பருப்பும் பொறுப்பும்…


paruppu 2

மற்ற எந்த நாட்டுக்கும் இல்லாத ஒரு சிக்கல் நம் இந்தியாவுக்கு மட்டும் இருக்கு. ஒரே நாடு என்று சொல்லி மாநிலத்துக்கு மாநிலம் மாபெரும் மாற்றம் இருக்கும். மாநிலத்துக்குள்ளே இருக்கும் மாவட்ட மற்றும் வட்டார வழக்குகளும் மாறி மாறி இருப்பது என்பதெல்லாம் கூட தனிக்கதை தான். தமிழ்நாட்டில் வெறும் சீனி வைத்து இடியாப்பம் சாப்பிட்டால், அதுக்கு கேரளாவில் கடலை, அவியல் என்று தனி சைட் டிஸ் தருவார்கள். காரம் உப்பு இனிப்பு கசப்பு இப்படி எல்லாத்திலேயும் மாறி மாறி டேஸ்ட் இருந்தாலும், மோடி ஒரு தடவை ”பாரத் மாதாகீ” என்றால் போதும் நாமெல்லாம் ”ஜே” போட்டுவிடுவோம் என்பதில் மட்டும் மஹா ஒற்றுமை இப்போதைக்கு.

Dal vadaa

சரி ஒரு வடை எடுத்துக்குவோம்… ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு பெயர். பரமக்குடியில் இருந்த வரைக்கும் உளுந்து வடை & ஆம வடை இது ரெண்டு மட்டும் தான் என் மூளைக்கு எட்டிய அகராதி வார்த்தைகள். சில பல ஊர்களுக்குச் சென்று அந்தமானுக்கு கடைசியாக (இப்போதைக்கு) வந்து சேர்ந்த பிறகு பாத்தா தான் தெரியுது… வடைக்கு எத்தனை விதமான பேருன்னு… உளுந்து வடையை மெது வடை என்கிறார்கள். (ஓட்டெயெப் போட்டது யாரு? ன்னு விஜய் கேட்ட பிறகு, ஓட்டெ வடை என்றும் சொல்றாய்ங்க) பருப்பில் தான் எல்லா வடை செய்தாலும், மசால் வடை என்று எல்லா இடத்திலும் பெயர் வாங்கிய ஆம வடையினை மட்டும் தான், பருப்பு வடை என்கிறார்கள். ஒரு வேளை அதில் தான் பருப்பு முழுசாய் இருப்பதாலோ??

இதுக்கும் ”நீ என்ன பருப்பா?” என்று திட்டுவதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கலாமோ!!… என்ன தான் பருப்பை மாவாக்கி வடை சுட்டாலும் (உண்மையில் எண்ணையில் இட்டு பொறிக்கிறார்கள். ஆனால், வடை சுடுவது என்ற இலக்கணப் பிழை காலங்காலமாய் தொடருது) ஒரு சில பருப்புகள் மட்டும், தூக்கலாய் மேலாப்போல இருப்பது போல், இருக்கும் ஆள் மாதிரியான ஆளா நீ? என்று கேட்பது போல் தான் படுது. ஹிந்தியிலும் ”என்னை என்ன தாள் பா4த் என்று நினைத்தாயா?” என்று (நான் என்ன சாம்பார் சாதமா?) சொல் வழக்கு உள்ளதாம். (சும்மா கேட்டு தெரிந்து கொண்டது தான்)

masal vadai

கஷ்டமான கஷ்டமர்களையும் எப்படி கையாளுவது என்று வணிகத்தில் சிறந்த தமிழர்களுக்கு அன்றே வழிகாட்டியுள்ளனர். ”உப்பு இருக்கா வணிகரே?” என்று கேட்கும் கஷ்டமரை ”இல்லை” என்று கை விரித்து அனுப்பாமல், ”பருப்பு உளது” என்று சொல்லுவார்களாம். (சொல்ல வேண்டும் என்று நியதி தமிழ் செய்யுள் மூலம் தெரியுது). ஏதோ ஒன்று தேட நினைத்து களம் இறங்கும் நமக்கு எங்கெங்கோ கொண்டு போய் விடும் இன்றைய தேடு இயந்திரங்கள் இல்லாத போதும் வியாபார காந்தமாக்க (அதாங்க பிசினஸ் மேக்னெட்) முயன்றது தெரிகின்றது.

