வெண்பா எழுதலையோ வெண்பா…???


திருக்குறள் ஒரு வெண்பா என்று எல்லாருக்கும் தெரியும். ஆனா இந்த மாதிரி வெண்பாக்கள் எல்லாம் இப்பொ யாராவது எழுதுறாங்களா என்ற கேள்வியும் கூடவே வரும். என் மனசுலெ என்ன தோணுது தெரியுமா? அந்தக் காலத்திலெ கவிஞர்களும் குறைவு. வாசகர்களும் குறைவு. (ஆனா… ஆச்சரியம் ஆனால் உண்மை., படைப்புகள் அதிகம்). அரசனின் ஆதரவு பெற்ற படைப்புகளும், அரசவை கவிஞர்களின் இடுக்கிப் பிடிக் கேள்விகளையும் தாண்டித்தான் கவிதைப் பிரசவம் நடக்க வேண்டிய சூழல். இன்று அப்படி இல்லையே? படைப்புகள் ஏராளம்.. வாசக வட்டங்களும் ஏராளம். (எல்லாரும் படிக்கிறாய்ங்க என்ற குருட்டு நம்பிக்கையில் தான் நாம இங்கே எழுதிட்டே இருக்கோம்).

சபீபத்தில் ஒரு குழுவில் திருக்குறளையே, எளிமையா, இன்னும் எளிமையா வெண்பாவிலேயே எழுதி கலக்கி வருவதைப் பற்றி தகவல் வந்தது. படிச்சிப் பாத்தா விளக்கம் போட்டாப்லேயே இருக்குது… ஆஹா இப்படி இருந்தா தான் எல்லாருக்கும் சூப்பரா விளங்கிடுமே!! (இது விளங்கின மாதிரி தான் என்று புலவர்கள் புலம்புவதும் கேட்கிறது). எனக்கு ஒரு சந்தேகம். அந்தக் காலத்து ராஜாக்களுக்கு அம்புட்டு பாட்டுக்கும் அரத்தம் தெரிஞ்சிருக்குமா என்ன??

திருவைய்யாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் சார்பில் அந்தமானில் ஓர் ஆய்வு மாநாடு நடந்தது. அதில் பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். அந்தமான் மக்களுக்கு தமிழ் உணர்வு ஊட்டியதில் அந்த அறிஞர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. (அதுக்கு முன்னாடி தமிழ் உணர்வு இல்லாமலா இருந்தது என்று குறுக்குக் கேள்வி கேட்றாதீங்க..) அந்த அறிஞர் அணியில் புலவர் பூவை சு செயராமன் என்பவரும் வந்திருந்தார். அந்தமான் வந்து இறங்கியது தொடங்கி எல்லா இடத்திலும் அவரது வெண்பா பாடல் இயற்றும் திறன் கொடி கட்டிப் பறந்தது. அந்தமான் முருகம் பற்றி பல வெண்பா எழுதியுள்ளார் அவர்.

நமக்கும் ஒரு நப்பாசை ஒரு வெண்பா எழுதிப் பாக்கனும் என்று.. படிக்கிறதுக்கு நீங்க இருக்கறச்செ.. எனக்கு என்ன யோசனை??? அவரும் ஏதோ எளிமையாத்தான் சொல்லிப் பாத்தார். என்னோட மண்டைக்கு சரியா போய்ச் சேரலை. ஆனா… இந்த வெண்பா மேல் இருந்த ஆவல் மட்டும் கொஞ்சம் கொஞ்சமா மாறி காதலா ஆயிடுச்சி… இந்த ஒரு தலைக் காதலுக்கு வீட்டுக் கார அம்மா ஒன்னும் தடை போடலை. ஏதோ கிறுக்கும் மனுஷன் வெண்பா போட்டா என்ன? வம்பா எழுதினாத்தான் என்ன? ரம்பாவெப் பத்தியும் எழுதினாத்தான் என்ன? என்ற ஒரு நல்ல எண்ணமும் கூட இருக்கலாம்.

வெண்பா கத்துக்க, கூகுலாண்டவரிடம் போனா… பலரும் கலக்கு கலக்கு என்று வெண்பாவுக்கு சாமரம் வீசுற சேதிகள் தெரிஞ்சது. ஈஸியா எழுதலாம் வெண்பான்னு ஒரு புக் வேறெ இருக்கு. தேடி ஆன்லயனில் வாங்கப் போனா, Out of Stock என்று வந்தது. அம்புட்டு பேரு வாங்கி வெண்பா கவிஞர் ஆயிட்டாங்களா என்ன?? நாலு தளத்துக்குப் போனா, வடிவேல் காமெடி ரேஞ்சுலெ சுலுவா சொல்லித் தர ஆளிருப்பதும் தெரியுது. பத்தாக் குறைக்கு அந்தமான் நண்பர் காளைராஜன் வேறு 20 நிமிடத்தில் வெண்பா எழுதும் வித்தையினை விளக்குகிறார்.

