பாமரன் பார்வையில் ஃபாரின் – 74


கட்டைகளில் நல்ல கட்டை மலேசியா கட்டை என்பர் தச்சர்கள். (நீங்க நாட்டுக் கட்டை என்று சொன்னால், உங்கள் இளமை வெளியே தெரிய வரும்.)

ம்லேசியாவில் மரங்களை வெட்டோ வெட்டு என வெட்டுகிறார்களாம். ஆனாலும் பச்சைப் பசேல் தான் எங்கு பாத்தாலும்…

எப்படி?

எதையுமே ப்ளான் பண்ணிச் செய்தால் அப்படித்தான் என வடிவேல்த்தனமான பதில் வந்தது.

ஒரு பக்கமா மரத்தெ வெட்டிகிட்டே போவாகளாம். மறு பக்கம் மரத்தெ நட்டுகிட்டே போவாகளாம்.

முழுசா வெட்டி முறிப்பதற்குள்… புது மரம் வா..வா…வெட்ட வா என் வரவேற்பு தருமாம்.

நம்மூர்லயும் இப்படித்தானே நடக்குது!!!

ஒரு மரம் நடுவிழா…

எங்கே விழா வைக்கலாம்?

சார்…. வருசா வருசம் இதே இடத்தில் தான் சார் மரம் நடுவிழா வைப்போம். இங்கேயே வச்சிடிலாம் சார்…

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். மலேசியாவில் மிச்சம் மீதியான மரத்துண்டுகளையும் கூட அழகா டெக்கரேட் செய்து வைத்தது என் கேமராவுக்கு தீனி இன்று.

துப்பறியும் சொம்பு


Thupparium Sombu

துப்பறியும் சாம்பு படிச்சிருக்கீங்களா? இந்தக் கேள்விக்கு, ஆமாம் என்று பதில் வந்தால், ஒன்று கன்ஃபர்மாச் சொல்லலாம். பதில் சொன்னவரது வயது 45க்கு மேலாக இருக்கும். இதை ஒரு டெஸ்ட் செய்து பாக்கலாமே என்று 50 வயதுக்கு மேலான நண்பர் ஒருவரை லேசாக விசாரித்தேன். சாம்புவா? யாரது? என்றார். என்னடா இது வம்பா போச்சே என்று மேற்கொண்டு ஏதும் பேசாமல் விட்டு விட்டேன். சரி நம்ம ரேஞ்சில் வயது குறைவான ஆளை விசாரித்துப் பாக்கலாமா? என்று 35 வயது மதிக்கத்தக்க ஒருவரிடம் கேட்டேன். என்ன சார் இப்படிக் கேட்டீங்க..என்ன கதைகள் தெரியுமா? இப்படி சிலாகிக்க ஆரம்பித்துவிட்டார்.

அப்பொ என்னோட தீர்மானத்தை மாத்திக்கலாமா? அதெப்படி?? இதெல்லாம் ஒரு (சாரி… இரு) விதி விலக்குகள். அம்புட்டுத்தான். ஆக சொல்லப்போனா, தும்பறியும் சாம்பு அந்தக்காலத்து ஆதித்யா டீவி. என்ன… 24X7 தான் கிடையாது. 7 நாளுக்கு ஒரு தரம் வந்து சிரிப்பூட்டிய விகட காலம் அது. அந்தக் கேரக்டரை வைத்து மோட்டார் சுந்தரம் பிள்ளை பட்த்தில் நாகேஷ் வந்து போனதாய் என்னுடைய ஞாபக மூளை லேசாகச் சொல்கிறது. ரொம்பவும் கசக்க வேணாம் உட்டுருவோம்…

சாம்பு சரி… இந்த சொம்பு எங்கே வந்தது என்று கேட்கிறீர்களா? அது ஒரு ஃபுளோவிலெ வந்திருந்தாலும் கூட, சொம்பு இல்லாமல் பஞ்சாயத்து நடத்த முடியாது என்ற விவேக விதி இருப்பதை நாம் மறந்திட முடியுமா என்ன? குடிக்கத் தண்ணி வேணும்னு மாப்பிள்ளை வடிவேல் கேட்க, அதை அப்படியே அவருக்கு எதிராய் “மாப்பிள்ளை சொம்பு வந்தாத் தான் தாலி கட்டுவாராம்” என்று திருப்பி விடும் கூத்தும் நடக்கும். இது ஒரு கேலிக்கூத்தான காமெடி என்று மட்டும் பார்க்காமல் சற்றே உற்று நோக்கினால் அதன் பின்னால் ஒரு பெரிய தியரி இருப்பது தெரியும்.

உலகத்திலேயே, வடிவேலு காமெடிக்குப் பின்னாடி, தியரி இருப்பதை பாக்கும் ஒரே ஆளுன்னு பாக்கீகளா?? டிரான்ஸாக்ஸன் அனாலெஸிஸ் என்று ஒன்று கேள்விப் பட்டிருக்கீங்களா? அது தான் இது. ஒருவர் தண்ணி வேணும் என்று சொன்னது பலரின் காதுகளில், மனதுகளில் மாறி, அது சொம்பு வந்தாத் தான் கல்யாணம் என்று மாறுவது இயற்கை என்கிறது அந்தத் தியரி. அதுக்காகத்தான் அடிக்கடி டிரைனிங் எல்லாம் கொடுத்து ஆட்களை தேத்தி வைக்கனும் என்கிறது. அரசுத்துறையில் சும்மா வெட்டியா இருப்பவருக்கு டிரைனிங் சான்ஸ் கெடைக்கும். அவன் ரொம்ப ஜாலியா தூங்கிட்டு, சாப்பாடு சரியில்லை என்று ரிப்போர்ட் தருவான்.

ம்… அப்பொ…, பஞ்சாயத்துக்கும் சொம்புக்கும் எந்த சம்பந்தம் இல்லாட்டியும் கூட, சொம்பு தான் தாறுமாறாக அடிபடுது. அரசுத் துறையிலும் இப்படித்தான். ஏதாவது ஒரு முடிவு எடுக்கும் போது, அதில் தெரிந்தோ, தெரியாமலோ சிலர் பாதிக்கப்படுவர். சில சமயம் அப்படி சிலருக்கு பாதிப்பு வரவேண்டும் என்பதற்காகவே, சில முடிவுகளும் எடுக்கப் படுவது உண்டு. அரசியல்லெ மட்டுமா ”இதெல்லாம் சாதாரணமப்பா..” என்பார்கள்??? அரசுத் துறையுலும் இப்படித்தான். ஆனா பொத்தாம் பொதுவான ஒரு விதி இருக்கு, யாருக்கும் பாரபட்சமாக முடிவுகள் எடுக்கப் படாது என்று.

இப்படித்தான் ஒரு முறை…. அடுத்தவன் கதை சொன்னால் ஏதும் வில்லங்கம் வந்தாலும் வரும். சொந்தக் கதையே சொல்லி விட்டால் ஒரு பிரச்சினையும் இருக்காது. 1993களில் அந்தமான் போர்ட் பிளேயரிலிருந்து மூன்று நாள் கப்பல் பயணம் செய்தால் வரும், கமோர்டா என்ற தீவில் பணியில் இருந்தேன். போர்ட்பிளேயர் மாதிரி இடம் கிடைக்காதா என்ற ஏக்கம் மட்டும் குறையாது இருந்தது. ஆனால் அரசு வேறு மாதிரி யோசித்தது. கிரேட் நிகோபார் தீவுகளில், இந்தியாவின் இறுதி முனைக்கு செல்லும் 41ம் கி மீட்டரில் ஒரு பாலம் கட்ட என்னை ஏவியது. ஏற்கனவே இருக்கும் தீவிலிருந்து இன்னும் ஓர் இரவுப் பயணம். நானே அரசின் முடிவால் நொந்து கொண்டே போனால், அங்கே உள்ள சீனியர்கள் அனைவரும் என்னை ஒரு பிராணியாப் பாக்கிறாய்ங்க.. [அங்கே நான் மட்டும் தான் பி இ படிச்ச புள்ளெ… அதுவும் விரல் விட்டு எண்ணும் இருந்த அந்தக் காலத்தில்] அரசு முடிவு என்று, ஒன்று நினைக்க, மற்றவர்கள் அதனால் பொசுங்கி புன்னானது தான் மிச்சமாச்சி…

ஆனா 2005இல் வந்து (தொலைத்த) பல அரசு ஊழியர்களின் தூக்கத்தைத் தொலைக்க வைத்த ஒரு சட்டம் தான் “தகவல் அறியும் உரிமை” சட்டம். இதிலும் அதே சரக்கு சந்தடி சாக்கில் நுழைக்கப்படுள்ளது. ஆக அர்சுக்கு க்கூடுதல் தொந்திரவு இப்பொ ஆயிட்ட்து. ஒரு முடிவு எடுக்கப்படும் போது அதனால் பாதிக்கப்படும் நபருக்கு அதைப்பற்றிய தகவல்களைச் சூ மந்திரக்காளி மாதிரி, ஸு மோட்டோவாகத் தரவேண்டும் என்கிறது. இப்படி இருக்கே என்று அர்சு அதிகாரிகளிடம் போய் ஏதாவது கேட்டு வைத்தால், அப்படியா? நமக்கு ஒன்றும் சர்குலர் வரலியே? என்பார்கள். நெட்டில் இருக்கே? என்று கேட்க முடியாது. நெட் என்பது டி ஏ அளவு உயரும் போது பயன்படுத்திக் கொள்ளும் ஒரு வசதி அம்புட்டுத்தான்.

மிஸ்டர் கம்பர் உதயமாகிறார்… என்டாப்பா… கிஷ்மு அம்பி…,. 2005ல் சொன்ன சேதி சொல்றியே.. இதெ நானு எட்டாம் நூற்றாண்டிலேயே சொல்லிட்டேனே..செத்தெ பாக்கப் படாதா..?

என்ன கம்பரே ஏதாவது வெளையாட்றேளா? நானு ஒன்பது வருஷமா.. இது தான் புத்தம் புது காப்பின்னு சொல்லிண்டு வாறேன்… என் காலை இப்படி வாற்றீயளே.. கொஞ்சம் வெளக்கமா சொல்லப்படாதா?

ராமாயணம் படிக்கிறதுலெ நீ.. சின்னப்பய… ஒனக்கு வயசு பத்தாது.. போயி.. பேசாமெ, யுத்த காண்டம், அங்கதன் தூதுப்படலம் திறந்து பொறுமையாப் படி. எல்லாம் விளங்கும்.

அட…ராமா… அடெ… ஆமா.. எனக்கு வெளங்கிடுத்து… உங்களுக்கு?? சொல்லாமலா போவேன்?

