கபடி கபடி … கரடி கரடி


இந்தக் கரடி, உலகத்திலே என்ன தப்பு செஞ்சதோ தெரியலை.. அதுக்கு எங்குமே ஒரு நல்ல பேரு இல்லெ..

கரடியா நான் கத்துறேன் யாருமே கேக்கலைன்னு கத்தும் ஆசாமிகளை பாத்திருப்பீங்க.. (கரடி மாதிரி கத்துனா யாரால தான் காது கொடுத்து கேக்க முடியும்??)

ஒரு படத்தில் கூட செண்ட் அடிச்ச பிறகு வடிவேலுவை, ஒரு கரடி நைஸா தள்ளிட்டு போகும்.. அப்புறம் என்ன ஆச்சிங்கிறதை சென்ஸார் புண்ணியத்தால் யாருக்கும் தெரியாமல் செய்து விட்டார்கள்…

ஒரு பழைய படத்தில் கூட கரடியை வச்சி காமெடி இருக்கு. ஏ கருணாநிதியோ அல்லது சந்திரபாபுவோ மரத்தை சுத்தி கரடியை வைத்து வரும் காமெடி ஸீன் அது.

பூஜை வேளையில் கரடி என்பது அடிக்கடி புழங்கும் வாக்கியம்.. ஆமா.. பூஜைக்கும்
கரடிக்கும் அப்படி என்ன அவ்வளவு ஏழாம் பொருத்தம்?

எனக்குத் தெரிந்து கரடிக்கு பயந்து ஒருவன் மரத்தில் ஏறிவிட… கரடி கீழே வெயிட்டிங்க்.. மரத்தில் உள்ளவனுக்கு தூக்கம் வராமல் இருக்க… இலையை ஒவ்வொன்றாக பிடுங்கி.. கீழே போட… மரத்தின் கீழ் சிவன் இருக்க… அந்த மரம் வில்வ மரமாக போக… அன்றைய இரவு சிவராத்திரியாக இருக்க… அவன் கரடியிடம் தப்பி, சொர்க்கமே போனானாம். இப்படித்தான் போகுது கதை..

ஆனா.. கரடிக்கு நடைமுறை வாழ்வில் நல்லபேர் இல்லையே..!!!

இன்னும் சில இசகு பிசகான உதாரணங்கள் பாக்கலாமா??

ஆமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?

மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட மாதிரி (நான் வம்பாய் கம்பரை இழுப்பது போல்…இவ்வளவும் அதுக்குத்தானே!!!)

கொல்லன் தெருவில் ஊசி வித்த கதையா…

சம்மன் இல்லாம ஆஜர் ஆன மாதிரி…

இப்படி சொல்லிட்டே போகலாம்..(இதுக்கு மேலே தெரியாட்டி, இப்படியும் சொல்லி  சமாளிக்கலாம்!!)

ஆனா எல்லாருக்கும் இப்படி ஒரு எசகுபிசகான சூழல் கண்டிப்பா வாச்சிருக்கும். நான் இப்பொ சொல்லப்போறது ஒண்ணு இல்லெ..ரெண்டு இல்லெ.. மூனு.

அப்பா… இப்பவே கண்ணெக் கட்டுதே??? (வடிவேலு ஸ்டைலில் படிங்களேன்)

சூழல் ஒண்ணு:

பலான பார்ட்டிகளுக்கு கவனம் எதில் இருக்கும்? பணத்தில் தானே?.. ஆனா சோத்துக்கே லாட்டரி அடிக்கிற ஒருத்தன் அங்கே போனா…எப்படி இருக்கும்??

இரண்டாம் காட்சி:

அவங்க வீட்டுக்கு போனா… சூப்பரா காஃப்பி… அப்புறம் அருமையான அடை வடை  பாயாசம் இதெல்லாம் கெடைக்கும்னு நெனச்சிட்டு ஒரு வீட்டுக்கு போனா… அங்கே … ஹி..ஹி… வீட்ல ஊருக்கு போயிட்டாங்க… நான் தான் சமையல்… அப்பொ எப்படி
இருக்கும் உங்களுக்கு?? கடுப்பு வராது..??

மூன்றாம் ஸீன்:

கருணையே வடிவா ஒரு முனிவர். அவரை எப்படியாவது கல்யாணம் கட்டிக்கணும்னு ஒரு சூப்பர் பிஃகர் நெனைச்சா… அது எசகு பிசகா இருக்காது??

அது சரி… இந்த கதை இப்பொ எதுக்கு…

வேறெ எதுக்கு?? கம்ப ராமாயணம் சொல்லத்தான்..

ராவணன் விட்ட திரிசூலம் ஜடாயு மேலே பட்டு.. கீழே விழுந்திடுச்சாம்.. அது இப்படி
மூனு விதமான எசகு பிசகான காரியம் போல இருந்திச்சாம். இது கம்பன் சொல்லும் கற்பனை..

பாட்டு: வேணும்கிறவங்க படிக்க மட்டும்:

பொன் நோக்கியர்தம் புலன் நோக்கிய புங்கணோரும்
இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும்
தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் தம்மைச் சார்ந்த
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அவ்வேள்.

நாளை வேறு ஏதாவது கலாட்டா மாட்டுதான்னு பாக்கலாம்.. சரி…
எழுத நான் ரெடி.. படிக்க நீங்க ரெடியா??