மொபைல் மொபைலா முந்திரிக்கா…


மொபைல் போன் வந்த காலத்தில் அது, நாம் போன் பேசவும், நமக்கு போன் வந்தால் பதில் சொல்லவும் மட்டும் தான் இருந்தது.. ஆனால் காலப்போக்கில் அதில் கேமெரா, மெமியோரி கார்ட். பாட்டு இன்டர்நெட் என்று சேத்துக் கொண்டே போக..அதன் பரினாமமும் மாறிட்டே வர ஆரம்பித்தது.

கிட்டத்தட்ட ஆறு வருஷமாய் ஒரே Basic Model போன் வைத்திருந்தேன்..ஏதாவது சிரமங்கள் வரும் போது மட்டும் (கமல் சலங்கை ஒலியில் ஒரு டப்பா கேமிராவைக் காட்டி வழிந்து சொல்வது போல்) இதுக்கு இதெல்லாம் தெரியாது என்று சொல்லி வந்தேன்.

ஒருநாள் கூட்டமாய் இருக்கும் போது ஒரு பொம்பளை அதிகாரி, என்ன இன்னுமா இந்த போனை விடாம வச்சிருக்கீங்க என்று சொன்ன போது தான், நான் சமூகத்தில் அப்டேட் ஆகாமல் இருக்கும் விஷயம் தெரிந்தது. அத்துடன் மொபைல் போன் தான் ஒரு தற்போதைய ஸ்டேட்டஸ் சிம்பள் என்பதும் தெரிந்தது.

உடனே வீட்டுக்காரியிடம் கெஞ்சிக்கூத்தாடி நோக்கியா N95 வாங்கி வைத்தேன். என் கையில் அதைப் பாத்து அசந்து போன, என் கீழ் வேலை பார்க்கும் Executive Engineer ம் அதே வாங்க, நான் மனசு நொந்து போனேன்.. விரைவில் அந்த N95 அதீத சிக்கல் தர.. நான் Samsung Carby Pro க்கு மாறினேன். அதற்கு சில வாரங்களில் புது பொறியாளர் என் கீழ் வந்தார். போனை உற்றுப்பாத்தா..ஆகாயம் பாருங்க…நட்சத்திரம் பாருங்க என்று கையில் Samsung Galaxy.

எனக்கும் போன் மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்க, என் போன் கடலில் விழ. அடுத்த தேர்வு Galaxy Tab.. இதில் போன் மட்டும் பேசுவது கஷ்டம். மத்த எல்லாம் செய்யலாம்.. (இது தேவையா..என்று என் மனைவி பாடாய் படுத்துகிறாள்).. ஆனா அடுத்தவர்களுக்கு படம் காட்ட இர்து தான் நல்ல ஐடியா..

சமீபத்தில் மதுரையில் மனைவி பக்க விசேசத்துக்கு அந்தமானிலிருந்து போனோம்.. அது கிரஹப்பிரவேஷம்.. கீழே பார்க்கிங்க்..வீடெல்லாம் மேலே.. வயதான விருந்தாளிக்கு மாடி ஏற முடியாத நிலை.. எனக்கு அழைப்பு வந்தது. (உத்தரவு வந்தது என்பதின் நாகரீக வடிவம்) சும்மா படம் காட்றீங்களே..வீட்டை வீடியோ எடுத்து காமிங்க..என்று… படியில் ஏடுவது தொடங்கி, டாய்லட் வரை ஒன்று விடாமல் நேர்முக வரணனையோடு (கம்பராமாயண கலாட்டா இல்லாமல்) செய்து முடித்து அனைவரிடமும் சபாஷ் வாங்கி (அந்த Tab வாங்கும் போது வாங்கிய திட்டுக்கு ஒரு வழியாய்) சரி ஆனது.

மொபைல் மாத்துவது பெரிய்ய காரியமில்லை..அதை எடுத்துப் போவது தான் சிரமம். பேண்ட் பாக்கெட்டில் போட்டா ஆண்மைக்குறைவு வரும்கிறாங்க.. பாக்கெட்ல வச்சா இதயக் கோளாறுக்கு நாள் குறின்னாங்க..கையில வச்சா பக்காவா வாதம் வருமாம். காதுலெ வச்சா ரேடியேஷன்.. முட்டையை நடுவுலெ வச்சா குஞ்சு  பொரிக்கலாமாம்.. நல்ல வேளை ஆம்லெட் போட மட்டும் ஐடியா தரலை..அட.. அதுக்குத்தான் தொப்புள் தயாரா இருக்கே..இது எதுக்கு??