தனுஷ்கோடி பக்கத்திலெ ராமர் பாலம், கட்ட பிளான் போடும் போதே, ராமன் மனது, இன்னொரு பிளான் போட்டது. சீதை கைக்கு வந்த கையோடு இந்த இலங்கையை வீடணன் கையில் கொடுத்து விட்டு கம்பி நீடி விட வேண்டியது தான் என்று. ஆனா… ராமர் பாலம் கட்டி முடிச்சப்பொ, ராமன் மனசுலெ இன்னொன்னு தோணுது. அனாவசியமா போர் என்ற அக்கப்போர் எல்லாம் தேவையா? போர் இல்லாமெ சமாதானமா போக முடியாதா? என்று. இது ஒரு அரச முடிவு என்று வைத்துக் கொள்ளலாம். (அரசுக் கட்டிலில் இல்லாவிட்டாலும் கூட, கதையில் ஹீரோ ராமன் தானே?) இந்த முடிவில் அல்லது முயல்வில் பாதிக்கப்படுபவர் யார்? என்று சொல்லவும் வேண்டுமா? வீடணன் தானே.

கம்பர் இந்த நிலையை அருமையாக் கையாள்கிறார். சொல்லப் போனால், இந்தக் காலத்து ஆர் டி ஐ சட்டத்திற்கும் மேலே ஒரு படி சென்ற மாதிரி தான் படும். தகவல் பெறும் உரிமைச் சட்டம் கூட, முடிவு எடுத்துக் கொள்ளுங்கள், உங்க இஷ்டத்துக்கு. ஆனா பாதிக்கப்படும் நபர்க்கு தகவல் சொல்லிடுங்க… இது தான் முக்கியம். ஆனால் கம்பன் விதியோ, பாதிக்கப்படும் நபர் கூடவே ஆலோசனை செய்யச் சொல்லுவது தான். இந்த முடிவை அமல் படுத்தலாமா சொல்லுங்கள் என்று இராம பிரான் சொல்லுவது யாரிடம் தெரியுமா? பாதிக்கப்படக் கூடும் என்று இருக்கும் வீடணனிடம் தான். இது எப்படி இருக்கு…

இந்தக் காலம் மாதிரி, பின்னாளில் பிரச்சினை வந்தா, நான் தான் அப்பவே சொன்னேன்லே.. என்று மீட்டிங் முடிக்க சாயா ஆர்டர் சொல்லி முடித்து விடலாம்..

அதே டீ குடிக்கும் நேரத்தில் கம்பர் வரிகளும் படிச்சிடலாம்:

வள்ளலும் விரைவின் எய்தி வடதிசை வாயில் முற்றி
வெள்ளம் ஓர் ஏழுபத்துக் கணித்த வெஞ் சேனையோடும்
கள்ளனை வரவு நோக்கி நின்றனன் காண்கிலாதான்
ஒள்ளியது உணர்ந்தேன் என்ன வீடணற் குரைப்பதானான்.

வள்ளல் இராமனும், ஓர் எழுபது வெள்ளம் என்று கூறும் படியான சூப்பர் படையுடனே, வேகமாப் போய் இலங்கையை அட்டாக் செய்து சீதையை திருடின திருடன் இராவணன் வரும் வரை வடக்கு வாசலில் காத்திருக்க, வந்த பாடில்லை அந்த திருட்டுப் பய. இப்பொ ஒரு காரியம் மனசுலெ நெனைக்கிறேன் என்று வீடணனிடம் சொல்லலானார். என்ன சொன்னார் எப்படி சொன்னார் என்பது அடுத்தடுத்து வரும் பாடலில் வரும்.

இப்பொ சொல்லுங்க ஆர் டி ஐ சட்டம் பெட்டரா? கம்ப சட்டம் பெட்டரா?

மதுரெக்காரெய்ங்களே போதும்….


vadi mdu

எப்பொப் பாத்தாலுமே சிரிப்பை வரவழைக்கும் காமெடிகளில், வடிவேல் காமெடி டாப் தான். அவர் அரசியல் பேசினாலும் அதுவும் மெகா காமெடியாய் இருந்தது தான் பெரிய்ய காமெடி. அவரின் காமெடி கலக்கலில், மதுரைக் காரங்களை வம்பிழுப்பதாய் வந்த காமெடியும் ஒன்று. தெருவில் அண்ணன் தம்பி சண்டையை விலக்கி விடப் போய், வகையாய் வடிவேல் வாங்கிக் கட்டிக் கொள்வதாய் காமெடி வரும். அதில் முத்தாய்ப்பாய், இதெ ஏண்டா முன்னாடியே சொல்லலை என்று கேட்க, நம்ம மதுரெக் காரெய்ங்க எவன் சொன்ன பேச்சு கேக்கிறான்? என்பதாய் முடிவது தான் காமடியின் உச்சம். இந்தப் பக்கம் போகாதீங்க, அக்கா தங்கச்சி சண்டை நடக்கிறது என்றவுடன், அக்கா தங்கச்சியா……? என்று பதறி வடிவேல் ஓடுவது, இன்னும் நினைவில் அனைவருக்கும் இருக்கும்.

ஏன் மதுரைக்கு இப்படி ஒரு சோதனை? கோபாமாய் கொழுந்துவிட்டு எரியக் காரணமானவ(ள்)ர், கேள்வி கேட்ட பூமி இது. சிவ பெருமான் என்று தெரிந்துமே கேள்வி கேட்டவர்கள் அவதரித்த பூமி. என்ன…கொஞ்சம் சூடு பூமி.. அதனாலெ பேச்சிலும் கொஞ்சம் நெடி அதுவும் வீர நெடி இருக்கும். இதெ மாத்த முடியாது… நாங்களும் செய்வோமில்லெ… மதுரெக் காரெய்ங்கன்னா சும்மாவா?? இந்த மாதிரியான டயலாக், மதுரெக் காரய்ங்ககிட்டே இருந்து எப்படியாது ஒரு வகையில் வெளி வருவதைப் பாக்க முடியும்.

இந்த மண்ணின் மணம் மாறாமல் இருப்பதற்கு நான் ஊகிக்கும் முக்கிய காரணம், மற்ற ஊர்க் காரர்கள் இங்கு பெரும்பாலும் குடியேறாமையாக இருக்கலாம் என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். 1980களில் கோவை பொறியியல் கல்லூரியில் படிக்கும் போது, கோவை மக்களின் நாகரீகம், வரிசை ஒழுங்கு எல்லாம் திகைப்பூட்ட வைத்தது. வரிசையில் நின்று ஆர்ப்பாட்டம் ஏதும் இல்லாமல் சினிமாவுக்கு டிக்கெட் வாங்கி அப்புறம் இன்னொரு வழியால் (அது காலியாகவே இருக்கும்) திரும்பிப் போவர். இந்த வழியாய் யாரும் போய் டிக்கெட் வாங்க மாட்டாய்ங்களா என்று மதுரைத்தனமாய் கேட்ட காலங்களும் உண்டு.

அதே மாதிரி, அந்தக்கால சேரன் பஸ்களில் நீளமாய் கயிறு ஒன்று கட்டி இருப்பார்கள். ஒரு முனை காலிங்பெல் மாதிரி ஒன்றில் போய் முடியும். கண்டக்டர் எங்கிருந்து வேண்டுமானாலும் அதை இழுத்து வண்டியை நிறுத்துவார். கிளப்புவார். எனக்கோ பயங்கரமான ஆச்சரியம் என்ன்ன்னா, அதெப்படி இந்தக் கயிரை கண்டக்டர் மட்டும் தான் இழுப்பார்? மற்ற பயணிகள் இழுக்க மாட்டாய்ங்களா?? கேட்டேன்… வந்த பதில் இது தான்: மதுரெக்காரெய்ங்க புத்தி போகுதா?

குடும்பத்தாருடன் கோவையில் நண்பர் வீட்டில் தங்கினோம். அவர்களின் பணிவும் மரியாதையும் பார்த்து என் மகள் திக்குமுக்காடிப் போனார். மதுரெப் பாஷை பேசிக் கேட்டவர்களுக்கு, அந்த ஏனுங்க, இருக்குதுங்களா? வேணுங்களா? என்ற மரியாதை கலந்த வார்த்தைகள் தேனாய் இனித்திருந்தது என்று சொல்லவும் வேணுமா? வீடுகளில் விடுங்க… கடையில், அதுவும் ஒரு செருப்புக் கடைக்குப் போக, அவர்களும் அதே மரியாதை மாந்தராய் பேச… ’என்ன இந்த ஊர்க்காரெய்ங்க எல்லாரும் இப்புடித்தான் இருக்காய்ங்க!!!???’ என்ற வியப்புடன் கேள்வி வந்தது என் புதல்வியிடமிருந்து.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். ரெண்டு பேருக்கு நடுவிலெ சண்டை ஏதாவது நடந்தா, எட்டிப் பாத்து அடிவாங்கும் (வடிவேல் போல்) செயல் மதுரெக் காரெய்ன்க்கிட்டெ அதிகம் ஏன் நடக்குது? ம்… சும்மா…அதெல்லாம் கெடையாது என்கிறீர்களா? அப்பொ நாட்டாமெ தீர்ப்பு சொன்னா ஒத்துக் கிவீங்களா? என்னோட நாட்டாமை எப்பவுமே கம்பர் தான். என்ன மிஸ்டர் கம்பர் சார்.. மரத்தடி செம்பு எல்லாம் ரெடி… அப்புறம் என்ன சொல்லுங்க நாட்டாமெ சார்…

இப்படி எல்லாம் பேசுனா எந்த நாட்டாமையும் தீர்ப்பு சொல்ல மாட்டாய்ங்க. ஒரு முக்கியமான டயலாக் சொல்லனும். “எல்லாம் ஆளுக்காளுக்கு பேசிட்டிருந்தா எப்படிப்பா?? நாட்டாமை நறுக்குண்ணு நாலு வார்த்தை சட்டுன்னு சொல்லுங்க…”

இதுக்குத்தான் காத்திருத்து போல் கம்பர் ஆரம்பித்தார்.
ஏதாவது வித்தியாசமா நடந்தா ஒடனே ஓடியாந்து பாக்குறதுங்கிறது ஒன்னும் புதுசு இல்லெ. அந்தக் காலத்திலேயே நடந்திருக்கு..

மதுரெக்கார ஆசாமிகளை விட்டுத்தள்ளு.. சாமிகளே கூட இப்படித்தான்..

சாமிகளா? எப்பொ நடந்தது சாமி? – இது பவ்யமாய் நான்.

ஆமா… ராமாயணத்திலெ அந்த சீன் வருது. அனுமன் இருக்கானே அனுமன், மலை மாதிரி இருக்கிறவன், வலிமையான தோள் உள்ளவன். குரங்குகளில் சிறந்தவன். கடல் கடந்து இலங்கைக்கு போகுறப்போ, காற்றே கலங்கிப் போச்சாம். அதிசயம் என்ன? என்று ஆண்டவர்களே வெரெஸ்ஸா ஓடி வந்தாங்களாம். வர்ரப்பொ அவங்கவங்க, பிளேன்லெ வந்தாகலாம். வந்த அவசரத்திலெ அவய்ங்க பிளேனே முட்டி மோதி கடல்லெ விழுந்து ஒடெஞ்சே போச்சாம்…

அந்தக் காலத்து கதையே இப்படி இருக்க, நம்ம மதுரெக் கதை பராவா இல்லியே???

