கூண்டோடு கைலாசம்


விவேக் ஒரு படத்தில் CBI அதிகாரியாக வருவார். மும்தாஜை  விசாரிக்கும் சாக்கில் உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன? என்று கேட்பார். நல்லா சம்பாதிக்கனும். நாலு பேத்துக்கு உதவனும் என்பார். நாயகன் படத்தில் வரும் பாட்டு டியூன் தான் விவேகுக்கு ஞாபகம் வரும்.

அது சரி… அடிக்கடி நாலு பேர் தப்பா பேச மாட்டாங்களா? நாலு பேருக்குத் தெரிஞ்சா பொழெப்பு நாறிடும் அப்படின்றாங்களே?? யார் அந்த நாலு பேர்?

இதுக்கும் பதில் ஒரு சினிமா பாட்டு தான் சொல்லுது.

“நாலு பேருக்கு நன்றி. அந்த
நாலு பேருக்கு நன்றி…
ஆளில்லாத அனாதைக் கெல்லாம்
தோள் கொடுத்துச் தூக்கிச் செல்லும்…”

வெளிநாடுகளிலும் அல்லது அந்தமான் மாதிரி தூரத்து இடங்களில் தாயகம் தாண்டி இருப்பவர்களுக்கு, கல்யாணமோ, கருமாதியோ அந்த லீவில் வரும் போது தான்.

சந்தோஷமாய் இருப்பது எப்படி என்று சுகிசிவம் ஒரு ரகசியம் சொல்கிறார். நம்ம மனசு இருக்கே, அது ஒரு வீடியோ ரெக்கார்டர் மாதிரி. சாதாரண வீடியோ கேமிராவில் நாம என்ன செய்வோம்? கல்யாணம், பிறந்தநாள் போன்ற மகிழ்வான தருணங்களில் தான் பயன்படுத்துவோம். அதை அடிக்கடி போட்டும் பாப்போம். ஆனா அந்த மனசுங்கிற ரெக்கார்டர் மட்டும் கெட்டதை மட்டும் ஏன் ரீவைண்ட் செஞ்ச்சி பாக்கனும். அதை டெலீட் செய்துவிட்டால் சந்தோஷமாய் வாழலாமாம்.

ஆனா மதுரை மின் மயாணத்தில் Skype வசதி எல்லாம் இருக்கிறதாம். நண்பர் ஒருவர் சொன்ன தகவல் அது. (அது சரி?… அங்கேயாவது கரெண்ட் இருக்குமா??)

சமீபத்தில் பரமக்குடி சென்ற போது என் நண்பர் வெங்கட்டின் தந்தை இறந்த தகவல் கிடைத்தது.

என்னையும் அவர்கள் வீட்டில் ஒரு மகன் போலத்தான் அழைத்திருந்தனர். தில்லியில் எடுத்த புகைப்படம் பல ஆண்டுகள் பிறகும் கூட அந்த நட்பை பறை சாற்றி வருகிறது. வீட்டிலிருந்து இறுதி யாத்திரைக்கு கிளம்ப அந்த நாலு பேரில் ஒருவனாய், நான் நின்ற போது நெஞ்சு கொஞ்சம் அதிகமாய்த்தான் வலித்தது.

இதற்கும் மேலாய் கடைசியில் தகனத்திற்கு தீ மூட்டுகையில் நண்பன் சொன்ன வார்த்தை: அப்பாவுக்கு என்னென்னவோ செய்யனும் என்று எல்லாம் யோசித்தோமே… கடைசியில் இதைத்தானே செய்ய முடிகிறது என்ற போது… கண்களில் கண்ணீர் தானே வந்தது. கருவை உருவாக்கிய மனிதருக்கு நாம் தரும் கடைசி உணவு அந்த உஷ்னம் தானா??

கரு என்றவுடன் என் மனதில் வேறு ஒரு கருப்பொருள் உதயமாகிறது. கருவாய் இருக்கும் போதே கற்பிக்கும் முயற்சி எல்லாம் முன்பே நடந்திருக்கிறது. அபிமன்யூ கதை எல்லாருக்கும் தெரியும். சுகப்பிரசம் ஆக கருவில் கேட்க வேண்டிய பாடலாய் “நன்றுடையானை தீயதிலானை…” என்ற பாடலை பாடச் சொல்கிறது தமிழ் வேதம்.

கருவா இருந்த போது கற்பித்த கலைகளால் தான் ஒரு பரமக்குடியின் அய்யங்கார் வீட்டு குழந்தை இன்று சகலகலா வல்லவனாய் இருக்கிறது என்று சில வருடங்களுக்கு முன் வந்த தொடர் ஒன்றும் சொன்னது.

கருவில் அறிவு தரப்பட்டிருக்கிறதா??

