மனசு.. மனசு.. மாறும் மனசு….


மடிக்கணினி என்று லேப்டாப்புக்கு செய்த தமிழாக்கம் சரி தான் என்று இன்று (01-01-2013) தான் புரிந்தது. காலை முதல் மாலை வரை கொல்கொத்தா விமான நிலையத்தில் (இரண்டரை மணி நேர தாமதம் உட்பட) இருந்த போது உன்னிப்பாய் (இல்லெ..இல்லெ.. சாதாரணமாய்) பாத்தபோதும் தெரிந்தது. மடியில் பெரும்பாலான மக்கள் லேப்டாப்பையும், என்னை மாதிரி சிலர் டேப்லெட், ஐபோன் என்றும் வைத்திருந்தனர். ஒரு ஆர்வக் கோளாறில் எட்டிப் பாத்தேன். மகளிர் பெரும்பாலும் படம் பாத்தும் அல்லது பாட்டு கேட்டும் இருந்தனர். வயதானவர்கள் Free Cell ஆடியபடி இருந்தனர். (அடப்பாவிகளா இன்னுமா ஆடி முடியலெ??) மிகச்சிலரே அலுவலக மெயில்களை மேய்ந்து கொண்டிருந்தனர். (நானு..ஹி..ஹி.. எட்டிப்பாத்த நேரம் போக மத்த நேரமெல்லாம் கம்பராமாயணத்தில் மூழ்கி இருந்தேன்..ஹி..ஹி..)

”மனிதரில் இத்தனை நிறங்களா?” மாதிரி, மனிதரில் இத்தனை முகங்களா என்று கேக்கத் தோணும் அளவுக்கு இந்த விமான நிலையத்தில் மனித முகங்கள். சிலர் ”விமான கம்பெனிக்கே தான் தான் ஓனர்” என்பது போல் மிடுக்கான நடையில். நாம தான் Frequent Traveller என்பதைச் சொல்லாமல் சொல்லும் சிலர் ஒரு ரகம். புதிதாய் வந்தவர்களின் மிரட்சியே அதனைச் சொல்லிக் தரும். சில பயணிகளும், பெண் ஊழியர்களும் இருக்கின்ற உடையினைப் பாத்தா, நம்ம மதுரை ஆதீனம் சொன்னதில் ஒண்ணும் தப்பில்லையே என்று சொல்லத் தோனுது. (நமக்கு எதுக்கு இந்தப் பொல்லாப்பு). ஆனா விமானத்தில் ஏறும் மக்கள் அதிகமாயிட்டது என்பதை மட்டும், இந்தக் கூட்டம் பாத்து ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். மூட்டை முடிச்சுகளை விமானத்திலும் அதிகமாகவே மக்கள் எடுத்துவருகிறார்கள் என்பது என் கருத்து.

மனித மனங்களின் மாற்றங்கள் விசித்திரமானது. முன்பெல்லாம் இளம் பெண்களை பாக்கும் போது, அடடா என்று வியக்கத் தோன்றும். (சைட் அடிக்கத் தோனும் என்று ஒடெச்சிச் சொல்லவா முடியும்?) ஆனா இப்பொ கொஞ்ச காலமா இந்த மாதிரி பயணிகள், இண்டர்வியூக்கு வரும் இளம் பெண்கள், அலுவல் காரணமாய் வரும் மகளிர் யாரைப் பாத்தாலும் என் மகளோட சாயல் தெரியுது. (ஒரு வேளை வயசு ஆயிடுச்சோ…)

சினிமாவில் வந்த சாதாரன் காமெடி டயலாக்குகளைக் கூட, அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளாத மனசு, அதையே ஃபேஸ்புக்கில் போட்டுத் தாளிச்ச பிறகு அதே டயலாக்குகள் இனிக்கத்தான் செய்கிறது. உதாரணமா கவுண்டமனியின், “பெட்ரோமாக்ஸ் லைட்டே வேணுமா?” என்பதாகட்டும், ஒல்லியான வடிவேலுவின் “என்ன கையைப் புடிச்சி இழுத்தியா?” ஆகட்டும், தற்போதைய புஸ்டியான விடிவேலுவின், “தம்பீ, டீ இன்னும் வரலை” என்பதும் சரி, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. அடி மேல் அடி அடித்து அம்மியை நகர்த்துவது போல், போஸ்டிங் மேல் போஸ்டிங் போட்டு மனசெயே மாத்திட்டாங்களோ..