அப்படியே பாட்டும் லேசா மோதிக்காமெ பாருங்க…

குன்றொடு குணிக்குங் கொற்றக் குவவுத்தோட் குரங்குச் சீயம்
சென்றுறு வேகத் திண்கா லெறிதரத் தேவர் வைகும்
மின்றொடர் வானத் தான விமானங்கள் விசையிற்றம்மின்
ஒன்றொடொன் றுடையத் தாக்கி காக்கட லுற்ற மாதோ.

என்ன நாட்டாமெ தீர்ப்பு ஓகேவா?… அல்லது மாத்திச் சொல்லச் சொல்றீங்களா?

மனசு.. மனசு.. மாறும் மனசு….


மடிக்கணினி என்று லேப்டாப்புக்கு செய்த தமிழாக்கம் சரி தான் என்று இன்று (01-01-2013) தான் புரிந்தது. காலை முதல் மாலை வரை கொல்கொத்தா விமான நிலையத்தில் (இரண்டரை மணி நேர தாமதம் உட்பட) இருந்த போது உன்னிப்பாய் (இல்லெ..இல்லெ.. சாதாரணமாய்) பாத்தபோதும் தெரிந்தது. மடியில் பெரும்பாலான மக்கள் லேப்டாப்பையும், என்னை மாதிரி சிலர் டேப்லெட், ஐபோன் என்றும் வைத்திருந்தனர். ஒரு ஆர்வக் கோளாறில் எட்டிப் பாத்தேன். மகளிர் பெரும்பாலும் படம் பாத்தும் அல்லது பாட்டு கேட்டும் இருந்தனர். வயதானவர்கள் Free Cell ஆடியபடி இருந்தனர். (அடப்பாவிகளா இன்னுமா ஆடி முடியலெ??) மிகச்சிலரே அலுவலக மெயில்களை மேய்ந்து கொண்டிருந்தனர். (நானு..ஹி..ஹி.. எட்டிப்பாத்த நேரம் போக மத்த நேரமெல்லாம் கம்பராமாயணத்தில் மூழ்கி இருந்தேன்..ஹி..ஹி..)

”மனிதரில் இத்தனை நிறங்களா?” மாதிரி, மனிதரில் இத்தனை முகங்களா என்று கேக்கத் தோணும் அளவுக்கு இந்த விமான நிலையத்தில் மனித முகங்கள். சிலர் ”விமான கம்பெனிக்கே தான் தான் ஓனர்” என்பது போல் மிடுக்கான நடையில். நாம தான் Frequent Traveller என்பதைச் சொல்லாமல் சொல்லும் சிலர் ஒரு ரகம். புதிதாய் வந்தவர்களின் மிரட்சியே அதனைச் சொல்லிக் தரும். சில பயணிகளும், பெண் ஊழியர்களும் இருக்கின்ற உடையினைப் பாத்தா, நம்ம மதுரை ஆதீனம் சொன்னதில் ஒண்ணும் தப்பில்லையே என்று சொல்லத் தோனுது. (நமக்கு எதுக்கு இந்தப் பொல்லாப்பு). ஆனா விமானத்தில் ஏறும் மக்கள் அதிகமாயிட்டது என்பதை மட்டும், இந்தக் கூட்டம் பாத்து ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். மூட்டை முடிச்சுகளை விமானத்திலும் அதிகமாகவே மக்கள் எடுத்துவருகிறார்கள் என்பது என் கருத்து.

மனித மனங்களின் மாற்றங்கள் விசித்திரமானது. முன்பெல்லாம் இளம் பெண்களை பாக்கும் போது, அடடா என்று வியக்கத் தோன்றும். (சைட் அடிக்கத் தோனும் என்று ஒடெச்சிச் சொல்லவா முடியும்?) ஆனா இப்பொ கொஞ்ச காலமா இந்த மாதிரி பயணிகள், இண்டர்வியூக்கு வரும் இளம் பெண்கள், அலுவல் காரணமாய் வரும் மகளிர் யாரைப் பாத்தாலும் என் மகளோட சாயல் தெரியுது. (ஒரு வேளை வயசு ஆயிடுச்சோ…)

சினிமாவில் வந்த சாதாரன் காமெடி டயலாக்குகளைக் கூட, அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளாத மனசு, அதையே ஃபேஸ்புக்கில் போட்டுத் தாளிச்ச பிறகு அதே டயலாக்குகள் இனிக்கத்தான் செய்கிறது. உதாரணமா கவுண்டமனியின், “பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா?” என்பதாகட்டும், ஒல்லியான வடிவேலுவின் “என்ன கையைப் புடிச்சி இழுத்தியா?” ஆகட்டும், தற்போதைய புஸ்டியான விடிவேலுவின், “தம்பீ, டீ இன்னும் வரலை” என்பதும் சரி, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. அடி மேல் அடி அடித்து அம்மியை நகர்த்துவது போல், போஸ்டிங் மேல் போஸ்டிங் போட்டு மனசெயே மாத்திட்டாங்களோ..

ஆனாலும் சும்ம சொல்லக் கூடாது, நம்ம மனசு இருக்கே மனசு, அதுவும் ஆதரவா யாராவது சொல்ல மாட்டாகளா என்று ஏங்கத்தான் செய்யுது. புதுப் புடவையோ, நகையோ போட்டு வெளியே வரும் மகளிருக்கு யாரும் எந்தக் கமெண்ட்டும் சொல்லாது இருந்தா, அன்னிக்கி அந்த அம்மாவுக்கு இருண்ட நாள் தான்.. அதுக்காக, காலில் போட்டிருக்கும் புது மாடல் கொலுசசைப் (அதிலெ சத்தம் என்பது கூட வரவே வராது) பாத்து யாரும் ஏதும் சொல்லலையே என்று சொல்லுவது தான் கொஞ்சம் கேக்க சிரமமா இருக்கு. (ஆமா.. பாக்க எப்படி இருக்கும்?) உங்களுக்கு எல்லாம் இனி ஒரு வேண்டுகோள். இனிமேல் காலையும் கொஞ்சம் பாத்து வைங்க.. ஒரு பாதுகாப்புக்கு செருப்பையும் பாத்துக்கிட்ட மாதிரியும் இருக்கும்.

என்னெக்காவது ஏதாவது வேலையெச் செய்யாமப் போயிட்டா, அல்லது நல்ல ஒரு சான்ஸை மிஸ் பன்னிட்டா, நம்ம மனசு என்ன செய்யும்? வருத்தப்படும். அப்புறம்… ஆதரவு தேடும். கெணத்துத் தண்ணியெ ஆத்து வெள்ளமா அடிச்சிட்டுப் போவப் போவுது? இப்புடி சொல்லி ஆதரவு தேடும். (இப்பொல்லாம், கிணத்திலெயும் தண்ணியில்லெ.. ஆத்திலும் தண்ணியில்லெ.. பேசாம பழமொழியெ மாத்தியிரலாமா?? ஏதாவது புதுசா கண்டு பிடிச்சிச் சொலுங்களேன்.

இப்படியே ஓர் எட்டு நம்ம கம்பரோட மனசையும் பாத்துட்டு வரலாமே? அவர் அனுமனோட மனசைப் பத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறார். விபீஷணனை ஆட்டத்திலே சேத்துக்கலாமா வேண்டாமா என்ற சர்ச்சை. புஸ்கா பஸ்கா ஜாம் புஸ்கா என்றோ, பிங்கி பிங்கி பாங்கி என்றும் சொல்லி நிர்னயிக்க முடியாத கட்டம். அனுமன் செமெ பாயிண்டுகளை எடுத்து விட்றாரு. இவரை சேத்துக்காமெ நாம மத்தவங்க மாதிரி சந்தகப் பட்றது அவ்வளவு நல்லால்லே.. அப்படி பட்டா அது எப்புடி இருக்கும் தெரியுமா?? கிணத்திலே இருக்கிற கொஞ்சூன்டு தண்ணியெ நம்மளை அடிச்சிட்டுப் போயிடுமோ என்று கடல்..லே கலங்கின மாதிரி இருக்காம்.. (இந்த இடத்தில் கடல்லேயே இல்லையாம் என்று வடிவேலுவுக்காய் ஜா”மீன்” வங்கப் போன வசனம் ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லை)

தேவர்க்கும் தானவர்க்கும் திசைமுகனே முதலாய தேவதெவர்
மூவர்க்கும் முடிப்ப வரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றாய்
ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின்
கூவத்தின் சிறு புனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வோதோ கொற்ற வேந்தே.

இனி புலம்பும் போது இப்படி ஏதாவது வித்தியாசமா புலம்புங்களேன்… பிளீஸ்.

கல்லைக் கட்டிக் கடலில்


எதுவுமே சரியாக வெளங்காமல் தவிக்கும் போது கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல் இருக்கு என்பார்கள். (வெளங்கலையே என்பது பாப்பையாவின் தமிழ் வழக்கு). பொதுவா காட்டுலெ போனாலே, வழி தவறித்தான் போவோம். அதுலெ கண்ணை வேறு கட்டிகிட்டு போனா.. அதோ கதி தான். (ஆமா… நம்ம சந்தன மர வீரப்பன் அதுலெ கில்லாடி என்கிறார்களே, அவர்கிட்டெ GPS மாதிரி சமாச்சாரமெல்லாம் இருந்ததுங்களா?). அந்தமான் தீவுகளுக்கிடையே ஹெலிகாப்டர் (உழங்குவானூர்தி) & Sea Plane (கடல் விமானம்) ஆகியவற்றில் பயணம் செய்யும் போது, மேகங்களுக்கு நடுவே போகும் போதும் அனாவசியமாய் இந்த ”கண்கட்டு வித்தை” என்று சொல்வார்களே, அது தான் ஞாபகத்துக்கு வரும். அதிலும் ”இந்த ஜி பி எஸ்ஸை முழசா நம்பிடாதீங்க”ன்னு வேறெ அங்கங்கே எழுதியிருக்குது படிச்சாலும் கூட கதி கலங்கும். (ஆமா.. அழகான கண்ணைக் காட்டி மயக்கி அலைக்கழிக்கும் மகளிரை எந்த லிஸ்டில் சேக்க??)

