சிலிம் ஜாக்பாட் சிம்ரன்


பழைய கமல் படத்தில் வந்த ஒரு அழகான SPB பாட்டு தான் கம்பன் ஏமாந்தான்.. இந்த கன்னியரை ஒரு மலர் என்றானே, கற்பனை செய்தானே என்று வரும். ஆனா என்னோட கிட்ட்த்தட்ட எல்லா போஸ்ட்களிகளில் எங்கெங்கோ சுத்தி கடைசிலெ கம்பர் வந்து விடும் விபத்து நிகழ்கிறது. இது ஏதும் திட்டமிட்டு செய்த சதி அல்ல. தற்செயலாக வந்தது. அப்படியே தொடர்கிறது. ஏன் இப்படி என்பதற்கான தன்னிலை விளக்கம் தான் இந்த போஸ்ட்.

தினமணி பேப்பரில் முதலும் கடைசி வரை மேய்ந்து முடிக்கும் படிப்பாளி என் மாமா. அவர் எல்லா வார மாத சங்கதிகளையும் படிப்பார். அதிகம் பயணம் செய்வதால் பலபல புத்தகங்கள் அவரிடம் வந்து சேரும். அப்படி அவரிடம் எப்படியோ வந்து சேர்ந்தது தான் அந்த ஒன்பது தொகுதிகள் அடங்கிய வர்த்தமானன் பதிப்பகத்தார் வெளியிட்ட கம்பராமாயணம் மூலமும் தெளிவும்.

ராமேஸ்வரத்தில் பல வருடங்கள் மீன் பிடி தொழில் சார்ந்து இருந்த போதும் என் மாமா கோவிலுக்கு போய் நான் பாத்த்து இல்லை. ஆனால் கடவுள் இல்லை என்ற ரகமும் இல்லை. 2000 ஆண்டில் அவர் கையில் வந்த்தாய் கையெழுத்து சொல்கிறது. படித்திருக்கலாம். 2005 வாக்கில் என் கைக்கு வந்தது. அந்தமான் வரை சுமந்து வந்த நல்ல காரியம் மட்டும் தான் நான் செய்தது. ஓர் ஆன்டு வரை அலமாரிச் சிறையில் தனிமைத் தண்டனை அனுபவித்த்து அந்தக் கம்பக் காவியம்.

வருடத்துக்கு ஒரு முறையாவது வீட்டைச் புரட்டிப் போட்டுச் சுத்தம் செய்வது என்பது என் மனையாளிடம் இருக்கும் பல நல்ல பழக்கங்களில் ஒன்று. அப்படி ஒழுங்கு படுத்தும் போது தேவையற்ற பொருட்கள் பயன்படுத்தாத பொருள்கள் வெளியேறிவிடும். அப்படி வீட்டை விட்டு வெளியேற்றத்துக்கு ஆன முதல் ஐட்டம் அந்த ஒன்பது தொகுதி கம்பராமாயணம். இதெப் படிச்ச மாதிரியே காணோம்…(படிச்சாலும் இது என்ன ராமாயணம் படிக்கிற வயசா என்ற எதிர் பேச்சும் வரும் என்பது வேறு விஷயம்). தூக்கிப் போட்றலாம் என்பதை நாசுக்காய் எங்காவது படிக்கிற ஆட்கள் அல்லது லைப்ரரிக்கு தரலாமே என்று என் திருமதியின் திருவாய் மொழிந்தது.

நானும் பொறுப்பாய் அதனை எடுத்துக் ஒரே கட்டாக கட்டி அந்தமான் தமிழ் இலக்கிய மன்றத்தின் நூலகத்தில் கொடுத்து விட்டேன். அங்கு மாதம் ஒரு முறை கம்பன் கழகமாய் கூட்டம் நடந்து வந்தது. வாராவாரம் இலக்கிய மன்றக் கூட்டமும் நடைபெறும். கம்பனின் கற்பூர வாசனை அறியா கழுதையான நான் அதென்ன கம்பனுக்கு மரியாதை (ரிசர்வேஷன் தேவையா?) என்று சொல்லி வைக்க, நான் சொன்ன இந்த நல்வாக்கு பலித்தெ விட்டது. கம்பன் கழக மூடுவிழா கம்பன் பற்றி தெரியாமலேயே நடந்தது. (இந்து மதம் பற்றி தெரிஞ்சிக்காமலேயே மதம் மாறுவதில்லையா? அப்படித்தான்..)