ஆனாலும் சும்ம சொல்லக் கூடாது, நம்ம மனசு இருக்கே மனசு, அதுவும் ஆதரவா யாராவது சொல்ல மாட்டாகளா என்று ஏங்கத்தான் செய்யுது. புதுப் புடவையோ, நகையோ போட்டு வெளியே வரும் மகளிருக்கு யாரும் எந்தக் கமெண்ட்டும் சொல்லாது இருந்தா, அன்னிக்கி அந்த அம்மாவுக்கு இருண்ட நாள் தான்.. அதுக்காக, காலில் போட்டிருக்கும் புது மாடல் கொலுசசைப் (அதிலெ சத்தம் என்பது கூட வரவே வராது) பாத்து யாரும் ஏதும் சொல்லலையே என்று சொல்லுவது தான் கொஞ்சம் கேக்க சிரமமா இருக்கு. (ஆமா.. பாக்க எப்படி இருக்கும்?) உங்களுக்கு எல்லாம் இனி ஒரு வேண்டுகோள். இனிமேல் காலையும் கொஞ்சம் பாத்து வைங்க.. ஒரு பாதுகாப்புக்கு செருப்பையும் பாத்துக்கிட்ட மாதிரியும் இருக்கும்.

என்னெக்காவது ஏதாவது வேலையெச் செய்யாமப் போயிட்டா, அல்லது நல்ல ஒரு சான்ஸை மிஸ் பன்னிட்டா, நம்ம மனசு என்ன செய்யும்? வருத்தப்படும். அப்புறம்… ஆதரவு தேடும். கெணத்துத் தண்ணியெ ஆத்து வெள்ளமா அடிச்சிட்டுப் போவப் போவுது? இப்புடி சொல்லி ஆதரவு தேடும். (இப்பொல்லாம், கிணத்திலெயும் தண்ணியில்லெ.. ஆத்திலும் தண்ணியில்லெ.. பேசாம பழமொழியெ மாத்தியிரலாமா?? ஏதாவது புதுசா கண்டு பிடிச்சிச் சொலுங்களேன்.

இப்படியே ஓர் எட்டு நம்ம கம்பரோட மனசையும் பாத்துட்டு வரலாமே? அவர் அனுமனோட மனசைப் பத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறார். விபீஷணனை ஆட்டத்திலே சேத்துக்கலாமா வேண்டாமா என்ற சர்ச்சை. புஸ்கா பஸ்கா ஜாம் புஸ்கா என்றோ, பிங்கி பிங்கி பாங்கி என்றும் சொல்லி நிர்னயிக்க முடியாத கட்டம். அனுமன் செமெ பாயிண்டுகளை எடுத்து விட்றாரு. இவரை சேத்துக்காமெ நாம மத்தவங்க மாதிரி சந்தகப் பட்றது அவ்வளவு நல்லால்லே.. அப்படி பட்டா அது எப்புடி இருக்கும் தெரியுமா?? கிணத்திலே இருக்கிற கொஞ்சூன்டு தண்ணியெ நம்மளை அடிச்சிட்டுப் போயிடுமோ என்று கடல்..லே கலங்கின மாதிரி இருக்காம்.. (இந்த இடத்தில் கடல்லேயே இல்லையாம் என்று வடிவேலுவுக்காய் ஜா”மீன்” வங்கப் போன வசனம் ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு இல்லை)

தேவர்க்கும் தானவர்க்கும் திசைமுகனே முதலாய தேவதெவர்
மூவர்க்கும் முடிப்ப வரிய காரியத்தை முற்றுவிப்பான் மூண்டு நின்றாய்
ஆவத்தின் வந்து அபயம் என்றானை அயிர்த்து அகல விடுதி ஆயின்
கூவத்தின் சிறு புனலைக் கடல் அயிர்த்தது ஒவ்வோதோ கொற்ற வேந்தே.

இனி புலம்பும் போது இப்படி ஏதாவது வித்தியாசமா புலம்புங்களேன்… பிளீஸ்.

அழகிய தமிழ் மகள்


சினிமாவில் கமல், மனிரத்னம், ரஹ்மான் இப்படி சிலர் வந்ததால் தமிழர்களின் கொடி பறக்கிறது. என்ன தான்  சிலர் தமிழர்களின் பெயரை எவ்வளவோ மேலே கொண்டு வந்தாலும் இந்த வட நாட்டவர்களுக்கு தமிழர்கள் என்றால் கொஞ்சம் இளக்காரம் தான்.

