பதில் தெரியாத கேள்விகள் என்ன? என்ன? என்று ஒரு கேள்வி கேட்டால் அதுக்கே பதில் தெரியாதுன்னு நெனைக்கிறேன். சாம்பிள் கேள்விகள் இதோ சில:
வானத்தில் நட்சத்திரங்கள் மொத்தம் எத்தனை?
முட்டை முதலில் வந்ததா? கோழி முதலில் வந்ததா?
Why dis Kolaveri பாட்டில் வரும் அந்த கொலைவெறிக்கு என்ன அர்த்தம்?
மருத நாயகம் படம் எப்பொ வரும்?
சுகுனா சிக்கன் விளம்பரத்தில் வரும் அனு சிக்கன் சாப்பிடுவாங்களா?
அது சரி முட்டை சைவமா அசைவமா? (முசைவம் என்று பெயர் தரலாமா?)
இந்த முட்டை சமாச்சாரம் வச்சிட்டு நாம கொஞ்சம் மண்டையெக் கொடைவோம். மிகக் குறைவான அளவினர் தான் அந்தமானில் சைவம் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். வட இந்திய சைவர்கள்(?) கோழி இறால் என்று எதையும் விட்டு வைப்பதில்லை. வங்காளத்து சைவம் லிஸ்டில் மீன் இருக்கிறது. மேற்கு வங்கத்து வீடுகளில் வீட்டுக்கு வீடு குளம் மாதிரி அமைத்து அதில் மீன் வளர்த்து அதைத் தான் வங்காளிகள் விரும்பி சாப்பிடுவார்களாம் – நம்மூர் தோட்டம் போட்டு காய்கறி வளர்ப்பது மாதிரி.
நம்மூர் சைவ மக்கள் பரவாயில்லை இப்பொத்தான் கொஞ்சம் கொஞ்சம் முட்டை வரை வந்திருக்கிறார்கள்.
சாப்பாடு வச்சி ஒரு மனுஷனோட குணம் அமையும்னு கீதை வரை சொல்லியிருக்காங்க. எனக்கு என்னவோ அது ஏதோ சொல்லிக் கொடுக்கப்பட்ட விஷயமாத்தான் தெரியுது. அப்பா அம்மா வீட்டிலே என்ன சாப்பிடச் சொல்லிக் குடுத்தாங்களோ, அது தானே தொடருது. ஆடு கோழி சாப்பிட வைத்தார்கள். அது வரை சரி. பன்னிக்கறி..??? சீ..சீ.. மனுஷன் தின்பானா?? ன்னு சொல்ல வைத்தது.
அந்தமான் தீவில் வந்தபிறகு தான் தெரிகிறது அதை சாப்பிட ஒரு கூட்டமே இருக்கு என்று. அவர்களிடம் பாம்பு பற்றி கேட்டால்..சீ..சீ.. அதெல்லாமா சாப்பிடுவார்கள் என்கிறார்கள்.
பாம்புக் கறி சாப்பிடவும் ஆட்கள் இல்லாமலா இருக்காங்க?? (அது சரி.. இல்லையா? இருக்காங்களா?… இருக்காக தான்)
ஹாங்காங்க் சென்ற போது சுத்த சைவர் ஒருவர் உடன் வந்தார். பன் மாதிரி ஏதோ ஒன்று நடுவே சிக்கன் வைத்து கொடுத்தனர். சைவம் என்று கேட்டவுடன் சிக்கனை கழட்டி கொடுத்தனர். நண்பர் அன்று கொலைப் பட்டினி தான்.
ஒரு பஃபே அன்று சைவ நண்பர் சந்தோஷமாய் சோறு மட்டும் சாப்பிட்டு வந்தார். இந்த ஊரில் கிஸ்மிஸ் நல்லா இருக்கு. சோத்திலும் போட்டிருக்காங்க என்றபடி ரசித்து சாப்பிட்டு வந்தார். நான் ஒரு எட்டு எட்டிப் பாத்தேன். அது கிஸ்மிஸ் இல்லை. சின்ன சின்ன இறால். அவர் பட்டினி கிடக்க வேண்டாமென்று சும்மா இருந்து விட்டேன்.
கோழிக்கோடில் ஒரு நாள் மதியம் சாப்பிட்டு விட்டு நண்பரிம் சொன்னேன், பரவாயில்லையே கேரளாவில் ஆட்டுக்கறி 5 ரூபாய்க்கே அள்ளி வைக்கிராய்ங்க என்றேன். அவர் லேசாய் சிரித்தார். நான் சாப்பிட்டது மாட்டிறைச்சி என்பது பின்னர் தான் தெரிந்தது.
