நகைச்சுவை உலகில் வெற்றிக் கொடி கட்டிய காமெடி, அந்த வடிவேலு துபாய் போய்
வந்து அலம்பல் செய்வது தான். எக்கு தப்பா “நீயெல்லாம் என்ன கேக்கிரான்
மேக்கிரான் கம்பெனியிலெ என்ன செஞ்சிருக்கப் போறெ? அங்கே டாய்லெட் கிளீன்
செய்யற வேலையில் தானே இருந்தே”…. என்று குத்து மதிப்பா பார்த்திபன்
கேக்க (பார்த்திபன் குறி என்னெக்காவது தப்புமா?) “அடெ.. நான் இங்கே ஒரு
மாதிரி பில்டிங்ங்க்ங்க் கான்ட்ராக்டர்ன்னு சொல்லி வச்சிருக்கேன்”…
என்று வடிவேல் கெஞ்சுவதும் எல்லாருக்கும் நல்லா ஞாபகம் இருக்குமே!!!
செய்யும் தொழிலே தெய்வம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தான் செய்யும்
தொழிலை சொல்லாமல் மறைப்பதும் சிலருக்குக் கை வந்த கலையாய் இருந்திருக்கு.
அந்தமானிலும் அந்த விபரீதம் அடிக்கடி நிகழும். ஒரு நாள் ஃபோன் வந்தது.
அழுகுரலில் ஒரு பெண்மணியின் குரல். தன் கணவர் அந்தமானில் தன்னை விட்டு
வந்து வாழ்வதாய் தகவல். போய் பாருங்க என்ற வேண்டுகோளொடு முடிந்தது.
நானும் போய் விசரித்தேன். ஊரில் ஐடிஐ மட்டுமே படித்த அவர் அந்தமானில்
இஞ்சினியர் ஆகி (பீலா தான்) இருந்தார். அம்புட்டு பொறுப்பா கம்பெனியில்
வேலை பாத்திருக்கார்.. அவர், வீட்டோட மாப்பிள்ளை ஆகும் ஏற்பாடு வேறு
நடந்திட்டு இருந்திருக்கு. நான் போனதும், வில்லன் வந்த கதையில் வரும்
திருப்பம் போல், ஊருக்கே திரும்ப வேண்டிய நிலை வந்து விட்டது. (ஏதோ
என்னால் ஆன நல்ல காரியம்).
ஒரு காலத்தில் அந்தமானில் இருப்பவர்களுக்கு பொண்ணே குடுக்க மாட்டார்கள்.
அதுக்காகவே இன்னெக்கி அந்தமான், நாளைக்கே மதுரைக்கு மாற்றல் ஆகி வந்து
விடுவேன் என்றெல்லாம் சொல்லி (பொய் தான்) கல்யாணம் செய்து கொண்டு வருவர்.
துறைமுகம் எங்கே மதுரைக்கு வரும் என்ற யோசனை கூட செய்யாமல் பெண் கொடுத்த
புன்னியவான்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
என் மாமனார் ரொம்ப விவரமானவர். 90 களில் மதுரைக்குப் போய் பெண் பார்த்து
விட்டு தீவு திரும்பினேன். நான் இருக்கும் தீவு நன்கவுரி. என்னைப்
பற்றியும் நான் செய்யும் வேலை பற்றியும் விலாவாரியா சிபிஐ ரேஞ்ஜில்
விசாரனை நடத்தி இருப்பது பின்னர் தான் தெரிந்தது. எல்லாம் ஒரு Safety
க்குத்தான் என்றாலும், இப்படி சிபிஐ ரேஞ்சுக்கு தேவையா?? இப்பொ எல்லாம்
அந்தச் சிக்கல் இல்லை. மொபைல் வந்த பிறகு, ஆளைப் புடிச்சிடலாம் என்ற
நம்பிக்கை வந்து விட்டது எல்லாருக்கும்.
சமீபத்தில் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானப் பயணம் (மாமனார் செலவு
இல்லிங்க…) மூன்று சீட்டில் நான் நடுவில். இடது பக்கத்தில் இருந்தவர்
என்னைப் பாத்ததும் தமிழா? என்று கேட்டார். (ஏன் அப்படி கேட்டிருப்பார்?).
அவர் துபாயிலிருந்து வருகிறார். வலது பக்கம் இன்னொருவர் வந்து
உக்காந்தார். வந்தவுடன் iPod எடுத்தார் கையில். துபாய்க்காரரோ அப்பா..
பெரிய்ய ஆளுப்பா..என்றார். நானும் என் பங்குக்கு, சலங்கை ஒலி படத்தின்
“கமல் கேமிரா” மாதிரி குட்டியான Galaxy Tab கையில் எடுத்தேன். நீங்களும்
கம்மியில்லையே என்றார் அந்த துபாய்க்காரர்.
