தெரியாத்தனமா தகவல் அறியும் உரிமை பத்தி தமிழில் ஒரு புத்தகம் எழுதப் போய், அந்தமானில் அதன் கொள்கை விளக்கப் செயலாளர் ரேஞ்சுக்குப் ஆயிட்டேன். அடிக்கடி பல்வேறு துறையினருக்கு பயிற்சி தரவும் அழைப்பு வருகிறது. முதலில் ஒரு மணி நேரம் மட்டும் எடுக்க ஆரம்பித்த பாடம், பின்னர் ஒன்றரை மணி நேரம், அரை நாள், முழு நாள் என்று போய் இப்போது ரெண்டு நாள் தொடர்ந்து வகுப்பு எடுக்கும் அளவுக்கு வந்து விட்டது. (ஏசி ரூமில் பைல்களைப் பாத்துகிட்டு இருக்கு வேண்டிய ஆளுக்கு இப்படி, கால் கடுக்க நின்னு, கத்தி கிளாஸ் எடுப்பது தேவையா? – இது என் வீட்டுக்காரியின் புலம்பல்). கையில் இருக்கும் டாபிக்கோ செமெ dry சப்ஜெக்ட். இதெய் மதிய சாப்பாட்டுக்கு பின்னரும் தொடர்வது தான் பெரீய்ய சவாலான விஷயம்.
ஒரு மனிஷனால் 20 நிமிஷத்துக்கு மேலே எந்த ஒரு சப்ஜெக்ட்டையும் கவனம் சிதறாமல் கேக்க முடியாது என்கிறார் சொல் வேந்தர் சுகி சிவம் அவர்கள். பேச்சாளர்கள் அதுக்காக நகைச்சுவை, சில இடங்களில் அழுத்தமெல்லம் குடுத்து பேசனுமாம். (நானு மதியம் சாப்பாட்டுக்கு பிந்தைய நேரங்களில் Quiz நடத்தி விடுவேன். சின்ன டப்பாவில் நம்பர்களை எழுதி, சுற்றுக்கு விடுவேன்..) அலர்ட்டா இருக்க என்ன வெல்லாம் செய்ய வேண்டி இருக்கு. சிலர் சொல்வர் Eye Contact ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று. அதையும் அப்பபொ செய்வதுண்டு. கண் பார்த்து பேசுவதை விட, எனக்கு ஏனோ மூக்கு பார்த்தே பேசவே பழகி விட்டது. பொய் சொல்லும் போது பலர் மூக்கின் மேல் விரலைக் கொண்டு செல்வர் என்கிறார்கள். (இப்பொ தெரியுதா நான் ஏன் மூக்கு பாத்து பேசுறேன்னு?)
மனிதர்களையும் சரி… கடவுள் சிலைகளைப் பாக்கும் போதும், இந்த மூக்கு பாக்கும் பழக்கம் வந்து விட்டது. தென்னாட்டு கடவுள்களின் மூக்கும், வட நாட்டுக் கடவுள்களின் மூக்கும் சற்றே வித்தியாசமாப் படுது. எனவே மனசு லயிப்பதில்லை. வடநாட்டு கிருஷ்ணனும் ராமனும் ஏதோ பொம்மை மாதிரித்தான் தெரியுது என் கண்ணுக்கு.. இந்த மூக்கு செய்யும் சேட்டைகளால். இதே மூக்கு பிரச்சினையால் ஹிந்தி சேனல்களில் வரும் சிவனைப் பார்த்தால் பக்திக்குப் பதிலா சிரிப்பு தான் வருது. (சில சமயம் எரிச்சலாவும் இருக்கு).
