உலக நாயகனே…


அந்தமானில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர் தென் மாவட்ட தமிழக மண்ணிலிருந்து வந்தவர்கள் தான். மேலூர் தொடங்கி மானாமதுரை வரையிலும் பிறந்த ஊர்க்காரர்கள் தங்களது சொந்த ஊராக மதுரை என்று சொல்லி விடுவர். இதேபோல் மனாமதுரை முதல் ராமேஸ்வரம் வரை உள்ளவர்கள் ஜாலியாய் பரமக்குடி என்று சொந்த ஊராய் உறவு கொன்டாடுவர். இராமநாதபுரம் என்பதை மிகக் குறைவாகவே பயன்படுத்துகின்றனர். (ஏன் என்பது தான் விளங்கவில்லை).

எனக்கும் சொந்த ஊர் பரமக்குடி தான். (பரமக்குடியே தாங்க..அக்கம் பக்கம் எல்லாம் இல்லாமல பக்காவா அந்த ஊரே தாங்க). குசலம் விசாரிப்பவர்கள் தவறாமல் கேட்கும் கேள்வி “உங்க சொந்த ஊரு?”. ஊரை வைத்து இன்னார் இப்படி என்று ஊகம் செய்ய முடியுமோ!!! இருக்கலாம் போல் தான் தெரிகிறது.

சமீபத்தில் ஒரு நேர்முகத் தேர்வில் வளைத்து வளைத்து ஆங்கிலத்தில் துருவித் துருவி கேள்விகள் கேட்டனர். அவர்களுக்குள் தமிழில் பேசிக் கொண்ட போது நானும் புகுந்து தமிழில் பதில் சொல்ல, அட நீங்க தமிழா? என்ற ஆச்சரியமான கேள்வி எழுந்தது. [அந்தமான் என்றால் தமிழர்கள் அல்லாதவர்கள் இருக்கும் பகுதி என்ற அவரின் அடிமனதின் உறுதி கேள்வியாய் வந்தது] அடுத்த கேள்வி.. ஆமா தமிழ்நாட்டில் எந்த ஊர்?

நான் பதில் சொன்னேன்: பரமக்குடி.

ம்..ம்… கமலஹாசன் பொறந்த ஊரா?
அப்படி சொல்ல முடியாது. ஆனா.. நானும் கமலஹாசனும் பிறந்தது ஒரே ஊரில். அதாவது பரமக்குடியில் என்றேன். (ஒரு மாதிரியாய் பார்த்தார்கள்). அப்புறம் என்ன!! போர்பந்தருக்கு காந்தியால் வந்த மரியாதை மாதிரியும், எட்டயபுரம் பாரதியால் எட்டிய இடத்தையும் கமலஹாசன் மூலம் பரமக்குடியும் பெற்றிருக்கிறது என்பது தான் உண்மையாய் தெரிகிறது.
சொல்லப் போனால் ஒருகாலத்தில் கமலஹாசக்குடி அல்லது கமலனூர் என்று பெயர் மாற்றம் பெற்றாலும் ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கில்லை.

அது ஒரு பக்கம் இருக்கட்டும். பரமக்குடிக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? இது நான் 7 வது படிக்கும் போது ஆசிரியரிடம் கேட்டேன். அவரும் அன்று மாலை வாரியாரின் சொற்பொழிவுக்கு வந்து இதையே கேள் என்றார். (அந்த வாத்தியாருக்கு பதில் தெரிந்திருந்தும், நாம் வாரியார் ஸ்வாமிகளின் கூட்டங்களுக்கு போவதை ஆரம்பிக்க வேண்டும் என்ற நல்ல ஆசையால் பதில் தராது விட்டிருந்தார்). வாரியார் சொன்ன பதில். பரமன் அதாவது பெருமாள் குடி கொண்டுள்ள ஊர்தான் பரமன்குடி… பின்னர் பாமரர்களால் பரமக்குடி ஆனது என்றார்.

