நம்பிக்கை… ரொம்ப முக்கியம்…


கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தது. அதான் ஒவ்வொரு வருஷமும் தான் வருதே!! அதுலெ என்ன புதுசா இருக்கு? -ன்னு பாக்கிறீங்களா? அது சரி தான். ஒவ்வொரு வருஷமும் சொல்லி வச்ச மாதிரி பசங்களெ விட பொண்ணுங்க அதிகம் மார்கஸ் வாங்குறாங்களே? ஒரு வேளை மதிப்’பெண்’ என்று இருப்பதால் இப்படி இருக்குமோ! அப்பொ பசங்க அதிகம் மார்க் வாங்க வேறெ வழியே இல்லெ? மார்க்கை இனி ’மதிப்பாண்’ என்று சொல்லி வேண்ணா ட்ரை செய்யலாம்.

இது போக, எங்க ஸ்கூலில் 100க்கு 100 சதவீத தேர்வு என்று முரசு கொட்டும் முழுப் பக்க விளம்பரங்கள் நம்ம கண்ணை சுண்டி இழுக்கும். அடுத்த நாளே நம்மை சோகத்தில் ஆழ்த்தும் ‘பரீட்சை தோல்வி.. மணவன்/மாணவி தற்கொலை’ என்பதும் கண்டிப்பாய் வரும். இந்த வருஷம் என்னவோ அது கொஞ்சம் அதிகமானது தான் மன்சுக்குக் கஷ்டமா இருக்குங்க. என்னமோ பிரம்மன் படெச்சதே இந்த பரீட்சை பாஸ் செய்யத்தான் என்ற மாதிர்ல்லெ படுது. ஒரு வேளை ஃபெயில் ஆவதற்க்காகவுமே படைத்திருக்கலாமே.. என்ன நான் சொல்றது?. எல்லாத்தையும் ஈஸியா எடுத்துக்கலாமே…

Exam suicide

வாழ்வில் நம்பிக்கை தர அந்தக் காலத்தில் உதயமூர்த்தியின் புத்தகங்கள் இருந்தன. அதற்கும் முன்பு துணிவே துணை என்றும் சொல்லி வார இதழ்கள் வந்தன. [ஆனால் நடிகைகள் துணியே தொல்லை என்று இருப்பது தனிக் கதைங்க]. ”வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை வாழ்விலே..” என்று தற்கொலைக்கு முயல்பவரை காப்பாத்தி கரை சேத்த கதை எல்லாம் வந்திருக்கு. இப்பொ அந்த மாதிரியான டோஸ் கெறைஞ்சதினாலே இப்படி இருக்கலாமோ?

vaaz winaiththaal vaazalaam

தற்சமயம் நம்பிக்கையினை யார் சொல்கிறார்களோ இல்லையோ, நகை விளம்பரங்கள் போட்டி போட்டு சொல்லித் தருகின்றன. நம்பிக்கை இல்லை என்றால் வாழ்வே காலி என்று பல மனோ தத்துவ நிபுனர்கள் நிருபீத்துள்ளனர். மூன்று நண்பர்கள் சேந்து நம்பிக்கையோட உங்களை ஹாஸ்பிட்டலுக்கே அனுப்பிடலாம்..[அது சரி தெரியாமத்தான் கேக்குறேன்..அப்படி செய்றவன் நண்பனா என்ன?]

நீங்கள் தெருவில் வருகிறீர்கள். முதல் நன்பன் (?) சோகமாய், ‘என்னடா மச்சி? ஒடம்பு சரியில்லையா?’ உங்களை கவுக்கும் சதியை ஆரம்பிக்கிறான். இல்லையே என்று சொல்லி அடுத்து பயணம் செய்கிறீகள். ரெண்டாவது ஃப்ரண்ட் வந்து கலாய்க்கிறான். ‘என்ன மாமு, ஆஸ்பத்திரியிலிருந்து வர்ர மாதிரி இருக்கே? என்ன ஆச்சி?’ அப்பவே லேசா ஜுரம் வர ஆரம்பித்திருக்கும். சொல்லாமலேயே கடைசி தோஸ்த் வருவான். உங்கள் வாய், அவனின் கேள்விக்கு முன்பே வரும். ‘காலையிலிருந்தே ஒரு மாதிரியா இருக்கு. ஆஸ்பிடலுக்கு போகணும் வர்ரியாடா?’ இது தான் நம்பிக்கையின் தத்துவம். உங்களை கவுக்க குவாட்டர் கூட வேணாம். இந்த மாதிரி பசங்க ரெண்டு பேரு போதும்.

ஒவ்வொரு பூக்களிலும் என்று ஒரு பாட்டு பலரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட செய்திகள் வந்து கொண்டிருந்தன அந்தக் காலக் கட்டத்தில். இப்படி நம்பிக்கைகளை அள்ளி அள்ளித்தரும் படங்கள் இமேஜ்களாக வாட்ஸ் அப்பில் குவிகின்றன. பாக்கும் பலர், இது ஏதோ அடுத்தவைங்க படிக்கத்தான் இலாயக்கு என்று  பொறுப்பா அடுத்த குரூப்புக்கு பகிர்ந்திட்டு டெலீட் செய்துடுவாங்களோ? [நான் அப்படித்தான் செய்றேன்)

சின்னப் புள்ளையா இருக்கும் போது கடவுள் மறுப்பு கோஷங்கள் பல சொல்லி இருக்கிறேன். அதெல்லாம் தப்பு என்று பெரியவர்கள் சொல்வார்கள். சரி.. கடவுளை எப்புடி நம்புறது? – இப்படி கேளவி கேட்டு மல்லுக்கு நிப்பேன். ”இவங்க தான் உன்னோட அப்பா அம்மா. நம்புறியா?” ”ஆமா..” என் பதில் அது. ”இதெ நம்புறியே, கடவுள் இருக்குன்னா நம்ப மாட்டேங்கிறியே.. நம்புப்பா.. நம்பிக்கை தான் வாழ்க்கை…” அப்பொ எல்லாம் ஒத்துக்க முடியலை. ஆனால் இப்பொ அதை காலம் தான் நம்ப வைத்தது.

Suki sivam
சுகி சிவம் பேச்சில் ஒரு முறை கேட்டது நல்லா ஞாபகம் இருக்கு. அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஒரே ஒரு சின்னதா வித்தியாசம் இருக்காம். அம்மாவால் தான் நீ பிறந்தாய் என்பது அப்பாவுக்குத் தெரியும். ஆனால் அப்பாவால் தான் பிறந்தாய் என்பது அந்த அம்மா ஒருத்திக்குத் தான் தெரியும். [ரொம்ப யோசிக்காதீங்க… எவ்வளவு மோசமான உதாரணம்.. இப்புட்டு லைட்டா சொல்லிட்டாரு நம்ம எழுத்துச் சித்தர்.] எல்லாம் தன் எழுத்து & பேச்சின் மீது இருக்கும் நம்பிக்கைங்க..

இப்படித் தானுங்க, ராமாயணம் இந்த மாதிரியான பல நம்பிக்கையினை வளர்க்க நமக்குச் சொல்லிக் குடுக்குதுங்க. தோல்விகள் பல கடவுளின் அவதாரத்துக்கே வருது. அப்பவும் கவுண்டமணியிடம் அடி வாங்கிய செந்தில் பாணியில் கடவுளே கூட இருப்பது தான் நம்பிக்கையின் உச்சம். நடப்பதை அப்படியே வாங்கிக் கொள்வது என்பது தான் வாழ்வின் அர்த்தமே. ஆமா… மேலதிகாரி திட்டுவதை மட்டும் எப்படித் தான் ஜாலியா அனுபவிச்சு, அதெ மிமிக்ரி மாதிரி செய்து காட்றீங்க? இப்படியே, நம்ம எல்லா தோல்விகளையும் ஜாலியா எடுத்துகிட்டா, நம்பிக்கை தானா வருமே..

