போட்டுத் தள்ளியிரலாமா???


சண்டைக்காட்சிகள் அரசல் புரசலாக வந்து கொண்டிருந்தன அந்தக் கால சினிமாக்களில். பாட்டுக்கு எந்த அளவுக்கு இசை இருக்கோ அதே அளவிற்குத்தான் சண்டைக் காட்சிகளிலும் இசை இருக்கும். கத்திச்சண்டை, கம்புச் சண்டை என்றால் அந்த கத்தி கம்புச் சத்தம் தான் இருக்கும்.

அப்புறம் முழுநீள சண்டைப் படங்கள் வந்த போது சண்டைகளோடு சத்தங்களும் கூடின. இப்போது Dts வசதிகளும், திருட்டு விசிடிகளில் பார்ப்பதை தடுக்கும் நோக்குடன் ஏக தடபுடலாய் சண்டைக் காட்சிகள் படம் ஆக்கப் படுகின்றன.

சுத்தி இருக்கும் எல்லாரையும் அடிச்சி துவைக்கும் நம்ம ஹீரோவுக்கு ஒரு அடியும் படாது என்பது எழுதப் படாத நியதி.

கம்பை சூப்பரா சுத்தி அடிச்சா ரஜனி ஸ்டைல் என்போம். ஆனால் முகநூலில் அதையே சாப்பிடுவது போல் ஒரு வீடியோ ஓடி வருகிறது.. அந்த வீடியோவில் தலைப்பு என்ன தெரியுமா? ரஜினியோட அப்பா. இது எப்படி இருக்கு..சூப்பரா இருக்கில்லெ…

சண்டைக் காட்சிகள்  எல்லாம் பித்தலாட்டம் என்பது நமக்குத் தெரியும். இருந்தாலும் நாம ரசிப்போம். இறைவனின் விளையாட்டும் அப்படித்தான் சண்டைக் காட்சிகள் போலத்தான் இருக்கும். சில நாட்கள் கழித்து யோசித்தால் சிரிப்பு தான் வரும்.

ஒல்லியான தேகம்..லேசான மயில் நிறம். காதல் வந்தது. (காதல் பார்வையில் கருப்பு எப்படித் தெரியுது??)..துரத்தி துரத்தி பின்னால் ஓடி காதல் செய்தான் காதலன். வழக்கம் போல நாலு டஜன் ஆட்கள் பின்னால் துரத்தி வர பில்லியனில் உட்கார வைத்து போலீஸ் மாமா ஆகி நடந்த திருமணம். சில வருடங்களில் அந்த தேகம் பெருத்து, இன்னும் கருத்து…அட..இதுக்கு போய் இவ்வளவு கலாட்டாவா என்று கணவனான காதலன் யோசிக்கிறான். இதுவும் விதியின் விளையாடு தான்.

சினிமாப்படம் என்று ஒரு படம். திரைப்படங்களையே கிண்டலடித்த திரைப்படம். சண்டைக்காட்சிகளையும் அந்தப் படம் விட்டு வைக்கவில்லை.. ஒரு குண்டு புறப்பட்டு வரும் இடத்திலிருந்து போய் சேருவதை நாசூக்காய் காமெடி செய்திருப்பர்.

அது சரி…வில்லன் ஒரு அடி அடித்தால் ஹீரோவுக்கு எதுவும் ஆகாது. ஆனா அதே ஹீரொ அரு அடி அடிச்சா வில்லன் அம்பேல் தான். ஏன் இப்படி நடக்கிறது.

சில குழந்தைகள் சேட்டை செய்தால், அவங்க சண்டைக்காரப் பரம்பரை என்று சொல்வார்கள். அதே போல், Sugar வந்திருக்கா என்று போனாலும், அந்த பரம்பரைக் கேள்வி வரும்.

என்னோட கேள்வி இந்த சண்டைக் காட்சிக்கும் பரம்பரை காரணம் இருக்குமோ?? யார் கிட்டெ கேட்க?? எனக்கு கம்பரை விட்டா யாரைத் தெரியும்??