அதே மாதிரி ஒரு கோரிக்கைக்கு எந்த பதிலும் இல்லாட்டி, கிணத்திலெ போட்ட கல்லு மாதிரி என்பார்கள். ஆமா, கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்கிறார்களே! அந்த கிணத்துக் கல்லு மட்டும் ஒண்னும் ஆகாதா என்ன? வெளங்கலையே!!! சமீபத்தில் டெல்லி போன போது, குதுப்மினாரை கொஞ்சம் எட்டிப் பாத்தேன்.. இல்லை இல்லை அன்னாந்து பாத்தேன். அதே வளாகத்தில் கிணறு ஒன்றும் இருந்தது. கெணத்தெக் காணோம் என்று வடிவேல் செய்யும் கலாட்டாவை மனசிலெ நெனைச்சி சிரிச்சிகிட்டே எட்டிப் பாத்தேன். கெணறு முழுக்க நம்மாளுக பிளாஸ்டிக் பாட்டில்களை எறிந்து வைத்திருந்தனர். இப்பொ அதெயும் பூட்டி வச்சிருக்காக. நல்லது தான்.. அந்த பிளாஸ்டிக் பாட்டில்களை எடுத்துட்டு பூட்டி வச்சா அச்சா ஹோகா.. தில்லி அரசு அல்லது அரசி யோசிக்கட்டும். இல்லாங்காட்டி கிணத்திலெ போட்ட பிளாஸ்டிக் மாதிரி என்று எழுத ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

கள்ளக்கடத்தல் செய்வதை திறமையோடு செய்வதை மணிரத்னம் நாயகனில் சொல்லிக் கொடுத்தார். (அந்தமானில் இப்பொ கடல் படம் எடுத்து வருகிறார். என்ன சொல்லித் தருவாரோ?) உப்பு மூட்டைகளை கடத்தல் பொருளோடு கட்டி கடலில் போட்டது.. இப்படி எல்லாம் சொன்னா, உங்களுக்கு ஞாபகம் வராது. ”நிலா அது வானத்து மேலே..” என்று பலானதைப் பாத்து ஜனகராஜ் பாட்டு பாடுவாரே… ம்… இப்பொ ஞாபகம் வந்திருக்குமே!!! ஆமா கடத்தல் என்றாலே கள்ளத்தனமா கடத்துறது தானே? அதுலெ கள்ளக் கடத்தல் எதுக்கு? காதல் என்றால் ஒருவனின் அன்பை அடுத்தவரிடம் கடத்துவது. கள்ளக்காதல், என்பது அடுத்தவரின் காதலியையே கடத்துவது. இப்பொ ஓகே தானே.

ஒரு காலத்தில் சோழர்கள் வந்து வென்று சென்ற அந்தமான் தீவுகளான நன்கவ்ரி தீவின் அருகில் இருக்கும் டிரிங்கட், தெலிங்ச்சான் போன்ற தீவுகளுக்கு அலுவல் காரணமாய் போயிருக்கேன். சின்னஞ் சிறு ஓடம் வைத்துத்தான் போக வேண்டும். நிகோபாரி மொழியில் ஹோடி என்கிறார்கள். கடல் மட்டம் ஏறி இருக்கும் போது மட்டும் தான் பயணம் செய்ய முடியும். எந்த வழியாக, எப்படி போக வேண்டும் என்பது அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஓடத்தில் கயிற்றுடன் கட்டிய கல்லும் தவறாமல் இருக்கும். ஓடத்தை நிறுத்தி வைக்க உதவும் நங்கூரமே அது தான்.

500 பயணிகள் பயணிக்கும் வகையில் MV Chowra & MV Sentinel என்று தீவுகளுக்கு இடையே சென்று வரும் கப்பல்கள் இருந்தன. அக்கப்பல்கள் சவுரா, தெரெசா போனற தீவுகளில் அவ்வளவு ஆழம் இல்லாத காரணத்தினால் கப்பல் நங்கூரமிட்டு நிற்கும். சில மாலுமிகள் தங்கள் ரிஸ்க் எடுக்க மாட்டோம் என்று ரெண்டு கிலோமீட்டர் தள்ளி நங்கூரம் பாய்ச்சுவர். தீவுவாசிகள் (அனைவருமே நிகோபாரி ஆதிவாசிகள் தான்) அந்த ரெண்டு கிலோமீட்டர் ஹோடியில் வந்து ஏறி இறங்கிச் செல்ல வேண்டும். ரிஸ்க் எடுப்பதெல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிட்ற மாதிரி என்று நினைக்கும் கப்பல் கேப்டன் மஜும்தார் என்று ஒருவர் இருந்தார். கப்பலை எவ்வளவு பக்கத்தில் கொண்டு வரமுடியுமோ அம்புட்டு பக்கம் கொண்டு வருவார். அவரை நிகோபாரி மக்களும் மரியாதை செய்து தெய்வமாய் பாவித்தார்கள். எப்படி அவருக்கு மட்டும் இப்படி சாத்தியம் என்ற போது கிடைத்த தகவல். இவர் நங்கூரம் இடாமல் காற்று வாக்கில் தவழ விட்டு அவசர காலத்தில் போக தயாராய் இருந்தது தான் என்று பதில் சொன்னார்.

கல்லில் கட்டி கடலில் எறிவது அந்தக் காலத்து தண்டனை. தசாவதாரம் படத்தில் சைவர்களை கொடுமைக்காரர்களாய் காட்டும் காட்சி வருகிறது. வைணவரான கமலை இப்படி சைவர்கள் கல்லில் கட்டி கடலில் போடுவார்கள்.(ஆமா கமல் வைணவரா என்று கேக்காதீங்க… இதெப்பத்தி ஆத்திகம் நாத்திகம் கமல்த்திகம் என்று ஒரு போஸ்ட் ஏற்கனவே போட்டிருக்கேன்). சமணம் ஓங்கி இருந்த காலத்தில் சைவர்களை இப்படி செய்திருக்கிறார்கள். நற்றுணையாவது நமச்சிவாயமே என்று சொல்லி பாயன்ஸியினை மாத்தி மிதந்து வந்ததாய் தேவாரம் சொல்கிறது.

இம்புட்டு பாத்துட்டு, கம்பர் கிட்டெ கேக்காமெப் போனா, அவர் கோவிச்சிக்க மாட்டாரு?? கல்லைக் கட்டி கடலில் எறிந்த கதை ராமாயணத்திலும் வருது. கம்பர் காதையில் வரும் கிளைக் கதை: இரணியன் வதைப் படலம். இது ஏதோ நம்ம சீரியலில் யாரோ ஒருத்தருக்காய் சில கேரக்டர் கொடுக்க கதை நீளுமே, அப்படித் தான் தெரியுது. ராமாயணத்தின் தொடர்பே இல்லாத (இப்படி 100% சொல்லிட முடியாது) பக்த பிரகலாதன் படம் கொஞ்சம் ஒரு ரீல் ஓட்டிக் காட்டுறார் நம்ம கம்பர். (அது அந்தக் காலத்து இலவச இணைப்பா இருக்குமோ?)

எல்லரும் கல்லைக் கட்டிக் கடலில் எறிய, கம்பர் வரியில் மலையோடு கட்டி கடலில் எறிந்தார்களாம். (சாரி.கொஞ்சம் ஓவர் என்று மதன் பாணியில் சொல்லாமல் சொல்லியிருப்பாரோ?) திருமாலின் பெயரை பிரகலாதன் சொல்ல, அந்த மலை மரக்கலம் ஆகாமல் சுரைக்குடுவையா ஆயிச்சாம். பாட்டெப் பாக்கலாமா??

நடு ஒக்கும் தனி நாயகன் நாமம்
விடுகிற் கின்றலன் ஆகலின் வேலை
மடுவொத்து அங்கு அதின் வங்கமும் அன்றாய்
குடுவைத் தன்மையது ஆயது குன்றம்.

என்ன தான் நீங்க கல்லைக் கட்டிக் கடலில் போட்டாலும் கம்பன் போஸ்டிங்கள் தொடரத்தான் செய்யும்.

கடல் முதல் குடம் வரை


“நீங்க உண்மையிலேயே சிவில் இஞ்சினியரிங்க் தான் படிச்சீங்களா..?? பேசாமெ தமிழ் வாத்தியார் வேலைக்குப் போயிருக்கலாமே..!!!” – இப்படி என் தர்ம பத்தினி அடிக்கடி கேட்பதுண்டு. இந்த மாதிரி எழுத ஆரம்பித்தது முதல் அடிக்கடி இந்தக் கேள்வி வருது வீட்டில். ஆனா சமீப காலமா என்னை அறிமுகம் செய்பவர்கள் கூட முதலில் இவர் RTI ல் Expert என்று ஆரம்பித்து பின்னர் தான் இஞ்சினியர் என்று அறிமுகம் தொடர்வர்.. என்ன செய்ய?? நானும் இஞ்சினியர் தான் இஞ்சினியர் தான் இஞ்சினியர் தான் என்று வடிவேல் பாணியில் மூன்று முறை கத்த முடியுமா என்ன??

சரி எல்லாருக்கும் தேவையான குடிநீர் பிரச்சினை பத்தி எழுதி அந்த கேள்வி கேட்கும் ஆட்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சி செய்யலாம் என்ற நோக்கில் தான் இந்த போஸ்ட் வருகிறது. (வழக்கம் போல் கம்பர் வந்தால் அதற்கு நான் பொறுப்பாளி கிடையாது). கடந்த செப்டம்பர் 15 பொறியாளர் தினத்தன்று ஒரு Technical Presentation தரும் பொறுப்பு என் தலையில் வந்து விழுந்தது. சாதாரணமாய் இந்த மாதிரி வேலைகள் என் தலையில் ஜம்முன்னு வந்து விழும்.

கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கும் மேலாய் அந்தமானில் கொட்டித் தீர்க்கும்
மழை. வானம் கொட்டியவை எல்லாம் வீனே கடலில் போகும் விநோதம். மழையை என்றைக்கோ ஒரு நாள் அதிசயமாய் பாக்கும் ராமநாதபுர மாவட்ட மக்களுக்கு இந்த மாமழை பார்த்து பொறாமை தான் வரும். 1970களில் பரமக்குடியின் வீட்டில் ஆள் உயர குழாயில் எப்பொ தொறந்தாலும் தண்ணி வரும். 80 களில் வீட்டில் தரையை ஒட்டி குழாய் இருந்தது. 90களில் தெருவில் வந்து விட்டது. 2000 ஆண்டு ஆளுயர பள்ளத்தில் இருந்து தண்ணி இறைக்கும் அவலம். 2010 முதல் அடி பம்ப் காலம். 2020ல் மின்சார பம்பு போட வேண்டி இருக்குமோ??? (அது சரி.. மின்சாரம் 2020ல் இருக்குமா??)