கலங்கி நிக்கும் ஒரு மனிஷனுக்கு ஆறுதல் சொல்றது தான் ரொம்ப முக்கியம். அப்படியே லைட்டா ஃப்ளைட் எல்லாம் ஏறாமெ கிஷ்கிந்தா போலாம் அங்கே கம்பர் நம்பிக்கையூட்டும் படலம் பாக்கலாம். (அப்படி எந்தப் படலமும் கெடையாதுங்க)

வாலி இறந்த பின்னர் நடக்கும் காட்சி. அங்கதனுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும். சொல்வது யார் தெரியுமா? மறைந்து நின்று தாக்கிய இராமன் தான். (ரொம்பத்தான் லொல்லுன்னு சொல்லத் தோணுதா?) அதெவிட சூப்பர் நம்பிக்கை வருது. இராமனின் தாமரை போன்ற அடிகளை வணங்கினான் அங்கதன். (இது.. இது தான் நம்பிக்கை) நீல நிறத்து இராமன் அருளோடு பாத்தாராம்.(ம்..அட்ரா..அட்ரா சக்கை) ”நீ நல்ல புள்ளையா இருக்க ஒரு டிப்ஸ் தர்ரேன். இந்த சுக்ரீவனை சிறிய தந்தை என்று நெனைக்காதே. உன் அப்பாவாவே நெனைச்சிக்க”. இத்தோடு விட்டாரா கம்பர்? இது மட்டும் சொல்லி இருந்தா கம்பர் எப்புடி கவிச்சக்ரவர்த்தி ஆவுறது? அவர் ஒரு பிட்டு சேக்குறார். ”உன் பிறப்புக்கு காரணமான…” பாத்தீகளா… சுகி சிவம் ஐயா ஸ்டைல் தானே இது… சாரி..சாரி.. கம்பர் ஸ்டைல் தான் சுகி சிவமும் சொல்லி இருப்பாரோ?

எது எப்படியோ, நமக்கு நம்பிக்கை ரொம்ப முக்கியம். அதே நம்பிக்கையில், என் கண்ணு இல்லெ.. என் செல்லம் இல்லெ.. இந்தக் கம்பர் பாட்டும் படிச்சுடு கண்ணு…

வாலி காதலனும் ஆண்டு மலரடி வணங்கினானை
நீலமா மேகம் அன்ன நெடியவன் அருளின் நோக்கி
சீலம் நீ உடையை ஆதல்ல் இவன் சிறு தாதை என்னா
மூலமே தந்த நுந்தையாம் என முறையின் நிற்றி

மீண்டும் வருவேன்..நம்பிக்கையோடு…

பேசும் சாரதிகள்..


ஸ்கூல் போகும் குழந்தைகளுக்கு எது புடிக்குதோ இல்லியோ, அல்லது யாரைப் பிடிக்கிறதோ இல்லையோ கண்டிப்பா அந்த ஸ்கூல் போகும் ரிக்சா சாரதியை அதாங்க, டிரைவரை ரொம்பவும் நல்லாவே பிடிக்கும். அதே போல் ஸ்கூல் வேனில் போகும் கொழந்தைகளுக்கும் அந்த டிரைவர் அங்கிளை ரொம்ப நல்லா பிடிக்கும். ஸ்கூல் பஸ்ஸுக்கும் இந்த விதி சப்ஜாடாப் பொருந்தும்.

ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன் என்று பாட்டை ரஜினி பாடியது முதலே ஆட்டோக்காரனின்.. இல்லை இல்லை ஆட்டோக்காரரின் இமேஜ் ஏறி விட்டது. அந்த ஸ்டைலில் மங்கையரும் மயங்கித்தான் போகிறார்கள் போல் தெரிகிறது. ஓடிப்போய் கல்யாணம் செய்தவர்களின் உள்ளம் கவர் கள்வர் யார் என்று பாத்தா பெரும்பாலும் இந்த சாரதிகளாய்த் தான் இருக்கிறார்கள்.

உளவியல் ரீதியா யோசிச்சா அதுக்கும் ஒரு நல்ல பதில் கெடைக்கும். நம்மை முழுதாய் அந்த சாரதி வசம் ஒப்படைத்து விடுகிறோம். சரியான இடத்திற்கு அழைத்துச் செல்வான்(ர்) என்ற நம்பிக்கையோடு. [ஆன்மீகவாதிகள் சொன்ன சரணாகதி தத்துவம் போலத்தான் இதுவும்] அது முழுமையாய் நிறைவேறியவுடன் அந்த சாரதி, கடவுளுக்கு சமானம் ஆகிவிடுகிறான். பாதுகாப்புக்கு உத்திரவாதம் வருகிறது. அப்புறம் தாலி கட்ட கழுத்து நீட்ட வலிக்குமா என்ன?

இரண்டு நாளுக்கு முன்பு ஒரு ஆட்டோவில் பயணி மறந்து விட்டுச் சென்ற இரண்டு லட்சம் இருந்த பணப்பையை பொறுப்பாய் காவல் நிலையத்தில் தந்து அந்தமானில் மேலும் நல்ல பெயர் வாங்கியுள்ளார் ஒரு ஆட்டோ சாரதி. [ஆட்டோ சங்கர் கெடுத்த பெயரை இப்பொத் தான் கொஞ்சம் கொஞ்சமா காப்பாத்திட்டு வருகிறார்கள்]. இதே அந்தமானில் திருக்குறள் எழுதி வைத்து தமிழ் பற்றையும் காட்டுகிறார் இன்னோர் ஆட்டோ சாரதி].

முன்னாடி எல்லாம், காரோட்டும் சாரதிகள் பேசிக்கொண்டே வந்தால் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. ஓட்டுவதில் கவனம் இருக்கனுமே என்ற கரிசனம் தான். ஆனால் நான் கார் ஓட்ட ஆரம்பித்தவுடன் தான், துணைக்கு பேச்சுக்கு ஓர் ஆள் இருத்தல் எவ்வளவு முக்கியம் என்று புரிந்தது. தனியாக தவிர்க்க இயலாத சூழல் வந்தால் தவிர வண்டி எடுப்பதில்லை.

கார் ஓட்டுதல் என்பதும் கூட, ஒரு வகையில் யோகம் மாதிரி தான். யோகிகள் மனம் மட்டும், ஒன்றை மட்டும் ஒருமுகப் படுத்தி அதில் கவனம் செலுத்தினால் போதும். கார் ஓட்டும் போது கை, கால், கண், காது, கவனம் இத்தனையும் கவனமாய் வைத்திருத்தல் முழுக்கவனமாகி விடுகிறது. கொஞ்சம் பிசகினாலும் அதோ கதிதான். தூக்கம் வராமல் இருக்க பேச்சுத்துணைக்கு ஆள் தேவைப்படுகிறது. அந்தமான் டிரைவிங் அனுபவமே இப்படி என்றால், சென்னை மதுரை மாதிரியான சிட்டி டிராபிக் பத்தி கேட்கவே வேண்டாமே!!