கொஞ்ச நாள் போனது. இலக்கிய மன்ற வாராந்திரக் கூட்டத்தில் ஒரு தலைப்பு சொன்னார்கள். கம்பனின் பாத்திரங்கள் பற்றி அனைவரும் பேச முடிவானது. ரெண்டு வருஷமா அலமாரிச் சிறையில் இருந்த கம்பனின் காவியத்திற்கு ஒரு வழியா பெயில் கிடைத்தது. கம்பனை அன்று கையில் எடுத்தவன் தான்.. இன்னும் திருப்பி வைத்த பாடில்லை. பாட்டு எழுதி விளக்கம் தான் தருவர் எல்லாரும். விலாவாரியாக எழுதி அப்புறம் நச்சுன்னு ஒரு பாட்டு போடலாமே என்று எனக்கு தோணிச்சி. (ஏன் அப்படி தோன்றியதுது? அது அந்த கம்பனுக்கே வெளிச்சம்).

அதுவரை மனதுக்குள் பட்டதை எனது கல்லூரித் தோழர்களொடு (நோ தோழிகள் ப்ளீஸ்) யாஹு குரூப்பில் எழுதி வந்தேன். அங்கு தான் அந்த கம்பனை வம்புக்கு இழுத்து எழுத ஆரம்பித்தேன். நல்ல ஆதரவு கிடைக்கவே பின்னர் வலைப்பூ துவங்கி ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. கல்லூரி நண்பர்கள் ஏதாவது எழுதப் போய், இதுக்கு கம்பர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்ற கேள்வியும் அப்பப்பொ வரும்.

சமீபத்தில் இப்படித்தான் கல்லூரித் தோழர் லிவிங்க்ஸ்டன் (மக்கா என்று செல்லமாய் அழைப்போம்) குவைத்தில் கலந்து கொண்ட ஜாக்பாட் நிகழ்ச்சி ஜெயா டிவி யில் சிம்ரனின் ஜிலுஜுலுப்போடு நடந்தது. கல்லூரிக் காலத்தில் தமிழ் மன்றத்தை கலக்கிய அனுபவம், சிம்ரனைப் பற்றி செமெ கவிதை பாட வைத்தது. (கல்யாணம் ஆகி இத்தனை வருஷமா பொன்டாட்டியை பாத்து கவிதை எழுதி இருப்பாங்களா? சிம்ரன் என்றால் ஏன் தான் இப்படி வழியலோ என்று என் பொண்டாட்டி கமெண்ட் அடித்தது ஒரு தனிக் கதை)
ஹைதராபாத் நண்பரிடமிருந்து அந்த ஜாக்பாட் புரோகிராம் நடக்கும் போதெ போன் வந்தது. சிம்ரனையும் கம்பனையும் வச்சி ஏதாவது எழுதலையா என்று. அந்த குறையை ஏன் வைக்கணும். சிம்ரன் கூந்தல் செம்பட்டை கலரில் இருந்ததா என்று கேட்டேன். பதில் ஆமாம் என்று வந்தது.

ராமாயண காலத்துக்கு போவோம். அனுமான் முதல் இன்னிங்க்ஸ் இலங்கையோடு ஆடிய ஆட்டம். ஆட்டம் சூடு பிடித்ததால் வாலில் சூடு வைக்க அதை ஊருக்கே வைத்த இடம் அது. Fire Service இல்லாத அந்தக் காலத்தில் ஊர் மக்களே ஒன்று சேர்ந்து அந்த அனுமன் வைத்த சூட்டை அணைத்து வந்தனர். பாத்தாலே கட்டி அணைக்கத் தோன்றும் வகையில் உள்ள மகளிர் மேலும் ஹோலிக்கு தண்ணி ஊத்துவது போல் ஊத்திக் கொண்டிருந்தனர். பதிலுக்கு ஆடவர் மேல் மகளிரும் வேகமாய் தண்ணி ஊத்தினர். ஏன் இப்படி நடக்கிறது?.

கம்பன் பதில் சொல்கிறார். கொழுந்துவிட்டு எரியும் தீ. மகளிர், ஆடவர் தலையில் இருக்கும் (சிம்ரன் போல்) செம்பட்டை முடி. ரெண்டுக்கும் வித்தியாசம் தெரியாததால் வந்த வினை. இதில் “சிம்ரன் போல்” என்பது கம்பன் சொல்லாமல் விட்டு இந்த வம்பன் சேர்த்தது.

கூய் கொழும் புனல் குஞ்சியில் கூந்தலில்
மீச் சொரிந்தனர் வீரரும் மாதரும்
ஏய்த்த தன்மையினால் எரி இன்மையும்
தீக் கொளுந்தினவும் தெரிகின்றலார்.

வேறு ஏதாவது அல்லது யாரையாவது வம்புக்கு இழுக்கலாம் கம்பரோடு சேர்த்து.