Who is a a Good Subordinates?


ஒரு படத்தில் வரும் காட்சி. விவேக்கும் சூர்யாவும் இருப்பார்கள். விவேக்கிடம்  ஒரு பெரியவர் (நாசரோ அல்லது விஜய்குமாரோ சரியா ஞாபகம் இல்லை – அதுவா முக்கியம்? மேட்டருக்கு வருவோம்)


விவேக் கிட்டெ அந்த பெரியவர் கேப்பார் – “அந்த மூட்டை வந்திடுச்சான்னு பாருபா” – என்று.


உடனே நம்ம விவேக் ஃபோன் போட்டு விசாரிச்சிட்டு  “வந்தாச்சி” – என்பார்.


“எத்தனை மூட்டை?” – மறுபடியும் கேள்வி வரும். மறுபடியும் ஃபோன் போட்டு கேட்டு விட்டு அப்புறம் பதில் சொல்வார்.


“என்ன என்ன வந்ததாம்?” கேள்வி மீண்டும்.


“எத்தனை கேள்வி??? நல்லா கேக்கிறாய்ங்கப்பா கொஸ்ட்டினு…ஒட்டுக்கா கேக்க வேண்டியது தானே..” புலம்பலுடன் மறுபடியும் ஃபோன்.. இப்படியே தொடரும்.


அடுத்து ஹீரோவிடம் பெருசு அதே கேள்வி கேக்கும். வந்து இறங்கிய மூட்டைகள் எத்தனை? எங்கிருந்து வந்தவை? என்னென்ன இருந்தது? யார் கொண்டு வந்தா? எங்கே வச்சாக? இப்பொ என்ன பன்றாய்ங்க? என்று தகவல் கொட்டி விட்டுப் போவார்.


இதை ஒரு முதலாளி – தொழிலாளின்னு பாக்காமெ ஒரு Manager Subordinate இப்படி யோசிங்க. இப்படிப்பட்ட ஒரு Sunordinate கெடைச்சா எப்படி இருக்கும் ஒரு மேனேஜருக்கு?


நமக்கெல்லாம் அந்த பாக்கியம் கிடைக்குமா?


நமக்ககு கெடச்ச ஆளுங்க, வச்சிட்டு வாடான்னா, கொளுத்தி வச்சிட்டு வராத ஆளா இருந்தா சரி தான்.


நாட்டுலெ நடக்கிற காட்சி பாத்தோம். ஒரு காட்டுலெ நடக்கிற கட்சியைப் பாக்கலாமா…??


வாசல்லே எதோ சத்தம் கேட்டு வெளியே வர்ராரு ஒரு நம்பர் டூ. காட்டான் ஒருத்தன்
நிக்கிறான்.


“யாருப்பா நீ? “


காட்டான் சொன்ன பதில்:
“நானு வேடன்.. ஆனா Boat ஓட்டுறேன் இப்பொ.. உங்களைப் பாத்து ஒரு வணக்கம் வச்சிட்டு போலாம்னு வந்தேங்க..ஒரு நாய் மாதிரிங்க நானு…”


அந்த காட்டான் சொன்னதை ஒட்டுக் கேட்டு நான் அப்படியே  சொன்னேன். அம்புட்டு தான்.


ஆனா அந்த நம்பர் டூ வீட்டுக்குள்ளார போய் நம்பர் ஒண் கிட்டெ சொன்னது என்ன தெரியுமா? (ஒட்டுக் கேக்கிறதுண்னு முடிவு செஞ்சாச்சி.. அதை பாதியிலெ உடுவானேன்.??. முழுக்கவே செய்யலாமே.. காதை தீட்டி கேட்ட சமாச்சாரம்..சும்மா உங்களுக்கு சொல்றதுக்குத் தான்.)