என்னோட ஆஃபீசில் ஒரு பஞ்சாயத்து வந்தது. தன் கணவர் தன்னை சத்தம் போட்டு திட்டுகிறார் என்பது தான் வழக்க்கு. இந்த நீதிபதி 18 வருஷ வழக்கை விசாரிச்ச ரேஞ்ஜுசுக்கு மொகத்தெ வச்சிட்டு தீர்ப்பு சொல்ல ஆரம்பித்தேன். ”ஆக…. திட்டுவது பிராப்ளம் இல்லை. திட்டை பக்கத்து வீட்டுக்காரியின் காது கேக்கப்படாது. அது தானே உங்கள் சிக்கல்..” என்றேன். ”ஆம்” என்று பதில் வந்தது. இத்தனைக்கும் அந்த கணவக் கனவான் ரொம்ப அமைதியானவர் என்று பெயர் எடுத்தவர் (நம்மளை மாதிரி). ”ஏங்க, இவர் கத்துற்துக்கு ஒரு எடமாவது இருக்கட்டுமே. அது வீடாகவே இருந்திட்டுப் போவுது” என்றேன் தீர்ப்பாய். அதிமுக தொண்டர் மாதிரி பாத்தாய்ங்க.

வீட்டில் எலி வெளியில் புலி என்பார்கள். வீட்டிலும் புலி வெளியிலும் புலி என்ற சில அபூர்வ பிராணிகளும் உண்டு. ஆமா.. நீங்க எப்படி?? இதெ…இதெத்தான் எதிர் பாத்தேன்… நானு.. ”நானு வீட்டிலும் எலி, வெளியிலும் எலி”. எப்படி நம்ம பாலிசி….ஐயோ, தப்பா நெனெச்சிராதீங்க நானு, நம்ம மோடி ஜீ சொன்ன மவுஸ் பத்தி தாங்க சொல்றேன். ஆனாலும் இந்த பருப்பு மேட்டர் வச்சி நம்ம தாய்க்குலங்கள் திட்ற ஒரு திட்டும் இருக்குங்க… அதெ திட்டுன்னு சொல்லுவானேன்.. உண்மைதானே… ”ஊருக்கே பெரிய்ய பருப்பா இருந்தாலும், வீட்டுக்குத் தொடப்பக்கட்டை தானே!”. இது எப்படி இருக்கு?

பருப்பை இப்பொ ஒரு பக்கமா வச்சிட்டு கொஞ்சம் பொறுப்பா பொறுப்பெப் பத்தி பேசலாமே!! வீட்லெ பையன் சமர்த்தா எதாவது செஞ்சிட்டா, உடனே.. ”என் பையன் பாத்தியளா?” என்று எக்காளமிடும் மனசு…அதே பையனின் மார்க் குறையும் போது??? ”பாத்தியா உன்னோட பையனோட லட்சனதெ..” என்று இல்லத்தரசியிடம் கத்துகின்றோமே… இது எந்த வகையில் சேர்ந்த பொறுப்பு?