கம்பர் தன்னோட iPod ஐ என்னிடம் குடுத்து பாட்டு பாரு விவரம் தெரியும் என்கிறார்.. பாத்தென்…அடெ..ஆமா..

கம்பராமாயணத்தில் ஒரு சீன் வருது. வில்லன் ஒரு அறை விட்டான். ஹீரோ வாங்கினான். ஆனால் ஹீரோ அதே மாதிரி அறை விட அந்த வில்லன் செத்தே போனானாம். (அறைஞ்சி செத்துப் போவது தான் இப்பொ உதை வாங்கி செத்து போவதாய் மாறி இருக்குமோ???)

ஆனா அடிக்கும் முன் எதையுமே பிளான் செய்யணும்கிற மாதிரி ஒரு மேட்டர் இருக்கு. இந்த சிச்சுவேஷனில் ஹீரோ அங்கதன். வில்லன் அசுணன் என்ற அரக்கன். அங்கதன் ஒரு அறை வாங்கினவுடன், இந்த அசுரண் தான் ராவணன்னு நெனைச்சி ஒரே அறை…ஆளு அம்பேல்…

மற்றம் மைந்தனும் உறக்கம் மாறினான்
இற்றிவன் கொலாம் இலங்கை வேந்து எனா
எற்றினானை நேர் எற்றினான் அவன்
முற்றினான் இகற்கு ஆதி மூர்த்தியான்.

வேறு எதாவது சண்டைக் காட்சிகளுடன் மீண்டும் வருவேன்.

ஆணியே புடுங்க வேணாம்


சில வார்த்தைகளும் வாக்கியங்களும் சர்வ சாதாரணமா நாம யூஸ் பன்றோம். ஆனா அதோட மீனிங்கே வேறெ ஏதாவது இருக்கும்.

கிளாஸ்லே அந்த வாத்தி அறுத்துத் தள்ளுதுன்னு எத்தனை பேரை நாம சொல்லி இருக்கோம்?.

அறுத்தலுக்கும் வகுப்பு எடுக்கிறதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா என்ன ??

மதுரையில் சமீப காலமாய் புழங்கும் வாசகம் “சான்ஸ்ஸே இல்லை” என்பது. ரொம்பவும் சூப்பரா இருந்தா இப்படி சொல்கிறார்களாம். என் நண்பர் நாலு வருஷமா அமெரிக்காவில் இருந்தும் இந்த தொடர் அவரை விடவில்லை.. (கல்யாணம் ஆகியும் திருந்தாத சிலர்/ மண் மணம் கெடாத மதுரை நண்பர் அவர்)

ஒரு காலத்தில் தினத்தந்தியில் “சம்பவ” இடத்திற்கு போலீஸ் வந்தது என்று போடுவர். சம்பவம் என்றால் கொலை கொள்ளை கற்பழிப்பு துர்மரணம் விபத்து இப்படி எல்லாம் சேர்ந்தது. “அபூர்வ சகோதர்கள்” படத்திற்குப் பிறகு சம்பவம் என்றால் “கொலை” என்றாகி விட்டது.

சுவாமி வடிவேலானந்தா வின் சமீபத்திய அருள் வாக்கு என்ன தெரியுமா??

அதுக்கு முன்னாடியே ஒரு இன்விட்டேசன்… அப்புறம் தொடர்வோம்.

நண்பர் ஒருவர் நாம எல்லாரையும் ஒரு நல்ல பங்க்சனுக்கு இன்வைட் பன்னிட்டாரு. குடும்பத்தோட வரனும்னு ஏகமாய் தொந்திரவு வேறெ…

என் வீட்டுக்காரி நாலு புடவை எடுத்து வச்சி..என்னங்க.. இதிலெ நல்ல புடவையா சொல்லுங்க.. நீங்க சொல்ற சாய்ஸ் தான் என்னோடது – ன்னு கொஞ்சலாய்.