சமீபத்தில் சென்னை to திருச்சி காரில் சென்ற போது பலவிதமான டாபிக் பேசிட்டே சென்றோம். அதில் முக்கியமான ஒரு டாபிக் இது தான்: சின்ன வீடு ஓரளவு சுமாராய் இருந்தாலும், அதுக்கு பின்னாடி ஏன் மக்கள் விழுந்து கிடக்கிறார்கள்? கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த அலசலில் திருச்சியே, சீக்கிரம் வந்த மாதிரி ஆயிட்டது.

மலை மேல் சாகசமாய் ஓட்டியும் பேசியும் வந்த டார்ஜிலிங் சாரதி நம்மை திரில்லிங் என்ற பெயரில் பீதியின் உச்சத்திற்கே அழைத்துச் சென்று விட்டார். கேட்டால் டென்சன் லேனேகா நஹி… தேனேகா ஹை என்று வியாக்யானம் வேறு. கிட்டத்தட்ட மூண்று வருடங்கள் கடந்தாலும் அந்த டிரைவர் சொன்ன டயலாக் மட்டும் இன்னும் மறக்கவே இல்லை.

எனக்கு வாய்த்த சாரதிகள் எல்லாம் பொறுப்பான ஆசாமிகள். நான் Facebook ல் போடும் போட்டோக்களுக்கு முதலில் லைக் போடுவது தொடங்கி தமிழ்நாட்டுச் செய்திகள் அணைத்தும் மொபைல் நெட்டில் பார்ப்பது வரை ஹைடெக் ஆசாமி என் தற்போதைய சாரதி. ஏதும் எசகு பிசகா பேசி விட முடியாது.

சமீபத்தில் அந்தமானுக்கு உறவினர்களான டாக்டர் தம்பதிகள் வந்தனர். அவர்களை வரவேற்கப் போன இடத்தில், 15 வருடப் பழக்க டாக்சி சாரதி பேச ஆரம்பித்தார். வந்தவர்களோ, என்ன இப்படி டிரைவர்களுடன் பழக்கம் என்ற கேள்வி அவர்கள் முகத்தில் தெரிந்தது. டாக்டர்களின் பஸ்ஸில் லக்கேஜ் ஏற்றப் போக அதன் சாரதியும், நமஸ்தே சார் என்றார். ஊரிலுள்ள எல்லா சாரதிகளுடனும் தோஸ்த் போலெ என்று நினைத்திருக்கலாம்.

இதெல்லாம் இருக்கட்டும். பேசும் சாரதிகளின் கேப்டன் யார் தெரியுமா? சாட்சாத் அந்த கிருஷ்ண பகவான் தான். பார்த்தனுக்கு சாரதியாய் வந்து 18 அத்தியாயங்கள் Non Stop FM மாதிரி சொல்லிட்டே இருந்திருக்காரு. (விளம்பர இடைவெளி இல்லாப் படம் என்று இப்பொ வருதே…. அது மாதிரி எந்த இடைவெளி இல்லாமல் பேசிய பேச்சு தான் அதுவும்… ஆனா அதுக்கு மட்டும் செமெ விளம்பரம்)

இராமாயணத்தில் கூட அங்கங்கெ சாரதிகள் பேசும் இடமெல்லாம் வருதுங்க. அப்படியே ஒரு சாம்பிள் பாக்கலாமே??

அனுமன் செஞ்ச சேட்டைகளை கேள்விப்பட்ட நம்ம இராவண்குமாரன் அக்ககுமாரன் செமெ கோபமா கெளம்புறார். அப்பத்தான் அவரோட சாரதி லேசா, (அடங்குடா என்ற அர்த்ததில்) அடக்கி வாசிக்கச் சொல்லும் இடம் தான் அது. அந்தக் காலத்திலே கூட சாரதிகளுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்திருக்காங்களே. Freedom of Expression இன்று அதைத்தானே மாத்திப் போட்டு சொல்றோம்!!!

இதெக் கேளும்மா… உலகத்திலெ எல்லாமெ நாம நெனைக்கிற மாதிரி நடக்குமா என்ன?? சிவப்பா இருப்பவன் பொய் சொல்லமாட்டாங்கிற மாதிரி எல்லாம் நெனைக்கப்படாது. அல்பக் கொரங்கு தானே என்ற நெனைப்பெ உட்டுறு. நம்ம இராவண மஹாராஜா தோத்து போனதே வாலிங்கிற ஒரு கொரங்கு கிட்டெ தானே. அதான் நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். மிச்சத்தை நீ யோசிச்சி செய்.

நல்ல சூப்பரான சாரதி இல்லெ… சொல்றதெல்லாம் நல்லா வக்கணையா சொல்லிட்டு, மகனே உன் சமத்துன்னு கடைசியிலெ ஒரு பன்ச்.. பாட்டெயும் ஒரு பார்வை பாத்திடலாமே..

அன்னதாம் நகு சொல்கேட்ட சாரதி ஐய! கேண்மோ!
இன்னதாம் என்னல் ஆமோ உலகியல்? இகழல் அம்மா
மன்னனோடு எதிர்த்த வாலி குரங்கு என்றால் மற்றும் உள்டோ?
சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணரச் சொன்னான்.

மீண்டும் வேறு கோணத்தில் வருகிறேன்.

அணுவும் புராணமும்


காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை? என்ற கேள்வி ஐஸ்வர்யா ராய் மாதிரி உலக அழகிகளைப் பாத்தால் தானாகவே வரும். ஏன்னா… உலகமே அணுக்களால் ஆனது தானே? அப்பொ ஏன் இந்த ஐஸ்வர்யா மட்டும் பாக்க இவ்வளவு குளிர்ச்சியா இருக்கு?

காரணம் 1: பெயரில் ஐஸ் இருப்பதால் இருக்கலாமோ!!!
காரணம் 2: மாற்றான் தோட்டத்து மல்லிகை.
காரணம் 3: அக்கரை அழகி (இக்கரைக்கு அக்கரை குளிர்ச்சி)

உலகத்தில் உள்ளதிலேயே சின்னது.. அணு… அணு(ஹாசன்) நீங்கலாக.

அணு பற்றிய அறிவியல் உண்மைகள், அணுவால் கரெண்ட் எடுக்கிறது இதெல்லாம் … நம் தமிழ் மக்கள் அந்தக் காலத்திலேயே அதைப் பத்தி தெரிஞ்ச்சி வச்சிருந்தாங்க..

அட.. அப்பொ நீங்களும் அதை தெரிஞ்ச்சிக்க வேணாமா??

திருக்குறள் எப்பேர்ப்பட்ட நூல்?

அதைப் பத்தி எழுத வந்த புலவர்கள் சொன்னது பாத்தா ஏதோ கலைஞருக்கு பாராட்டு விழா வச்சி அங்கே வாலியும் வைரமுத்துவும் வரிஞ்சு கட்டி எழுதுறது மாதிரி இருக்கு.

முதலில் வரும் இடைக்காடர் ஆரம்பிக்கிறார். குறள் எப்படி இருக்குன்னா… ஒரு கடுகை கையில் எடுத்து அதுக்கு மேலே போர் போட்டு ஏழு கடலையும் உள்ளே தள்ற மாதிரி இருக்காம்.

அது போவட்டும் அடுத்து வரும் நம்ம கவிக்குயில் ஔவையார்… கடுகுன்னா பெரிசாச்சே… அதை விட சின்னதா.. அணுவுக்கு உள்ளே ஏழு கடல் தண்ணி நிறப்பின கணக்கா இருக்காம்.

ஒன்னு மட்டும் தெரியுது.  அணுவைப் பற்றிய அறிவு அப்பொவே இருந்திருக்கு.

