல்லாம் ரொம்பத்தான் எடம் கொடுத்துட்டேன் என்று அடிக்கடி வீட்டுச் சண்டைகளின் ஊடே கேக்கலாம். அப்பொ எது வரை இடம் கொடுக்கலாம்ணு, நம்ம கட்டபுள்ளெ கோடு போட்ற மாதிரி, கோடு போட்டு வாழ்க்கை நடத்த முடியுமா என்ன? மனைவிக்கு இடம் கொடேல் என்கிறார்கள் ஒருபக்கம். (சின்ன வீட்டுக்கு அதிகம் தரலாம் என்ற உள்குத்து இருக்கோ?) ஆனால் சாமியே சரிபாகம் குடுத்திருக்காரு. அப்படிக்கா.. T 20 மாதிரி வாழ்க்கையில் Life 50 என்று நடத்தினால் வாழ்க்கை ஓடம் Buyancy தவறாமல் லைப்பாய் மாதிரி ஆரோக்கியமாய் இருக்கும்.

இது நான் பேசலை. உள்ளாற போயிருக்கிற தண்ணி பேசுது. இப்படிப் பட்ட டயலாக்களை அதிகமான படத்திலும், அதைவிட அதிகமான இடங்களிலும் கேட்டிருப்பீர்கள். கலர் தண்ணிக்கு அப்படி பேசும் சக்தி இருக்கா என்ன? என்னக்கு என்னவோ, அப்படி பேசுறதுக்காகவே தண்ணியடிப்பதாய் படுகிறது. அடுத்த நாளே பவ்யமாய், சாரி… நேத்து கொஞ்சம் ஓவராயிடுச்சி.. ஓவரா உண்மையெ ஒளறிட்டேன். மனசிலெ ஒன்னும் வச்சிக்காதிங்க. என்று Ctrl + Z க்கு மனு கொடுக்கும்.

மனசிலெ இடம் இருக்கா இல்லையா என்பதை அப்புறம் பாக்கலாம். இந்த உக்கார இடம் கொடுக்கிற சமாச்சாரம் இருக்கே.. அது பெரிய்ய கூத்து. விவேக் ஒரு படத்தில் இண்டர்வியூவுக்குப் போவார். உள்ளே போனதும் உக்காருவார். நான் உன்னை உட்காரச் சொல்லலையே என்றவுடன் நின்றே கேள்விக்கு பதில் தொடரும். (கடைசியில் தீ வச்சி வருவது தொடர்ந்து ஆதித்யா பார்ப்பவர்களுக்குத் தெரிந்திருக்கும்)

பெரும்பாலும் அரசு அதிகாரிகள் இதை அதிகம் எதிர்பார்ப்பதாய்ப் படுகிறது. உட்காருங்க என்று சொல்வதே உச்ச கட்ட மரியாதையாய் தெரிகிறதோ?? பிரிட்டிஷ் அரசாங்கம் ஆண்ட போது இந்தியர்களை உட்கார விடாத காலத்து சட்டம் இன்னும் பலர் மனதில் இருப்பதாய்ப் படுகிறது எனக்கு. உட்காருங்க என்று சொன்ன பிறகு மட்டுமே, உட்காருவது நல்ல மரபாக சொல்லிக் கொடுக்கப் படுகிறது. [சிலரை உட்கார வைத்து விட்டால் எழுந்திருக்க மாட்டார்கள் என்று, சிலரை நிற்க வைத்தே பேசி அனுப்பி விடுவதாகவும் கொள்ளலாம்]

என்னைப் பொறுத்தவரை, நாற்காலிகள் அழகுப் பொருட்கள் அல்ல. அவை அமர்வதற்காகவே. அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. என் அறைக்குள்ளும் வீட்டிற்குள்ளும் வந்தவர் உட்கார்ந்தே பேசலாம் (யார் வந்தாலும் சரி தான்) என்பது என் சிற்றறிவு சொல்கிறது.

