டப்பா டான்ஸ் ஆடிடும்…


சமீபத்தில் கே டீவியில் குறத்திமகன் படம் பார்த்தேன். அந்தக் காலத்தில் Star Value இருந்த ஜெமினி கணேசனும், கே ஆர் விஜயாவும், குறவனும் குறத்தியுமாய் நடித்து சாரி… வாழ்ந்து காட்டி இருந்தனர். இதற்கு அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள் என்பதை ஊகிக்கவே கஷ்டமாய் இருந்தது. வித்தியாசமான பாஷை, நடை உடை பாவனை அனைத்திலும் மாறுபட்டு இருக்க வேண்டும். அதுவும் முந்தானையை ஒரு பெயருக்குத் தான் அணிய வேண்டும் என்கின்ற சின்னஞ் சிறு (சற்றே பெரிய) விஷயங்களையும் கவனத்தில் கொண்டு எடுக்கப் பட்டிருந்தது அப்படம். புன்னகை அரசி, அந்த மாதிரியான ரோலுக்கு எப்படி சம்மதித்து இருப்பார்கள் என்று முதலில் கேள்வி எழும். ஆனால் கிளைமாக்ஸ் காட்சிகளில், இவரை விட்டால் வேறு யார் செய்ய முடியும் என்று நமக்கே பதில் கிடைத்துவிடும்.

குறவன் குறத்திகளிடம் தவறாமல் இருக்கும் ஒரு பொருள் (பிராப் என்கிறார்கள் இப்போது) டால்டா டப்பா. தற்போது அவ்வளவாய் குறவன் குறத்திகளை பாக்க முடிவதில்லை…அப்படியே பாத்தலும் அந்த டால்டா டப்பாவை பாக்க முடிவதில்லை. எல்லாம் பிளாஸ்டிக் மயம் ஆன பின்னர் அது மறைந்தே போய் விட்டது. அந்தமானில் பிறந்து வளரும் என் பையன் டீவீயில் வாத்தியாரும் அம்மாவும் பாடி ஆடும் பாட்டைக் கேட்டுப் பார்த்தான். வாழ்நாளில் குறவன் குறத்திகளை பார்க்காதவன், இதென்னெ புது விதமான மேக்கப் என்று கேட்டான்.

இந்த டப்பா வைத்து ஆடிய ஆட்டம் தான், பின்னர் டப்பாங்குத்து என்று ஆகி இருக்கலாமோ?? டப்பா, காலப்போக்கில் மறைந்து போக.. வெறும் குத்தாட்டம் என்று ஆகி விட்டது. அந்தக் கால சித்தாடை கட்டிகிட்டு (நானு சிவில் இஞ்சினியரிங்க் படிக்க நுழைந்த காலத்தில், சித்தாளை கட்டிகிட்டு என்று ரவுஸ் விடுவார்கள்… கோவையில் படித்த செய்தி தெரிஞ்சதுங்களா?) தொடங்கி இப்போது டிங்க் டாங்க் பாடல் வரை ஏகமாய் குத்துப்பாடல்கள் உள்ளன. ஆர்க்கெஸ்ட்ராக்களில் அன்றும் சரி, இன்றும் சரி.. இதுக்கு தனி மவுசு தான்.

டப்பாக்குத்து சரி.. இந்த டப்பா டான்ஸ் ஆடிடுச்சே என்கிறார்களே?? அது எப்படி வந்திருக்கும்? ஒரு வேளை, ஊர் சிரித்தது என்றால், ஊரிலுள்ள மக்கள் சிரித்தனர் (இடவாகு பெயர்) மாதிரி டப்பா ஆடியது என்றால் டப்பவை வைத்திருப்பவர் ஆடிய ஆட்டம் என்று வைத்துக் கொள்ளலாமா? (பொருளாகு பெயர்…. இந்த மாதிரி ஆகு பெயர்கள் பற்றி விரிவான தகவல்களுக்கு தொல்காப்பியருக்கு Friend Request அனுப்பி Chat செஞ்சி தெரிஞ்சுகிங்க..) ஆமா… டப்பா படம் என்கிறார்களே… அப்பொ அது.. அது வேறு ஒன்னுமில்லிங்க.. படச்சுருள் பொட்டிக்குள் சட்டுன்னு திரும்பி வந்துட்டா அது டப்பா படம்.