அந்தமான் தீவுகளின் கடைக்கோடி தீவான கிரேட்நிகோபார் தீவில் ஒரு ஆறு இருக்கிறது. கலத்தியா என்பது அதன் பெயர். கடலும் ஆறும் சந்திக்கும் அந்த மணல் பகுதியில் பிரமாண்டமான கடல் ஆமைகள் வந்து முட்டை போட்டு குஞ்சு பொறிக்கும். (நடுவில் நம்ம ஆட்கள் அதை (ஆமை முட்டை) பொரியலாவும் செய்து சாப்பிடுவார்கள்… (நான் அதை ருசி பாத்ததில்லை). ஆமை மட்டும் ஆஸ்திரேலியாவிலிருந்து வருவதாய் சொல்கிறார்கள். (ஒரு GPS இல்லை Google Direction இல்லை. ஆனா வர வேண்டிய எடத்துக்கு கரெக்ட்டா வர வேண்டிய நேரத்துக்கு வந்திடும் இந்த சூப்பர் ஆமைகளும்.

அந்த ஆமை குட்டிகள் வெளியே வந்தவுடன் சமர்த்தாய் கடல் தண்ணி பாத்து போக ஆரம்பிக்குது. காலையில் வாக்கிங்க் போன நான் (அங்கே ஏன் வாங்கிங்க் என்ற கேள்வியா?? அங்கு ஒரு பாலம் கட்டும் பணி நடந்தது. அதன் பொறியாளனாய் நான். போதுமா… உங்களுக்கு விளக்கும் சொல்லியே.. போஸ்டிங்க் நீளமாயிடுதே..)

அந்த ஆமை குட்டி அல்லது குஞ்சு வந்தை பாத்து ஒரு ஐடியா வந்தது. அதை ஒரு எலெயிலெ பிடிச்சி அப்படியே டைரக்சனை மாத்தி விட்டேன். அதாவது கடலுக்கு எதிர்புறம். ஒரு நாலு எட்டு தான் அடி எடுத்து வைத்திருக்கும். அப்படியே திரும்பு மறுபடியும் கடல் நோக்கி ஒரு ரீவைண்ட் அடிச்சி நகர ஆரம்பிச்சது.

கருவில் அறிவு இல்லாமல் இந்த வித்தை சாத்தியமா?? மனிதன் பிறந்த பின் கற்றுக் கொள்ள வேண்டிய நீச்சல் இயற்கையில் அந்த ஆமைக்கு தெரிந்திருக்கிறது.. கேட்டால் நமக்கு ஆறறிவு?? பத்தாக் கொறைக்கு ஏழாம் அறிவு பத்தியும் போசுறோம்.

கருவில் அழிவு என்பது ஒரு வேதனையான தருணம்.
ஒவ்வொரு நொடியில் வாரிசு வளர்வதை உணர்ந்து வரும் போது நடுவே அழிவது என்பது துயரத்தின் உச்சம். அதை ஒரு பாட்டில் வடித்ததை சொல்லாமல் விட முடியாது.

சிந்து பைரவி என்று ஒரு படம். அதில் தான் அந்த வேதனை வரிகள் வரும். “என் விதி அப்போதே தெரிந்திருந்தாலே,
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே..”

இப்படி வரும். நல்ல வேளை அந்த அறிவை ஆண்டவன் நமக்கு தரவில்லை.

ஆனா அழிக்கனும் என்ற வெறி வந்த பிறகு, எப்படி வேண்டுமானாலும் அழிக்கலாம். இப்படித்தான் இராமயணத்தில் ஒரு சீன் வருது. அதையும் தான் பாப்போமே!!!

அசோகவனத்தில் அனுமன் சேட்டைகள் தாங்காமல் இராவணனுக்கு SMS போகுது. கடுப்பான இராவணன் தன்னோட தளபதியை அட்சகுமாரனை அனுப்புறார். (தளபதி என்றால் பிரியமான புத்திரன் என்று பொருள் கொள்க ப்ளீஸ்)

தளபதி அனுமானான அந்த குரங்கை பாத்த மாத்திரத்தில் கடுப்புன்னா கடுப்பு..அம்புட்டு கடுப்பு. அப்புடியே ஜிவ்வுன்னு ஏறுது. விஷம் சாப்பிட்ட முகம் போல் இருந்ததாம் அந்த மூஞ்சி. தளபதி சொல்றாராம் இப்படி.. கம்பர் சொல்வது: அந்த கொரங்கை மொதல்லெ அழிக்கிறேன். அப்புறம் மூணு உலகத்திலும் தேடிப்புடிச்சி எல்லா கொரங்கையும் அழிக்கிறேன். வெளியே உள்ள குரங்கு & கர்ப்பத்தில் இருக்கும் குரங்கையும் சேத்தே அழிப்பேன்.

விடம் திரண்டனைய மெய்யான் அவ் உரை விளம்பக் கேளா
இடம்புகுந்து இனையசெய்த இதனொடு சீற்றம் எஞ்ச்சேன்
தொடர்ந்து சென்று உலகம் மூன்றும் துருவினென் ஒழிவுறாமல்
கடந்துபின் குரங்கு என்று ஓதும் கருவையும் களைவென் என்றான்.
இப்பொ தெரியுதா கருக்கலைப்பின் மூலம் எங்கே என்று..

மீண்டும் சந்திப்போம்…