இந்த மூக்கு நோக்கலில் ஏதாவது சிக்கல் வந்திருக்கா?? ஏன்..ஏன் இந்தக் கொலெவெறி? ஏன்.. நல்லது நடந்ததைப் பத்தி நீங்க, கேக்காட்டியும் சொல்றேனே.. அது ஒரு பாமர மக்கள் விமானம் ஏறாத (டெக்கான் ஏர்லைன் ஒரு ரூபா டிக்கட் தராத) காலம். அந்தமான் வர கப்பல் மட்டும் தான் கதி. பாண்டிச்சேரி நண்பர் ஒருவரின் பெற்றோர்கள் அதில் வருவதாய் தகவல் கிடைத்தது. கப்பலில் காற்று வாங்கப் போகும் போதும், சாப்பிடப் போகும் போதும், அனைவரின் மூக்கைத்தான் பாத்துட்டே வந்தேன். ஒரு மூக்கு மட்டும் ரொம்பப் பரிச்சயமான மூக்காய்ப் பட்டது. நீங்க, (நண்பர் பெயர் சொல்லி) இவரின் அப்பாவா என்றேன். உண்மையில் அவர் தானாம். எப்படி நம்ம திறமை??. (இப்பொ அந்த வேலையை, ஒரு மொபைல் கால் செஞ்சிட்டு, என்னோட மூக்கு புலனாய்வுத் துறைக்கு வேலையே இல்லாமல் போயிடுச்சி).
எனக்கு மூக்கில் அடிக்கடி வியர்க்கிறது. என்ன செய்யலாம்? என்று தமிழ்வாணனிடம் கேட்டேன் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே. அவரோ, கழுகிற்கு மூக்கில் வேர்க்கிற மாதிரி என்பார்கள். நீங்கள் சி ஐ டி வேலைக்குப் போகலாம் என்றார். சி ஐ டி வேலைக்குப் போனேனோ இல்லையோ, சி ஐ டி (CIT- Coimbatore Institute of Technology) ல் தான் படித்தேன். சி ஐ டி ரேஞ்சுக்கு போகிற மாதிரி சில வேலைகளும், சிலபல என்கொயரிகளும் கைக்கு வரத்தான் செய்யுது.
கிளி மாதிரி பொண்ணு என்பார்கள் ஆனா, மூக்கு மட்டும் அப்படி இருந்தா, கிளி ன்னு கிண்டல் செய்வாய்ங்க. ஆனா கிளி மூக்கு மாபம்பலம் என்றால் பொட்டி பொட்டியா பொட்டி போட்டுட்டு வாங்குவாங்க. ஒரு வேளை பொண்ணு கிளி மாதிரி கலரிலும், கூண்டில் சொன்ன பேச்சு கேக்கிற ஆளா இருக்கனும்கிறது தான் காரணமா இருக்குமோ!!. ஆனா கிளி சொன்னதை திருப்பிச் சொல்லும். கல்யாணம் கட்டின ஆளோ மனைவி சொல்வதையே திரும்பச் சொல்வது தான் வேடிக்கை.
மூக்குக்கும் முழிக்கும் என்ன சம்பந்தம் என்றே விளங்கலைங்க. மூக்கும் முழியுமா இருக்கா என்றும் சொல்வதுண்டு. தான் பார்த்த, தன்னைப் பாதித்த பெண்களின் மூக்கும் முழியும் வைத்து மனதிற்குள் கம்பேர் செய்து கொண்டு, சரி பரவாயில்லை என்று சொல்வது தான் அந்த ரகம். எல்லாம் விநாடிகளில் நடந்து விடும்., எனக்கென்னவோ எந்த ஹாலிவுட் நடிகைகளைப் பாத்தாலுமே கூட நம்மூர் ஜோதிகா, தமன்னா மாதிரி வராது என்று தான் படுது.. (என்ன,… பழைய ஆட்கள் பேரை சொல்றேன்னு பாக்கீகளா…சும்மா ஒரு உதாரணத்துக்குத்தான். உங்களுக்கு வேணும்னா, லேட்டஸ் ஆளுக பேரை வச்சிகிடுங்க).