இன்னும் சிலர் டப்பா கலண்டு போச்சு என்கிறார்கள். ஒருவேளை இப்பொ மொபைல் லேப்டாப் எல்லாம் வைத்துக்கொண்டே திரிவது போல் ஒருகாலத்தில் டப்பாவோடு திரிந்திருப்பார்களோ?? இருக்கலாம். என் மனைவி என்னோட Galaxy Tab ஐப் பார்த்து கங்காரு என்கிறார். எங்கே போனாலும் அந்த கங்காரு குட்டியை சுமந்து செல்வது போல் போகிறேனாம். டப்பா கலண்டு போச்சு மாதிரி டேப் கலண்டு போச்சி என்று பிற்காலத்தில் வரலாமோ?? [ஒரு வேளை டோப்பா கலண்டு போவது தான் மாறி டப்பா கலண்டு என்று ஆகி இருக்குமோ??]

டப்பா டான்ஸ் ஆடுதோ இல்லையோ… டிவிக்களில் வரும் டான்ஸ் நிகழ்வுகளில் தமிழ் டான்ஸ் ஆடுகிறது. (அந்த நிகழ்ச்சிகளில் மட்டுமா என்ன?). எனக்கு இன்னும் விளங்காத புதிர் இந்த டான்ஸ் நிகழ்ச்சிகளில் வரும் Chemistry. அது என்ன கெமிஸ்ட்ரி என்று இதுவரை விளங்கவில்லை. இருந்தாலும் சின்னச் சின்ன வாண்டுகளை வைத்து வதைத்து வறுத்து எடுத்து டான்ஸ் ஆடுவதை, இன்னும் செம்மைப் படுத்து ஒலிம்பிக்கில் காட்டினால் ஜிம்னாஸ்டிக்கில் பதக்கமாவது கிடைக்கலாம்.

இது ஒரு பக்கம் கிடக்கட்டும்… அந்தக் காலத்து டான்ஸ் எப்படி இருந்தது? கருப்பு வெள்ளை படங்களில் துணை நடிகைகள் கூட செமையா ஆடுவாய்ங்க.. “சபாஷ் சரியான போட்டி” என்பதை மறக்க முடியுமா?? “நலம் தானா” என்று பத்மினி கேட்பதற்காகவே ஆஸ்பத்திரியில் படுக்கலாம் போல் இருக்கும்.. இப்பொ வரும் ஆட்டங்கள்??? [நோ கமெண்ட்ஸ்]

சரி அப்படியே கொஞ்சம் கம்பகாலத்து ஆட்டத்தையும் பாக்கலாமே…அங்கேயும் வழக்கம் போல் Grand Finale நடக்குது… இப்போது வெளி மாநிலத்து குண்டம்மாக்கள் தான் உக்காந்து பாப்பாய்ங்க.. அப்போ வெளி நாட்டு லேடீஸ் எல்லாம் பாக்கிறாங்களாம். ஆட்டம்னா ஆட்டம் அம்புட்டு ஆட்டம். Preliminary Level க்கு தேவ மகளிர் ஆடறாங்கலாம். அப்புறம் அதுக்கு மேலே வித்யாதர மகளிர் தூள் கிளப்பினாங்களாம் (கத்துகுட்டிகள்???). அவங்களை தூக்கி சாப்பிட்ற மாதிரி இயக்க மகளிர் (Choriographers) ஆட்டம் இருந்ததாம். எல்லாத்துக்கும் டாப்பா கரும் கூந்தல் டோப்பா போட்டு அரக்கியர் ஆடியது தான் டாப்பாம்…

வான மாதரொடு இகலுவர் விஞ்சையர் மகளிர்
ஆன மாதரொடு ஆடுவர் இயக்கியர் அவரைச்
சோனை வார் குழல் அரக்கியர் தொடர்குவர் தொடர்ந்தால்
ஏனை நாரியர் அருநடக் கிரியை ஆய்ந்திருப்பார்.

இனிமே மானாட மயிலாட பாக்கும்போது கம்பகாலத்து ஆட்டமும் ஞாபகம் வரட்டும்.