ஆஃபீசிலும் இப்படித்தானே நடக்குது! கீழே உள்ள ஆளு ஏதாச்சிலும் செஞ்சி நல்ல பேரு வாங்கிட்டாப் போதும்… ”அட…அவன் நம்ம அண்டர்லெ இருக்காம்ப்பா..” என்பது… (என்னவோ அவர் கீழே இருக்கிறதுனாலெயே இப்படி எல்லாம் செய்ற மாதிரி பீத்திக்க வேண்டியது)… ஏதும் தப்புதண்டா நடந்தா, ”ஃபிக்ஸ் த ரெஸ்பாசிபிலிடி” என்று கத்த வேண்டியது. (அது சரி… இந்த தப்பு .. புரியுது; அது என்ன தண்டா? அந்த தப்போடவே தப்பாமெ சேந்தே வருதே!!) நல்லதுக்கு மட்டும் நாம். கெட்டதுக்கு யாரோ ஒரு தலையைத் தேடுகின்றோம். தவறுக்கு பொறுப்பேற்க.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் இப்படித்தான் தகவல் தரப்படாத போது சிக்கல் வருகின்றது. பொதுவாய் யார் ஒருவர் தகவல் வைத்திருந்து தராமல் இருக்கின்றாரோ அவருக்க்த்தான் தண்டனை வழங்கப்படும். ஆனால் தர வேண்டிய அதிகாரிகளையும், அந்தமான் தீவில் சகட்டு மேனிக்கு அபாரமாய் அபராதம் தீட்டி வருகின்றது மைய தகவல் அணையம். ஒரு பொறுப்பான அதிகாரி புலம்பினார். இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் தான் பதவி ஓய்வு பெற உள்ளாராம். இதுவரை சர்வீசில் ஒரு மெமொ கூட வாங்கலையாம். அப்படிப்பட்ட நபருக்கு 25000 அபராதம் விதித்து பொறுப்பை சரிவர செய்யாததை பொறுப்பாய் உணர்த்தியுள்ளது.

”யார் குற்றவாளி?” மாதிரி ”யார் பொறுபாளி?” என்று ஏதாவது ஓர் எக்ஸ்பெர்ட் கிட்டெ கேட்டு விடை வாங்கலாமா? ம்…ம்… எனக்குத் தெரிந்த ஒரே எக்ஸ்பெர்ட் கம்பன் தான். கம்பரை WhatsApp பிடித்தேன். பிகு செய்யாமல் லயனில் வந்து விட்டார்.

என்ன ஏதோ பொறுப்பா பேசுற மாதிரி தெரியுது???

பொறுப்பா பேசறேனான்னு தெரியலை…ஆனா ஐயனே…. பொறுப்பெப் பத்தி விளக்கம் சொல்ல ஆளைத் தேடினேன்.

ஒன்னோட குழப்பத்துக்கு ஒரு கொரங்கு பதில் சொன்னா ஒத்துக்குவியா?

என்ன கம்பரே…கொரங்கா?

ஆமாம் அதுவும் ஒரு பெண் குரங்கு… பெயர் தாரை…

ஐயனே… இது போதும் எனக்கு.. நானே பாட்டெப் பிடிச்சிட்டேன்.. தேங்க்ஸ்..

ஐயன் கம்பன், குழப்பம் தெளிவித்த இடம் கிட்கிந்தா காண்டம்… பாடலும் கிட்கிந்தை படலத்தில் வருது. கோபம் கொப்பளிக்க வரும் இலக்குவனை தாரை (தம்பட்டை இல்லாமல்) வரவேற்கிறார். தடுத்தும் நிறுத்துகிறார். கோபம் குறைக்க தாரை சொன்ன வார்த்தைகளில் நம் குழப்பத்துக்கு பதில் வருது.

சும்மா கிடந்த ஆளுக்கு (சுக்ரீவனுக்கு) காசு பணம் மது மாது (பொண்டாட்டி தானுங்க) எல்லாம் கொடுத்தீங்க. அதுக்கு பொறுப்பாளி நீங்க தான். அதே நபர் உங்க பேச்சு கேக்காமெ போனாலும் அதுக்கும் நீங்க தானே ஐயா பொறுப்பு… இது வாலி வதத்துக்குப் பின்னர் வரும் தாரையின் வாதம்.

பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் யோசிக்க தாரை மூலம் கம்பர் சொன்ன செய்தி… பாட்டின் முதல் ரெண்டு வரியிலேயே இந்த பதில் வருது.. படிங்களேன்…

அடைந்தவர்க் கபயம் நீவிர் அருளிய அளவில் செல்வம்
தொடர்ந்து நும்பணியின் தீர்ந்தால் அதுவும் நும் தொழிலே அன்றோ
மடந்தைதன் பொருட்டால் வந்த வான் அமர்க் களத்து மாண்டு
கிடந்திலரென்னின் பின்னை நிற்குமோ கேண்மை அம்மா…

வேறு ஏதும் சந்தேகம் வந்தா கம்பராண்டெ கேட்டு எழுதுறேன்.

டாடீ எனக்கு ஒரு டவுட்டு


“டாடீ எனக்கு ஒரு டவுட்டு” என்று ஒரு காமெடி பிட்டு ஆதித்யா சேனலில் அடிக்கடி வந்து, சக்கை போடு போட்டு வருகிறது. தினமும் சொல்லி வரும், பேசி வரும், நடைமுறை வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாய் பழகிவிட்ட சில சொற்களை செமெயாகக் கிண்டலடிக்கிறது அந்த காமெடி. அனேகமாக அப்பன்களிடம் குடைந்து குடைந்து கேள்வி கேட்கும் வாண்டுகளாகட்டும், சாதாரணமாய் கேட்கும் ஆசாமிகளாகட்டும் இப்பொ எல்லாம், இந்த “டாடீ எனக்கு ஒரு டவுட்டு” என்று தான் ஆரம்பிக்கிறார்கள். சில சமயங்களில் அதில் வரும் கேள்விகளுக்கு விடை தெரியாமல் நானும் முழித்த போது என் பையன் குத்த வருவது போல் வந்ததும் நடந்ததுண்டு. (நல்ல வேளை குத்து மட்டும் விழலை).

இது போகட்டும். சமீபத்தில் சென்னையில் ஒரு நண்பன் வீட்டுக்குப் போயிருந்தேன். (அப்பொ என்ன விரோதி வீட்டுக்கா போவாக..!!) அங்கே இப்பொத்தான் Pre KG படிக்கப் போயிருக்கும் வாண்டு என்னைப் பாத்து, ”அங்கிள் எனக்கு ஒரு டவுட்டு” என்று அப்படியே விரல் தூக்கினான். (ஆண்டவனே… ஏன்.. எல்லா சோதனையும் எனக்கே வந்து சேருது??). சரி… நம்ம சப்ஜெட்டுக்கு வருவோம். கணக்கிலெ கில்லாடிகளா இருக்கிறவங்களை கணக்கில் புலி என்கிறார்களே? ஏன் அப்படி? (இந்தக் கேள்விக்கும் “டாடீ எனக்கு ஒரு டவுட்டு” அப்பா குத்து வாங்கியிருப்பார் என்பது என் அபிப்பிராயம்.

மாம்பழங்களில் கிளிமூக்கு மாம்பழம் செமெ டேஸ்ட் ஆ இருக்கும். கிளியோட மூக்கு மாதிரியே புலியோட மூக்கை கொஞ்சம் உத்துப் பாத்தா (உண்மையான புலி பக்கத்திலெ வரணும் அப்பொத் தெரியும்… சுனாமி வந்தப்பொ ஓடுன மாதிரி, துண்டெக் காணோம் துணியெக் காணோம்னு ஓடியே போயிருப்போம்) லேசா பொறி தட்டுச்சி.. மூக்கு சற்றே பெரியதாகவும் அகலமாகவும் இருந்தால் அவர்கள் கணக்கில் சூரப்புலிகளாக இருப்பர். அப்படியே கணித மேதை இராமானுஜம், சகுந்தலா தேவி ஆகியோர்களது மூக்கை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும். அதே மூக்கு பெரிதாகவும் அகன்றும் சற்றே உப்பிய மாதிரி இருந்தால் அவர்கள் கணக்குப் பன்னுவதில் புலியாக இருப்பார்கள். உதாரணமா… (ஆசை.. தோசெ.. அப்பளம்.. வடை… நானு யார் பேராவது சொல்லி வம்பிலெ மாட்ட, நீங்க ஜாலியா இருப்பீகளா… நீங்களே பாத்துகிடுங்க). ஆதாரம் தேவை என்று விக்கிபீடியாவில் போடுவது போல்னு வச்சிக்குங்களேன். ஆனா நீங்க வேற யாரையாவது வச்சிட்டிருக்கும் சேதியை மூக்கு சொல்லிடும். அம்புட்டுத்தான்.