கமலஹாசன் படித்த பள்ளி பாரதியார் நடுந்லைப் பள்ளி பரமக்குடியில் இருக்கு. அரசுப் பள்ளிக்கே உரித்தான் அத்தனை அமசங்களும் நிறைந்த பல பள்ளிகளில் இதுவும் ஒன்று. எவ்வளவோ நபர்கள் நல்லா படித்து எங்கெங்கோ இருந்தாலும், தான் படித்த பள்ளிக்கு (அவ்வளவு நல்லா படிக்காட்டியும் கூட..) சில வகுப்பறைகள் கட்டிக் கொடுத்து மரியாதை செய்திருக்கிறார் கமல். நல்ல மனிதர். சிந்தனையாளர் என்பதோடு சமூகத்தில் தனக்கென ஒரு கடமை இருக்கிறது என்பதையும் உணர்ந்து செயல் பட்டது தான் இந்த காரியம் மூலம் தெரிகிறது.

கமல் படங்களில் ரவிகுமார் இயக்கங்கள் எல்லாம் பளிச் தான். (எல்லா பளிச்சும் சேர்த்துத் தான்). எல்லா படங்களிலும் கடைசிக் காட்சியில் தோன்றி தன் முகம் காட்டும் யுக்தி அவரது. சென்னை ஏர்போர்ட்டில் விமானம் ஏற வரிசையில் நின்றார். அப்போதும் கடைசியில் தான் இருந்தார். ஒரு படம் எடுக்க முயற்சிக்கும் போது நான் தான் விடுபட்ட கடைசி ஆள் என்ற அழைப்பு வர, அந்தமான் விமானத்தில் தாவி ஏறப் பொய் விட்டேன்.

கமலுக்கு எவ்வளவோ பட்டங்கள் இருந்தாலும் இந்த “உலக நாயகன்” என்பது தான் அனைவராலும் சொல்லப் படுகிறது. பத்து வேடங்களில் கலக்கிய கமலின் தசாவதாரம் படத்தில் உலகநாயகனே என்ற பாட்டும் தூள் கிளப்பும். பத்து விதமான அவதாரங்களை எடுத்தவர்க்குத்தான் இது மிகவும் பொருந்தும் என்று யார் தான் யோசித்து சொன்னார்களோ?? அல்லது அப்படி ஒன்று இருப்பதை தெரியாமலெயே சொல்லிட்டாங்களொ.. (சரி இருந்துட்டுப் போகட்டுமெ. அதுக்கு என்ன இப்பொ?)

அது ஒண்ணுமில்லை. இந்த மாதிரி உலகநாயகனே என்று யாராவது யாரையாவது சொல்லி இருக்காங்களா? என்று தேடினேன். கம்பராமாயணத்தில் வந்து தேடல் நின்றது. ராமன் தேடிய சீதை மாதிரி நான் தேடிய சேதி கிடைத்தது.

அனுமன் சீதை இருக்கும் இடத்திற்கு சென்று வந்த பிறகு நடக்கின்ற காட்சியை கொஞ்சமா எட்டிப் பாக்கலாம். அனுமன் முதல்லெ தன் ராஜாவான அங்கதனை வணங்க்கினான். அப்புறம் சாம்பவானை நமஸ்கரித்தான் காலில் விழுந்து. பொறவு எல்லார்க்கும் வணக்கம் வைத்தான். பேச ஆரம்பித்தான். “இங்கிருக்கும் எல்லாருக்கும் உலகநாயகனான இராமனின் தேவி சீதை நன்மை தரும் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்”. இப்பொ சொல்லுங்க. உலக நாயகன் என்று முதலில் சொல்லியது யாரு?

வாலி காதலனை முந்தை வணங்கினன் எண்கின் வேந்தைக்
காலுறப் பணிந்து பின்னை கடன்முறைக் கடவோர்க்கு எல்லாம்
ஏலுற இயற்றி ஆங்கண் இருந்த இவண் இருந்தோர்க்கு எல்லாம்
ஞாலநாயகன் தன் தேவி சொல்லினள் நன்மை என்றான்.

அதுசரி உலகநாயகன் கமல் படிச்ச பள்ளிக்கு ஏதோ செய்தார். நான் என்ன செய்தேன் என்கிறீர்களா? பத்தாம் பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மார்க் எடுக்கும் வசதி குறைந்த மாணவர்களுக்கு ஏதோ என்னால் முடிந்த பரிசு தந்து வருகிறேன்.