தனியே… தன்னந் தனியே..


தனிமையிலே இனிமை காண முடியுமா??
இது ஓர் அரதப் பழசான கேள்வி. ஆனா அதுக்கு சொல்லும் பதில் என்ன தெரியுமா?நள்ளிரவிலே சூரியனும் தெரியுமா?? கேள்வியையே பதிலாகச் சொல்லும் யுத்தி இது. இதே மாதிரி இன்னொரு கேள்வி இருக்கு.

பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்? (இந்த மாதிரி கேள்விகள்  ஃப்ரீ sms உலகில் பிரபலம்) ஆனா, இதுக்கு பதில் கூட ஒரு கேள்வியாய் தான் சொல்ல முடியும்.

பதில் :  பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்.

இதையே  ஆச்சரியத்துடனும் பதிலாய் கேக்கலாம்
பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும் !!!!!!

பெண்களால் கடுமையாய் பாதிக்கப்பட்டவர்கள் ரொம்ப ஜாலியாவே சொல்லலாம் “பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்” என்று.

தனியா உக்காந்து யோசிச்சா இப்படி நெறையவே யோசிக்கலாம் போல இருக்கு. தனி ஒரு மனுஷனுக்கு சோறு இல்லாட்டி இந்த லோகத்தையே சுட்டு பொசுக்கலாம்னாரு நம்ம பாரதி.

தனி ஆளா நின்னு சமைக்கிறதும் கூட ஒரு யோகம் மாதிரி தான் இருக்கு. பொண்டாட்டி கூட இல்லாத நேரத்தில் வம்படியாய் காலை நேரத்தில் சமைக்கும் ஐட்டமாய் நூடூல்ஸ் தான் பிரதான உணவாக அமையும். (அது சரி அதை 2 நிமிடத்தில் சமைக்க முடிகிறவருக்கு கின்னஸ்ஸில் கூட பேர் போடலாம்)

தனி ஆளா நொந்து நூலாகி நூடூல்ஸே கதி என்று இருப்பவர்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ் சொல்றேன். (ரகசியமா வச்சிக்குங்க.. உங்க மனைவிக்கு கூட சொல்லாதீங்க. அந்த நூடூல்ஸ் செய்யும் போது மொதல்ல மசாலாவை போட்டு நல்ல சுட வைங்க. அதோட லேசா சிக்கன்/மட்டன்/மீன் மசாலாவையும் கொஞ்சம் சேத்துப் பாருங்க.. தனி டேஸ்டு கெடைக்கும் பாருங்க. சைவப் பிரியர்கள் வேறு ஏதாவது கரம் மசாலாவை சேத்துப் பாருங்க)  .

பாரதி சொன்ன மாதிரி சோத்துப் பிரச்சினை பெரும் பிரச்சினை தான். ஆனா அதே பாரதி செத்தும் ஈக்களுக்குத்தான், உணவாய் அதிகம் இருந்தான் என்பது தான் சுவாரஸ்யமான சேதி.

வைரமுத்துவின் வரிகள் இப்படி வருது

அவன் சவத்தின் பின்னால்
வந்த ஆட்களின்
எண்ணிக்கையை விட
அவன் கண்களின்
மொய்த்த ஈக்களின்
எண்ணிக்கை அதிகம்.

ஒரு தனி மனிதனின் வெற்றியோ அல்லது தோல்வியோ, அவன் தனியாய் இருக்கும் போது எப்படி யோசிக்கிறானோ, அதைப் பொறுத்துத் தான் அமையும்.

மனசாலெ கூட தப்பாவே நெனைக்கப் படாது. இது தான் உள்ளத்தால் உள்ளலும் தீதே என்பதன் எளியா சாலமன் பாப்பையார்த்தம். ஆனா என்ன நடக்குது நாட்லெ??.

நம்மாளு தனியா இருக்கும் போது பெரும்பாலும் சின்னத்திரையில் படங்கள் பாத்துகிட்டே இருந்தா கனவிலெ கூட தமன்னா தான் வரும். என்ன செய்ய? நம்ம நெனைப்பு அப்படி.

ஒரு தனி மனித அவமானங்கள் தான், பிற்காலத்தில் அவர்களை சரித்திர புருஷனாய் அவதாரம் எடுக்கவும் செய்கிறது. ஒரு ரயில் பயண அவமானம் தான் மோஹன்சந்த் கரம்சந்தை மஹாத்மா காந்தி ஆக்கியது. சமூக அவமானங்கள் தான் ஒரு பீமை, அண்ணல் அம்பேத்காராய் ஆக்கியது. ராணுவ வேலையின் நிராகரிப்பு தான் அப்துல் கலாமை இந்திய தலைமைக்கே இட்டுச் சென்றது.