அப்பொ எனக்குத் தெரிஞ்சதை உங்களுக்கும் சொல்லலைன்னா என் தலை வெடிச்சிடாது?? சொல்றேன்… எல்லார் மாதிரியும் நாமும் புலவர் பாஷையில் பேசாமல், பொத்தாம் பொதுவாவே பாப்போம். ஒரு நாலு வரி வெண்பா எழுதனுமா? ஒவ்வொரு வரிக்கும் நாலு வார்த்தைகளும், கடைசி வரிக்கு மூனு வார்த்தையும் எழுத வேண்டும்.

வரிகள் சரி. வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும்? அங்கே தான் லேசா இலக்கண வகுப்பு வந்து சேரும். ரொம்பக் கவலைப் படவேண்டாம். அதுக்கு நாம எக்செல் வைத்தும் வேலை செஞ்சிக்கலாம். அதுக்கு முன்னாடி சின்னச் சின்ன வேலைகள் செஞ்சாகனும். ஒவ்வொரு வார்த்தையையும் பிரிக்கனும். அதாவது கூறு போடணும். (மீன், துண்டு போடற மாதிரி என்றும் வச்சிக்கலாம்). புள்ளி வச்ச எழுத்து வருதா? அங்கே கத்தி வைய்ங்க..கா, கீ தீ கோ இப்படி நீட்டி முழக்கும் நெடில் வருதா? அப்பவும் கூறு போடுங்க. சாதா எழுத்து ரெண்டு ஜோடியா வருதா?? ஒரே வெட்டா வெட்டலாம். ஒரு சாதாவும் ஒரு நீட்டி முழக்கும் எழுத்தும் வருதா?? அப்பொவும் வெட்டுங்க.. இந்த மூணு கேசிலும் பின்னாடி புள்ளி வச்ச எழுத்து வருதா? அப்பொ அங்கெ வைங்க அரிவாளை. இம்புட்டுத்தான் பீஸ் பீஸ் ஆக்கும் கலை. இப்போதைக்கு நம்ம நாம மூணு பீஸ் மட்டும் வச்சிட்டு வெண்பா எப்புடி சமைக்கிறதுன்றதைப் பாக்கலாம்.

சோதிகா சிம்ரன் எனத்திரிந்து தாழும் தமிழா
உனக்காய் வாழ்வது எப்போது?

இப்படி ஒரு சாம்பிள் பிட்டு போட்டு பீஸ் பீஸ் ஆக்கிப் பாக்கலாமே. ஒரு வார்த்தை எத்தனை பீஸ் என்று நம்மர் பிராக்கெட்லெ இருக்கு பாருங்க.
சோ / திகா(2); சிம் / ரன்(2); எனத் / திரிந்/ து(3); தா / ழும் / தமி / ழா(4); உனக் / காய்(2); வாழ் / வது(2); எப் / போ / து?(3);
எல்லாம் சரி… ஒரு எடத்திலெ 4 பீஸ் வருதே… அதெ மூணு பீஸா ஆக்க லேசா மாத்தலாமே…

சோதிகா சிம்ரன் எனத்திரியும் தமிழா
உனக்காய் வாழ்வது எப்போது?

சோ / திகா(2) சிம் / ரன்(2) எனத் / திரி / யும்(3) தமி / ழா(2)
உனக் / காய்(2) வாழ் / வது(2) எப் / போ / து?(3)

இப்பொ எல்லாம் மூணு பீஸுக்குள் ஆயிடுச்சி. அப்புறம், இதெ.. வெண்பா செக்கிங் மிஷின்லெ போட்டு சரியா இருக்கான்னு பாக்கனும். (அப்பொ இதுவரை பாத்ததெல்லாம் …என்ற கேள்வி எல்லாம் வேண்டாமே!!!)

ஒவ்வொரு பீஸையும் பாருங்க… புள்ளி வச்ச எழுத்தெ விட்டுட்டு ஓர் எழுத்தா இருந்தா அதுக்கு பேரு நேர். ரெண்டு எழுத்து வந்தா நிரை. அம்புட்டுத்தாங்க. இந்த பீஸ்களின் தொகுப்புக்கு சூப்பரா நம்மாளுங்க பேரு வச்சிருக்காங்க.. இப்போதைக்கு எக்செல்லெ ஒரு கம்பத்திலெ வார்த்தைகள் எழுதி அடுத்து நேரா?? நிறையாங்கிறது மட்டும் நீங்க சொல்லுங்க.. மத்தபடி தேமா புளிமா காய் கனி எல்லாம் எக்செல் பாத்துக்கும். (எப்படி என்பதை தனியா ஒரு போஸ்டிங்கில் பாக்கலாம்.)

