மாடி மேலே மாடி…


“மாடி மேலே மாடி கட்டி கோடி கோடி சேத்து வைக்கும் சீமானே…” இந்தப்பாட்டு எந்தப் படம் என்று தெரியுமா?? தெரியாதவர்களுக்கான அடுத்த கேள்வி… ஒஹோ ப்ரடெக்ஷன் தெரியுமா?? அதுவும் தெரியவில்லையா?? காதலிக்க நேரமில்லை என்ற பாட்டு எந்தப் படத்தில் வரும்?? இதுவும் தெரியவில்லையென்றால் நீங்கள் சினிமா அறிவு கொஞ்சமும் இல்லாதவர் என்று தான் அர்த்தம்.

மாடி வீடு என்பது, பணக்காரத் தனத்தின் ஓர் அளவுகோளாக இருந்தது.. ஒண்டிக் குடித்தனத்தில் இருந்தவரை, என் தந்தையாரின் ஆசையே, மாடி வீடு கட்ட வேண்டும் என்பது தான். அது அவர் இருந்த வரை நிறைவேறவில்லை. நான் சின்னதாய் சொந்த ஊரில், பரமக்குடியில் மாடி வீடாய் கட்டிய போது அவர் இல்லை அதை பார்த்து ரசிக்க.

அடுத்த தலைமுறை பார்வையில் இது எப்படி இருக்கிறது?? அதையும் தான் கேட்டுப் பாக்கலாமே என்று, என் பையனிடம் கேட்டேன். பொடிப்பயலே.. மாடி வீடு, கார் இதெல்லாம் இருக்கு. நாம் ஏழையா? பணக்காரர்களா??

பையன் பதில்: இரண்டும் இல்லை. நடுத்தரம். மாடி வீடு, கார் இருந்தாலும் நடுத்தர வர்க்கம் என்ற நிலை தான் இன்றைக்கு. அல்லது நடுத்தர வர்க்கத்தினர், வீடு கார் வைத்திருக்கும் நிலைக்கு வந்து விட்டனர் என்பதுவும் தெரிகிறது.

ஏழாவது மாடியில் இருந்தாலும் FLAT ல் இருப்பவர் மாடிகளின் சொந்தக்காரர் ஆகிவிட முடியாது.. இவைகள் எல்லாம் இந்த நவீன காலக் கட்டாயங்கள்..

மாடிகளை ஆங்கிலத்தில் ஏன் தான் STORY என்கிறார்களோ… இன்னும் காரணம் விளங்கவில்லை.. அதிகமா கதை விடுகிறவர்களுக்கு தோதா கதைக்கும் மாடிக்கும் ஒரே பேரா வைத்து விட்டார்களோ…

ஏழை, மாடி வீட்டில் வாழ்ந்து விடலாம்.. ஆனால் மாடி வீட்டில் இருந்தவர்கள் திடீரென்று ஏழைகளாய் மாறும் விதி வித்தியாசமானது. அந்த ஏழைகளின் நிலை பரிதாபமானது. அரசுக் குடி இருப்பு மாடிகளில் வாழும் ஏழைகளும்(??) இருக்கத்தான் செய்கிறார்கள்..எல்லாம் இருக்கும்… ஆனால் எதுவும் சொந்தம் இல்லை..

நீ எதை நினைக்கிறாயோ… அதாகவே ஆகி விடுகின்றாய் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். நெனைப்பு தான் பொழைப்பெக் கெடுக்குது என்றும் கேட்டுருப்பீங்க.. Positive Thinking and Negative Impact பற்றி கூறும் செயல்கள் இவை.

பணக்காரர் ஒருத்தருக்கு ஏழை நினைப்பு பத்தி சுகி சிவத்திடம் சுட்ட கதை ஒன்று. (அவரும் இந்தக் கதையை வேறு எங்காவது சுட்டது தானே??)