அதுவும் ஹிந்தி சினிமாக்களில் காட்டப்படும் தமிழன் எப்போதும் காமெடியன் தான். ஐயோ, ஐயோடா, ஐயய்யோ இவைகள் தான் தமிழன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள். இதுக்கு ஒரு முடிவே கிடையாதா என்று வடிவேல் ஸ்டைலில் கேக்க மட்டும் தான்முடியும்!!!

அந்தமானில் 15 – 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழர்கள் ஐயாலோக் என்று கேவலமாக நடத்தப்பட்டார்கள். அப்போதெல்லாம் தமிழர்கள் பெரும்பாலும் கூலித் தொழிளார்களாக மட்டுமே இருந்தனர். இப்போது இந்த அய்யாலோக் என்பது மாறிவிட்டது. ஏனென்றால் பல துறைகளில் தமிழர்கள் மேலே வந்துவிட்டனர். அரசியல், வியாபாரம், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் இப்படி எல்லா துறைகளிலும் தமிழர்கள் டாப்பில் வரத்துவங்க… அந்த ஐயா லோக் மறைந்து விட்டது.

ரொம்ப சுகமா கம்யூட்டரில் தமிழ் எழுதுகிறேன். அப்படியே இலக்கிய காலத்தை கொஞ்சம் புரட்டிப் பாத்தா??? அவங்க என்ன கம்ப்யூட்டர் வச்சிட்டா எழுதுனாங்க..அந்தக் காலத்தில் ஏது அழகி??… இப்பவே நம்ம ஆட்களுக்கு தமிழ் மெயில் எழுதுறது ரொம்ப சிரமமா இருக்கு. ஏடு எழுத்தாணி வைச்சி எப்பிடி அந்தக் காலத்திலெ எழுதி இருப்பாங்க? என் கவலை என்னென்னா?? Ctr Z, Ctr C, Ctr V போன்ற வசதி இல்லாம எப்படி எழுதி இருப்பாங்க…??

இந்தக் கவலை ஒருபக்கம் இருக்கட்டும். கவியரசர் கம்பன் கனவு கண்ட பத்தி நான் கண்ட கனவு கேளுங்க…

ராமாயணம் எழுதுறப்பொ கொஞ்சம் அசதியா படுக்கிறார் நம்ம கம்பர். பத்தாயிரம் பாட்டு எழுதுறது என்ன சும்மாவா?? கனவு வருகிறது. அழகிய பெண் ஒருத்தி கெஞ்சியபடி : “காப்பியம் எழுதுறீங்களாம்லெ.. என்னையும் சேத்துக்கோங்களேன்.. ப்ளீஸ்”.

கம்பன் : யார் நீ?
அழகி: தெரியவில்லையா? நானும் தமிழின் மகள் தான்.

கம்பன்: அழகிய தமிழ் மகளே!!! உன் பெயர்?
அழகி: “ஐயோ”

கம்பன்: ஏன் இந்த பயம்? பயப்படாமல் சொல். உன் பெயர்??

அழகி: கவியரசரே… என் பெயர் தான் “ஐயோ”.. தமிழின் புதல்வி நான். என்னை யாரும் எந்தப் புலவரும் பாடுவதில்லை. உங்கள் இதிகாசத்திலாவது என் பெயர் வரட்டும்…ப்ளீஸ்..

 தூக்கம் கலைந்து உடனே எழுத்தாணி பிடிக்க… கவிதை கனவில் வந்த அழகிய தமிழ் மகளையும் சேர்த்து வருகிறது. ஐயோ என்ற அமங்கலச் சொல் கம்பன் கைபட்டு மங்கலமாய் இராமனை வர்ணிக்கும் விதமாய் மிளிர்கிறது.

பாடல் இதோ…
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ
இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான்.

இனி மேல் வட நாட்டவர் யாராவது ஐயோன்னு தமிழனை அவமரியாதை செய்தால் உங்களுக்கு இராமனை நினைக்கும் வாய்ப்பு அளித்ததாய் சந்தோஷப்படுங்கள்.

இல்லாவிட்டால் ஐயோ ஐயோ என்று வடிவேலு ஸ்டைலில் ஜாலியா இருங்க..