“வந்திருக்கிறவன் ரொம்ம்ம்ப நல்லவன்..
தூய்மையான் உள்ளம் கொண்டவன்
தாயைக் காட்டிலும் நல்லவன்
பெரிய ஷிப்புங்க் கம்பெனி ஓனர்..
நெறைய்ய கப்பல் வச்சிருக்கான்
அவன் பேரு இதான் (கொஞ்சம் சஸ்பென்ஸ்க்காக மறைச்சிருக்கேன்)
பெரிய கும்பலோட வந்திருக்கான்
அதிலெ அவய்ங்க சொந்தக்காரங்க எல்லாம் நெறைய்ய கீறாங்க..
அந்த ஆளு உங்களைப் பாக்க வந்திருக்காரு..”


யாருப்பா இப்பேர்பட்ட அதிகப் பிரசங்கி நம்பர் டூன்னு பாக்கீகளா?


நம்பர் டூ : இலட்சுமணன்
நம்பர் ஒண் : இராமன்.
காட்டான் : குகன்.


இந்த லட்சுமணன் மாதிரி ஒரு நல்ல Subordinate கெடைச்சா எப்படி இருக்கும்?? ஆஃபீஸ் அல்லது குடும்பம் எவ்வளவு நல்லா இருக்கும்.


சரி… அந்த கொடுப்பினை தான் இல்லை.. அட்லீஸ்ட் நாம ஒரு நல்ல Subordinate ஆ இருந்து காட்டலாமே.. வீட்டில் நல்ல பேராவது கிடைக்குமே!!


இன்று உங்களை தொந்திரவு செய்ய இரு பாடல்கள்:


குகன் சொன்னது இது:


கூவாமுன்னம் இளையோன் குறுகி நீ
யாவான் யார் என அன்பின் இறைஞ்சினான்
தேவா நின் கழல் சேவிக்க வெந்தனென்
நவாய் வேட்டுவன் நாய் அடியேன் என்றான்.


இலக்குவன் கேட்டு சொன்னது இதோ:


நிற்றி ஈண்டு என்று புக்கு நெடியவன் தொழுது தம்பி
கொற்றவ நின்னைக் காணக் குறுகினான் நிமிர்ந்த கூட்டச்
சுற்றமும் தானும் உள்ளம் தூயவந்தாயின் நல்லான்
என்று நீர்க் கங்கை நாவாய்க்கு இறைகுகன் ஒருவன் என்றான்.


மீண்டும் வருவேன்.. (பயம்மா இருக்கா??)


அந்தமான் செவத்த பாப்பையா டி என் கே

ஹீரோ, ஹீரோ தான்


வில்லன்கள் ஹீரோ ஆகலாம். ஆனா ஹீரோ வில்லன் ஆக முடியாது. அப்படியே ஆனாலும் அது ஆன்டிஹீரோ என்று தான் சொல்ல முடியும்.

ஆனா கமல் மாதிரி சில புண்ணியவான்கள் முயற்சியால்,காமெடி நடிகை, ஹீரோயின் ஆன சந்தர்ப்பங்களும் உண்டு.

வடிவேல் புலிகேசியாய் வலம்வந்தது … ஹீரோவா காமெடியா?? கொஞ்சம் சிக்கலான கேள்விதான்.

இதை அப்படியே விட்டுட்டு ரெண்டு கண்கள் பத்தி கொஞ்சம் பாப்போம். கண்கள் இரண்டும் என்றதுமே.. மனசுக்குள்ளாற ஒரு பழைய பாட்டு கண்டிப்பா ஓடியிருக்கனுமே…?

அது காதல் கண் பற்றிய பாடல். 

நான் இப்பொ சொல்ல வரும் கண் கடமைக்கண்.. (காதலோ கடமையோ.. எல்லாம் ஒன்னு தானே..சாரி ரெண்டு கண்ணு தானே?? ).  இதுலெ என்ன பெரிசா வித்தியாசம் வந்திரப் போகுது??)

It varies when you compare with others..

சரி எப்படி கம்பேர் பன்னலாம்.