சரி… மழை நீர் சேகரிப்பு பத்திய டாபிக் பேசினா ரொம்பவும் பொருத்தமா இருக்கும்னு நெனைச்சி தயார் செய்ய ஆரம்பிச்சேன். Engineers Day செமெ மழையோடவே விடிஞ்சது.. நம்ம டாபிக்குக்காகவே தொடர்ந்து பெய்த மாதிரி.. அந்த அளவு ஊத்து ஊத்து என்று ஊத்தியது (அது சரி .. செமஸ்டர் பரிச்சை சரியா எழுதாமெ போனா, ஊத்திகிச்சின்னு ஏன் சொல்றோம்??) நெனைச்ச மாதிரியே அந்த டாபிக் அன்னெக்கி களை கட்டியது. மற்றவர்கள் உலக சமாச்சாரங்களை படம் போட்டு காட்ட, நான் மட்டும் உள்ளூர் பிரச்சினை பத்தி பேசினா.. கேக்க கசக்குமா என்ன??

தண்ணி பத்தின கணக்கு பாத்தா.. இப்பவே கண்ணெக் கட்டுதே…? ஒலகத்துலெ 70% தண்ணிதான் (அந்த தண்ணியெக் கணக்கிலெயே சேக்கலை). அதிலெ வெறும் 3% தான் குடிக்க லாயக்கா இருக்காம். அதிலும் 1% தான் கைக்கு எடும் தூரத்திலெ இருக்கு. மத்த 2% துருவப் பகுதியிலெ மாட்டிக் கெடக்குது. உலகத்து தண்ணி மொத்தத்தையும் ஒவ்வொரு ஆளுக்கும் கூறு போட்டு குடுத்தாலும் ஆளுக்கு 5100 கணமீட்டர் அளவுக்கு தண்ணி கெடைக்குமாம் 2025 ல் கூட. (அது 1989ல் 9000 Cubic Meter ஆக இருந்தது என்கிறது படிச்சா சோகம் அதிகமாகும்..)

அந்த அளவு தண்ணியே பொது மக்கள் தேவைக்கு போதுமானதா இருக்கும். ஆனாலும் பற்றாக்குறை.. குடம் குடமா வரிசையா நிக்குதே?? ஏன்.. அப்படி? ம்.. அப்படி கேளுங்க.. நம்ம ஆளுங்க இருக்காகலே உலக மக்களின் மூன்றில் இரு பகுதி மக்கள் கால்வாசி மழை பெய்யும் பகுதியிலெ இருக்காய்ங்க.. அப்புறம் இந்த மழை இருக்கே மழை.. அது நம்ம ரமணன் சொல்ற மாதிரி.. வரும்.. ஆனா வராது என்று பூச்சாண்டி காட்டும். உலகளாவிய கதையும் இது தான்.

சிரபுஞ்சி தான் உலகத்தின் அதிக ஈரமான பகுதி (குடை வியாபாரம் அங்கே பிச்சிட்டு போகுமோ?). வருட மழை நாலு மாடி அளவுக்கு பெய்யுமாம். ஆனாலு மழை இல்லாத சொற்ப காலம் குடிநீர் தட்டுப்பாடு இருக்குமாம். அந்தமானும் இதுக்கு விதி விலக்கு கிடையாது. 4 மாசம் தண்ணி கஷ்டம். (ராமநாதபுரம் அளவுக்கு இல்லை தான்) 8 மாசம் நல்ல மழை பெய்யும். வள்ளுவர் சொல்லும் நல்ல மழை என்பது தேவையான நேரத்தில் தேவையான அளவுக்கு தேவையான இடத்தில் பெய்யும் மழையாம். அதாவது மனைவியின் அன்பு அல்லது கோபம் மாதிரி. (இது வள்ளுவர் சொல்லாததுங்க)

அந்தமான்லெ அதிகமா காடு தான் இருக்கு. மரங்கள் எல்லாம் வெட்டி அணை கட்டுவது என்பது இயற்கைக்கு செய்யும் துரோகம் ஆயிடும். ஒரு யோசனை வந்தது NCC Officer ஒருவரின் மூளையில். கடலை ஒரு ஓரம் கட்டி அணை கட்டினா எப்படி என்று. அதன் ஆய்வு நம்ம கைக்கு வந்தது. Fishing & Shipping வேலைக்கு லாயக்கில்லாத… கடலின் ஒரு பகுதியை அணை போட்டு தடுத்து குடிநீர் பிரச்சினைக்கு முடிவு கட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அப்பொ கடல் நீரின் உப்பை எப்படி எடுக்க.?? நம்ம டாஸ்மாக் ஐடியா தான்.. காட்டமா இருக்கும் சரக்கில் தண்ணி கலக்குறோமே, அதே … அதே தான். அப்படியே மழை தண்ணியை அதுலெ கலக்க கலக்க மூணு வருஷத்தில் நல்ல தண்ணி ஆகும் என்று Delhi IIT உறுதி செய்தது.

இவ்வளவு சொல்லிட்டு கம்பர் வரலை என்றால், அது நல்லாவா இருக்கு? கம்பர் ஏதாவது ஐடியா வச்சிருப்பாரோ? கேட்டேன். அவரோ, “பேசாமெ கடல்நீர் முழுசா வெளியே போகுற மாதிரி ஒரு மதகு வச்சிட்டா??” இப்படி கேக்கிறாரு கம்பர். என்ன சாமி இது… இப்படி யாராவது செஞ்சிருக்காகளா? மறுபடியும் கம்பர்: “நான் எழுதின ராமாயணம் ஒழுங்கா படிச்சா இந்த சந்தேகம் வராது”. ஓடிப் போய் படிச்சா… ஆமா…விளங்குது.

அனுமன் முதன் முதலாக Gate way of Lanka வைப் பார்க்கிறார். அது எப்படி எல்லாம் இருக்கு என்பதாய் சொல்கிறார் அனுமன் வாயிலாக. மேருமலை வச்சி செய்த வழியோ? தேவலோகம் போகும் படிக்கட்டோ? ஏழு உலகமும் ஆடாமல் இருக்க முட்டு கொடுத்த தூணோ? இவ்வளவு சொல்லிட்டு, கடல் நீர் வழிந்தோட செய்த மதகோ…?? என்ற கேள்வியோடு அனுமன் பார்வையில் செல்கிறது கம்பன் அறிவியல் பார்வை.?

மேருவை நிறுத்தி வெளி செய்ததுகொல்? விண்ணோர்
ஊர் புக அமைத்த படுகால்கொல்? உலகு ஏழும்
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ?
நீர்புகு கடற்கு வழியோ? என் நினைந்தான்.

கம்பனின் வேறு பார்வையினை வேறு நாளில் பார்ப்போம்.

பொறி… பொறி… தீப்பொறி


ஒரு படத்தில் வடிவேல் நடந்து வரும் போதே, செருப்பில் தீப்பொறி பறக்கும்.. எப்படீண்ணே??…  என்று கேட்பவருக்கு, எல்லாம் ஒரு கிரைன்ரா… அதெல்லாம் ஒரு செட்டப்பு…. ஒட்டப்பு என்று சொல்லும் சீனும் சூப்பர் ஹிட்டாக இருக்கும். அப்படி பில்டப் விடுபவரை வைக்கப்போருக்கு தீவைக்க அழைக்கும் அக்கப்போர் இருக்கே.. அது ஒரிஜினல் காமெடியை விட சூப்பர்.

நீ நடந்தால் நடை அழகு… என்பார்கள். ஆனால் நடையில் தீப்பொறி பறக்கும் ஐடியா எப்படி வந்திருக்கும்? பாபா படம் உள்ளிட்ட பல ரஜினி படங்களில் அந்த தீப்பொறி பறக்கும். ராமநாராயணன் இயக்கத்தில் ஒரு யானை நடையிலும் அந்த தீப்பொறி பறந்ததை பாத்ததாய் நினைவு.

அது சரி… நடை ஒரு பக்கம் நடக்கட்டும். பேச்சுக்கும் ஒரு நடை இருக்கு என்கிறார்கள். அந்தக் காலத்தில் திரு விக நடை, அண்ணா நடை என்றார்கள். அது பாடப்புத்தகத்தில் வந்ததாலோ என்னவோ, அதை யாரும் பின்னர் பின்பற்றவில்லை. (கலைஞர் & வைகோ ஆகியோர் விதிவிலக்கு).

பேச்சில் பொடி வைத்து பேசுவது என்கிறார்கள். பொடி போட்டால் தான் பேச்சு வரும் என்று பேசியவர்களும் உண்டு. காரம் மணம் குணம் இப்படி எல்லாம் சேர்ந்து இருக்கிறதுக்குப் பெயர் தான் பொடி வைத்துப் பேசுதல் என்று வைத்துக் கொள்ளலாமா?? பொடி வச்சி இப்படித்தானே சொல்ல முடியும்?

பொடி பறக்கப் பேசியது போய் தீப்பொறி பறக்க, பேச்சு ஆரம்பித்தது பின்னர் தான். தீப்பொறி அடைமொழியுடன் ஆறுமுகம் ஒரு கலக்கு தமிழ்நாட்டையே கலக்கினார் போங்க. அதை கேக்க கட்சி ஆட்களையும் தாண்டி எல்லாரும் போவாகளாம். லேடீஸ் மட்டும் கேட்பதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஏன்? என்பதற்கு என்னிடம் பதில் இல்லை.

பேச்சு நடையில் சுகிசிவம் ஸ்டைல் அழகோ அழகு. டீவியில் வரும் அவர் பேச்சை விட மேடைப்பேச்சு தனி ரகம் தான். அதில் மனசுக்குள் ஒரு தீப்பொறியை உங்களுக்கே தெரியாமல் ஏத்தி வைக்கும் சக்தி வாய்ந்த பேச்சு அவரின் பேச்சு. ஒரு விஷயத்தை ஒரு ஃப்ளோ வில் கொண்டு போய், சொல்ல வேண்டிய சேதியை, சொல்லும் போது மட்டும் High Pitch இல் சொல்வது அவரிடம் கற்க வேண்டிய கலை. சிங்கப்பூரில் அவர் பேசிய பேச்சுக்கள், கீதை பற்றி வளைகுடா நாட்டில் பேசிய ஆடியோவும், நால்வர் பற்றி மதுரையில் பேசிய பேச்சுக்களுகளும் எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காது.

அதற்கு முற்றிலும் வித்தியாசமாய், அருவி கொட்டுவது போல் வந்து விழும் வார்த்தைகள்.. அதன் சொந்தக்காரர், தமிழருவி மணியன். அவரின் பேச்சில் தீப்பொறி என்று தேடினால் ஒன்றுக் சிக்காது. ஆனால் பேச்சை முடித்தால் ஒரு சோகம் வரும்.. பேச்சை இதற்குள் முடித்து விட்டாரே என்று. பல மணி நேரங்கள் அவர் சொன்ன செய்திகள் அசை போட வைக்கும். அதை விட பெரிய்ய்ய தீப்பொறி என்ன வேண்டும்??. செஞ்சட்டைக்காரர்கள் ஜீவாவைப் பற்றிப் பேசியதை விட இந்த வெள்ளைச் சட்டைக்காரர் தான் அதிகம் பேசி இருக்கிறார். காமராசரும் ஜீவாவும் இல்லாமல், இவர் பேச்சுக்கள் முடிவதில்லை. தமிழ் கூறும் நல் உலகம் ஒரு முறை காது குடுத்துக் கேட்க வேண்டும் இவர்களது மேடைப்பேச்சுகளை.