சரி இடுப்புலெ மாட்ட உறை வாங்கிட்டா..அப்புறம் பெல்ட் மாத்த முடியாது.. மொபைலோ, பெல்ட்டோ எது இல்லாமலும் உயிர் வாழ்வது கஷ்டம்..

பெரிய Tab ஐ சுருட்டி வைக்க பெரும்பாடு பட வேண்டி இருக்கு.. சரியான உறை தேடும் வாய்ப்பு கிடைத்தது… ஒரு நாள் தெரியாத்தனமா Lacal flight ஐ International airport வழியா உட்டாங்க.. நானும் பந்தாவா டாலர் விலைகளை மேஞ்ச்சிட்டே வந்தேனா… Tab க்கு உறை கிடைத்தது. அருமையான பேக்கிங்க்.. நல்ல கம்பெனி…  நல்லா தெறந்து பாத்தா அந்தக் கால பாட்டிமார்கள் வைத்திருக்கும் சுருக்குப் பை.. (விலை மட்டும் பல நூறு டாலர்கள்..விடு ஜுட்…ஒரே ஓட்டம் விமானத்தில் போய் உக்காந்துட்டேன்)

உறைன்னு சொன்ன உடனே விவேக் சொன்ன விவேகமான ஜோக் தான் நெனைவுக்கு வருது… கட்டில் மெத்தெக்கு உறை போட்றோம், தலையணைக்கு உறை, பாட்டிலுக்கு உறை..இப்படி எல்லா உறையும் போட்ட நீ போட வேண்டிய ஒரு உறையைப் போடலியே என்று கு க வுக்கு ஆதரவா பேசுவார்.. (இப்பவெல்லாம் அதைப் பத்தின பிரச்சாரம் தேவையே இல்லை.. விக்கிற விலைவாசியில் நாமே குழந்தை நமக்கதுக்கு குழந்தை தான் சரி)

அது சரி..உறையைப் பத்தி இவ்வளவு உரை எழுதிட்டு கம்பரை இழுக்காமெ உட்டா எப்படி?? அதானெ.. நாம அப்படியே உடுவோமா என்ன?? கம்பரையும் தான் வம்புக்கு இழுப்போமே…

நாம மொபைலுக்கு உறை போட்டா, அவரு இந்த உலகத்துக்கே உறை போட்டா எப்படி இருக்கும்னு யோசிக்கிறார்.. அப்படியே ரிவர்ஸ் கியரு… (கொலைவெறி டியூன்லெ சொன்னா தான் பின்னாடியே போகும் போலெ…) போனோன்னா..அங்கே அனுமன் இலங்கை போய்க் கொண்டிருக்கிறார்.. பறந்தபடி. டிராபிக்கே இருக்காதுன்னு நெனைச்சா.. அங்கேயும் பெண் டிராபிக் போலீஸ் மாதிரி வழி மறிக்கும் அங்காரதாரை.. அவள் எப்படி இருக்கா என்பதை சொல்லியாகனும். ஆமா.. பெண்களை வர்ணிக்கனும்னா கம்பருக்கு ஏக குஷி..அது ஹீரோயின், வில்லி யாராகவும் இருக்கலாம்.

பல்லு இருக்கே பல்லு அது பிறை சந்திரன் மாதிரி.. இடுப்பிலெ கருப்பா பெர்முடாஸ் போல யானைத்தோல் டிரஸ் போட்டிருந்தா.. அந்தக் கலரு பாத்தா சிவன் கழுத்து மாதிரி (விஷம் சாப்ட மாதிரி) இருக்காம்.. வாயைப் பாத்தா… பிரம்மன் படைத்த உலகுக்கு ஓர் உறை மாதிரி இருக்காம்…இது எப்படி இருக்கு??

துண்டப் பிறைத்துணை எனச்சுடர் எயிற்றாள்
கண்டத் திடைக் கரையுடைக் கடவுள் கைம்மா
முண்டத்து உரித்த உரியால் முளரி வந்தான்
அண்டத்தினுக்கு உறை அமைத்தனைய வாயாள்.

உறை பற்றிய இந்த உரை இத்துடன் முடிகிறது..

வேறு சேதி ஏதும் மாட்டாமலா போகும்??