இன்னும் கொஞ்சம் தள்ளி 8 – 12ம் நூற்றன்டுக்கு வந்தா…

அங்கே… ஒரு அணு ஆராய்ச்சியாளர் நிக்கிறார். கிட்டக்க போய் பேர் கேட்டேன். மாணிக்கவாசகர்ன்னு பதில் வந்தது.

சரி அணு பத்திய அறிவியல் கருத்து கேட்டா…

வழக்கம் போல் சிவன் பத்தியே பாடி நடுவுலே அணுபுராணமும் பாடிட்டார். தேவர்கள் கூட சிவ வடிவு எப்படின்னு தெரியாம அணுவுக்கு உள்ளார எல்லாம் போய்  தேடிட்டு குழம்பிட்டாங்களாம்…

 சரிமா… வா சாமி… நானு இந்த போஸ்டிங்க் முடிக்கனும். பாட்டு கெடைச்சா முடிச்சிருவேன். எங்கே கெடைக்கும்னு சொன்னா நல்லா இருக்கும்.

திருவாசக திருச் சதகத்தின் 3வது பாட்டு நெட்டுல தேடிப்பிடிச்சு எழுது…

நன்றி மாணிக்கவாசகச் சாமி.. நன்றி.

தேடிக் கிடைத்த பாட்டு இதோ…

வண்ணம்தான் சேயது அன்று வெளிதே அன்று
அனேகன் ஏகன் அணு அணுவில் இறந்தாய் என்றங்கு
எண்ணம் தான் தடுமாறி இமையோர் கூட்டம்..

இலக்கியத் தேடல் தொடரும்…

கருப்பா பயங்கரமா… பயங்கர கருப்பு


அந்தக் காலத்தில் சண்டைக் காட்சிகள் நிறைந்த படம் என்ற விளம்பரங்களுடன் சில படங்கள் வந்தன. பழிக்குப் பழி… ரத்ததுக்கு ரத்தம் என்பது அதில் கண்டிக்பாக வரும். அதோடு வில்லன்கள் குழுவோடு தவறாமல் ஒரு கவர்ச்சி நடனம் இருக்கும்.

ஆனால் சினிமா வளர வளர… படம் முழுக்க சண்டைகளும், நெகட்டிவ் ஹீரோ என்ற பெயரும், வில்லன் கதாநாயகனாக மாறி கதாநாயகியே கவர்ச்சி நடனம் ஆடும் பரினாம வளர்ச்சி அடைந்து விட்டது.

சினிமா இப்படி என்றால், சின்னத்திரை நிலவரம் இதை விட மோசம். இதில் கதாநாயகன் கிடையவே கிடையாது. சுமாரான ஒரு ஃபிகர் தான் கதாநாயகி. உள்ளதிலேயே சூபர் ஃபிகர் தான் வில்லி ரோல் செய்யும்… (வில்லி தானே சீரியல் முழுக்க வரனும்).. வெட்டியிருவேன், குத்திடுவேன், கொன்னுடு, போட்டுத்தள்ளு, ஜெயில், போலீஸ் எல்லாமே சர்வ சாதாரனமா எல்லா சீரியல்களிலும் வரும்.

ஆனா இந்த உலகமே, பழிக்குப் பழிக்கு எதிரா நிக்கிரேன்னு நின்னுட்டு பழிக்குப் பழி வாங்கவும் துடிச்சிட்டு இருக்கு என்பது தான்  கசப்பான உண்மை.

சரி.. பழிக்குப் பழி வேணாம்.. என்ன செய்ய??

ஏசு பெருமான் சொல்றார்… ஒரு கண்ணத்தில் அடித்தால்…காட்டு அடுத்த கண்ணத்தை… (ஏகே 47 வச்சிம்…. அணுகுண்டு போடும் இந்த காலத்தில் திரும்ப ஆளே இருக்க மாட்டானே??)… நம்மாளு சொல்றான்… அவரு சாமி…

சரி..காந்தி…??  அவரு தான் மகாத்மா ஆச்சே…?? நாம எல்லாம் சாதா மனுஷங்கள் ஆச்சே??

சரி … வேற வழி இல்லெ… கம்ப ராமாயாணம் போக வேண்டியது தான்…

இல்லையே..அதுவும் சிரமம் தான். நம்ம ராமரும் கூட அவதார புருஷன் தானே??

கடைசியா நம்ம தாத்தா சொன்னா கேப்பீகளா??? (பாட்டி சொல்லை தட்டாதே தெரியும்.. அது என்ன?? தாத்தா மேட்டர்???)

அந்த தாத்தா யாரு தெரியுமா?? நாம கொரங்கிலிருந்து தானே வந்தோம்.. அப்பொ கொரங்கும் நம்ம தாத்தா தானே..??

வாலி தாத்தா சொல்லும் சங்கதி தீபாவளி நாள் அதுவுமா காது கொடுத்து கேளுங்க..

நான் ரெபர் செய்றது…தாடி வச்ச கவிஞர் இல்லெ… நெசமாவே வால் வச்ச வாலி சொன்ன சேதி தான் நான் சொல்ல வந்த தகவல்.

பெரும்பாலும் திருவாசகத்தில் எல்லா இடங்களிலும் நாயினும் கீழாக, கேவலமாக..என்று அடிக்கடி வரும்.

ராமாயணத்தில் வாலி சொல்றார்: ஓவியத்தில் எழுத்தப்பட்ட வடிவம் போல் வடிவம் கொண்ட ராமனே!!! (தப்பா வரைஞ்சதா வாலி கண்ணுக்கு தெரியுதோ??).  நாய்யான நான் ஒண்ணு கேக்கேன். நான் குடிச்சா பயங்கரமா இருப்பேன்.. ஆனா இந்த சுக்ரீவன் கீரானா அவன் பயங்கரமா குடிப்பான் (கருப்பா பயங்கரமா வடிவேல் காமெடி ஞாபகம் வருதா??). அப்படி ஏதாவது அவன் தப்பு செஞ்சிட்டா என்னை கெடாசின மாதிரி அவனெக் கெடாசிட வேண்டாம்.. ப்ளீஸ்..

பகைவன் சுக்ரீவன். சண்டை போட்டு தோற்றது (முறையா இல்லையா என்ற வாதம் இங்கு வேண்டாம்… ஏகமா அலசி இருப்பாய்ங்க..)

வள்ளுவர் ரெண்டு வரியில் சொன்ன நன்னயம் செய்யும் செயல் பற்றி கம்பர் சொன்ன அந்த நாலு வரிப் பாடல் இதோ:

ஓவிய உருவ நாயேன் உளது ஒன்று பெறுவது உன்பால்
பூ இயல் நறவம் மாநி புந்தி வேறு உற்றபோழ்தில்
தீவினை இயற்றுமேனும் எம்பிமேல் சீறி என்மேல்
ஏவிய பகழி என்னும் கூற்றினை ஏவல் என்றான்.

நரகாசுரன் கேட்ட வரம் தந்து தீபாவளி கொண்டாட வைத்ததும் இன்னா செய்தாரை பொறுத்து நல்லது செய்த மாதிரி தெரியலை???

யோசிங்க…. நல்லா யோசிங்க…

அனைவர்க்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.

பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா…


இப்படி சந்தோஷமா குதிப்பவர்கள் எத்தனையோ பேர். (நானும் இந்த கும்பலில் ஒருவன் தான்). அனால் வீடு இருக்கும் லட்சனத்தைப் பாத்தா… பொண்டாட்டி இல்லாத வீடு வீடே இல்லை என்று தான் சொல்லத்தோணும்.