எதையாவது பாத்தா ஏதாவது பொறி தட்டணும் அல்லது தட்டும். நம்ம ப்ளாக்கில் எழுதுவதும் இப்படி பொறியில் சிக்கிய செய்திகள் தானே. மொழி படத்தில் பிரகாஷ்ராஜ் சொல்லிய காதலின் இலக்கணம், பாத்தவுடன் பொறி தட்டி அப்படியே மனசுக்குள் குண்டு பல்பு எரியுணுமாம்.. (அதுக்கு மட்டும் கரெண்ட் கட் என்ற பேச்சுக்கே இடமில்லை)..

தீப்பொறி இருக்கோ இல்லையோ, ஆனா பெரியவர்கள் மத்தியில் ஒரு ஒளிவட்டம் தெரியும். சாமி படம் போடும் ஆசாமிகள் மறக்காமல் அந்த ஒளிவட்டத்தையும் சேர்த்தே வரைகிறார்கள்.

பீச்சில் உலாவும் காதல் ஜோடிகளைப் பாக்கும் போது, இந்த மூஞ்சிக்கெல்லாம் காதல் ஒரு கேடா? என்று கேட்க வேண்டும் என்ற ஒரு ஒரு பொறி தட்டும். கேக்கவா முடியும்? சமீபத்தில் ஒரு ஆதரவான SMS வந்தது. “நம்மை நிராகரித்த செமெ ஃபிகர்களின் தகரடப்பா தலை கணவர்களை பார்க்கும் போது நமக்கு ஏற்படும் சந்தோஷம் அளவிடமுடியாது”. (அதே மாதிரி அவகளும் யோசிப்பாகள்லே..என்று உங்களுக்கு பொறி தட்டுதா என்ன??)

தீப்பொறி வர, ஏதோ ரெண்டு உரசனும். அட்லீஸ்ட் பக்கத்திலேயாவது வர வேண்டும். நம்ம வள்ளுவர் என்ன சொல்றாரு தெரியுமா?? தூரமாப் போனாலே சுடுமாம். (நீங்கின் தெறூஉம்). மேலும் விவரங்களுக்கு பாப்பையாவை புடிங்க போதும்.

சினிமாவில் ஒரு பாட்டு. தீப்பொறி பறக்குது. உரசினது எது தெரியுமா? காதலன் காதலியின் நகங்கள்.

எடுத்துக் கொடுக்கையிலெ இரு விரல் மோதும்
நகங்கள் உரசிக்கொண்டால் அனல் உருவாகும்
உள்ளங்கை சூடுபட்டு  மலர் கொஞ்சம் வாடும்
மங்கைநீ சூடிக்கொண்டால் அது கொஞ்சம் ஆறும்.

இதுக்கும் அருஞ்சொல் பொருள் விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். அதுக்காக சும்மா உரசிப் பாக்காதீங்க… அப்புறம் வரும் தீக்காயங்களுக்கு நான் பொறுப்பு கிடையாது.

வம்படியா எதையாவது எழுதி அப்புறம் கடைசியா கம்பராமாயணத்தை கொண்டு வருவது என்பது, நானே யோசிக்காமல்  என்னிடம் வந்து சேர்ந்த திட்டம் அது. சும்மா வெளையாட்டா ராமாயணம் படிக்கப் போக (வயசு ஆயிடுச்சி என்று என் இனிய பாதி சொல்வது பார்வையிலேயே தெரியுது) அப்பப்பொ ஏதாவது பொறி தட்டும். அதை குறிப்பு எடுத்து வைப்பேன். பின்னர் அப்படி இப்படி யோசிச்சி.. 150 போஸ்ட் தாண்டி போய்கிட்டிருக்கு.

இன்றைய பொறி தட்டிய சமாச்சாரம்.. அந்த தீப்பொறி தான். அனுமன் முன் போரிட வந்த அரக்க சேனை அப்புட்டு இப்புட்டுன்னு சொல்ல முடியாத ஆளுங்களாம். கூப்புட கூப்பிட வர, கூப்பிடு தொலைவிலேயே நின்றார்களாம். நம்மூர் பிரியாணி பொட்டலமும் ஒரு கட்டிங்கும் தரும் கூட்டங்களில் எப்படி கூட்டம் அலைமோதுமோ, அப்படி இருந்ததாம். அம்புட்டு கூட்டம். அந்தக் கூட்டம் காரணமா அவங்க கையிலெ இருக்கிற ஆயதங்கள் எல்லாம் ஒன்னோடு ஒன்னு மோதி, அதனாலெயே தீப்பொறி பறக்குதாம். அது அப்படியே மேலே பொயி.. அந்தப் பொறி மேகத்தையே பத்த வைக்கப் போயிடுச்சாம்.. சும்மா சொல்லப்படாது. கம்பர் உண்மையிலேயே கலக்கிட்டார். கற்பனையின்  உச்சம் கண்டவர் அவர்..

கூய்த்தரும்தொறும் தரும்தொறும் தானைவெங் குழவன்
நீத்தம் வந்து வந்து இயங்கிடும் இடன் இன்றி நெருங்க
காய்த்து அமைந்த வெங் கதிர்ப்படை ஒன்று ஒன்று கதுவி
தேய்ந்து எழுந்தன பொறிக் குலம்மழைக் குலம் தீய.

ஆயுதங்கள் மோதுவதை வார்த்தைகள் மோதுவதாயும் வைத்து எழுதி இருக்கும் ஸ்டைல் கவனிச்சீங்களா?? தரும்தொறும், வந்து, ஒன்று, குலம் ஆகியவை ரெண்டு தடவை வந்து மோதி பொறி ஏத்துதாம்.

அது சரி.. உங்களுக்கு எப்போதாவது ஏதாவது பொறி தட்டியிருக்கா??

ஓவர் பில்டப்பும் அடக்கி வாசித்தலும்.


இப்பொல்லாம் சென்னை மாதிரியான ஊர்களில் டவுன் பஸ்களில் கூட வெளி மாநிலத்து ஆசாமிகளின் பயணம் தெரிகிறது. அந்த அளவுக்கு வேலை வாய்ப்புகள் மற்றும் மேற்படிப்பு வசதிகள் தமிழகத்தில் அதிகம் இருப்பதை காட்டுகிறது (மின் வெட்டையும் மீறி…). ஆனால் எப்போதும் பல மாநிலத்தவர்களோடு கலந்து வாழும் வாழ்க்கை அந்தமான் வாழ்க்கை.

மாடிக் குடியிருப்பில் இருக்கும் பக்கத்து வீட்டுக்காரர் பீகார் மாநிலத்தவர் (அவர் பையன் என் கூட சேந்து தமிழ் பேச கத்துகிட்டு வர்ரான்). கீழ் தளத்தில் உ.பி & ஆந்திர மாநிலத்தவர். அதனாலெ தான் அந்தமானை மினி இந்தியா என்கிறோம்.

சினிமாவிலும் இந்த டாபிக் வச்சி சூப்பரான ஒரு படம் வந்தது பாரத விலாஸ் என்று. சிவாஜி நடிப்பில் வழக்கம் போல முத்திரை பதித்த படம் அது. அதில் அவர் தன் மனசாட்சியுடன் பேசுவது போல் TMS குரலில் பாட்டு வரும். சக்கை போடு போடு ராஜா…உன் காட்டுலெ மழை பெய்யுது.

அதில் நடுவே ஒரு வசனம் வரும். “கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்”. என்னதான் பில்டப் கொடுத்தாலும் ஒரிஜினல் தான் எப்போதும் இருக்கும் என்று சொல்லாமல் சொல்லும் தத்துவம் தான் அது.
பில்டப் செய்வது என்று ஆரம்பித்து தமிழ் சினிமாக்களில் தேடினால், ஏகமாய் காமெடிகள் சிக்கும். கல்யாணப் பரிசு தங்கவேலுவின் எழுத்தளர் பைரவன் பில்டப், நாகேஷின் ஓஹோ புரடெக்சன் என்று ஆரம்பித்து சமீபத்திய விவேக் & வடிவேல் வரை தொடரும். (நடுவே ரஜனி & விஜய் கூட அந்த லிஸ்டில் வருவார்கள்… ஹீரோக்கள் என்பதால் அவர்களை ஓரமாய் வைத்து தொடர்வோம்)

துபாய் ரோட்டை பத்தி வடிவேல் சொல்லும்…. சாரி… பில்டப் தரும் காட்சி எப்பொ பாத்தாலும் சிரிப்பாவே இருக்கும். “சோத்தை அள்ளி வச்சி ரசத்தை ஊத்தி கொளைச்சி அடிக்கலாம்டா” என்று சொல்லுவது தான் பீக். நடுவே துபாயில் திருநீறு வைச்சி என்றும் பிட்டு போடுவது நல்ல கலக்கல் தான்.

“கெணத்தைக் கானோம்” என்று அலறி அடித்தபடி வடிவேல் வரும் இன்னொரு காமெடி இருக்கு. சிவில் இஞ்சினியர்களை வைத்து இப்படி ஒரு காமெடி அடிக்கடி பேசப்படுகிறது. (விஸ்வேஸ்வரய்யா உள்ளிட்ட அத்துனை சிவில் பொறியாளர்களும் மன்னிக்கவும்.)

காசு ஆசை பிடித்த ஒரு சிவில் இஞ்சினியர் ஒரு கிணறை தோண்டாமல், தோண்டியது போல் ரெக்கார்ட் பில்டப் செய்து காசு பாத்து கிளம்பிட்டாராம். அதுக்கு பின்னால் வந்தவருக்கும் அது தெரிந்து விட்டது. அவர் என்ன சளைத்தவரா என்ன?? அவர் இருந்த 5 வருஷமும் பராமரிப்பு செஞ்ச மாதிரி கணக்கு காட்டி காசு சாப்பிட்டாராம். பின்னர் 5 வருடம் நல்ல மனுஷன் வந்து ஏதும் செய்யாமல் போய் விட்டார்.

அடுத்த முறை வந்தவர் பாத்தார். அட 5 வருஷமா பராமரிப்பே இல்லாமல் இருக்கே. அப்பொ சிறப்பு மராமத்து வேலை செய்ய ஆரம்பித்து ஸ்வாகா செய்து விட்டு அவரின் tenure முடித்தார். சமீபத்திய போஸ்டிங்கில் வந்தவர் காலத்தில் தான் அந்த வடிவேலுவின் காமெடி வந்த காலம். அவர் யோசித்தார். அட… நம்ம ஏரியாவிலெ இப்படி ஏதும் கம்ப்ளெய்ண்ட் வந்தால்???? என்ன செய்வது யோசித்தார். கிணறு தோண்டி பல வருடங்கள் ஆயிடுச்சி.. இனி மராமத்து செய்ய முடியாது. இதெ மூட்றது பெட்டர் என்று மூடும் செலவை அவர் பாக்கெட்டில் போட்டுகிட்டாராம்.