ஆஹா .. மனைவியிடம் நல்ல பேரு வாங்க ஒரு நல்ல சந்தர்ப்பம்… ரொம்ப சிரமப்பட்டு மூளையை கசக்கி.. முதல் சேலையை செலெக்ட் செய்தேன்..

மனைவியோ.. என்னங்க இது, இதே கலர் மாதிரி பொடவை தான் முன்னாடி ஒரு நாள் அவங்க வீட்டுக்கு கட்டிகிட்டு போய் இருக்கேன்.. வேறெ ஏதவது சாய்ஸ் ப்ளீஸ்..

சரி.. ரொம்ப யோசிக்காம, இரண்டாவது புடவை கை காட்டினேன். என்னங்க மறுபடியும்…. இதை கட்டிகிட்டா இன்னும் கொஞ்ச குண்டா தெரிவேன்.. இது வேண்டாமே..

அடுத்த தெரிவு.. மூனாவது புடவை… மறுபடியும் தப்பு பன்னிட்டீங்களே… இதிலெ கொஞ்ச கருப்பு கலர் மிக்ஸ் ஆயிருக்கு பாத்தீகளா??? (எனக்கு சுத்தமா அப்படி ஒன்னும் தெரியலை..) அவா ஆத்துக்கு அதை கட்டிண்டு போனா நன்னாவா இருக்கும்?

அடுத்து மிச்சம் இருக்கும் நான்காவது புடவை எடுத்து கையில் கொடுத்தேன்.

திருமதி ரொம்ப சந்தோஷம்.. இந்த தடவை உங்க சாய்ஸ் (அப்படியா???) தான் பொடவை கட்டறேன்..

 நான் மனசுக்குள் வடிவேலை வேண்டினேன்…. “நீ ஆணியே புடுங்க வேணாம்” என்ற அருள் வார்த்தை கிடைத்தது.

ஒரு வேலையையும் செய்யாமெ சும்மா இருக்கச் சொல்லனுமா “நீ ஆணியே புடுங்க வேணாம்” என்பதை இனி பயன் படுத்தலாம் என்று வல்காப்பியன் சொல்லிவிட்டார்.

இதே போல் கொன்னுட்டான்யா என்பதும் சரளமாய் பயன்படுத்தப்படும் வார்த்தைகள்…

 கம்பனுக்கும் இந்த சிச்சுவேஷன் கிடைக்குது…

சீதையை பாத்து ராமன் காதலில் புலம்பும் காட்சி.. நீ எமனா வந்து என்னை கொண்ணுட்டே… மறுபடியும் அல்குல், கண்கள், மார்புகள், புன்னகை இதெல்லாம் வச்சி மறுபடியும் கொல்லனுமா என்ன???

வண்ண மேகலைத் தேர் ஒன்று வாள் நெடுங்
கண் இரண்டு கதிர் முலைதாம் இரண்டு
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால்
எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ.

உண்மையில் கம்பன் கொண்ணுட்டான்… சான்ஸ்ஸே இல்லை. இந்த ஒரு சம்பவம் ஒன்னு போதும்.. இனி எந்த ஆணியும் புடுங்க வேண்டாம்.

இலக்கியத் தேடல் வளரும்…

எப்படி இருந்த நான்…


நொந்து நூலானவர்கள் பொதுவாக எல்லாருக்கும் புரியும் படி சொல்லும் ஒரு டயலாக் “எப்படி இருந்த நான்…இப்படி ஆயிட்டேன்” என்பது தான். அதனை எய்ட்ஸ் விளம்பரத்திற்கென விவேக்கை வைத்து ஒரு படத்தில் செய்ய வைக்க, அது ஓஹோன்னு ஹிட் ஆகிவிட்டது…

மக்கள் மனதில் எய்ட்ஸ் ஞாபகம் இருக்கோ இல்லையோ, அந்த விவேக் டயலாக் இப்பவும் மக்கள் மத்தியில் பளிச் தான்…

ஆமா.. நீங்க ரியல் லைஃபில் இப்படி டயலாக் அடிக்கும் ஆசாமியை பாத்ததுண்டா??