வீட்டுக்கு விளக்கு ஏத்த ஒரு ஆளு வேணாமா???… வழக்கமான இந்த கேள்விக்கு நானும் இதுக்கெல்லாமா ஆளு வைப்பாக??? நாம விளக்கு ஏத்தினா ஆகாதா என்று… நம்மால் தீ கொளுத்தப் படுகிறது… குடும்ப விளக்கால் அது ஏற்றப்படுது.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் குடுத்த வரம் என்கிறார்கள்…. மனைவிமார்களின் மத்தியில் இப்படி சொல்லிக் கொள்வார்களோ…!!! எப்படி??

புருஷன் அமைவதெல்லாம் பிசாசு போட்ட பிச்சை என்று…

ஒரு ராஜஸ்தானியருடன் கப்பல் பயணம் சமீபத்தில். ஏன் குடும்பம் அங்கேயே வைத்து விட்டு நீங்க மட்டும் தனியா கஷ்டப்படறீங்க என்று கேட்டேன்.. (நான் மட்டும் கஷ்டப்பட…அவர் ஜாலியா எப்படி திரியலாம்?? – யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்… இது தானே நம்ம பாலிசி)

ஆனா சூப்பரா ஒரு பதில் வந்தது.. அவர்களும் இங்கு வந்து விட்டால் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை யாரு கவனிப்பாக??

அட… இப்படி ஒரு சேதி இருக்கா??? ராஜஸ்தானியர்களின் பிற்ப்பின் நோக்கமே விருந்தாளிகளை உபசரிப்பது தான் என்கிறார். நகரங்கள் நரகமாய் ஆன பின்னரும் கூட இன்னும் புறநகரின் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் அதைக் காணலாம் என்றார்.

நானும் என் பங்குக்கு விருந்தோம்பல் பத்தி வள்ளுவர் சொன்னதையும், ராஜாவே ஒரு புலவருக்கு சாமரம் வீசிய கதையும் சொல்லி தமிழருக்கு வக்காலத்து வாங்கி வைத்தேன்.

வாடகைக்கு வீடு கிடைப்பதிலிருந்து, கல்யாண வீட்டில் ஆசி வழங்கும் வைபவம் வரை.. கல்யாணம் ஆன ஆட்களுக்கு நல்ல மரியாதை தான்.

இந்த ஊரு இன்னுமா கல்யாணம் ஆன நம்மளை மாதிரி ஆட்களை நல்லவங்கன்னு நம்பிகிட்டு இருக்கு?? அய்யோ…அய்யோ…

அப்புடியே யொசிச்ச படி காலங்காத்தாலே வாக்கிங் போனா…. என்ன வாங்கிங் போறீயான்னு ஒரு கேள்வி பின்னாடி இருந்து… நான் கடுப்பா திரும்பிப் பாத்தா… திருவாளர் கம்பர்..

என்ன ரொம்ப ஜாலியா இருக்கிற மாதிரி தெரியுது??? வீட்டுக் காரி ஊரிலெ இல்லேயா???

அடப் பாவி … நம்ம வீட்டிலெ ஆளு இல்லேங்கிற விஷயம் கம்பர் வரைக்கும் தெரிஞ்சு போச்சே…!!! அய்யா.. கம்பரே.. எப்புடி இதெல்லாம்…??

கம்பர்: ஆமா.. தெருவிலெ வாக்கிங்க் போறப்பொ… தனியா பேசிட்டு போவது தெரிஞ்ச்சது.. காதுலெ புளு டூத் கைய்லெ செல் ரெண்டுமே இல்லை… கூட்டி கழிச்சி பாத்தா.. மறை கழண்ட கேசு… வீட்டிலெ ஆளு இல்லென்னு அப்படியே தெரியுது… இதுக்கெல்லாம் என்ன பெரிய யுனிவர்சிட்டிக்கா போய் படிக்கனும்???

கம்பரே… உங்க கால்லெ விழறேன்.. ஆளை உடுங்க… இல்லெ…. தெரியாமத் தான் கேக்கிறேன்… இந்த மாதிரி வில்லங்கமா கம்ப ராமாயண்த்தில் எங்காவது இருக்கா??

கம்பர்: ஏன் இல்லை… ஓடிப்போயி… வாலி வதம் ஏரியாவை தம்மடிக்காமெ… பதம்மா படி.. வெவரம் புரியும்…

வீட்டுக்கு ஒரே ஒட்டமா ஓடி தேடிப் பிடிச்சி பாத்தா..அட… இதே மேட்டர் தான்.

வாலியில் மார்பில் அம்பு… ஆனால் வாயில் ராமன் மீது அம்பு..
அப்போது வரும் வார்த்தைகள் தான் நான் செய்யும் வம்பு (கொஞ்சம் குறும்பும்)

சாதாரணமான மனைவியை வாச்சவங்களே கொஞ்ச நாள் பிரிவிலெ மரை கலண்ட கேஸா திரிவாக… (சிலர் மனைவி ஊருக்கு அனுபிட்டு கவிதையும் கட்டுரை எல்லாம் எழுதி Facebook ல் நல்ல பேரும் வாங்குறாய்ங்க..அது தனிக் கதை).. ஆனா ராமனுக்கு வாய்த்தவள்…அன்னம்… அமுதம் உயிர் போன்றவள்.. அப்பேற்பட்ட பார்ட்டி மிஸ் ஆனா மனுஷன் என்னத்துக்கு ஆவான்.??

இதெ..இதெத் தான் வாலி வாயில் வருது..

அரச தர்மம் காப்பாத்த வேன்டிய நீ இப்படி அம்பு எய்தது முறையா…

வீட்டிலெ ஆளு இல்லாத காரணம் தான் இந்த தவறான செயலுக்கு காரணமோ??? கேக்கிறார்… மொதல்ல ஒரு சின்ன பஞ்ச்சும் வைக்கிறார்.. ராமனே… ஓவியத்தில் எழுத முடியாத உருவ அழகை உடையவனே…அப்புறம் தான் கேள்வி வருது..

கோ இயல் தருமம் உங்கள் குலத்து உதித்தோர் கட்கு எல்லாம்
ஓவியத்து எழுத ஒண்ணா உருவத்தாய் உடைமை அன்றோ
ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த
தேவியைப் பிரிந்த பின்னை திகைத்தனை போலும் செய்கை.

நீதி: எப்பவும் கவனமா இருங்க…பொண்டாட்டி இல்லாத நேரத்தில் கூடுதல் கவனம் தேவை.

வாழைப்பழத்தில் ஊசி


வாழைப்பழம் என்றதுமே அந்த ஒரு ரூபாய்க்கு பழம் வாங்கி வரும் அமர்க்களமான செந்தில் கவுண்டமனி காமெடி தான் ஞாபகம் வரும். அதே பாணியில் எத்தனை காமெடிகள் வந்தாலும் அந்த காமெடி சுவையே தனி தான்.

ஒத்தெ வாழைப்பழம் தனியா இருக்க முடியாமெ தூக்கிலெ தொங்குற மாதிரி படமும் ஜோக்கும் முகநூலில் அடிக்கடி இப்பொ தலை காட்டுது.

அந்தமானில் விளையும் குறைந்த அளவிலான பழங்களில், அதிகமாய் விளைவது இந்த வாழை தான். விதம் விதமாய் பெயர்களில் கட்டா சம்பா, மிட்டா சம்பா, பச்சை, சிவப்பு என்று கலர்களிலும் கிடைக்கிறது.
ஆனால் வாழைப்பழத்தில் ஊசி மட்டும் சில பழங்களில் குத்த முடியாது. விதையும் இருக்கும். விதையுள்ள வாழைப்பழங்கள் அந்தமான் தவிர எங்கும் கிடைக்கும் தகவல் எனக்குத் தெரியலை.