அவர் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கிற்கு ஆள் பிடிப்பவராயும் அல்லது மதம் மாற்றும் ஏஜண்டாக இருக்கும் போது அவரை நாம் குண்டுக்கட்டாக வெளியே அனுப்பவதற்குள் தாவு தீந்து போகும் என்பதையும் அனுபவத்தில் கண்டுள்ளேன். (சில சமயம் இவர்களிடமிருந்து தப்பிக்க குடும்பத்தோடு ஓட்டலுக்கு சாப்பிடக் கிளம்ப, வந்தவர் எந்த ஓட்டல்.. என்றார்.. அய்யா சாமி ஆளை விடு என்று கிளம்பி கடைசியில் ஒரு கையேந்தி பவனில் சாப்பிட்டு முடித்தோம். இவர்களிடமிருந்து தப்பிக்க அப்பப்பொ No சொல்லவும் பழகியிருக்க வேண்டும். (பொண்டாட்டிக்கு மட்டும் எப்பொவுமே Yes தான்)

1986 க்கு ஒரு சின்ன டிரிப் அடித்து வரலாம். ஊரில் எல்லாம் பொதுப்பணித்துறை போன்ற அரசுத் துறைகளில் AE (Assistant Engineer), AEE (Assistant Executive Engineer) ஆகியோர்களிடம் அட்டஸ்டேசன் வாங்க நாயாய் அலைந்திருக்கிறோம் ஒரு கும்பலாக. கிரேட் நிகோபார் தீவில் காலடி எடுத்து வைத்த முதல் நாளே, அங்கிருந்த EE (Executive Engineer) உட்கார வைத்து டீ எல்லாம் வாங்கிக் கொடுக்க, அப்போதே அந்தமானில் அஸ்திவாரம் தோண்டப்பட்டு விட்டது.

1987ல் ஒரு இண்டர்வியுவிற்குப் போயிருந்தேன். கேள்வி கேட்பவர் மிலிட்ரிக்காரர். மிடுக்கு மீசையுடன் இருந்தார். பயந்து போய் உட்கார்ந்து விட்டேன். மனுஷன் கைகால் ஆட்டத்தைப் பாத்தும் கூட, நான் உட்காரச் சொல்லையே என்று நிக்க வைத்து கேள்வி கேட்டு, கசக்கிப் பிழிந்தார். நான் ஒரே ஒரு ஆள் தான். இருந்தாலும் கேள்வி கேப்பதில் அலாதி பிரியம் அவருக்கு. (கடைசியில் ஆர்டர் கொடுத்தும் சேராமைக்கு காரணம், அந்த உட்கார இடம் கொடுக்காத காரணமாயும் இருக்கலாம்)

சரி.. உக்கார இடம் கொடுக்கலாமா வேண்டாமா?? என்று ஒரு பட்டி மன்றம் நடத்தி அதுக்கு நம்ம கம்பரை நடுவரா வச்சா என்ன தீர்ப்பு சொல்லுவார் தெரியுமா? அவரும் நம்ம கட்சிங்க.. (சாரி..சாரி… நானும் கம்பர் கட்சிதானுங்க)

அப்பத்தான் வீடணன் ராமர் அணிக்கு வந்து கொஞ்ச நேரம் தான் ஆவுது. அனுமன் இலங்கையில் செய்த சாதனைகள், & ராவணன் பிளஸ் மைனஸ் எல்லாம் தெரிந்தவர்கள் சொல்லலாம் என்று அறிவுப்பு வருது ராமனிடமிருந்து. லேசாக… எழுகிறார் வீடணன்.. அமர்ந்தே பதில் சொல்லுங்க. இது அன்பாய் ராமவார்த்தைகள். தாமரை மலர் போன்ற கண்களை உடைய ராமன் முழுதும் அறிந்தவனான (Resourse Person – வளநபர்) வீடணனை அமர்ந்தே பதில் சொல்ல வைத்தாராம்.

உட்கார இடம் தர மறுப்பது இன்றைய நாகரீகம். உட்கார்ந்தே பேசலாம் என்பது கம்ப நாகரீகம். முடிவில் கம்பனின் பாடல் பாடல் தருவது என் நாகரீகம்.

எழுதலும் இருத்தி என்றிராமன் ஏயினான்முழுது உணர் புலவனை முளரிக் கண்ணினான்பழுது அற வினவிய பொருளைப் பண்பினால்தொழுது உயர் கையினான் தெரியச் சொல்லினான்.

ஒரு மரியாதைக்கு உக்காரச் சொல்லிட்டா, அவர் என்ன கால் மேல் கால் போட்டா உக்கார்ந்தார். அதான் இல்லை. கையினை மேலே தூக்கி அமர்ந்தே வணக்கம் சொல்லி முழுதும் சொன்னாராம். நாம கத்துக்க வேண்டிய சங்கதி கம்பர் கிட்டெ நிறைய்ய இருக்கு.