ஒரு ஊரிலெ ஒரு பணக்காரர் இருந்தாராம். வெத்திலெ போடுவது இவருக்கு ரொம்பப் பிடிக்குமாம். கொத்து கொத்தா வெத்திலை எப்பொழுதுமே தட்டுலெ வச்சிருப்பார். ஆனா உள்ளதில் அழுகினதை பொறுக்கி எடுத்து வாயில் போடுவார்…நல்லதை நாளைக்கு சாப்பிடுவோமே என்று வைப்பார்.. நாளையும் அதே மாதிரி அழுகினதை அழிப்பார் முதலில்.. நல்லது, நாளை சாப்பிடலாம்.. என்று சொல்லியே, நாட்களை கடத்துவார்.. ஆனால் அந்த “நாளை” என்பது வரவே வராது.. அப்படியே இறந்தும் போனார்.

இறுதிக் காரியங்கள் நடக்க ஆரம்பித்தது.. இறுதியாய் ஒரு தடவை அவருக்கு விருப்பமானதை வைத்து, காரியம் செய்ய நினைத்தார்கள். அவர்களுக்கு அந்த வெற்றிலை ஞாபகம் வந்தது. நல்ல கும்பகோணம் கொழுந்து வெத்திலையினை கொண்டு வந்தனர்.. நடுவில் ஓடி வந்த அவர் மகன், “அப்பாவுக்கு அழுகிய வெத்திலை தான் பிடிக்கும்.. அதை மட்டுமே வையுங்கள்” என்றாராம்..

இது தான் ஏழையாய் வாழ்ந்த மாடி வீட்டு பணக்காரனின் நிலையினைச் சொன்ன கதை.

மாடிகள் கட்டிடமான வீடுகள் தாண்டி இன்னும் சிலவாகவும் இருக்குதே..!!!

அடுக்கு மாடி மாதிரி… அடுக்கு மல்லி… மாடி பஸ்..(இன்னும் ஏறாத காரணத்தால் அதீத ஆசை ஏற இருக்கு)

ஆமா.. ஏதோ பொகையும் வாசனை வருதே… ரொம்ப சரி… கம்பப் புகை தான் அது.. இவ்வளவு இழுத்து, கம்பரை மட்டும் இழுக்காமல் விடுவோமா என்ன??

கம்பர் பார்வையில் இந்த மாதிரி ஒரு அடுக்கு தெரியுது.. யார் மூலமா?? அனுமன் மூலாமா பாத்ததை, 3ஜி கேமிராவில் பாத்தது மாதிரி பாக்காமலேயே எழுதுறார் கம்பர்.

அடுக்கு மல்லி மாதிரி, அடுக்கு தாமரை அவர் கண்ணில் தெரியுது. அது என்ன ரெண்டு தாமரைகள்? ஒன்று முகம். இன்னொன்று, அதை தாங்கி நிற்கும் கை (அதான் இது என்று சொன்ன கவுண்டமனி செந்தில் கதையா தெரியலை!!!).. எங்கே இந்த காட்சி??

சீதையை தேடப் போன போது கண்ணில் பட்ட சங்கதி தான் அது. அழகான மனைவி.. குற்றம் செய்த கணவர்.. அதனால் பிரிந்த அவளின் சோகம்.. மோகமும் கூட… காமத்தீயால் மார்பில் சாத்திய சந்தனமே தீய்ந்து போக.. முள்ளே இல்லாத அந்த தாமரை முகத்தைத் தாங்கி தாமரைக் கைகளே இருந்ததாய் சொல்கிறார் கம்பர்..

நலனுறு கணவர் தம்மை நவைஉறப் பிரிந்து விம்மும்
முலைஉறு கலவை தீய முள் இலா முளரிச் செங்க்கேழ்
மலர்லிசை மலர் பூத்தென்ன மலர்க்கையால் வதனம் தாங்கி
அலமரும் உயிரினரோடும் நெடிதுயிர்த்து அயிர்கின்றாரை.

ஹலோ..உங்க கண்ணுக்கும் இப்படி ஏதாவது மாடி வீட்டு சங்கதி தெரியுதா?? மாடி வீட்டு பிகர் தெரிஞ்சாலும்

பரவாயில்லெ..தைரியமாச் சொல்லுங்க..