Venbaa Excel

சோ / திகா(2) – நேர் நிரை
சிம் / ரன்(2) – நேர் நேர்
எனத் / திரி / யும்(3) – நிரை நிரை நேர்
தமி / ழா(2) – நிரை நேர்
உனக் / காய்(2) – நிரை நேர்
வாழ் / வது(2) – நேர் நிரை
எப் / போ / து?(3) – நேர் நேர் நேர்

மூனு பீஸா இருந்து நேர் என்பதில் முடிந்தால், அடுத்த பீஸ் நேரில் தான் ஆரம்பிக்கனும். ரெண்டு பீஸ் இருந்தா அதுவே உல்டா..அதாவது நேரில் முடிஞ்சா அடுத்த பீஸ் நிரையில் இருக்கும். நிரையில் முடிஞ்சா நேரில் ஆரம்பிக்கும். இந்த ரூல்படி பாத்தா.. ரெண்டு இடத்திலெ ஒதெக்குது.. அதாவது எனத்திரியும் தமிழா என்ற இடத்தில் நேர் முன் நிரை வந்துள்ளது. அங்கே நேர் வர வேண்டும்.. அப்புறம் உனக்காய் வாழ்வது என்ற இடத்தில் நேர் முன் நேர் வந்திருச்சி.. அங்கே நிரை வர வேண்டும். அப்பொ லேசா மாத்திப் போடலாமே??

சோதிகா சிம்ரன் எனத்திரியும் எந்தமிழா
நீயுனக்காய் வாழ்வதே நன்று.

இப்படி ரூம் போட்டு யோசிச்சி, பீஸ் பீஸ் ஆக்கியா 1330 குறள் வள்ளுவர் எழுதி இருப்பார். என் கேள்விக்கு தமிழில் முனைவர் பட்டம் பெற்ற அந்தமான் அய்யாராஜு அவர்கள் சொன்ன பதில்: சைக்கிள் ஓட்டப் பழகும் போது தான் பிரேக் பெடல் பேலன்ஸ் பெல் பத்தி எல்லாம் யோசிக்கனும். ஓட்டப் பழகிட்டா அப்புறம் தானா வரும்… அப்படிப் பாத்தா நமக்கும் வெண்பா எழுத வருமா??? வரும்…ஆனா…

இவ்வளவு சீரியஸா அந்தமான் தமிழ் இலக்கிய மன்ற வாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது, நண்பர் கார்மான் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.. பாத்தா கவிதை.. இதோ..:

வெண்பா எழுதுவது
விளையாட்டாம்
விளக்கிக் கொண்டிருக்கிறார்கள்
தமிழ் இலக்கிய மன்றத்தில்.
ஏதோ தேமாவாம்
புளிமாவாம்…
எனக்குத் தெரிந்தது எல்லாம்
தேங்காயும் புளியங்காயும் தான்.
மாங்காயும் மாம்பழமும் தான்.
என்னை விடுங்கள்
வசன கவிதையோ
வருத்தக் கவிதையோ
நானும் என் கவிதையும்
வாழ்ந்து போகிறோம்.
முடிந்தால் வாழ்த்துங்கள்
வெண்பா வாழட்டும்.

இவர் இப்படி எழுதப் போக, நானும் பகவத் கீதையின் முதல் பதத்தை வைத்து நான் எழுதிய முதல் வெண்பாவை சபையில் வைத்தேன். இதோ.. உங்களுக்கும்…

திருதராட்டன் சொன்னார்; தவசஞ்சை, போரிடும்
யுத்தியுடன் தர்மப்போர் செய்யிடம் சென்றிட்ட
என்மகவும் பாண்டுவின் மக்களும் என்செய்தர்
என்றும் இருந்தே பகரு

ஏதும் பிழைகள் இருந்தால் திருத்தி அருள்க புலவர்களே..

மற்ற ரூல்கள் எக்செல் உதவியுடன் வெண்பா எழுதுவது எப்படி என்ற பதிவில் தொடரும்.