உங்க மனைவி அல்லது காதலி அல்லது Girl Friend கிட்டே போய் “நீ சிரிச்சா தமன்னா மாதிரி இருக்கே…சிரிக்காட்டியும் கூட ஐஸ்வர்யா மாதிரி தான்” என்று ஐஸ் வைக்கலாம். அதெ விட்டுப்போட்டு எக்கு தப்பா ஒரு வில்லி கூட கம்பேர் பன்னி பேசினா, உங்க கதி அதோ கதி தான்.

அன்னா ஹஜாரே காந்தி மாதிரி உண்ணாவிரதம் இருந்து சாதிச்சார். இப்படிச் சொன்னா ஹஜாரேக்கும் பெருமை. காந்திக்கும் பெருமை.

ராமாயணத்தில் ஒரு சோகமான் இடம்.

இராமன், மனைவி பறிகொடுத்து நிற்கும் பரிதாப நிலை. ராமனை ஏமாத்தி அப்படி செய்ததால் கூடுதல் கடுப்பு வேறெ. அவங்க அப்பாவோட தோழர் ஜடாயுவின் மரணம். இந்த மூணும் சேந்து ராமனை ராத்திரி முழுக்க தூங்கவே விடலையாம். அந்த கண் எப்படி இருந்ததாம்??

நம்மளை கேட்டா Weekend கொண்டாட்டம் கழிச்சி வந்த மாதிரின்னு தான் சொல்ல முடியும். இல்லையா?? ராத்திரி கண்முழிச்சி மிட்நைட் மசலா பாத்த மாதிரி…(இதை தாண்டி நம்மாள யோசிக்க முடியாது..)

கம்பர் உணர்ச்சி வசப்பட்டு அந்த சோகமான ராமனோட கண், லட்சுமணன் கண்ணு மாதிரி இருக்குன்னு சொல்லிட்டாரு..  அப்புறம் அவருக்கு ஞாபகம் வருது..அட்டா… ராமன் ஹீரோவாச்சே… எப்படி லக்குவன் கூட கம்பேர் பன்னிட்டு வம்பிலெ மாட்ட முடியும்??

ஒரு பிட்டு நடுவுலெ சொருகுறார்..

இராமன் ஒரு நாள் முழிச்ச கண்..இலக்குவன் வனவாசம் வந்த நாள் ஆரம்பிச்சி இன்னெக்கி வரைக்கும் தூங்காத கண்ணு.

ரெண்டும் ஒரே மாதிரி இருக்காம்…

சுகமோ, துக்கமோ ஹீரோவுக்கு தனி மரியாதை தான்.

பாக்கியராஜ் ஒரு படத்தின் கிளைமாக்ஸில் சொல்ற மாதிரி… ஹீரோ ஹீரோ தான்..

பாவம் லட்சுமணன் நாள் கணக்கா கண்விழிச்சி, கடைசியில் ஒரு நாளில் ஹீரோ ராமன் பேர் தட்டி விட்டார்..

ம்…ஹீரோ ஹீரோ தான்.

இதோ கம்பரின் வரிகள்:

பெண் இயல் தீபம் அன்ன பேர் எழிலாட்டிமாட்டு
நண்ணிய பிரிவு செய்த நவையினார் அவர்கள் சிந்தை
எண்ணியது அறிதல் தேற்றாம் இமைத்தில இராமன் என்னும்
புண்ணியன் கண்ணும் வன் தோள் தம்பி கண் போன்ற அன்றே.

ஆதாரம்: அடப்பாவிகளா… தூங்காமெ கண் விழிச்சி யோசிச்சி எழுதுறேன்..ஏதோ சுட்ட பழம்ன்னு நெனைச்சீங்களே… ராமன் மேலே சத்தியம்.. சொந்தச் சரக்கு தான் (எந்தச் சரக்கு???).

அந்தமான் அதிகாலை 4 மணிக்கு எழுதியது