அது என்ன வாழைப்பழத்தில் ஊசி ஏத்தும் கதை.

[அது வேற என்ன…?? அங்கே சுத்தி இங்கே சுத்தி நைஸா கம்ப ராமாயணம் இழுக்கும் கலையின் இன்னொரு பேரு தான் அது]

ஒரு விஷயத்தை ஒரு பார்ட்டி அழகாச் சொல்லி அடுத்த பார்ட்டியை சம்பதிக்க வைக்கும் கலையும் தான் அது.
எனக்குத் தெரிந்து ஒருவர் ஒரு வாரம் முன்பு கட்டிப்புரண்டு அடிபிடி சண்டையில் இருப்பார் ஒருவருடன். அதே நபரோடு தோழில் கை போட்டு வருவார் ஒரு வாரத்தில். அவர் வாழைப்பழ ஊசியில் டாக்டரேட் வாங்கியிருப்பாரோ??!!!

ஆனாலும் அப்படி யாராவது பேசினாலும் கேக்காதீங்கன்னு சொல்றதுக்கும் பழமொழி இருக்கே.. கேக்கிறவன்………பயலா இருந்தா… கேப்பையில நெய் வடியுது என்பானாம்.

அது சரி… எதுக்கு சுத்தி வளைப்பானேன்? நேரடியா கேக்கலமே?? இந்த வாழைப் பழத்தில் ஊசி பத்தி கம்பராமயணத்தில் வருதா???

வருதே…

ஆனா வழக்கம் போல கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் யோசித்து ஒரு அசம்பாவிதமான இடத்தில் அதைச் சொல்றார் கம்பர்.

சாதாரண வாழைப்பழத்தில் ஊசி எப்படி ஸ்மூத்தா போகும்?? ஆனா சுவையான பழத்தில்??? அதாவது கனிந்த பழம். இப்படி சொன்ன அந்த மிருதுவான பழம் எதுன்னு பாத்தா… அங்கே தான் கம்பர் நிக்கிறார்.

ஒரு எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்க் பார்ட்டி. அவரோட மார்பு அவ்வளவு ஸ்டார்ங்கா இருக்காம்… எவ்வளவு?? பூமி காற்று நெருப்பு நீர் அதோட குணம் சேர்ந்ததாம்.

அதோட உட்டாரா மனுஷன்.. பூமியை ஆதரவா புடிச்ச ஆளு காற்று; காத்தும் காத்தோட ஆளும் சேந்து நெருப்பை உண்டாக்கினாகளாம்…

ம்…அப்புறம்??? அந்த நெருப்பு நீரை உருவாக்குமாம்??? தலையை சுத்துதா???
சரி… பழம் இப்படின்னா??? ஊசி…???

வாலியின் மார்பில் பாய்ஞ்ச அம்பைத்தான் இப்படி சொல்றார்..

அடி ஆத்தி… அப்படியே பாட்டு பாக்கலாமா??

கார் உண் வார் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது நின்றது எனச் செப்ப
நீரும் நீர் தரும் நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அப்பகழி

எப்புடி நாம கம்பரையும் உள்ளே கொண்டு வரும் விதம்.

ஆமா… இதுலெ ஊசி எது ?? பழம் எது??

நடந்தது என்ன??


இசை ஒன்று மட்டும் தான் எல்லா தேசத்திற்கும் பொதுவான மொழி. என்ன… நம்ப கஷ்டமா இருக்கா??

ஹவா..ஹவா…முஜ்கோ பதாதே.. என்ற பாப் பாடல் அந்தக் காலத்தில் மிகப் பிரபலம். இந்தப் பாடல் பிறந்த இடம் பாகிஸ்தான். ஆனால் இந்தியா அதனை ஆதரித்தது. இதே போல் தேரே அங்குனே மே பாடலுக்கு ஆடிய அமிதாப்புக்கு தங்க முள் கிரீடம் வைத்து அழகு பார்த்து மகிழ்ந்தது அதே பாகிஸ்தான்.

ஆனால் அந்த ஹவா ஹவா பாடலை தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்த பெருமை கவுண்டமனி செந்தில் ஜோடிக்குத்தான் சேரும்.

ஒரு படத்தில் அந்த பாடலை பாடிக்கிட்டே செந்தில் தூக்கில் தொங்குவது போல் ஒரு சீன்… அதை பாத்து நம்ம கவுண்டமனி வாத்தியார் போல கதவெல்லாம் ஒடெச்சிட்டு உள்ளே போனா… ஜாலியா நம்மாளு ஹவா ஹவான்னு பாடிட்டு இருப்பாரு.

சமீபத்திய சன் டிவி நிகழ்சியில் சுகி சிவம் அவர்கள், குடிப்பவர்களை தற்காலிக தற்கொலை செய்து கொள்வவர்கள் என்றார்.

சாதாரண விஷயமான வீட்டில் திட்டுதல், சந்தேகப் படுதல், என்னைப் பத்தி மத்தவங்க என்ன நெனைப்பாங்க? எனற நினைப்புகள் தான் இந்த தற்கொலை எண்ணங்களுக்கு காரணம் என்கின்றனர் உள்வியல் வல்லுநர்கள்.
பரமக்குடி பள்ளியில் என் குரு மணி சார் அவர்கள் மனிதர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை விளக்கிச் சொன்னார்.

ரகம் 1: ஒரு வாத்தியார் கிளாசில் கேக்கிறார். இன்னெக்கி என்ன பாடம் நடத்தனும். நானு முந்திரிக் கொட்டை மாதிரி…. சார் 34 ம் பக்கம் சார் என்கிறேன். வாத்தியாருக்கு அதெக் கேட்டவுடன் செமெ கடுப்பு. நான் வாத்தியா நீ வாத்தியா?? கிளாசிக்கு வர்ர மனுஷனுக்கு எந்த பக்கம் பாடம் எடுக்கனும்னு கூடவா தெரியாமெ இருக்கும்?? என்ன நெனெச்சி கிட்டு இருக்கீங்க???

இப்படி எரிந்து விழுபவர் முதல் ரகம்.

ரகம் 2: சார்… உங்களை நேத்து பெரிய கடை பஜார்லெ பாத்தேன் சார். உங்க ரெண்டு பொண்ணுங்களும் சூப்பரா இருந்தாங்க சார்…
வாத்தியார்: அப்படியா?? ரொம்ப சந்தோஷம்… ஹி..ஹி..ஹி…
எல்லாம் சரி தான்… ஆனா எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு தான். நேத்து என் கூட வந்தது என் மனைவியும் பொண்ணும்..

புத்தகத்தோட பக்கம் சொன்ன பையன் மேல் பாயும் வாத்தியார் ஒரு ரகம். பொண்ணையும் பொண்டாட்டியையும் பாத்து ஜொள்ளு விட்டதை கண்டுக்காத வாத்தியார் ஒரு ரகம்.

இதில் முதல் ரகம் தான் தற்கொலைக்குத் தயாராய் இருக்கும் ரகம். எது எப்பொ எப்படி நடந்தாலும் ஒரே டென்ஷனாய் இருப்பவர்கள்… பிரச்சினைகளைப் பாத்து ஓடுபவர்கள்…

அந்தமான் தீவுகளில் தற்கொலைகள் அதிகம் என்று புள்ளி விவரம் சொல்கிறது. ஒரு வேளை தங்கள் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள நல்ல உள்ளம் கிடைக்காதது தான் அதற்கான காரணமாய் இருக்குமோ?? (ஒரு வேளை Face Book வந்த பிறகு அது குறைய வாய்ப்பு உள்ளதோ??)