கல்லைக் கட்டிக் கடலில்


எதுவுமே சரியாக வெளங்காமல் தவிக்கும் போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருக்கு என்பார்கள். (வெளங்கலையே என்பது பாப்பையாவின் தமிழ் வழக்கு). பொதுவா காட்டுலெ போனாலே, வழி தவறித்தான் போவோம். அதுலெ கண்ணை வேறு கட்டிகிட்டு போனா.. அதோ கதி தான். (ஆமா… நம்ம சந்தன மர வீரப்பன் அதுலெ கில்லாடி என்கிறார்களே, அவர்கிட்டெ GPS மாதிரி சமாச்சாரமெல்லாம் இருந்ததுங்களா?). அந்தமான் தீவுகளுக்கிடையே ஹெலிகாப்டர் (உழங்குவானூர்தி) & Sea Plane (கடல் விமானம்) ஆகியவற்றில் பயணம் செய்யும் போது, மேகங்களுக்கு நடுவே போகும் போதும் அனாவசியமாய் இந்த ”கண்கட்டு வித்தை” என்று சொல்வார்களே, அது தான் ஞாபகத்துக்கு வரும். அதிலும் ”இந்த ஜி பி எஸ்ஸை முழசா நம்பிடாதீங்க”ன்னு வேறெ அங்கங்கே எழுதியிருக்குது படிச்சாலும் கூட கதி கலங்கும். (ஆமா.. அழகான கண்ணைக் காட்டி மயக்கி அலைக்கழிக்கும் மகளிரை எந்த லிஸ்டில் சேக்க??)

அதே மாதிரி ஒரு கோரிக்கைக்கு எந்த பதிலும் இல்லாட்டி, கிணத்திலெ போட்ட கல்லு மாதிரி என்பார்கள். ஆமா, கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்கிறார்களே! அந்த கிணத்துக் கல்லு மட்டும் ஒண்னும் ஆகாதா என்ன? வெளங்கலையே!!! சமீபத்தில் டெல்லி போன போது, குதுப்மினாரை கொஞ்சம் எட்டிப் பாத்தேன்.. இல்லை இல்லை அன்னாந்து பாத்தேன். அதே வளாகத்தில் கிணறு ஒன்றும் இருந்தது. கெணத்தெக் காணோம் என்று வடிவேல் செய்யும் கலாட்டாவை மனசிலெ நெனைச்சி சிரிச்சிகிட்டே எட்டிப் பாத்தேன். கெணறு முழுக்க நம்மாளுக பிளாஸ்டிக் பாட்டில்களை எறிந்து வைத்திருந்தனர். இப்பொ அதெயும் பூட்டி வச்சிருக்காக. நல்லது தான்.. அந்த பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்துட்டு பூட்டி வச்சா அச்சா ஹோகா.. தில்லி அரசு அல்லது அரசி யோசிக்கட்டும். இல்லாங்காட்டி கிணத்திலெ போட்ட பிளாஸ்டிக் மாதிரி என்று எழுத ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

கள்ளக்கடத்தல் செய்வதை திறமையோடு செய்வதை மணிரத்னம் நாயகனில் சொல்லிக் கொடுத்தார். (அந்தமானில் இப்பொ கடல் படம் எடுத்து வருகிறார். என்ன சொல்லித் தருவாரோ?) உப்பு மூட்டைகளை கடத்தல் பொருளோடு கட்டி கடலில் போட்டது.. இப்படி எல்லாம் சொன்னா, உங்களுக்கு ஞாபகம் வராது. ”நிலா அது வானத்து மேலே..” என்று பலானதைப் பாத்து ஜனகராஜ் பாட்டு பாடுவாரே… ம்… இப்பொ ஞாபகம் வந்திருக்குமே!!! ஆமா கடத்தல் என்றாலே கள்ளத்தனமா கடத்துறது தானே? அதுலெ கள்ளக் கடத்தல் எதுக்கு? காதல் என்றால் ஒருவனின் அன்பை அடுத்தவரிடம் கடத்துவது. கள்ளக்காதல், என்பது அடுத்தவரின் காதலியையே கடத்துவது. இப்பொ ஓகே தானே.

ஒரு காலத்தில் சோழர்கள் வந்து வென்று சென்ற அந்தமான் தீவுகளான நன்கவ்ரி தீவின் அருகில் இருக்கும் டிரிங்கட், தெலிங்ச்சான் போன்ற தீவுகளுக்கு அலுவல் காரணமாய் போயிருக்கேன். சின்னஞ் சிறு ஓடம் வைத்துத்தான் போக வேண்டும். நிகோபாரி மொழியில் ஹோடி என்கிறார்கள். கடல் மட்டம் ஏறி இருக்கும் போது மட்டும் தான் பயணம் செய்ய முடியும். எந்த வழியாக, எப்படி போக வேண்டும் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஓடத்தில் கயிற்றுடன் கட்டிய கல்லும் தவறாமல் இருக்கும். ஓடத்தை நிறுத்தி வைக்க உதவும் நங்கூரமே அது தான்.