இடைத்தரகர்கள்


அன்பு நெஞ்சங்களே…

இடை என்பதில் ஒரு கவர்ச்ச்ச்சி இருக்கத்தான் செய்கிறது. இடை பத்தி
கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் இடைத்தரகர்கள் பத்தி எழுத வந்திருக்கேன்.

இடைத்தர்கர் என்றதுமே, என்னடா இது… இவனும் 3ஜி சமாச்சாரம் ஏதோ எழுத வந்துட்டானேன்னு நெனைச்சிப் பயந்துராதீங்க… நானு அந்த டாபிக்குக்கு
கொஞ்சம் indirect ஆ வர்றேன்.

தரகர்களின் தேவை எதுக்கு?

ஒரு சேவை தேவைப்படும் நபருக்கும் அது வழங்கும் இடத்திற்கும் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்பவர்கள் தான் தரகர்கள். அவர்கள் இடையில்
இருப்பதால் இடைத்தரகர்கள். அம்புட்டுத்தான்.

விளைவிக்கும் விவசாயிக்கு 50 ரூபாய் கிடைக்கும். ஆனால் மார்க்கெட்டில் ரூ 300க்கு அந்த பொருள் விற்கும். அப்பொ 250 ரூபாய்க்குச் சொந்தக்காரர்கள் அந்த
இடைத்தரகர்கள்.

புரோக்கர் மாமா பூஜாரி Lobbiest Facilitator Contractor இப்படி செய்யும் தொழில்
வைத்து பெயர்களும் மாறுபடும்.

(இந்தப் பில்டப்புக்கு அப்புறம் கண்டிப்பா ஒன்னோட… இலக்கிய அறிவை எடுத்து
உடுவியே…சொல்லு..சொல்லு.. அப்பத்தானே இந்தப் போஸ்ட் சீக்கிரம் முடியும்!!)

இந்த நீனா ராடியா போன்ற இடைதரகர்கள் அந்தக் காலத்திலும் இருந்திருப்பாங்களா?…
யோசிச்சிகிட்டே கொஞ்சம் கப்பல் ஏறுவோம்.

போர்ட்பிளையர் முதல் லிட்டில் அந்தமான் வரை கப்பல் பயணம். சுமார் 9 மணி நேர பயணம். ஜாலியா படிக்க ரெண்டு பெரிய்ய புக் எடுத்துட்டு கிட்டுக் கிளம்பினேன். ரெண்டு பெட் இருக்கும் கேபினில் இன்னொருவர் வந்து சேர்ந்தார்.
இங்கிருக்கும் ஒரு மிருக வைத்தியர் (கன்சூமர் கோர்ட், கம்ப்ளைண்ட் என்று ஏதும்
செய்யாத மிருகங்களுக்கு வைத்தியம் செய்வதில் சுகம் என்றார்)..

ரொம்ப போரில்லை.. 9 மணி நேரம் …

அப்படி ஒன்னுமில்லை… நான் புக் வச்சிருக்கேன். – இது நான்.

என்ன புக்கு அது..இவ்வளவு பெரிஸ்ஸ்சா? (கேட்டவர் மலையாளி மிருக வைத்தியர்)

கம்ப ராமாயணம். பாடல்கள் மட்டும் ஒரு புக்.. அர்த்தம் தெரிய இன்னொரு புக் என்றேன்.

டாக்டர் ஒரு மாதிரி பாத்தார்… இதெல்லாம் சுத்தமா ஒரு எடத்திலெ இருந்து தானே
படிப்பாங்க. இப்படி ஜாலியா படிக்கிற புக்கா இந்த ராமயணம்??

அவருக்கு நான் சொல்லிய பதில் தான் உங்கள் முன் சொல்ல வருகிறேன்..

ஜாலியான சமாச்சாரங்கள் நிறைய இருக்கு இந்த கம்ப ராமாயணத்தில். இடைத்தரகர்கள் இல்லை என்றால் ராமன் இல்லை. ராமன் இல்லையெனில் ராமாயணம் ஏது??

தசரதனுக்கு குழந்தயே இல்லை. என்ன செய்றதுன்னு கைனக்காலஜிஸ்ட்களிடம்
பேசினார். எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் இந்த டெஸ்ட் செய்யின்னு சொல்ற மாதிரி ஒரு யாகம் செய்யனும்னு ஒரு சின்னதா பிரஸ்கிரிப்ஷன்.

நம்ம டாக்டர்கள் தெரிஞ்ச லேபில் ரெக்கமண்ட் பண்ற மாதிரி ஒரு வில்லங்கமான
முனிவரை வச்சி யாகம் செய்யனும்னு வம்பில் மாட்டி விட்டார்.

