கனவுகள் இல்லை…


கனவுகள் என்பது நமக்கு இயற்கை தந்திருக்கும் Free Channel திரைப்படம். அதில் எப்பேற்பட்ட படம் போடுவார்கள் என்பது யாருக்குமே தெரியாத புதிர். சில சமயம் ஆன்மீகம், சில நேரங்களில் அந்தரங்கம், இன்னும் சில நாட்களில் அசிங்கங்கள். காமெடிகளும் திகில்களும் கூட பல நேரங்களில் கலக்கும். 

கனவு – ஏன்? எதற்கு? எப்படி? என்று சுஜாதா எழுதவில்லையே தவிர…அதன் ஆய்வுகள் இன்னும் நடந்தமேனியாய்த்தான் இருக்கின்றன.

 எந்த நேரத்தில் கனவு வரும் என்பதை யாராலும் சொல்ல முடியாத நிலையில், எப்பொ கனவு வந்தா, என்ன நடக்கும் என்று சாத்திரம் கணித்து வைத்துள்ளதாம்.. பின்னெ இருக்காதா… வெறும் ஏடும் எழுத்தாணி மட்டும் வச்சிகிட்டு என்ன நேரத்தில் சந்திர சூரிய கிரகணம் வரும் என்று சொன்ன ஆட்கள் அல்லவா???

 ராத்திரி ஒரு மணிக்கு மேலே கனவு வருதா, அது பலிக்க நீங்கள் ஒரு வருடம் கழித்து பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும், அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.

 வேறு நல்ல சொப்பனம் என்ன என்ன என்ற கேள்விக்கு பல்லி விழும் பலன் மாதிரி காலண்டர் பின்னாடி இருந்தா நல்லா இருக்குமே… இப்படித்தான் பல்லி தலையில் விழுந்தால் மரணம் என்று போட்டிருந்தார்கள்.. உண்மை தான் என் தலையில் விழுந்து தரையில் விழுந்த அந்த பல்லி பரிதாபமாய் செத்துப் போனது..

 பெரும்பாலும் கனவுகளுக்கு நல்ல நம்பிக்கையூட்டும் பலன் தான் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.. அதன் தொகுப்பு பார்க்கணுமா.. இதை கிளிக் செய்யுங்கள் : http://ularuvaayan.blogspot.com/2009/08/blog-post_8674.html

பொல்லாத சொப்பனங்கள் எவை எவை என்று கட்டபொம்மன் படத்தில் ஜக்கம்மா பாடும் பாட்டு வச்சி தெரிஞ்சிக்கலாம்.

 பலான கனவுகள் விடாம வருதா?? பக்கத்து வீட்டில் அழகான பொண்ணு இருக்கனும்..அதன் மேல் உங்களுக்கு ஒரு கண்ணும் இருக்கணும்.. நேரில் நீங்க கம்முன்னு இருக்க, உங்க நிறைவேறாத ஆசை கனவில்..ரைட்டா?? ஹலோ..போங்க… கல்யாணம் வேணும்னு கேளுங்க.

 ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சா???…ஆன்மீகம் பக்கம் திரும்புங்க…

 கனவுக் காட்சிகளில் சினிமாப் பாடல்கள் பிரபலம். பொன்மகள் வந்தாள் என்ற பழைய பாடல் பத்து பைசாவை வைத்து பணம் காய்க்கும் மரம் வைத்தே காணும் கனவு…. கிராமத்து நாயகி ஸ்விட்சர்லாந்து போகணுமா..எடு ஒரு கனவு சீன்..இது தான் இன்றைய டெக்னிக்.

 வைரமுத்துவின் வைர வரிகள்:

காதலன்: நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை….
காதலி: நான் தூங்கவில்லை..கனவுகள் இல்லை..

 வாவ்..என்ன ஒரு கற்பனை..தூங்காமல் எப்படி இருக்க முடியும்?? இடிக்கிறதே… ஆமா…இதே டயலாக் எங்கோ கேட்ட மாதிரி இருக்கே??

 அப்படியே தூங்கிப்போனேன்.. கனவில் கம்பர் வந்தார்… (கனவில் கம்பர் வந்தால், விரைவில் ஒரு போஸ்டிங் போடுவார் என்று இருக்குமோ..) வைரமுத்து என் ராமாயணத்தில் சுட்ட சேதி தான் அது என்றார்.. விடியற்காலை கனவு.. கண்டிப்பா உண்மை இருக்குமோ… இருந்தது.

 மீண்டும் அதே அசோகவனம்.. அதே அழகான சீதையும் அழகான ராட்ஷசி திரிசடையும்.

திரிசடை சொல்கிறாள் சீதையிடம்… எனக்கு வந்த கனவு பத்தி சொல்கிறேன் கேள்…ம்… நீ தான் தூங்குறதே இல்லெ…உனக்கு எப்படி கனவு வரும்??

 ஏன் தூங்கலை என்று யோசித்தால்…அது வேல் போன்ற விழியாம்…என் விழியும் என் வாளும் சந்தித்தால் என்ற கற்பனையும் காப்பி தானா?? அப்பொ வேலும் வேலும் சண்டை போட்டு மேலும் விபரீதம் வரக்கூடாது என்பதற்காய் சீதை தூங்கலியாம்…யப்பா…கம்பரே…சும்மா..கலக்கிறீங்க தலைவரே..

 துயில்இலை ஆதலின் கனவு தோன்றல
அயல்விழி ஒரு கனவு அமைய நோக்கினேன்
பயில்வன பழுது இல பரிவின் ஆண்டன
வெயிலினும் மெய்யான விளம்பக் கேட்டியால்.

 திரிசடை சொல்லும் கூடுதல் சேதிகள்: குற்றமுள்ள நாடு இது.. ஆனா கனவு குற்றம் இல்லாதது. சூரியன் எப்படி பளிச்சுன்னு இருக்குமோ.. அப்படி கனவு பலிக்கும்.

 அதுசரி சமீபத்தில் உங்களுக்கு வந்தது நல்ல கனவா?? பொல்லாத சொப்பனமா??