[கார் நாற்பதில் கம்பராமாயணம் -18]
சமீபத்தில் ஒரு நகைக்கடை விளம்பரம் பெரீய்ய சர்ச்சையினை உண்டாக்கிவிட்டது. ஆனா அந்தமான் அதன் மறு பக்கம். மதநல்லிணக்கத்தின் ஓர் எடுத்துக்காட்டாகவே இத்தீவினைச் சொல்லலாம். நான் கல்யாணம் செஞ்சிகிட்டு (அடெ…முதல் முறையாகத்தாங்க) ஒரு வீட்டுக்குப் போனா, அங்கே ஆரத்தி எடுத்து வரவேற்றது ஓர் இஸ்லாமிய சகோதரி.
அதே சகோதரி பரமக்குடிக்கு வந்தபோது, கருவுற்ற சேதி அறிந்து பரமக்குடியின் முறையில் வளைகாப்பு போல் எல்லாம் செய்து, சிகை அலங்காரம் செய்து ஃபோட்டோ ஸ்டூடியோவுக்கு எல்லாம் போய் ஃபோட்டோ எடுத்து (அட…அது மொபைல் எல்லாம் வராத காலமுங்கோ); சரி எல்லாத்தையும் விடுங்க..ஆனா வளையல மட்டும் விடாமெ வாங்க. வள்ளுவர் கிட்டே போய் மைக் நீட்டுவோம்; ஏதோ கருத்துச் சொல்ல ரெடியா இருக்கார் அவர். அவர் எப்பவும் 7 வார்த்தைகள் தான் பேசுவார். சில புரியும் சிலபுரியாது. (ரஜினி மாதிரி என வச்சிக்கலாமே)
இப்பொல்லாம் நம்ம தமிழில் வந்த சமாச்சாரங்களை ஆங்கிலத்தில் சொன்னால் தான் ஓஹோ என்று ஒத்துக்கிறாகளாம். நாமளும் வள்ளுவன் பாட்டுக்கு ஆங்கிலக் கோணார் வச்சிப் பாக்கலாமே… (மொதல்லெ பாட்டப் போடப்பா…இதோ இதோ போட்டேன்)
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று, அறியும் ஐம்புலனும்
ஒண்டொடிகண்ணே உள.
Pleasure of all five senses – sight, hearing, taste, smell and touch-
reside together in this girl with shiny bangles. She pleases me completely. (இது ஐயன் சொன்ன மாதிரி தெரியலையே..? வெள்ளைக்காரப் பாஷையில் எது சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்..) நம்ம கையில் போடும் ஐட்டம் இந்த ஒண்டொடி = ஒண் + தொடி – shiny bangle ஒளிரும் வளையல் (என்ன…. எல்லாரும் வளையல் வாங்கக் கிளம்பிட்டீங்களா?)
குன்றியனார் அழைத்தார். அவர் ஹீரோ, கொஞ்சம் போக்கும் வரவுமாய் இருக்கும் பார்ட்டியாம். ஒரு காலகட்டத்தில் வீட்டு அம்மணிகிட்டே வந்து தானே ஆகணும்? (எத்தனை படத்திலெ பாத்திருக்கோம்?) ஆனா வழியில் தோழி மறிச்சி…இனி இப்படி எல்லாம் செய்ய மாட்டேன் எனச் சபதம் (சூள்) வாங்கி, ஹீரோயின் கிட்டே சொல்லப் போனாளாம் .
ஒண்டொடியும் கூடவே வரும், படிச்சிட்டு கூடவே வாங்க…
பாசவலடித்த கருங்கா ழுலக்கை
ஆய்கதிர் நெல்லின் வரம்பணைத் துயிற்றி
ஒண்டொடி மகளிர் வண்டலயரும்
தொண்டி யன்னவென் நலந்தந்து
கொண்டனை சென்மோ மகிழ்நநின் சூளே!
கொஞ்சம் ஆன்மீகப் பக்கமும் போயிட்டு வந்திடுவோம். (அப்பத்தானே, இந்த உலகம் நம்மை நல்லவன்னு நம்பும்) அப்பொ கவனமா வளையல் வரும் அந்த பக்திப்பாடல் தேடி எடுத்தாச்சி. (எல் ஆர் ஈஸ்வரி பாட்டு மாதிரி வச்சிக்கலாமே)
ஓதி னாய்மறை ஒண்டொடி வண்டமர் ஓதியாள்
பாதி யாய்படர் செஞ்சடை மேற்பணி சூடினாய்
நாதி யேநட னேவயல் சூழ்நனி பள்ளியுள்
ஆதி யேஎன வல்லவர்க் கல்லலொன் றில்லையே.
அடேய் சிவனே… ஒளி வீசும் வளையல் அணிந்தவளும் வண்டுகள் விரும்பும் கூந்தலை உடையவளுமான உமையை ஒரு பாதியாக வச்சிருப்பவனே, படரும் செஞ்சடையின்மேல் பாம்பை அணிந்தவனே; கூத்தாடியே; ”வயல் சூழ்ந்த திருநனிப்பள்ளியுள் எழுந்தருளிய ஆதிமூர்த்தியே” என்று போற்றி வழிபடும் அன்பர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை;
இந்தமாதிரிப் பதிகம் என்றால், நாம் எப்பவும் ஏதோ தேவாரமோ, திருவாசமோ எனத் தேட வேண்டி இருக்கும். ஆனா இது அதிலெல்லாம் இல்லை. இந்தக்காலத்திலும் இப்படியானப் பாடல்களை ”மதிசூடி துதி” எனப் பாடி வீ சுப்பிரமணியன் அவர்கள்(மரபுக் கவிதைகளாக) தந்துள்ளார் .
அப்படியே கார்நாற்பதில் நம்ம ஒண்டொடி பத்தி என்ன சொல்ல வாராக எனவும் பாத்துடலாமே… இந்ந ஒண்டொடி எதற்காக தலைவனை நினைத்து நெஞ்சை வருத்திக்கொண்டிருக்கிறாள். திரண்டு காட்டும் முத்துக்களைப் போல முல்லை நிலமெங்கும் மழைக்கட்டிகள் உருள்கின்றன. புயல் வீசுகிறது. வானம் மழை-அழகுடன் திகழ்கிறது. அவர் வந்துவிடுவார் அன்றோ? தோழி சொல்கிறாள்.
கண் திறள் முத்தம் கடுப்பப் புறவு எல்லாம்
தண் துளி ஆலி புரள, புயல் கான்று
கொண்டு, எழில் வானமும் கொண்டன்று;
எவன் கொலோ, ஒண்டொடி! ஊடும் நிலை?
கம்பன் கிட்டெ நாம கருத்தைக் கேக்காட்டி அவர் கம்பெடுத்து அடிக்க வந்திடுவார். அவரும் ரெடியா ஒரு பாட்டு தந்தார். விளக்கம் எதுவும் சொல்லாம புரியுதே என நினைத்தேன். இது காட்சிப் படல, மிகைப் பாடலாம் (இதுவும் ஒரு காரணமாய் இருக்குமோ?)
தரும நீதி தழுவிய சிந்தை கொண்டு
உரிய வீடணன் தந்தருள் ஒண்டொடி,
திரிசடைக் கொடி, நாள்தொறும் தேற்று சொல்
அருளினால், தனது ஆவி பெற்று உய்ந்துளாள்.
மீண்டும் வருவேன்…
அந்தமானிலிருந்து கிருஷ்ணமூர்த்தி (16-10-2020)