ஏதாவது சிக்கலான சேதியாய் இருக்கும் என்று, நாம கேட்கப் போக, அது என்ன பெரிய்ய கம்ப சூத்திரமா என்ன? என்று பதில் சொல்லாமலேயே கேள்வி கேட்டு அலம்பல் செய்பவர்களும் உண்டு. அப்பேற் பட்ட ஆட்களிடம், அது என்ன கம்பசூத்திரம்? என்று திருப்பிக் கேளுங்கள். அவங்களோட டப்பா டான்ஸ் ஆடிடும். (அவங்க திருப்பி, அப்பொ டப்பா டான்ஸ் ஆடிடும்னா இன்னா, என்று கேட்டா… ஆளை வுடுங்க சாமி..)

அது என்ன அப்பாடக்கரா என்பது மாதிரி, கம்ப சூத்திரம் என்றால் என்ன என்று தேடும் அவா வந்தது. இப்பொத்தான் எப்பொ சந்தேகம் வந்தாலும் கூகுளாண்டவரெத் தானே தேடறோம். நானும் தேடத் துவங்கினேன். அப்பொத்தானா இந்த தமிழ் Font கோளாறு செய்யனும். சரி.. மேட்டரு அர்ஜெண்ட் என்று நினைத்து, English லே போட்டுத் தேடலாம் என்று ஆரம்பித்தேன். Kamba Suuthram in Tamil என்று தேடினேன். கூகுள் ஹி..ஹி.. என்று பல் இளித்தது. போதாக் குறைக்கு, கம்ப சூத்திரம் சரக்கு இல்லை. காமசூத்திரத்தில் 53 லட்சத்துக்கும் மேலா பக்கம் இருக்கு. வேணுமா என்று கெஞ்சியது. ம்… 50 வயசுக்கு மேலெ இவ்வளவு பக்கம் பாத்து இன்னா செய்ய?? எல்லாமே இப்படி லேட்டாத்தான் நடக்குமோ? இப்படித்தான் அரசு வழங்கும் வீடும்.

அரசு உத்தியோகம் கிடைச்சவுடன் சின்னதா ஒரு வீடு கிடைக்கும். Type I or Type A என்று சொல்லும் ஒரு Bed & Singe fan இருக்கும் வீடு. அப்பொத்தான் நண்பர்கள் படை சூழ வீடே ஜே ஜே என்று. அப்பொ சின்னதா இருக்கும் வீடு. ஆனா அம்பது வயசிலெ மூனு பெட்ரூம் இருக்கும் Type E or Type V வீடு கிடைக்கும். பசங்க அப்பொ காலேஜ் படிக்கப் போயிருப்பாய்ங்க.. என்ன செய்ய? ஒரு பொண்டாடியும் இல்லாத நேரத்துலெ இப்படி ஒவ்வொரு ரூமா உக்காந்து மாத்தி மாத்தி ராமாயணம் படிக்க வேண்டியது தான். புண்ணியத்துக்கு புண்ணியமாவது கிடைக்கும்.

ஒரு வழியா ரீ பூட் செய்து தமிழ் Font சரியாக்கி, மீண்டும் தேடினால் ஒரு வழியா 6K அளவு பக்கங்கள் இருப்பதாய் தகவல் தந்து ஒதுங்கியது. சில சமயங்களில் ஒரு பக்கம் திறக்கவே லிட்டில் அந்தமான் தீவில் ஒரு நாள் ஆகும். நானு என்னெக்கி எல்லாத்தையும் பாத்து…ம்.. படிச்சி.. எழுதி…??