இதை எழுதி வரும் இதே நாளில் முதல் பருவத்தேர்வில் குறைவான மார்க் வாங்கிய காரணம் காட்டி ஒரு மாணவன் உயிர் விட்டிருக்கிறான். என்னவொ பிரம்மன் அந்த தேர்வில் வெற்றியடையத்தான் இவனை அவதாரம் எடுக்க வைத்திருப்பதாக நினைப்பு..

பிரம்மன் ஏமாந்தான் என்று பாடலாம் போல் இருக்கு.

கம்பர் உடன் ஆஜர் ஆகிறார் சம்மன் இல்லாமல் (எங்கிட்டெ வர ஏதும் அவருக்கு தேவை இல்லை)
கம்பன் ஏமாந்தான் தானே பாட்டு…இது என்ன மாத்தி பிரம்மன் போட்டு பாடறே??

ஒண்ணும் இல்லை தலைவரே… தற்கொலை பத்தி ஒரு சின்ன அலசல்.. உங்க கிட்டெ ஏதாவது சரக்கு இருந்தா தரலாமே???

கம்பர் ஆரம்பித்தார்: நானு நேரடியா சொல்லலை… உனக்கு தோதா.. ஒரு பாட்டு இருக்கு பிடி… (குடுத்து மறைந்து போனார்)

தற்கொலையில் ஒரு வித்தியாசமான் வித்தையை கம்பர் காட்டுவதை மட்டும் சொல்லாம விட்டா.. அவரே நம்மை ஒதைக்க வருவாரு…

இடம் வாலி ரெண்டாம் தடவையாக போருக்குப் போகும் இடம். தாரை வழி மறிக்கிறாள். ஹீரோ ராமன் கூட் இருந்து கொல்ல வந்திருப்பதை மோப்பம் பிடித்து சொல்கிறாள் (பின்னெ ஏன் நம்ம மேல் நாட்டவர் கூட Why women can’t read maps என்று சொல்கிறார்கள்??)

வாலிக்கு செமெ கோபம். ரொம்ப தப்பு. அப்படி செய்றதினாலெ ராமனுக்கு என்ன லாபம்?? அப்படி செய்தா தர்மம் தற்கொலை செஞ்சிகிறதுக்குச் சமம் என்கிறான் (எப்படியோ நமக்கு தற்கொலை டாபிக் முடிக்க பாட்டு கெடைச்சாச்சி)

இருமையும் நோக்குறும் இயல்பினார்க்கு இது
பெருமையோ இங்கு இதில் பெறுவது எங்கொலோ
அருமையின் நின்று உயிர் அளிக்கும் ஆறுடைத்
தர்மமே தவிர்க்குமோ தன்னைத் தான் அரோ

மீண்டும் சந்திக்கலாம்.

கட்டிப்புடி கட்டிப்புடிடா..


இதைப் படித்தவுடன் நமீதா ஞாபகம் வந்தா… அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. எனக்கு, முன்னாபாய் MBBS & ஆல்வார்பேட்டை ஆளுடா (பரமக்குடியான் தான்) பாட்டு தான் ஞாபகம் வரும். ரெண்டு படத்திலும் அந்த கட்டிப்புடி வைத்யம் இருக்கும். கட்டிப் பிடித்தால் நோய் போகுமா??

நோய் போகுதோ இல்லையோ ஒரு இதம் கிடைக்கும்.

அதனால் தானோ என்னவோ, தழுவிடும் பொழுதினில் இடம் மாறும் இதயமே.. என்று ஒரு கவிஞன் பாடிவைத்தான்.

காற்று வெளியிடை கண்ணம்மா என்றான் பாரதி.. காற்று புக இடைவெளி இன்றி தழுவதல் பற்றி வள்ளுவர் வரிஞ்சி கட்டி எழுதுறார்.

அது சரி..இப்போ எதுக்கு இதை எழுதுறீங்க??

நீங்க கேக்கறீங்கன்னு இப்பவே கம்பர் பாட்டு உட முடியுமா என்ன?? அதுக்கு கொஞ்சம் அங்கிட்டி இங்கிட்டி சுத்தி வந்தாத் தான் மஜாவே. 

ரெண்டு பேரு ஜாலியா சண்டை போட்டு விளையாடுவது சமாதானமான ஒரு நிலை வரத்தானே!!! கரண்ட் இல்லாத நேரங்களில் நம்மூர் பசங்க விளையாடறதைப் பாத்திருக்கீங்களா?? Stone Paper Scisor (SPS) என்று படு ஜாலியா பஸ் ஸ்டாபில் விளையாடுவது நான் ஓரு நாள் உன்னிப்பா கவனிச்சதில் சிக்கியது. (வெறும் கையை வைத்து கிரிக்கெட் கூட ஆடுகிறார்கள் Odd Even என்று சொல்லி… எனக்கு அந்த கிரிக்கெட்டும், புரியலை…இதுவும் புரியலை). SPS ஒரு சூப்பர் விளையாட்டு. ரெண்டு பேரு ஆடும் ஆட்டம் அது. வேறு எந்த விளையாட்டு சாமான்களும் தேவையில்லை.

இருவரும் கையை வைத்து சாட் பூட் திரி அல்லது ஒண் டூ திரி என்றே சொல்லி ஒரே நேரத்தில் கையை காண்பிக்க வேண்டும். மூன்று முறையில் காண்பிக்கலாம்.

கை விரல்களை மூடி வைத்தல் – அது கல்

விரல்களை விரித்துக் காட்டுதல் – அது பேப்பர்

ரெண்டு விரல் மட்டும் காட்டினால் அது கத்தரி

இனி ரிசல்ட்டுக்கு வருவோம்:

 

இரண்டு கைகள் எப்படி வைக்கிறார்களோ அதன் படி பாயிண்ட் கிடைக்கும்:

கல் கல் : Draw (யாருக்கும் பாயிண்ட் இல்லை)

அது போல் பேப்பர் பேப்பர் & கத்தரி கத்தரி அதே கதி தான்.

கல் பேப்பர் – ஜெயிப்பது பேப்பர்

கல் கத்தரி – ஜெயிப்பது கல் 

ேப்பர் கத்தரி – ஜெயிப்பது கத்தரி.

ஒவ்வொரு ஜெயிப்பிற்கும் ஒரு பாயிண்ட் வைத்து 25 வரும் வரை விளையாடுவர். 25 முதலில் எடுத்தவர் வெற்றி.

ுகத்தில் நட்பு அதையும் மீறி வெல்ல வேண்டும் என்ற ஆவல்… எல்லாம் சேர்ந்த விளையாட்டு அது. கணவன் மனைவி கூட ஆடலாம். டென்ஷன் குறையும்.

 மறுபடியும் நமீதா ஏரியாவுக்கு போவலாம். விவேக் இன்கம் டேக்ஸ் அதிகாரியாய் வரும் படம் அது. மூங்கில் போல் நிமிர்ந்து நிற்கும் அவரை வளைந்து ஒரு முத்தம் கொடுத்து போவது போல் வரும் காட்சி அது. இப்போது அந்த முத்தக்காட்சி காட்டப்படுவதில்லை.

 சமாதானம் ஆகாத விஷயங்களைக்கூட பேசித் தீரத்துக் கொள்ளலாம் என்ற ஒரு நீதி தான் புரியுது நமக்கு.