500 பயணிகள் பயணிக்கும் வகையில் MV Chowra & MV Sentinel என்று தீவுகளுக்கு இடையே சென்று வரும் கப்பல்கள் இருந்தன. அக்கப்பல்கள் சவுரா, தெரெசா போனற தீவுகளில் அவ்வளவு ஆழம் இல்லாத காரணத்தினால் கப்பல் நங்கூரமிட்டு நிற்கும். சில மாலுமிகள் தங்கள் ரிஸ்க் எடுக்க மாட்டோம் என்று ரெண்டு கிலோமீட்டர் தள்ளி நங்கூரம் பாய்ச்சுவர். தீவுவாசிகள் (அனைவருமே நிகோபாரி ஆதிவாசிகள் தான்) அந்த ரெண்டு கிலோமீட்டர் ஹோடியில் வந்து ஏறி இறங்கிச் செல்ல வேண்டும். ரிஸ்க் எடுப்பதெல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிட்ற மாதிரி என்று நினைக்கும் கப்பல் கேப்டன் மஜும்தார் என்று ஒருவர் இருந்தார். கப்பலை எவ்வளவு பக்கத்தில் கொண்டு வரமுடியுமோ அம்புட்டு பக்கம் கொண்டு வருவார். அவரை நிகோபாரி மக்களும் மரியாதை செய்து தெய்வமாய் பாவித்தார்கள். எப்படி அவருக்கு மட்டும் இப்படி சாத்தியம் என்ற போது கிடைத்த தகவல். இவர் நங்கூரம் இடாமல் காற்று வாக்கில் தவழ விட்டு அவசர காலத்தில் போக தயாராய் இருந்தது தான் என்று பதில் சொன்னார்.

கல்லில் கட்டி கடலில் எறிவது அந்தக் காலத்து தண்டனை. தசாவதாரம் படத்தில் சைவர்களை கொடுமைக்காரர்களாய் காட்டும் காட்சி வருகிறது. வைணவரான கமலை இப்படி சைவர்கள் கல்லில் கட்டி கடலில் போடுவார்கள்.(ஆமா கமல் வைணவரா என்று கேக்காதீங்க… இதெப்பத்தி ஆத்திகம் நாத்திகம் கமல்த்திகம் என்று ஒரு போஸ்ட் ஏற்கனவே போட்டிருக்கேன்). சமணம் ஓங்கி இருந்த காலத்தில் சைவர்களை இப்படி செய்திருக்கிறார்கள். நற்றுணையாவது நமச்சிவாயமே என்று சொல்லி பாயன்ஸியினை மாத்தி மிதந்து வந்ததாய் தேவாரம் சொல்கிறது.

இம்புட்டு பாத்துட்டு, கம்பர் கிட்டெ கேக்காமெப் போனா, அவர் கோவிச்சிக்க மாட்டாரு?? கல்லைக் கட்டி கடலில் எறிந்த கதை ராமாயணத்திலும் வருது. கம்பர் காதையில் வரும் கிளைக் கதை: இரணியன் வதைப் படலம். இது ஏதோ நம்ம சீரியலில் யாரோ ஒருத்தருக்காய் சில கேரக்டர் கொடுக்க கதை நீளுமே, அப்படித் தான் தெரியுது. ராமாயணத்தின் தொடர்பே இல்லாத (இப்படி 100% சொல்லிட முடியாது) பக்த பிரகலாதன் படம் கொஞ்சம் ஒரு ரீல் ஓட்டிக் காட்டுறார் நம்ம கம்பர். (அது அந்தக் காலத்து இலவச இணைப்பா இருக்குமோ?)

எல்லரும் கல்லைக் கட்டிக் கடலில் எறிய, கம்பர் வரியில் மலையோடு கட்டி கடலில் எறிந்தார்களாம். (சாரி.கொஞ்சம் ஓவர் என்று மதன் பாணியில் சொல்லாமல் சொல்லியிருப்பாரோ?) திருமாலின் பெயரை பிரகலாதன் சொல்ல, அந்த மலை மரக்கலம் ஆகாமல் சுரைக்குடுவையா ஆயிச்சாம். பாட்டெப் பாக்கலாமா??

நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற் கின்றலன் ஆகலின் வேலை
மடுவொத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய்
குடுவைத் தன்மையது ஆயது குன்றம்.

என்ன தான் நீங்க கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் கம்பன் போஸ்டிங்கள் தொடரத்தான் செய்யும்.