சிலர் பல விஷயங்களை “அது பெரிய கம்ப சூத்திரம் இல்லை” என்பார்கள். அவர்கள் கம்ப சூத்திரத்தையே அப்படித்தான் சொல்வார்கள். இப்படிச் சொன்னவர் எங்க ஊர் பரமக்குடியார் கமலஹாசன். நிறைய தடவை படிச்சிப் பாத்துட்டேன். எனக்கு ஒன்னும் வெளங்கலெ… உங்களுக்கு ஏதாவது வெளங்குதா?? (அது என்ன பெரிய்ய்ய் க சூத்திரமா என்று சொல்லி விட்டால் நீங்க பெரிய்ய்ய் ஆளு தான்)

கம்ப சூத்திரம் என்றால் என்ன என்று புரிவதற்குள் அவர் வைத்திருக்கும் சூத்திரத்தைப் பாக்கலாமே. (போற போக்கிலெ ஒரு சின்ன கொசுறு தகவல்: கம்ப சித்திரம் தான் பின்னர் மறுவி.. அதாங்க மாறிப் போயி சூத்திரம் ஆனதாய் ஏகப்பட்டவர்களின் கருத்தா இருக்குங்க). பெருக்கல் கூட்டல் இப்படி ஏதும் இருந்தாத் தானே அது சூத்திரம். கம்பன் கிட்டெ அப்படி ஏதாவது சூத்திரம் இருக்கா என்று பாத்தபோது கெடெச்ச சேதி.. இதோ உங்களுடன்.

குரங்குப் படைகள் ஏகமா அணிவகுத்து நிக்குது கிஷ்கிந்தாவில் (மறுபடியும் போலாமா டாடீ என்று கிளம்பும் அந்த கிஷ்கிந்தா இல்லீங்கோ.. அது அசல்). எவ்வளவு இருக்கும் என்று தோராயமா, உத்தேசமா நிருபர் ரேஞ்சுலெ கணக்கு போட்டு சூத்திரமா சொல்கிறார் கம்பர். இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா என்று இருக்கும் அந்தப் படை கடலின் பரப்பு மாதிரி இருக்கு என்று சொல்லலாமான்னு மொதெல்லெ யோசிக்கிறார் கம்பர். ஆனா கடலில் எல்லையெப் பாத்தவங்களும் இருக்காகளே. இந்தப் படையின் அளவு பத்தி சொல்ல இந்த கம்பன் என்ன?? எந்தக் கொம்பன் வந்தாலும் முடியாது. அவங்களுக்கும் சொல்றதுக்கும் எந்த உவமையும் சிக்காமெ திண்டாடுவாங்க!!

சரி..இங்கே சூத்திரம் எங்கே வருது? இருங்க வாரென்… பத்தை இரட்டிப்பாக்கி இரவு பகலா பாத்தாலும் பாதி படையைத்தான் பாக்க முடியுமாம். அப்புடீன்னா, முழுப் படை எப்புடி இருக்கும். நீங்களே பாத்துகிடுங்க. அப்படியே பாட்டும் பாக்கலாமே..

அத்தி ஒப்பு எனின், அன்னவை உணர்ந்தவர் உளரால்
வித்தகர்க்கு இனி உரைக்கலாம் உவமை வேறு யாதோ
பத்து இரட்டி நன்பகல் இரவு ஒருவலர் பார்ப்பார்
எத்திறத்தினும் நடுவு கண்டிலர் முடிவு எவனோ??

(அத்தி – கடல்)
இங்கே, ”பத்து இரட்டி” தான் சூத்திரம் என்பது என் பதிவின் மூலம். (பத்து இரட்டி என்பதை பல நாட்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்று உரையாசிரியர் பள்ளத்தூர் பழ பழனியப்பன் சொல்கிறார்.) அப்பொ இதையும் அந்த உரை ஆசிரியர் அசைத்து விட்டதால், கடலின் எல்லையைக் கம்பர், சூத்திரம் மூலம் பாத்து தெரிந்து எழுதி இருகிறாரே.. அதையாவது கம்ப சூத்திரம் என்று நம்பலாமே…