நூத்துக்கு நூறு


இந்தப் பெயரில் ஒரு பழைய படமும், அந்தப் படத்தில் நூத்துக்கு நூறு என்ற அட்டகாசமான TMS பாட்டும் இருக்கு தெரியுமான்னு நான் கேக்கிறேன்.

உங்கள் பதில், தெரியும் என்றால் உங்கள் வயது 45 +

அதே மாதிரி இன்னொரு டெஸ்ட்:

அந்தக் காலத்தில் Maths ல் மட்டும் தான் நூத்துக்கு நூறு வாங்குவாங்க.. என்று அடிக்கடி புலம்பும் நபரா நீங்கள்?? அப்பொ உங்கள் வயதும் 45 + தான்.

பத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் நாளில் தினத் தந்தியில் வந்த ஒரு முழுப்பக்க விளம்பரம் பாத்து என் நண்பரின் துணைவியார் திருமதி நாச்சியார் தன் குழ்ந்தையை அங்கே சேர்க்க முயற்சிக்க… என் பொண்ணும் திருச்செங்கோடு போக வழி வகுத்து விட்டது.

சமீபத்தில் எனக்கு ஒரு போன் வந்தது பொண்ணு கிட்டெ இருந்து. நம்ம ஸ்கூல டைரக்டர் உங்க போன் நம்பர் வாங்கினார். யாராவது அந்தமானுக்கு வருவார்கள் போல் தெரியுது என்று.

நான்கு நாட்கள் கழித்து ஒரு போன் வந்தது. அழகு தமிழில் பெயர் அறிமுகம் செய்து கொண்டு பேசியது.. திருசெங்கோடிலிருந்து வந்ததாய்.

நானும் பந்தாவாய் English ல் பேச..(தமிழ் காரர் என்று தெரிந்த பிறகு கூட அவர் கிட்டெ English பேசுவதில் நம்ம ஆட்களுக்கு அலாதி சுகம் தான். நான் மட்டும் அதுக்கு விதி விலக்கா என்ன??)

வந்த பதில் : எனக்கு இங்கிலீஸ் எல்லாம் வராதுங்க..நான் அவ்வளவா படிக்காதவனுங்க…

அந்தமான் பாத்துட்டு நாளை கிளம்பும் தகவல் தெரிவித்தார்.
அடுத்த நாள் ஒரு சின்ன அந்தமான் ஆதிவாசியின் உருவம் பொறித்த நினைவுப் பரிசோடு ஏர்போர்ட்டில் அவரை சந்திக்க கிளம்பினேன்.

கதர் வெட்டியும் கதர் சட்டையும் எளிமையின் மொத்த உருவவுமாய் நின்றார். பரிசினை கறாராய் மறுத்தார். பரிசு வாங்குவது இல்லை என்ற கொள்கை முடிவில் இருப்பதாயும் சொன்னார். அன்போடு ஒரு காபி சாப்பிடலாமே என்றார்.

தான் படிக்கலை என்ற கவலையில் ஆயிரக்கணக்கான மாணவர்களை (மலேசியா உள்பட) படிக்க ஏதுவாய் கல்வி நிறுவனம் நடத்திவரும் வித்ய விகாஷ் கல்வி குழுமத்தின் தலைவர் தான் அந்தமான் வந்தவர்.

காமராசரும் நேருவும் திருச்செங்கோடுக்கு வந்த போது எடுத்த போட்டோவினை தந்தார். கர்மவீரரின் பாதையில் (தான் படிக்காவிட்டாலும் சமூகத்தை படிக்க வைக்க) கல்விக் பணி செய்வது சொல்லாமல் தெரிந்தது.

மனசு அவருக்கும் அவர் தம் குழுமத்துக்கும் 100 க்கு 100 போட்டது.

நல்லவங்க உலகத்திலெ கொறெஞ்ச்சிட்டே வாராங்களேன்னு பலர் சொல்வாய்ங்க..

என் கருத்து என்ன அப்படீன்னா…??? நல்லவர்கள் பாண்டவர் மாதிரி குறைவு. கெட்டவர்கள் அதிகமா இருப்பாக… கௌரவா மாதிரி.. 100 க்கணக்கா..

கம்ப ராமாயணத்திலெயும் இதே மாதிரி ஒரு பிரச்சினை வருது.

அடுத்தவர் மனைவியை கவர்வது ஒரு செயல்.

அதை மனிதர்கள் செய்தால் பாவம்.

அரக்கர்கள் செய்தால் தண்டிக்கலாம்.

விலங்குகள் செய்தால்??…அது எப்படி தவறாகும்??

அது போக… சுக்கிரீவனை விட வாலி பலசாலி. கூட்டமும் அதிகமா இருக்கு. என்ன.. விலங்கோட இயல்பா இருந்தான்..அது ஒரு தப்பா… ??

இது லெட்சுமணன் போட்ட சின்ன பிளான்.

தலைவர் ராமர் ஒத்துக்குவாரா என்ன?? (நல்லதா இருந்தா கண்டிப்பா ஒத்துக்குவாரு)

ராமன் சொல்லும் வார்த்தைகளாக கம்பன் சொவது:

நல்லவங்க கொஞ்ச ஆளு தாம்ப்பா.. அப்படி இல்லாத ஆளுங்க எக்கச்சக்கம். நாம் சுக்ரீவனுக்கு தோஸ்த் ஆயிட்டோம். அவருக்கு நல்லதா யோசிக்கலாமே என்று சொல்ல வாலி வதம் தொடர்கிறது.

அட.. அங்கேயும் கம்பருக்கு 100 க்கு 100 குடுத்துட்டு அப்படியே பாட்டு பாத்துட்டு மத்த வேலையைப் பாப்போம்.. ராமர் வாலியை பாத்துக்கட்டும்… நாம நைஸா பாட்டை பாப்போமே…

வில் தாங்கு வெற்பு அன்ன விலங்கு எழில் தோள மெய்ம்மை
உற்றார் சிலர் அல்லவரே பலர் என்பது உண்மை
பெற்றாருழைப் பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால்
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்கொல் என்றான்.

அது சரி இவ்வளவு சொல்ற எனக்கு எவ்வளவு மார்க் தருவீங்க???