என்ன நான் சரியாப் பேசுறேனா? – ன்னு கேக்கிற மாதிரி.. எல்லாரும் அவசியம் அவங்களுக்குளேயே கேட்டுக்க வேண்டிய கேள்வி ஒன்னு இருக்கு. அது தான் : “என்ன நான் சரியாத்தான் சாப்பிட்றேனா??”
பசிக்கு சாப்பிடாதீங்க.. ருசிக்கும் சாப்பிடாதீங்க… நீங்க எந்த மாதிரி வேலை செய்றீங்களோ அதுக்குத் தகுந்த மாதிரி சாப்பிடுங்க.. வேலைக்கேத்த சோறு. இது நான் சொல்லலைங்க… National Institute of Naturopathy, Pune ல் சொல்லிக் குடுத்தாங்க இதை.. அதான் எனக்குத் தெரியுமே என்று சொல்றது என் காதுக்கும் கேக்குது. ஆனா அந்த மாதிரி சாப்பிட்றிங்களா?? அதானே தெரியாது..
சாப்பாடு மாதிரி சொல்லிக் குடுக்கப்பட்ட இன்னொரு சங்கதி இந்த நாணம். “நாணமோ… இன்னும் நாணமோ?” என்ற TMS பாடும் பாட்டில் கூட அந்த நாணம் லேசா மேலோட்டமாத் தெரியும்.
அந்தமானுக்கு வரும் உல்லாசப் பயணிகள் இங்குள்ள ஆடையில்லா மனிதர்களின் போட்டோவை பாத்தே நாணமாய் நெளிவதும் ஒரு ஜாலியான விஷயம் தான். ஆனா அந்த ஆடையில்லா மனிதர்களுக்கு அப்படி ஒரு நாணம் இருப்பதாகவே தெரியலை என்பது தான் ஆச்சரியமான் செய்தி.
அப்படியா சேதின்னு ஒடனே பிளைட் புடிச்சி அந்தமானுக்கு வந்திடாதீங்க.. இப்பொ ரொம்ப கட்டுப்பாடுகள் ஆயிப்போச்சி… படத்திலும் திருட்டுத்தனமா எடுத்து இன்னும் You Tube லும் இருக்கும் படத்திலும் பாத்தா தான் உண்டு.
நாணம் வந்தா என்ன செய்வாய்ங்க?? உங்க கிட்டே கேட்டா நீங்க கொஞ்சம் யோசிப்பீங்க.. நம்ம டிகிரி தோஸ்த் கம்பர் கிட்டெ கேட்டா.?? (அது சரி.. டிகிரிக்கும் தோஸ்த்துக்கும் என்ன சம்பந்தம்?? அதை தனியா ஒரு போஸ்டிங்க்லெ பாப்போம்.) அவரு தான் பதில் ரெடிமேடா வச்சிருப்பார்.
கம்பர் என்ன சொல்றார் தெரியுமா? நாணம் வந்தா மொகம் வெளிறிப் பொகுமாம். அதுவும் மாமேரு மலை எப்படி வெளுப்பா இருக்குமோ அந்த மாதிரியாம். அது சரி இதை எங்கே சொல்றாருன்னு கேக்கீகளா?
அப்பொ என் கூட கொஞ்சம் அனுமன் மாதிரி மதில் சொவத்திலெ ஏறி வந்து இலங்கையின் வானளாவிய கோபுரங்களைப் பாக்க வாங்க. அதை கீழோட்டமா பாத்த பஞ்ச பூதங்கள், அட என்று குஷி ஆயிட்டாங்களாம். ஆனா மேலே பாத்து.. அடடா அது தப்பு என்று நாணி வெளிறிப் போன மாதிரி இருந்ததாம். இது அனுமன் கண்ணில் தெரிந்த காட்சி. கம்பன் சொல்வது.
எனக்கென்னவோ இதே பாணியில் வந்த புதுக் கவிதையும் பின்னர் சினிமாப் பாடலும் தான் வில்லங்கமா ஞாபகத்துக்கு வருது.
உன் இடையைப் பாத்த்தேன்
பிரம்மன் கஞ்சன்
என்று நினைத்தேன்.
சற்றே நிமிர்ந்து பாத்தேன்
அவன் வள்ளல்
என்பது புரிந்த்து.
கம்பர் பாட்டை போட்டு நல்ல பேரு வாங்கிக்குவோம்..
நீரும் வையமும் நெருப்பும் மேல்நிமிர் நெடுங்க் காலும்
வாரி வானமும் வழங்கல் ஆகும் தம் வளர்ச்சி
ஊரின் இந் நெடுங்க் போபுரத்து உயர்ச்சி கண்டு உணர்ந்ததால்
மேரு எங்ஙனம் விளர்க்குமோ முழு முற்றும் வெள்கி.
என்ன சொல்லுங்க… நல்ல பேரு கெடைக்குமா?