நான் பார்த்திபன் ரேஞ்சில் அவரிடம் கேட்டேன் “என்ன செய்யறீங்க துபாய்லெ?”
அவரும் சும்மா வாட்ட சாட்டமா தான் இருந்தார். ஆனா கொஞ்சம் சன்னமான
குரலில், “Labour வேலை தான்” என்றார். “அட நீங்களும் பெரிய்ய ஆள் தான்
என்றேன்” நான். “உலகமே துபாயெப் பாத்து வாயெப் பொளக்கிறதுக்கு நீங்களும்
தான் ஒரு காரணம்” என்றேன். செம ஜாலியாய் ஆகிவிட்டார் மனுஷன். ஊருக்கும்
போனா Building Contractor என்று சொல்வதாய்த் தான் இருந்தாராம். மனதை
மாற்றிக் கொண்டார்.
ஒரே வகுப்பில் படித்து பலமாதிரி பதவிகளில் வேலைக்கு சேர்ந்திருப்பார்கள்.
சில சமயம் சிலர் சிலரின் கீழ் வேலை பார்க்கும் நிலை கூட வரலாம். நான்
ஒருவரின் கீழ் வேலை பார்த்து, பின்னர் அவர், என் கீழ் வேலை பார்க்கும்
அசம்பாவிதங்களும் நடந்திருக்கின்றது. அதுக்காக செய்யும் தொழிலை
மாத்திக்கிறதோ மறைக்கிறதோ நல்லாவா இருக்கு?
எதற்கும் தயாராய் இருப்பது தான் நல்ல குணாதியம். எதற்கும் என்பதில்,
எல்லா விதமான மோசமான சந்தர்ப்பங்களும் சேர்த்தி தான். பழைய படத்து டயலாக்
இப்படி வரும். “தூங்குபவனைத் தட்டி எழுப்பி, அவன் கையில் வாளையும்
கொடுத்து, தலையையும் நீட்டச் சொல்கிறான்”. இதுக்கு மேலெ ஒரு மோசமான
சிச்சுவேஷன் வருமா என்ன?
சரீ..எல்லாம் சரி.. இந்த மாதிரி சிச்சுவேசனை எப்படி சமாளிக்கிறது? ஒரு
சின்ன டெக்னிக் இருக்கு. பக்கத்திலெ இருக்கும் ஆளை ஒரு தூக்கு
தூக்கிடுங்க போடும். (இப்போல்லாம் தூக்கிடவா என்றால் வேறு மீனிங்க்…
நான் மெய்யாலும் உசத்தி பேசுங்க என்கிறேன்)
அதெப்படி எதிரியை ஒசத்திப் பேச முடியும்?? இப்படியெல்லாம் எக்குதப்பா
கேள்வி கேட்டீங்கன்னா, அப்புறம் நானு உங்களை ராமாயண காலத்துக்கு
கூட்டிட்டு போயிடுவேன். செய்யும் தொழிலை மறைப்பது மாதிரியே, பெரிய்ய
ஆளையும் சும்மா ஜுஜுபி என்று மறைத்துவிட முடியுமா? ரெண்டுக்கும் ஒரே
பதில் தான்.. கூடாது.
அந்தக் காலத்து விசாரணைக் கமிஷன் இலங்கையில் நடக்கிறது. சத்தியத்துக்கோ
அது ஏதோ ஒரு கயித்துக்கோ கட்டுப்பட்டு அனுமன் நிக்கிறான் கை கட்டி
அமைதியாய். (எவ்வளவு சரக்கு இருந்தாலும் அடக்கி வாசிக்கனும்டா மாமு
என்பது ஓரத்தில் கிடைக்கும் இலவச இணைப்பு உபதேசம்). அனுமன் பத்தி கசமுசா
என்று எல்லாரும் வத்தி வச்சிருக்க… ஒரு மனுஷன் மட்டும் அனுமனுக்கு
சப்போர்ட்டாக வருகிறார். யார் தெரியுமா அது? விபீஷணன் என்கிறீர்களா?
அதான் இல்லை.
இராவணன் சபையில், அனுமன் வல்லவரு நல்லவரு என்று சொல்லி சிச்சுவேஷனை
balance செய்வது இந்திரசித்தன். உருவம் தான் குரங்கு. இவன் பலே
கில்லாடிப்பா.. ஆண்மையில் சிங்கம் மாதிரி… சிவன் & திருமால் மாதிரியே
வீரம் மிக்கவன் என்று சொல்வதொடு ஒரு சலாமும் வச்சாராம் அனுமானுக்கு.
புவனம் எத்தனை அவை அனைத்தும் போர்கடந்
தவனை உற்று அரி உருவான ஆண்தகை
சிவன் எனச் செங்கணான் எனச் செய் சேவகன்
இவன் எனக் கூறி நின்று இரு கை கூப்பினான்.
என்ன நிறைய நாம கத்துக்கணுமோ??