அதெல்லாம்… பெரிய்ய ஆட்களுக்கு.. நம்மளை மாதிரி சாமானியர்கள் என்ன செய்ய?? அதுக்கும் வள்ளுவன் தான் வழி சொல்றார். வச்சா குடுமி, செரைச்சா மொட்டை இப்படி எல்லாம் வாணாம். இந்த லோகம் எது வாணாம்னு சொல்லுதோ, அதெ நீயும் வேணாம்னு சொல்லு. என்ன ஒரு சிம்பிள் லாஜிக்.

தமிழ்மொழி வளரவும் இதே மாதிரி தனியா யோசிச்சா உடனே பதிலும் கெடைக்கும். தனியே இருக்கும் போது சிந்திக்கும் மொழி தமிழாய் இருக்கட்டும். மத்ததெல்லாம் தானே நடக்கும். என்ன தமிழில் யோசிக்கிறீங்களா??

அந்தமான் போன்ற தீவுகளில் தற்கொலைகள் அதிகம் என்ற ஒரு பேச்சு இருந்தது. தனிமை ஆக்கியதன் பின் விளைவு பிணமாய் ஆனதோ? ஆனால் இப்பொ கொஞ்சம் மாறி இருக்கிறதா படுது. மொபைல் என்னும் மந்திரக்காரி எப்போதும் கூட இருப்பதால், தனிமை என்பதே இல்லையே..

சமீபத்திய ஒரு வார இதழில் கணவன் மனைவிக்கு மத்தியில் பிளவு வருவதற்கு காரணமே அதிகம் பேசாததே எங்கின்ற மாதிரி தான் போட்டிருந்தார்கள். ஆனா பேசினாத்தான் பிரச்சினை என்று எத்தனை ஆண் மக்கள் மௌனவிரதம் இருக்கிறார்கள் என்பது எப்படி அந்த டாக்டருக்கே தெரியாமப் போச்சோ.. இப்படி தனியா புலம்ப வேண்டியது தான்.

தனியா ஒரு ஆளு சொன்ன கூட்டமா சொன்னதுக்குச் சமம் என்பது நம்ம சினிமா சித்தாந்தம். ஒரு தடவை சொன்னா, 100 தடவை சொன்னமாதிரி சொல்றது அதுக்குத்தான்.

தெரு நாய் வேண்ணா கூட்டமா வரும். வெறி நாய் தனியாத் தான் வரும். சிங்கம் சிங்கிளா வரும். பன்னிங்க தான் கூட்டமா வரும்.

பக்கத்து வீட்டு பையனைக் கூப்பிட்டு பாடுப்பா என்றால், பயந்து ஓடியே போயிட்டன். ஆனா பாத்ரூமில் செமெய்யா பாட்றான். தனிமை தான் அங்கே பயத்தை விரட்டுதா?

ஆக தனிமை பலமா பலவீனமா?

ஒரு பட்டிமன்றம் வச்சி, நடுவரா யாரா கூப்பிடலாம்?? நம்ம கம்பரை கூப்பிட்டா அவர் என்ன முடிவு சொல்வார்.

அவர் தனிமைக்கு தனிமையே பலம் என்கிறார். மீண்டும் ஒரு டிரிப் அசோகவனம் போயே ஆகனும். அங்கே அனுமன் ராவணனின் தளபதியோட மல்லுக்கு நிக்கிறார்.

ஏக ஆர்ப்பாட்டத்துடன் எழுந்தது அரக்க சேனை. அனுமனை அப்படியே சுத்தி வளைச்சிட்டாய்ங்க. அந்தி மழை பொழிகிறது மாதிரி அங்கே ஆயுத மழை பொழியுது. Security Guard  க்கே பயத்திலே வேர்த்துக் கொட்டினா எப்படி இருக்கும்? அப்படி தேவர்களுக்கும் வேர்த்துப் போச்சாம். நாரதர் மாதிரி ஆட்கள் சும்மா அதிருதில்லெ என்று சொல்லும் போதே விண்ணுலகமும் மண்ணுலகமும் லேசா அதிருச்சாம். அந்த சேனையோட அனுமன் தானும் தன் தனிமையும் சேர்ந்து வர சண்டைக்கு புறப்பட்டானாம். இது கம்பன் தீர்ப்பு.

ஆர்த்து எழ்ய்ந்து அரக்கர் சேனை அஞ்ச்சனைக்கு உரிய குன்றைப்
போர்த்தது பொழிந்தது அம்மா! பொரு படைப் பருவ மாரி
வேர்த்தனர் திசை காப்பாளர் சலித்தன விண்ணும் மண்ணும்
தார்த் தனி வீரன் தானும் தனிமையும் அவர் மேல் சார்த்தான்.

என்ன… தனியா யோசிக்கிறீங்களா?? வெற்றி உங்களுக்குத்தான். ஆல் த பெஸ்ட்.