Dredging Corporation of Rama
ஏற்கனவே ராமர் பேரைச் சொல்லி ஏகப்பட்ட சிக்கல்லெ ஒரு சேது சமுத்திரத் திட்டம் இருக்கு. அதுவும் அந்த Dredging – அதாங்க கடலை ஆழப்படுத்தும் வேலைதான் சிக்கலின் உச்சம். இதிலெ ராமரே ஏதோ தோண்டும் கம்பெனி வச்சி நடத்துற மாதிரி இதென்ன
டைட்டில்?
அதுக்கு முன்னாடி ஒரு Objection.
எப்பவுவே ஏதாவது கலாச்சிட்டதுக்கு அப்புறம் தான் ராமர் கம்பர் வருவாங்க… இன்னெக்கி என்ன உடனே அப்பியரன்ஸ்??
சரி.. கலாய்ச்சிட்டு அப்புறம் வருவோமே..??
1987 களில் கடலுக்கு அடியில் உள்ள மண் சோதனைக்காக (Boring work – sub soil
investigation) ஒரு தீவுக்கு போயிருந்தேன். அடிக்கடி சினிமாவில் காட்டும் மேன்ஷன்
பாணியில் ஒரு கும்பலுடன் தங்க நேர்ந்தது.
பஞ்சதந்திரம் படகும்பல் ஸ்டைலில் மக்கள் செமெ ஜாலியாய் இருந்தார்கள் (பெண்கள்
விஷயத்தில் எல்லரும் ராமர் மாதிரி)
முதல் கேள்வி : (ராகிங் பாணியில்) நீ என்ன பண்ண வந்த ஆளு சொல்லு..?
(கேள்வியே எனக்குப் புரியலை… கொஞ்சமா தைரியத்தை வரவழைத்து)
நீங்க என்ன என்ன பண்ற ஆளுஙக? கேட்டேன்.
வந்த பதில் பட்டியல்.
குத்துற ஆளு (Post Office வேலை – ஸ்டாம்ப் மேல் குத்துவதால்)
சொறுகுற ஆளு ( Telephone Exchange – connection தருவது)
அடிக்கிற ஆளு (வாத்தியார்)
புடிக்கிற ஆள் (X Ray Technician – படம் புடிப்பவர்)
விக்கிற ஆளு (கடை வைத்திருப்பவர்)
இதே ஸ்டைலில் பதில் சொல்லணுமாம் நானு.
சொன்னேன் என் வேலையை. அவர்கள் பெயர் வைத்தார்கள்
கொடையிற ஆளு என்று. சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டேன்.
சரி குடைதல் என்பதை Boring என்பதாய் வைத்துக்கொண்டால் Dredging க்கு என்ன சொல்வது
தோண்டல், ஆழப்படுத்தல், கடலை ஆழப் படுத்தல், கடலை தூர் வாருதல்..இப்படி ஏதாவது இருக்கட்டும்.
இப்ப ராமர் கம்பரை கொண்டு வரட்டுமா??
ராமர் Dredging செஞ்சிருக்காரா??
இதென்னெ கேள்வி சின்னப் புள்ளத் தனமா இருக்கே? என்று வடி வேல் ஸ்டைலில்
கேக்கிறீங்களா…
நீங்க தைரியமான மனிதரா..??
ஆமாவா…
இந்தா புடிங்க மொபைலை.. லையன்ல இருக்கிறது யாரு தெரியுமா??
விசுவாமித்திரர்..
கோபம் வந்தா சாபம் குடுத்துடுவாரா??
அப்பொ நானே பேசட்டா..??? … ம்.. அவரும் நம்ம பிரண்டு தான்.
நான்: ஹலோ.. விசுவாமித்திரருங்களா…???
விமி : யார்ரா அது என் நம்பருக்கே போன் போட்டு நான் தானான்னு கேக்குறது??
நான்: கோவிச்சுக்காதீங்க சாமி.. உங்க சிஸ்ய புள்ளைங்க யாராவது போன் எடுப்பாங்கன்னு கேட்டேன் சாமி..
விமி : ஆமா.. நீ யாரு சொல்லவே இல்லெ…
நான் : நான் தானுங்க.. இந்த wordpress லெ கம்பராமாயணம் பத்தி கொஞ்சம் கலாய்க்கிற
பார்ட்டிங்க..
விமி: ஓ..ஹோ..அந்த பார்ட்டியா? சரி..என்னெ வச்சி காமெடி கீமடி பண்ணலையே?
நான்: உங்களை கலாய்க்க முடியுமா? ஒரு சின்ன கேள்விங்க.. ராமன் Dredging
செஞ்ச்சிருக்காரா??
விமி: இது கூட தெரியாம எழுத வந்திட்டியா?? ஜனகன் கிட்டெ ராமரைப் பத்தி சொல்றப்பொ என்ன சொன்னேன் தெரியாதா??
நான்: தெரியலையே சாமி:
விமி: அஸ்வமேத யாகத்தைக் காக்க, மேடும் பள்ளமுமா இருந்த நிலத்தை சீராக்க.. கடலை தோண்டினார் ராமர்.
நான்: அப்படியே அந்த கம்பர் பாட்டு சொன்னீங்கன்னா நல்லா இருக்குமே
விமி: என்ன வெளையாட்டா… மனுஷன் 10000 பாட்டு எழுதியிருக்கான்.. எவன் ஞாபகம் வச்சிருப்பன். போனை வை.. மெயில் பண்றேன்..
நான்: சாமி.. pdf லே அனுப்புங்க சாமி … பாண்ட் பிராபளம் வரப்போகுது…
விமி: இப்பொ போனை வைக்கப் போறியா.. சாபம் தரட்டுமா..
நான்: டிக். (அப்பா.. மனுஷன் கிட்டெ சாபம் வாங்காமெ பேச என்ன பாடு பட வேண்டி இருக்கு???)
Pdf ல் கிடைத்த பாடல் இதோ:
இடறு ஒட்ட இன நெடிய வரை உருட்டி இவ்வுலகம்
திடல் தோட்டம் எனக் கிடந்த வகை திறம்பத் தெவ்வேந்தர்
உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர்க்
கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமா??
ராமர் தோண்டினாரோ இல்லையோ நான் இன்னும் கொஞ்சம் கம்பராமாயணத்தைத் தோண்டனும்.