இது கொஞ்சம் ஓவராவே பில்டப் செய்த சேதி மாதிரி தானே தெரியுது??

என் பையன் கிட்டெ கேட்டேன், “உங்க வாத்தியார் யார் பேராவது ரொம்ப உனக்கு பிடிச்சிருக்கா??”

“தெரியும். அம்பேத்கார் பத்தி தானே சொல்ல வர்ரீங்க. அம்பேத்கார் என்பது பீமின் டீச்சர் பெயர் தானே?” இப்படி பதில் வந்தது முந்திரிக் கொட்டை போல் (இந்தக் காலத்து பசங்க கிட்டெ வாயே திறக்க முடியறதில்லை. அப்பொ பொன்டாட்டி கிட்டெ??..ம்…மூச்…)

அம்பேத்கார் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். கீழ் சாதி என்று ஒரு குளத்தில் தண்ணீர் சாப்பிட மறுக்கப்பட்ட காலம் அது. அவரும் அவரது ஆதரவாளர்களும் குளத்தில் இறங்கி தண்ணீர் குடித்து வந்தனர். அதை அறிந்து ஜாதி வெறியர்கள் மாட்டு சாணம், மாட்டின் சிறுநீர் (கோமியம் – உபயம் பாக்யராஜ்) ஆகியவை ஊற்றி பூஜை செய்து, மூன்று நாள் பயன் படுத்தாமல் இருந்தார்களாம். [ஆர். முத்துகுமார் எழுதிய அம்பேத்கார் புத்தகத்தில் இன்னும் பல சேதிகள் படிக்க முடிந்தது]

இது கொஞ்சம் ஓவரா இல்லெ?? இது என் பையன் கேட்ட கேள்வி. அவனால் நம்பவே முடியவில்லை இப்படி எல்லாம் நடந்திருக்கிறது என்பது.

ஓவரா பில்டப் தருவதின் எதிர்ப்பதம் அடக்கி வச்சித்தல். ஒன்னுமே தெரியாமெ இருக்கிறவன் தேமேன்னு இருக்கிறது இந்த லிஸ்டில் வராது. நானும் அந்த லிஸ்டில் தான் இருக்கேன்.

அப்புறம்… “இப்படித்தான் ராமாயணத்தில்…” என்று அடிக்கடி எழுதி வரும் நான் ராமாயணம் முழுசாக்கூட படிக்காமெ, ஆரம்ப பாடத்தில் இருக்கும் கத்துகுட்டி.

அதுக்கு நேர் ஆப்போசிட்டா, எல்லாம் தெரிஞ்ச்சி வச்சிருப்பாக… ஆனா சொல்றதுக்கு முன்னாடி, “ உங்களை விட எனக்கு ஒன்னும் தெரியாது தான். இருந்தாலும் என் சிற்றறிவுக்கு…” இப்படி சொல்வது தான் அடக்கி வாசித்தல்.

இப்படித்தான் ராமாயணத்தில் ஒரு சூப்பர் சீன் வருது.

அனுமன் சீதையை சந்தித்த இடம். தான் ராமனின் தூதன் என்றும், விஸ்வரூபம் எடுத்துக் காட்டிய பின்னர் அடக்கமாய், தேவி வாருங்கள் உங்களை நான் ராமன் வசம் கூட்டிச் செல்கிறேன் என்கிறார். அதற்கு மறுமொழி சொல்லும் சீதையோ, தன்னால் அதுக்கு ஓகே சொல்ல முடியாது என்பதற்கு லீகலா காரணங்கள் சொல்கிறார் பல.. இதோ அவற்றில் சில…

1. இலங்கை வரும் போதே பல சிக்கல்களை அனுபவித்த அனுமனுக்கு தன்னை சுமந்து திரும்பும் போது அதே சிக்கல் வந்தால் அனுமனுக்கு அல்லவா சிக்கல் வரும்?
2. ராமரின் வீரத்தை குறைத்த மாதிரி ஆயிடாது??
3. ராவணன் என்னை கொண்டு வந்த மாதிரியே வஞ்சனையா, அனுமன் என்னை கொண்டு போவது.. நல்லாவா இருக்கு?
4. இராவணன் & இலங்கைக்கு பாடம் புகட்ட வேண்டாமா?
5. என் கற்பை ராமரிடம் நிரூபிக்க வேண்டாமா?
6. ஆடவரை தீண்டாது இருகும் நான், நீயும் ஆடவன் அல்லவா??
இப்படி நச் நச் என்று போகுது பாயிண்ட்..

ஆனா நான் சொல்ல வந்த சேதி இது இல்லை.

இவ்வளவு லாஜிக்கலா யோசிக்கும் சீதை சொல்லும் முன் அடக்கி வாசித்தது தான் நான் சொல்ல வந்த செய்தி.

சீதை அனுமனிடம் முதலில் சொன்னது இது தான்: நீ சொல்றது ஒனக்கு ஒன்னும் பிரமாதமான வேலையா இருக்காது தான். ரொம்ப ஈஸியாவும் செஞ்சிடுவேதான். நல்லாத் தான் யோசிக்கிறே.. நான் ஒரு பெண். பெரிய(!!!) சிற்றறிவு தான் இருக்கு. எனக்கு என்னமோ இது சரிப்பட்டு வராதுன்னு படுது. இது என்னோட கருத்து.

இப்படி அடக்கி வாசிச்சிட்டு அப்புறம் தான் அத்தனை லா பாய்ண்டும் வருது சீதையிடமிருந்து.

அறியது அன்று நின் ஆற்றலுக்கு ஏற்றதே
தெரிய எண்ணினை செய்வதும் செய்தியே
உரியது அன்று என ஓர்கின்றது உண்டு அது என்
பெரிய பேதமைச் சில்மதிப் பெண்மையால்.

இதனால் அறியப்படும் நீதி: பில்டப் செய்யலாம். ஆனா ஓவர் பில்டப் கூடவே கூடாது. அடக்கி வாசிக்கலாம். ஆனா தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் சொல்ல வேண்டிய சேதியை சொல்லியே ஆக வேண்டும்.

இது சீதை சொன்ன கீதை.
மீண்டும் சந்திப்போம்.

அது போல் வருமா? இந்தப் பொன்னாள்?


ஆண் குரல் மட்டும் உருகி உருகிப் பாடும் இந்தப் பழைய பாட்டு, தேன்கிண்ணம் போன்ற நிகழ்ச்சிகளில் கண்டிப்பாய் இடம் பெறும். ஆனால் கூடவே வரும் பெண் குரல், வெறும் ஹம்மிங்க் மட்டுமே செய்து கிரங்க வைக்கும் பாடல் அது.. நாம எல்லாத்தையும் உட்டுட்டு அந்த “போல்”… அதை மட்டும் வச்சிட்டு காயை நகர்த்துவோம்.

“அரசியல்லெ இதெல்லாம் சகஜமப்பா” என்று டயலாக் நாம் சொல்லுவோம்.. ஆனா இதுக்கு, முன்னாடி ஏதாவது ஏடாகூடமா ஒரு சேதி நடந்திருக்கனும்.. அப்பத்தான் இந்த சகஜ டயலாக்கை சகஜமா சொல்ல முடியும். சமீபத்திய நிகழ்வு இது தான். ஊழல் பேர்வழி என்று பெயர் வாங்கியவர் கட்சி மாறிவிட்டார். அடுத்த கட்சிக்குப் போயிட்டா ஊழல் கரைஞ்சிடுமா?? ஆளை உட்ட கட்சி கேக்குது.. கங்கையில் சின்ன ஓடை வந்து கலந்தா, அதுவும் புனிதம் ஆவது போல் என்று பதில் சொல்லுது வரவுக் கட்சி.. நமக்கெதுக்கு கட்சி விவகாரம்?? அந்த “போல” இங்கேயும் வந்திடுச்சா?? அடுத்த கட்சிக்கு இல்லெ இல்லெ காட்சிக்கு.. சாரி ஒரு கதைக்குப் போவோம்.. (இது தெரிஞ்ச கதை தானே என்பவர்கள் அடுத்த போலவுக்குத் தாவலாம்).

கங்கைக்கரையில் ஒரு முதியவர் கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தார். தன் மனைவியை கங்கை அடித்துக் கொண்டு போகிறது, என்பதை தெளிவாய்த் தெரிவிக்கிறது அந்த அவலக்குரல். காப்பாற்றப் போனவர்களை அவரே தடுக்கிறார். “ஒரு சாபமமிருக்கு. பாவம் செய்யாத நபர் தான் தன் மனைவியை காப்பாற்ற முடியும்” என்கிறார்.

“இல்லாட்டி… பாவம் செய்தவர் தலை தண்ணீரில் கரைந்து விடும்”. கதை கேட்டு கூட்டமும் கரைந்து விடுகிறது. ஒரு மீனவ இளைஞன் ஜம்மென்று குதித்து கிழவியை கரை சேர்த்தான்.. (இந்த இடத்தில் கிழவி என்று சொன்ன காரணம்… நீங்க பாட்டுக்கு படத்து சீன் மாதிரி தண்ணியை உறுஞ்சும் காட்சி வரும்னு ஜொள்ளு விடாமல் இருக்கத் தான்.)

கூட்டம் வியப்போடு கேட்டது. என்னப்பா?? ஒரு பாவமும் செய்யலையா நீ?? பதில் தெம்போடு வந்தது… ஹ..ஹ…ஹ…. செய்திருந்தேன்.. கங்கையில் மூழ்கினதாலே எல்லாமெ போயிடுச்சி போலெ என்று முடித்தார். (அந்த “போல” அங்கும் ஆஜர்)

இங்கிட்டியும் அங்கிட்டியும் சுத்திப் பாத்தா.. அங்கே வடிவேலானந்தா நிற்கிறார். அவர் பக்கத்திலே யாரோ போலீஸ் மாதிரி தெரியுதே?? பார்த்திபனா இருக்குமோ?? சே..சே.. அவர் பக்கத்தில் இருந்தா வடிவேல் முகத்தில் சிரிப்பு ஏது?? ஒரே அவஸ்தை தானே.. (ஆனா நமக்கு செமெ ஜாலிதான், அந்தக் கூட்டணியால்).. வேற யாரு?? அட நம்ம டைரக்டர் கம் நடிகர் வெட வெட மனோபாலா தான். வ.வே லேசாக தட்டுகிறார் அவர் நெஞ்சை. ரொம்ப பீத்திக்காதெ.. உன்னெயெ தப்பா போலீஸ் வேலைக்கு சேத்தாக போல… (போல வந்ததால் நாம் வந்த வேலை முடிந்தது.. நகர்வோம்)

சொந்தகதை சொல்லலைன்னா எனக்கு தூக்கம் எப்படி வரும்?? என் வீட்டுக்காரியும் அப்பப்பொ என்னையெ கேப்பா.. உங்களை தப்பா இஞ்ஜினியர் வேலைக்கு சேத்துடாங்க போல. பேசாமா தமிழ் வாத்தியாரா போய் பரமக்குடியிலேயே இருந்திருக்கலாம்…(கம்பராமாயணத்தை விடாமல் இருப்பதை குத்திக் காட்டுறாப்பலெ..)

