எல்லாம்…ம்..எல்லாம்….


சமீப காலமாக பிரகாஷ்ராஜ் கலக்கும் ஒரு ஃபோன் விளம்பரம் டிவியில் பிரசித்தம்..அதிலும் எல்லாம் கிடைக்கும் என்று சொல்லிவிட்டு பின்னர் லேசா கண் சிமிட்டி விட்டு லேசாக சிரித்தபடி ம்…எல்லாம் என்று சொல்வதும், அழகோ அழகு தான்.

இவ்வளவு வரிஞ்சி கட்டி எழுதும் போதே உங்களுக்கு தெரிந்திருக்கும் இது ஏதோ பலான மெட்டர் என்று… இருக்கட்டுமே..அதுவும் வாழ்க்கையோடு சேர்ந்த பகுதி தானே.. எவ்வளவு என்பதில் தான் மனிதனின் தரம் நிர்ணயம் ஆகிறது.

அந்தக் காலத்தில் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று படங்கள் சில வந்தன.. குழந்தைகளோடு அந்தப் படங்கள் போகாது இருந்தோம்.. இப்பொ சின்ன வீடா வரட்டுமா? என்ற பாடல் நமது வீட்டின் முன் அறையில் எல்லார் முன்பும் கேட்கிறது.

சமீபத்திய Science Exhibhition ல் கருத்தடை சாதனங்கள் வைத்து ஒரு எட்டாம் வகுப்பு மாணவி விளக்கிய போது.., கேட்கும் நமக்குத்தான் சங்கடமாய் இருந்தது.

என் பையனிடம், பொடிப்பயலே, Facebook ல் அம்மனமா படம் வருதாம் பாத்து பாரு என்றேன்.. அவன் கூலா சொல்றான், அந்த Close button எதுக்கு இருக்கு?. Internet ல் எல்லாம் தான் இருக்கும். நாம நல்லதை எடுத்துக்க வேணும் என்று லெக்சர் தருகிறான். ம்… என்னத்தெச் சொல்ல???

இந்த பலான சமாச்சாரங்கள் காலம் காலமாய் இருந்து தான் வருகின்றன. அறத்தின் வழியாக பொருள் ஈட்டி அதன் மூலம் இன்பம் துய்க்க வேண்டும் என்கிறார் நமது ஐயன் வள்ளுவர்.

அந்த காலத்து A சர்டிஃபிகேட் வாங்கிய பாடல்களின் தொகுப்புகள் அகப் பாடல்கள் என்று அடக்கி விட்டனர்.

இப்பொ யார் எதை வேண்டுமானாலும் பார்க்கலாம் படிக்கலாம் என்று வந்ததில் தான் சிக்கலே உருவாகிறது. ஒரு ஆராய்ச்சி கட்டுரையை சாமான்யன் ஒருவன் படித்து.., அதை எப்படி பொருள் கொள்வான் என்பது அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்.

உணர்சிகளை கட்டுக்கும் வைத்திருக்கும் கலை மனிதனுக்கு வேன்டும் என்பதால் தான், சில சேதிகளை அரசல் புரசலாக வைத்திருந்தார்கள். கம்பராமாயணத்தில் அப்படி ஏகப்பட்ட இடங்களில் அரசல் புரசல்களாக வந்ததை கம்பரஸம் என்று தொகுத்து விட்டார்கள்.

நம்ம கண்ணுக்கும் அப்பப்பொ சில சங்கதிகள் மாட்டுது. அதில் அந்த மாதிரி ஒரு மேட்டரைத் தாண்டி கம்பர் சொல்லும் சேதியும் தெரியுது. ஒரு காட்சி பாக்கலாமா??

அனுமன், ஜாலியா இலங்கைக்கு என்ட்ரி செய்கிறார். அனுமனின் பார்வையில் என்ன என்ன படுகிறது என்பதை கண்ணில் பார்த்த கம்பன் அப்படியே எழுதுகிறார்… வாங்க… நாமளும் கூடவே ஒட்டுப் பாப்போம்.

மனைவிமார்கள் தங்கள் கணவர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்… அவர்கள் எப்பேர்பட்டவர்கள் தெரியுமா?? வீராதி வீரர்கள்..சூராதி சூரர்கள்.

அவர்களுக்குத் துணை யார் தெரியுமா? காதல் மயக்கம் தான். உயிரை கணவரிடம் ஒப்படைத்துவிட்டு, வெறும் உடலாய் படுக்கையில் கிடந்தார்களாம் காதல் மயக்கத்தில்..

அந்த மயக்கத்திலும் வாசல் மேல், விழி மேல் விழியே வைத்து பாத்துக் கிடந்தார்களாம். அப்போது தூது சென்ற மகளிர் வந்தார்களாம். அவர்களைப் பாத்ததும்..அவர்களின் முகத்தில் புன்னகையைப் பாத்ததும் போன உயிர் திரும்பி வந்ததாம்… ஆனந்தத்தில் அப்படியே பூரித்தார்களா??…அதுதான் இல்லை…துடித்துப் போய் விட்டார்களாம்..கம்பன் சொன்னது இது.

கம்பன் சொல்லாத கதை இப்பொ பாக்கலாமா… இது கம்பன் எழுதியது என்றாலும் கூட, பார்த்தது யார்? அனுமன். ஒரு வகையில் அனுமனும் தூதர் தானே… சீதா தேவியைப் பாத்துவிட்டு தகவல் சொன்னால் ராமரும் இப்படித்தான் சந்தோஷத்திலும் துடித்துப் போவார் போலும்..என்று அனுமன் நினைப்பதாய் கம்பர் நினைத்து எழுதி இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.. ஆமா..நீங்க என்ன நெனைக்கிறீங்க???

அதுக்கு முன்னாடி பாட்டையும் போட்றேன் (சன் ம்யூசிக் பாக்கிற பின் விளைவு தான்)

ஏதி அம் கொழுநர் தம்பால் எய்திய சலத்தர் வைகும்
தாது இயங்கு அமளிச் சேக்கை உயிர் இலா உடலின் சாய்வர்
மாதுயர்க் காதல் தூண்ட வழியின் மேல் வைத்த கண்ணார்
தூதியர் முறுவல் நோக்கி உயிர் வந்து துடிக்கின்றாரை  .

 மீண்டும் அனுமனோடு பாத்து வருகிறேன்.