என்னெயெக் கேக்கிறீங்களா??…

அதுக்கு ஒரு சின்ன பிளாஷ்பேக் போகனும். ஓகேவா??

கொஞ்ச நாள் முன்னாடி என் மொபைலில் இருக்கிற எல்லா போட்டோவையும் சகட்டு மேனிக்கு என் பையன் பாத்துகிட்டே இருந்தான்.

(என்ன…பளாக் எழுதுறான்?? ஒரு மெஸேஜ் ஏதாவது இருக்கா அதுலெ? என்று கேட்கும் பொறுப்பான பார்ட்டிகளுக்கு, இதோ ஒரு மெஸேஜ்:

 உங்க மொபைல்லே வில்லங்கமான போட்டோக்கள் இருந்தால், உடனே அதை அழித்து விடவும். இந்த காலத்து பசங்களுக்கு அடுத்தவர் போன் நோண்டுவது தான் வேளை.. ஹி..ஹி..நானும் சான்ஸ் கெடைக்கும் போது அந்த நல்ல காரியம் பன்னியிருக்கேன்.)

 என் பையன் கண்ணுக்கு சிக்கிய போட்டோ ஒண்ணு… வேகமாக வரும் ஆட்டோ. ஆட்டோ டிரைவர் உள்பட யாருமே அந்த போட்டோவிலெ காணாம்.

இதெ ஏம்ப்பா எடுத்து வச்சிருக்கே? ன்னு கேட்டான். பரமக்குடியில் நம்ம வீட்டு பக்கத்து தெருமுனையில் ஒரு அம்மா பணியாரம் (ரம்பா விரும்பிச் சாப்பிடுவாங்களே..அது தான்) சுட்டு விக்கிறாங்க..

அவங்களுக்கு ஒரு காலத்தில் 23க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்ததாம். (20 கோடி இருக்கும் இன்றைய மதிப்பு) ஆனா இன்னெக்கி இப்படி ஆய்ட்டாங்க…

சரி அவங்களை ஒரு போட்டோ எடுத்து வச்சிக்கலாம்னு எடுத்தேன். அதுக்குள்ளார நடுவில ஒரு ஆட்டோ வந்திடுச்சி..அதான் அந்த ஆட்டோ போட்டோ.. அவங்க துரதிர்ஷ்டம் போட்டோ கூட எடுக்க முடியலை. எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு அவங்க புலம்பலாம்.

என் பையன் கேட்டான்… சரி..அந்த ஆட்டோ போன பின்னாடி இன்னொரு கிளிக் பன்னியிருக்க வேண்டியது தானே??

(நல்ல கேள்வி.. எப்படி சமாளிச்சேன் தெரியுமா?)

போட்டோ மட்டும் இருந்தா வெறும் தகவல். (RAW Data)..  ஆள் இல்லாமெ வெறும் ஆட்டோ படம் இருந்தா சுவாரஸ்யமான விஷயம். (எனக்கு ஓகே..உங்களுக்கு எப்படி இருக்கு??)..இப்படி சொல்லி சமாளிச்சேன்.

பொதுவாக விதி என்பது, ரொம்ப நல்லா இருந்து நொடிஞ்சு போனா சொல்லும் வாக்கியம் “எ இ நா இ ஆ” என்பது. சில சமயங்களில் அப்படி ஒண்ணுமே இருக்காது.. ஆனா நெனைச்சே அப்படி பீஃல் பன்னிட்டு இருப்பாங்க..