காட்டுறாப்பலெ… வந்தாப்லெ, போனாப்லெ, சொன்னாப்லெ என்ற வார்தைகள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். ஆனா யூஸ் செஞ்சிருக்கீங்களா.. நான் அடிக்கடி யூஸ் செஞ்சிருக்கேன். எப்பொ இதை யூஸ் செய்ய முடியும் தெரியுமா?? உங்களோடு எப்போதோ கூட படித்தவர்.. நண்பர் தான். இப்போது உயர் பதவியில் இருக்காப்லெ. இருக்கிறான் என்று உரிமையுடன் சொல்வதா? அல்லது இருக்கிறார் என்று மரியாதையுடன் சொல்வதா என்ற குழப்பமா?? அந்த “பொலெ” ஐ சேர்த்தா பிரச்சனைக்கு குட் பை. (அது வீட்டுக்காரி பேச்சுக்கும் சொல்லலாம் என்பது சீக்ரட்டான சேதி)

அப்படியே ஊர்க்கதையும் பாப்போமே.. பரமக்குடியில் அந்தக் கால தியேட்டர்களில் படம் பாக்க, பெண்களில் இடுப்பில் வரும் குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது.. தியேட்டர் வரை நடந்து வந்து, டிக்கட் எடுக்கும் நேரத்தில் மட்டும் அம்மா, பெரியம்மா, சித்தி, பக்கத்து வீட்டு அக்கா இப்படி யார் இடுப்பாவது எனது சவாரிக்கு தோதாக கிடைக்கும். ஓசியில் படம் பாத்துட்டு, இடைவேளையில் முறுக்கு, குச்சி ஐஸ் சாப்பிட்டு… வாவ்.. அந்த சந்தோஷம் போல இப்பொ வருமா?? இப்பொ தியேட்டர் என்னமோ ஏசி தான்.. ஆனா மனசுலெ ஏன் இத்தனை வெப்பம்??

அந்தக் கால நடிகைகளில் அபிநய சுந்தரி சரோஜா தேவியை தன் மகள் போல்.. மக படம் போட்டிருக்காங்க.. போய் பாக்கணும்.. என்று பெரியம்மாக்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். இன்று இப்படி எந்த நடிகையையாவது இப்படி கூப்பிட மனசு வருமா? ஆரம்ப கால சுஹாசினி, ரேவதி வேண்டுமானால் சொல்லலாம் போலெ… இப்பொ சமீபத்ததிய நடிகைகளில் சினேகா..?? ஓகே வா???

உங்க மூக்கு சூப்பரா தமண்ணா மூக்கு போல இருக்கு… இப்படிச் சொன்னா என்ன அரத்தம். கொஞ்சம் இலக்கணப் பக்கம் போனால், உவமை என்று சொல்லுவாய்ங்க.. ஐஸ் வைக்க பொய் சொன்னா, அது உலகத்திலெ இல்லாத ஒண்ணை இருக்கிற மாதிரி சொல்றது (இல்பொருள் உவமை அணி); சாதாரணமா நடக்கிறதை இதுக்காகவே நடக்குது போலெ என்று சொல்வது என்ன வகை? (தற்குறிப்பேற்று அணி – இது சரி தானா?? தமிழ் அறிஞர்கள், தவறு என்றால் மன்னிக்கவும்).. இந்த நேரத்தில் என் மனசுல பட்டதை சொல்லியே ஆகனும். எனக்கு தமண்ணா ஓகே.. ஆனா அந்த மூக்கு தான் கொஞ்சம் ஒதைக்குதே..? ஆமா உங்களுக்கு எப்படி இருக்கு??

சரி இத்தனை போல தேடிய பிறகு எங்கே முடிக்க?? வேறு எங்கே.. கம்பராமாயணம் தான்.. கம்பர் உவமை சொல்றதிலெயும் மஹா கெட்டிக்காரர்.. நம்ம லெவலுக்கு தமண்ணாவை வச்சி இவ்வளவு எழுதினா…, பக்தி சிரத்தையோட ராம காவியம் படைத்தவர்… அவர் கண்ணுக்கு உவமை வந்து கொட்டாதா என்ன?? வந்ததே..

தானா தினசரி நடக்கும் செயல்… உலகத்திலெ இல்லாத ஒண்ணு… ரெண்டையும் காக்டெயிலா கலந்து கலக்கி நம்மை மகிழ்விக்கிறார் கம்பர். இலங்கையில் அனுமன் பாத்த முதல் நாள் மாலை நேரம். சூரியன் மறைகிறது.. அது கம்பன் பார்வையில் வேறு மாதிரி தெரியுது.
எப்பொவுவே கிழக்கே உதித்து மேற்கே மறையும் சூரியன் அன்று வடக்கில் உதித்து தெற்கில் மறைஞ்சதாம்.. அது சரி எதுக்கு இப்படி?? ராவணன் தவத்தோட பயன் எல்லாம் சீதையைக் கவர்ந்ததால் போய்விட, இனி அழியப் போகிறான் என்பது சூரியனுக்கு தெரிஞ்சு போச்சாம். ராவணன் 20 கைகள், பத்து தலை வச்சி, ஐந்து புலங்களையும் அடக்கி பெற்ற தவம் வீனாச்சே என்று பன்ச் வேறு வைக்கிறார் கம்பர்..

தடக்கை நால் ஐந்து பத்துத் தலைகளும் உடையான் தானே
அடக்கி ஐம்புலங்கள் வென்று தவப்பயன் அறுதலோடும்
கெடக் குறியாக மாகம் கிழக்கு எழு வழக்கு நீங்கி
வடக்கு எழுந்து இலங்கைசெல்லும் பரிதி வானவனும் ஒத்தான்.

இனிமே எதைப் பாத்தாலும் அல்லது யாரைப் பாத்தாலும் வேறு ஏதாவது போல யோசிக்க முடியுமான்னு பாருங்க..

அழகிய தமிழ் மகள்


சினிமாவில் கமல், மனிரத்னம், ரஹ்மான் இப்படி சிலர் வந்ததால் தமிழர்களின் கொடி பறக்கிறது. என்ன தான்  சிலர் தமிழர்களின் பெயரை எவ்வளவோ மேலே கொண்டு வந்தாலும் இந்த வட நாட்டவர்களுக்கு தமிழர்கள் என்றால் கொஞ்சம் இளக்காரம் தான்.

அதுவும் ஹிந்தி சினிமாக்களில் காட்டப்படும் தமிழன் எப்போதும் காமெடியன் தான். ஐயோ, ஐயோடா, ஐயய்யோ இவைகள் தான் தமிழன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள். இதுக்கு ஒரு முடிவே கிடையாதா என்று வடிவேல் ஸ்டைலில் கேக்க மட்டும் தான்முடியும்!!!

அந்தமானில் 15 – 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழர்கள் ஐயாலோக் என்று கேவலமாக நடத்தப்பட்டார்கள். அப்போதெல்லாம் தமிழர்கள் பெரும்பாலும் கூலித் தொழிளார்களாக மட்டுமே இருந்தனர். இப்போது இந்த அய்யாலோக் என்பது மாறிவிட்டது. ஏனென்றால் பல துறைகளில் தமிழர்கள் மேலே வந்துவிட்டனர். அரசியல், வியாபாரம், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் இப்படி எல்லா துறைகளிலும் தமிழர்கள் டாப்பில் வரத்துவங்க… அந்த ஐயா லோக் மறைந்து விட்டது.

ரொம்ப சுகமா கம்யூட்டரில் தமிழ் எழுதுகிறேன். அப்படியே இலக்கிய காலத்தை கொஞ்சம் புரட்டிப் பாத்தா??? அவங்க என்ன கம்ப்யூட்டர் வச்சிட்டா எழுதுனாங்க..அந்தக் காலத்தில் ஏது அழகி??… இப்பவே நம்ம ஆட்களுக்கு தமிழ் மெயில் எழுதுறது ரொம்ப சிரமமா இருக்கு. ஏடு எழுத்தாணி வைச்சி எப்பிடி அந்தக் காலத்திலெ எழுதி இருப்பாங்க? என் கவலை என்னென்னா?? Ctr Z, Ctr C, Ctr V போன்ற வசதி இல்லாம எப்படி எழுதி இருப்பாங்க…??

இந்தக் கவலை ஒருபக்கம் இருக்கட்டும். கவியரசர் கம்பன் கனவு கண்ட பத்தி நான் கண்ட கனவு கேளுங்க…

ராமாயணம் எழுதுறப்பொ கொஞ்சம் அசதியா படுக்கிறார் நம்ம கம்பர். பத்தாயிரம் பாட்டு எழுதுறது என்ன சும்மாவா?? கனவு வருகிறது. அழகிய பெண் ஒருத்தி கெஞ்சியபடி : “காப்பியம் எழுதுறீங்களாம்லெ.. என்னையும் சேத்துக்கோங்களேன்.. ப்ளீஸ்”.

கம்பன் : யார் நீ?
அழகி: தெரியவில்லையா? நானும் தமிழின் மகள் தான்.

கம்பன்: அழகிய தமிழ் மகளே!!! உன் பெயர்?
அழகி: “ஐயோ”

கம்பன்: ஏன் இந்த பயம்? பயப்படாமல் சொல். உன் பெயர்??

அழகி: கவியரசரே… என் பெயர் தான் “ஐயோ”.. தமிழின் புதல்வி நான். என்னை யாரும் எந்தப் புலவரும் பாடுவதில்லை. உங்கள் இதிகாசத்திலாவது என் பெயர் வரட்டும்…ப்ளீஸ்..

 தூக்கம் கலைந்து உடனே எழுத்தாணி பிடிக்க… கவிதை கனவில் வந்த அழகிய தமிழ் மகளையும் சேர்த்து வருகிறது. ஐயோ என்ற அமங்கலச் சொல் கம்பன் கைபட்டு மங்கலமாய் இராமனை வர்ணிக்கும் விதமாய் மிளிர்கிறது.

பாடல் இதோ…
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ
இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான்.

இனி மேல் வட நாட்டவர் யாராவது ஐயோன்னு தமிழனை அவமரியாதை செய்தால் உங்களுக்கு இராமனை நினைக்கும் வாய்ப்பு அளித்ததாய் சந்தோஷப்படுங்கள்.

இல்லாவிட்டால் ஐயோ ஐயோ என்று வடிவேலு ஸ்டைலில் ஜாலியா இருங்க..