அந்த முனியோ சொஞ்சம் அப்படி இப்படி ஆளு.. ஆனா அவரோட அப்பாவோ,
மக்களை விலங்கு மாதிரி நெனைக்கிற ஆசாமி..பயங்கர முனி.. இந்த நேரத்லெ தான் நம்ம ராஜாவுக்கு (தசரதனுக்கு) ஓர் இடைத்தரகர் தேவைப்பட்டார்.
அது ஸ்பெட்ரம் மேட்டரை விட  கொஞ்சம் பெரிய்ய மேட்டர் என்கிறதினாலெ கொஞ்ச பேரை பிடிச்சாரு நம்ம தசரதன். யாரு அந்த இடைத்தரகர் தெரியுமா…
ஸ்…ஸ்.. யார்கிட்டேயும் சொல்லாதீங்க.. கொஞ்ச்சும் பெண்கள் சிலர்.

அவங்க எப்படி இருந்தாங்க தெரியுமா??

பிரைட்டான நெத்தி… கருப்பா நீளமா கண்ணுங்க… ரத்தச் சிவப்பா லிப்ஸ்
இருக்கும் வாய்.. முத்துப் பல்லுக்காரிகள்.. மென்மையான இரு மார்புகள்..
இப்படியெல்லாம் இருக்கும் விலைமகளிர்…

இவங்களை அனுப்பி கலைக்கோட்டு முனிவனை கலக்கி கூட்டிவந்து யாகம் நடத்தி … ராமன் பிறந்து… இப்படி வந்தது ராமாயணம்…

டாக்டர் தூங்க ஆரம்பிச்சிட்டார்… நீங்க இன்னும் தூங்கலையா?? பாட்டு கேட்டு தூங்குங்க…

“சோதி நுதல் கரு நெடுங் கண் துவர்
இதழ் வாய் தரள நகை துணை மென்
கொங்கை மாதர் எழுந்து யாம் ஏகி
அருந்தவனைக் கொணர்ந்தும் என வணக்கம் செய்தார்.”

என்ன மக்களே… இது தப்பு இல்லையா??

இல்லவே இல்லை… நாலு பேத்துக்கு நல்லது நடக்கனும்னா எதுவுமே
தப்பில்லை.

நீங்க என்ன சொல்றீங்க???

வாழைப்பழத்தில் ஊசி


வாழைப்பழம் என்றதுமே அந்த ஒரு ரூபாய்க்கு பழம் வாங்கி வரும் அமர்க்களமான செந்தில் கவுண்டமனி காமெடி தான் ஞாபகம் வரும். அதே பாணியில் எத்தனை காமெடிகள் வந்தாலும் அந்த காமெடி சுவையே தனி தான்.

ஒத்தெ வாழைப்பழம் தனியா இருக்க முடியாமெ தூக்கிலெ தொங்குற மாதிரி படமும் ஜோக்கும் முகநூலில் அடிக்கடி இப்பொ தலை காட்டுது.

அந்தமானில் விளையும் குறைந்த அளவிலான பழங்களில், அதிகமாய் விளைவது இந்த வாழை தான். விதம் விதமாய் பெயர்களில் கட்டா சம்பா, மிட்டா சம்பா, பச்சை, சிவப்பு என்று கலர்களிலும் கிடைக்கிறது.
ஆனால் வாழைப்பழத்தில் ஊசி மட்டும் சில பழங்களில் குத்த முடியாது. விதையும் இருக்கும். விதையுள்ள வாழைப்பழங்கள் அந்தமான் தவிர எங்கும் கிடைக்கும் தகவல் எனக்குத் தெரியலை.

அது என்ன வாழைப்பழத்தில் ஊசி ஏத்தும் கதை.

[அது வேற என்ன…?? அங்கே சுத்தி இங்கே சுத்தி நைஸா கம்ப ராமாயணம் இழுக்கும் கலையின் இன்னொரு பேரு தான் அது]

ஒரு விஷயத்தை ஒரு பார்ட்டி அழகாச் சொல்லி அடுத்த பார்ட்டியை சம்பதிக்க வைக்கும் கலையும் தான் அது.
எனக்குத் தெரிந்து ஒருவர் ஒரு வாரம் முன்பு கட்டிப்புரண்டு அடிபிடி சண்டையில் இருப்பார் ஒருவருடன். அதே நபரோடு தோழில் கை போட்டு வருவார் ஒரு வாரத்தில். அவர் வாழைப்பழ ஊசியில் டாக்டரேட் வாங்கியிருப்பாரோ??!!!