உதாரணமா.. ஒரு ஆளுக்கு ஆபீசில் ஒரு மெமொ கெடைக்கட்டும் அல்லது தண்ணி இல்லா காட்டுக்கு டிரான்ஸ்பர் ஆகட்டும்.. பொலம்பல் ஆரம்பம் ஆயிடும். மொதலாளி திட்டினாலும் அந்த சீன் ஸ்டார்ட் ஆகும். பரீட்சையில் பெயில் ஆகும் பார்ட்டிகள், எதிர்பாத்த மார்க் கெடைக்காத போது…இப்படி ஏதும் விதி விலக்கு இல்லெ.

இவ்வளவு சொன்னதுக்கு அப்புறமும் கம்பனை இழுக்காட்டி ..நல்லாவா இருக்கு? எப்பொவுவே கம்பர் டிராக்கே தனி தான்.

எல்லாரும் நல்லா இருந்து கெட்டுப் போன போது தானே புலம்புறாங்க..?? ஆனா கம்பன் வார்த்தையில் “எப்படி இருந்த ஆளு” என்பதிலும் கூடுதல் ஆகுதாம்…அப்புறம் நொந்தும் போகிறாராம். சிச்சுவேஷன் சொன்னா இன்னும் புரியும்.

ராவணன் சீதையை ஜொள்ளு விட்டு பாக்கும் காட்சி.. (நம்ம ஆட்கள் தமண்ணாவை ஜொள்ளுவிட்டு பாக்கிற மாதிரி). அந்த அழகில் மயங்கி ஒடம்பு கொஞ்சம் ஊதுதாம்.. அப்புறம் கிடைப்பாளா மாட்டாளா என்ற சந்தேகத்தில் ஒடம்பு இளைச்சிட்டானாம்..

வீங்கின மெலிந்தன வீரத் தோள்களே.. இது கம்பர் வாக்கியம்.

ஒரு காலத்தில் பத்து தலை இருக்கிற ஆசாமி இருப்பானா? ன்னு கிண்டல் அடிச்ச நானு, இப்பொ ராமாயணத்தெ விழுந்து விழுந்து படிக்கிறேன்.. ம்… எப்படி இருந்த ஆளு… இப்படி ஆயிட்டேன்..

வச்சிக்கவா ஒன்னே மட்டும் நெஞ்சுக்குள்ளே…


இந்தப் பேனாவை கொஞ்ச்சம் வச்சிக்கிங்க…இதில் எந்த தப்பும் இல்லை. நான் சிவப்புக் கலரில் ஒரு கார் வச்சிருக்கேன்…இதூம் தப்பே  இல்லை.. நான் ஒரு ஆளை வச்சிருக்கேன்…வேலைக்கு..என்று சொன்னால் கூட… கெட்பவர் ஒரு நமட்டு சிரிப்பு சிரிப்பார்!! (நீங்களும் இப்படி சிரிச்சிருப்பீங்களே!!)

இந்த அள்வுக்கு அந்த “வச்சிக்கவா” ரொம்ப பாப்புலர்….

வச்சிக்கா உன்னே மட்டும் நெஞ்ச்சுக்குள்ளே..சத்தியமா நெஞ்சுக்குளே..ஒண்ணும் இல்லே..இது செமெயான ஒரு குத்துப்பாட்டு… எந்த கச்சேரி மேடைகளிலும் களை கட்டும்.

நம்ம கல்லூரி சில்வர் ஜுப்ளியில் கூட இந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்டது ஞாபகம் இருக்கு.

மேடையிலும் கீழும் (தண்ணி போடாமல்) நம்மளும் ஆட..செமஜாலியான சங்கதி தான்…

வச்சிக்கவா பாட்டுக்கு அவ்வளவு மவுசு…இதை மட்டும் மனசுலே வச்சிக்கிங்க…

வாயை வச்சிட்டு சும்மா இருக்கியா? என்பது நான் அடிக்கடி வாங்கிய திட்டு…ஆனா
இதுக்கு ஒரு பழைய கதை ஒன்னு சொல்லட்டுமா?? (வேணாம்னா ஒண்ணும் விடப் போவதில்லை..).