மூக்குக்கு மேல கோபம் வருதே என்கிறார்கள். மற்ற எந்த உறுப்புக்கும் இல்லாத அலாதி சிறப்பு இந்த மூக்குக்கு மட்டும் ஏன், கோபத்தோட சம்பந்தப் படுத்தி விட்டார்கள்? எனக்கென்னவோ மனித உடலில் முதலில் ரீச் ஆகும் பகுதி மூக்காக இருக்கும் போல படுது. (அடிக்கடி கமல் முதல் வடிவேல் வரை மூக்கில் ரத்தம் வருதல் கவனிக்க) அந்தமான் தீவுகளின் நிகோபாரி ஆதிவசி மக்களின் மூக்கு சப்பையாய் இருக்கும். இப்போது சற்றே மாறி வருகிறது. ஏன் என்று கேட்க, ஓர் ஆதிவாசி நண்பர் சொன்னது. முன்பெல்லாம் நமது முழு உணவே இளநீர் தான், இளநீ வெட்டி குடிக்க ஏதுவா மூக்கு அமைப்பு இருந்திருக்கு. இப்பொ ஸ்ட்ரா போட்டு குடிப்பதால் மூக்கில் மாற்றம் தெரிகிறதாம்.
நிறம் மாறும் பூக்கள்.. கேள்விப்பட்டிருப்பீங்க. நிறம் மாறும் மூக்கு பத்தி கேள்விப்பட்டதில்லையா என்று ஒரு போர்டு பாத்தேன். மேலும் விவரங்களுக்கு அணுகவும் என்று கம்பர் பெயர் போட்டிருக்கு. நாம தான் இந்த மாதிரி புதுசா யாரு போர்டு வச்சாலும், என்ன ஏது என்று விசாரிச்சிடுவொமில்லெ.. அய்யன் கம்பர் ராமபிரானின் மூக்கு பாத்து வியந்து போய் நிக்கிறார். சரி அந்த மூக்குக்கு உவமை சொல்ல சரியான ஐட்டம் ஏதும் கையில் மனசுலெ சில்லலெ. Facebook ல் போட்டுப் பாத்திருக்கார். சும்மா Like தான் வருது. ஒண்ணு ரெண்டு Comment மட்டும் தான் வந்ததாம்.
நீலக்கல்லு கிட்டேயிருந்து ஒரு கமெண்ட்: நான் இந்திரனிடமிருந்து வருகிறேன். குற்றம் இல்லை. சிறப்பு இருக்கு. எங்கிட்டே இருந்து வரும் ஒளிக்கொழுந்து ஓகேவா??
மரகதமணி: என்னோட ஒளியின் திரட்சி எப்படி? மாறவே மாறாது..
பச்சோந்தி: கலரெல்லாம் மாறுவேன். எல்லாப் பூச்சியும் பிடிப்பேன். உட்டா இந்திரக் கோபம் என்ற பூச்சி கூட பிடிப்பேன்..என்னெ சொல்லேன்…ப்ளீஸ்..
இதுக்கெல்லாம் மயங்கிடுவாரா..கம்பர்.. உவமை சொல்ல முடியாத மூக்கு தான் சரியான விடை என்று கூட்டத்தோட சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்று thread ஐ முடித்து விட்டார்.
எள்ளா நிலத்து இந்திர நீலத்து எழுந்த கொழுந்து மரகத்தின்விள்ளா முழு மாநிழற் பிழம்பும் வேண்ட வேண்டும் மேனியதோதள்ளா ஓதி கோபத்தைக் கௌவ வந்து சார்ந்ததுவும்கொள்ளா வள்ளல் திரு மூக்கிற்கு உவமை பின்னும் குணிப்பு ஆகுமோ
திருவாளர் கம்பர் திருமூக்கு பத்தி சொன்னத பாத்து நீங்க ஏங்க மூக்குக்கு மேலெ விரலை வச்சிட்டீங்க??