 சமீபத்தில் Delhi High Court க்கு ஒரு அலுவல் தொடர்பாக போக வேண்டி வந்தது. சமீபத்தில் குண்டு வெடித்த அதே இடம். நீதியரசர் வழ்க்கு மன்றம் இதெல்லாம் படங்களில் பாத்து நேரில் பாக்கும் போது பிரமிப்பாத்தான் இருந்தது.

 உள்ளே உக்காந்ததும் “சமாதானமா போங்க” என்ற leaflet விநியோகம் செய்தனர். அட… அரசின் முயற்சியில் நீங்களே பேசி முடிக்கலாம் என்று சொல்கிறது அந்த பிரசுரம்.

 எனக்கு அப்போது தான் ஞாபகம் வந்தது. வளைந்து கொடுக்கும் நாணல். மூங்கிலோ நிமிர்ந்து நிக்கும். மூங்கிலையே வளைக்கும் யுத்தி மாதிரி தெரியுதே…

 அப்படியே கம்பர் கிட்டே போனா… அவரும் மூங்கில் மாதிரி என்று சொல்கிறார் ஒரு இடத்தில்.

வாலி சுக்கிரீவனிடம் இரண்டாம் முறை போருக்கு போகும் சமயம். தாரை தடுக்கிறாள். எப்படியாம்?

வாலி கோபத்தில் கணல்.. அவ்வளவு சூடு.. வாயில் புகை. கண்களில் தீ தாரையில் கூந்தல் அப்படியே கருகுதாம்.. அமிழ்தம் போன்றவள் அவள்..மூங்கில் இயல்பு கொண்ட தாரை தடுத்தாள் என்கிறார் கம்பர்.

ஆயிடை தாரை என்று அமிழ்தின் தோன்றிய

வேயிடைத் தோளினாள் இடை விலக்கினாள்

வாயிடைப் புகை வர வாலி கண் வரும்

தீயிடை தன் நெடுங் கூந்தல் தீகின்றாள்.

 பேச்சுவார்த்தையில் தீராத பிரச்சினைகளே இல்லை…

பேசுங்க..பேசுங்க.. பேசி தீருங்க பிரச்சினையை… நாணல் குணம் உள்ளவர்களும் சரி, மூங்கில் குணம் உள்ளவர்களுக்கும் அதே யோசனை தான்.

இன்னும் வ(ள)ரும்.

கிண்டல்கள்….கவிதைகள்..கள்…கள்…கள்….


கவிஞர் வாலிக்கு வயது ஆனாலும் அவரது வார்த்தைகள் என்றும் இளமையா இருக்கும்… அவரோட பழைய கவிதை. காதலி எழுதிய கடிதம் படித்து காதலன் எழுதுவது….இதோ (பொய்க்கால் குதிரைகள் தொகுப்பில் வந்தது. அக்னி சாட்சி படத்திலும் வந்த ஒன்று அது)

படித்தேன் படித்தேன் கடிதம்
அடடா வரிகள் அமுதம்
பேப்பர அரங்கம் முழுதும் –
உந்தன்
பேனா முனையின் நடனம்.

சாதாரணமா துளி தேன்..அவ்வளவு சுவை..படி நிறைய தேன் எப்படி இருக்கும்??

அதே போல் கள் & அமுதம் இரண்டும் சேர்ந்து கொடுக்கிறார்கள்..
கள் அதிகம் குடிக்கலாம்… அதிக நாள் உயிர் வாழ முடியாது..
அமுதம் கொஞ்சமா குடிச்சாலே அதிக நாள் உயிர் வாழலாம்..

கள் அமுதம் என்றால்…போதையும் இருக்கும்..அதிக நாள் இருக்கலாம்…மோகம் முப்பது நாள் ஆசை அறுபது நாள் எல்லாம் இங்கே கிடையாது… என்ன மாதிரியான கிண்டல் பாத்தீங்களா??

சரி அது அப்படியே கிடக்கட்டும். சமீபத்தில் முகநூல் ஒன்றில் படித்தது:

உன் முகம் profile photo போல்
இருக்கும் என்று நினைத்தேன்
ஆனால்..அது
வாக்காளர் அட்டையில்
உள்ள படம் போல் இருக்கே…???

இது கிண்டல் தானே???

ஒரு நண்பர் கேட்டார்… நீங்க இருப்பது லிட்டில் அந்தமான்…அதாவது சின்ன அந்தமான். அந்தமானில் உள்ளவர்கள் சின்ன வீடு வேண்டுமென்றால் அந்த சின்ன அந்தமானுக்கு வருவாங்களா?? என்றார்.
இடைவெளியே விடாமல்..அப்போ சின்ன அந்தமானில் இருப்பவங்க எங்கே போவாங்க?? என்றும் கேட்டார்…

கிண்டல் என்பது அவருக்கு கைவந்த… இல்லை.. இல்லை… வாய் வந்த கலை.

டிங்க்டிங்க்டிங்க்……

என்ன இது ஃபோன்…??

ஒரு நிமிஷம்.. நம்பர் இல்லாத கால்….

வணக்கம்…கிருஷ்ணமூர்த்தி..
வணக்கம்.. நீங்க???

போன் குரல்: கம்பர் இப்பக்கம்….ஏதோ கிண்டல் பத்தி கிண்டல் பண்றதா தெரிஞ்சது…

நான்: (மூக்கிலே வேத்திடுச்சா…) நீங்க சீரியஸா..10000 பாட்டு எழுதி இருக்கீங்க… எதுக்கு உங்களை வம்புக்கு இழுக்கனும்னு தான்??

போன் குரல்: இந்த தடவை பாட்டு நம்பர் சொல்றேன்: நீ ஒன்னோட ஸ்டைல்ல எழுது. சூர்ப்பணகைப் படலம் – பாடல் 357…

டொய்ங்க்ங்க்ங்க்

(இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது)

அடடே..அங்கே..செம கிண்டல் ஒண்ணு கீதப்பா… கம்பரா..???  கொக்கா???

சூர்ப்பணகை இலக்குவனோடு சேத்து வைக்க எவ்வளவோ கேக்கிறா… ராமன் கிட்டே…

ராமன் என்ன மாமாவா??? அண்ணன்… அல்லவா?? தப்பான ரூட்…

கடைசியில் சூர்ப்பணகைக்கு ஒரு ஐடியா வருது… நேரே ராமனைப் பாத்து,

ராமனே…எல்லாத்துக்கும் முடியாதுன்னு சொல்லிட்டே…என்னையே ஒரு handicaped quota வில் கன்சிடர் செய்யலாமே – என்கிறாள்..(மூக்கு இல்லாத காரணத்தால்).

ராமனுக்குப் புரியவில்லை… மூக்கை இழந்தவள் மூளையே பிசகி விட்டதா என்று… அரக்கியே இது கோட்டாவே இல்லாத காலம் ஆளை விடு…என்கிறான் ராமன்..

ஏ..ராமா… பொய் சொகிறாய் நீ… நான் என்னவோ..10% தான் ஊனமானவள்…
ஆனால் நீ 100% ஒரு உறுப்பை ஊனமானவளை கூடவே வைத்துள்ளாயே??

ராமனுக்கு புரியவில்லை….

சூர்ப்பணகை தொடர்கிறாள்…”உன் சீதையைப் பார் … இடையே இல்லையே..”

இது எப்படி இருக்கு?? கிண்டலின் உச்சமா இல்லே…

இளையவன் தான் அரிந்த நாசி ஒருங்கு இலா இவளோடும்
உறைவெனோ என்பானேல் இறைவ ஒன்றும்
மருங்க்கு இலாதவளோடும் அன்றோ நீ
நெடுங்காலம் வாழ்ந்தது என்பாய்.

தேடல் தொடரும்…