ஒரு காடு…அம்மா மானும் குட்டி மானும் விளையாடி களைத்துப் போய் தாகத்துக்கு தண்ணிக்காய் அழைந்தனராம்.. அப்போ..ஒரு சின்ன குட்டையில் கொஞ்சூண்டு தண்ணி
இருந்ததை பாத்தாகளாம். ரெண்டு பேரும் குடிக்க வாய் வைத்தனர்… 

நேரமாக..நேரமாக…கொஞ்சமும் தண்ணி கொறையவே இல்லையாம்.. அம்மா மான் குடிக்கட்டும் என்று குட்டி மான் நினைக்க…குட்டிமான் குடிச்சிட்டு போவட்டும் என்று அம்மா மான் நினைக்க ..இதை நான் அந்தமானில் இருந்து எழுதாமல் சென்னை வந்து எழுதுறேன்…. ஆனா இதை தலைவனை பிரிந்த காதலி பாத்து ஆகா…என்று நெகிழ்ந்ததாக ஒரு சங்கப் பாடல் போகுது…

இது இப்படி இருக்க..சிலர் வாயை வச்சிட்டு சிரிச்சித் தொலைப்பாய்ங்க…தேவை இல்லாத நேரங்களில்..அது அதை விட வம்பு..

[சின்ன இடை சொருகல்: நீங்க கல கல டைப்பா அல்லது முசுடா?? நீங்களே
தெரிஞ்ச்சிக்கணுமா?? இப்போ கலகலப்பா இருக்கும் நம்ம நண்பர் கூட கொஞ்ச நேரம் பேசுங்க…ஒரு தடவை கூட நீங்க சிரிக்கலையா??? உங்களுக்கு முசுடுண்னு மத்தவங்க பேரு வச்சிருப்பாங்க..]

சிரிக்கக் கூடாத நேரத்தில் பாஞ்சாலி சிரித்ததால் தான் மகாபாரதமே உருவானது… அதே போல் பிள்ளைகள் விளையாடிய விளையாட்டை விளையாட்டா நெனைக்காமல், இது என்ன வெளெயாட்டான்னு சிரிக்காம விட்ட கூனி காரணம் தான் இராமயண கதையின் திருப்பு முனை.

எப்படியோ கஷ்டப்பட்டு ராமாயணம் கொண்டு வந்தாச்சி..அப்படியே..கம்பரைக்
கூப்பிட வேண்டியது தான்..

சிவன் ஒருத்தியை பாதியாவே வச்சிருக்கான்…இன்னொரு கடவுள் நெஞ்ச்சிலே
வச்சிருக்காக… கலைமகளை நாவில் வச்சிருக்கும் கடவுளு கீறாக…சிற்றிடை சீதையை
…ஆமா…அண்ணா.. உனக்குக் கெடைச்சா…எங்கெப்பா வச்சிக்கப் போறே??? இது இராவணனைப் பாத்து சூர்ப்பனகை பாடும் வச்சிக்கவா பாட்டு…

பாட்டும் இதோ:::-

பாகத்தில் ஒருவன் வைத்தான் பங்கயத்து இருந்த பொன்னை
ஆகத்தில் ஒருவன் வைத்தான் அந்தணன் நாவில் வைத்தான்
மேகத்தில் பிறந்த மின்னை வென்ற நுண் இடையினாளை
மாகத தோள் வீர பெற்றால் அங்ஙனம் வைத்து வாழ்தி

நீதி ??? அது இல்லாமலா…:

அவன் சொல்றான்.. இவ சொல்றான்னு யாரையாவது வச்சிக்க கிளம்பிடாதீங்க…(சொல்றது கூடப் பிறந்த தங்கையாவே இருந்தாலும் சரி)…மனசு முழுக்க மனையாளை மட்டுமே வச்சிக்கிங்க…பாக்க நல்லது…பாக்கிறவங்களுக்கும் நல்லது…முக்கியமா பர்ஸுக்கும் நல்லது..

வரட்டுமா….மீண்டும் வருவேன்