ஆனாலும் அப்படி யாராவது பேசினாலும் கேக்காதீங்கன்னு சொல்றதுக்கும் பழமொழி இருக்கே.. கேக்கிறவன்………பயலா இருந்தா… கேப்பையில நெய் வடியுது என்பானாம்.

அது சரி… எதுக்கு சுத்தி வளைப்பானேன்? நேரடியா கேக்கலமே?? இந்த வாழைப் பழத்தில் ஊசி பத்தி கம்பராமயணத்தில் வருதா???

வருதே…

ஆனா வழக்கம் போல கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில் யோசித்து ஒரு அசம்பாவிதமான இடத்தில் அதைச் சொல்றார் கம்பர்.

சாதாரண வாழைப்பழத்தில் ஊசி எப்படி ஸ்மூத்தா போகும்?? ஆனா சுவையான பழத்தில்??? அதாவது கனிந்த பழம். இப்படி சொன்ன அந்த மிருதுவான பழம் எதுன்னு பாத்தா… அங்கே தான் கம்பர் நிக்கிறார்.

ஒரு எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங்க் பார்ட்டி. அவரோட மார்பு அவ்வளவு ஸ்டார்ங்கா இருக்காம்… எவ்வளவு?? பூமி காற்று நெருப்பு நீர் அதோட குணம் சேர்ந்ததாம்.

அதோட உட்டாரா மனுஷன்.. பூமியை ஆதரவா புடிச்ச ஆளு காற்று; காத்தும் காத்தோட ஆளும் சேந்து நெருப்பை உண்டாக்கினாகளாம்…

ம்…அப்புறம்??? அந்த நெருப்பு நீரை உருவாக்குமாம்??? தலையை சுத்துதா???
சரி… பழம் இப்படின்னா??? ஊசி…???

வாலியின் மார்பில் பாய்ஞ்ச அம்பைத்தான் இப்படி சொல்றார்..

அடி ஆத்தி… அப்படியே பாட்டு பாக்கலாமா??

கார் உண் வார் சுவைக் கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது நின்றது எனச் செப்ப
நீரும் நீர் தரும் நெருப்பும் வன் காற்றும் கீழ் நிவந்த
பாரும் சார் வலி படைத்தவன் உரத்தை அப்பகழி

எப்புடி நாம கம்பரையும் உள்ளே கொண்டு வரும் விதம்.

ஆமா… இதுலெ ஊசி எது ?? பழம் எது??

கபடி கபடி … கரடி கரடி


இந்தக் கரடி, உலகத்திலே என்ன தப்பு செஞ்சதோ தெரியலை.. அதுக்கு எங்குமே ஒரு நல்ல பேரு இல்லெ..

கரடியா நான் கத்துறேன் யாருமே கேக்கலைன்னு கத்தும் ஆசாமிகளை பாத்திருப்பீங்க.. (கரடி மாதிரி கத்துனா யாரால தான் காது கொடுத்து கேக்க முடியும்??)

ஒரு படத்தில் கூட செண்ட் அடிச்ச பிறகு வடிவேலுவை, ஒரு கரடி நைஸா தள்ளிட்டு போகும்.. அப்புறம் என்ன ஆச்சிங்கிறதை சென்ஸார் புண்ணியத்தால் யாருக்கும் தெரியாமல் செய்து விட்டார்கள்…

ஒரு பழைய படத்தில் கூட கரடியை வச்சி காமெடி இருக்கு. ஏ கருணாநிதியோ அல்லது சந்திரபாபுவோ மரத்தை சுத்தி கரடியை வைத்து வரும் காமெடி ஸீன் அது.

பூஜை வேளையில் கரடி என்பது அடிக்கடி புழங்கும் வாக்கியம்.. ஆமா.. பூஜைக்கும்
கரடிக்கும் அப்படி என்ன அவ்வளவு ஏழாம் பொருத்தம்?

எனக்குத் தெரிந்து கரடிக்கு பயந்து ஒருவன் மரத்தில் ஏறிவிட… கரடி கீழே வெயிட்டிங்க்.. மரத்தில் உள்ளவனுக்கு தூக்கம் வராமல் இருக்க… இலையை ஒவ்வொன்றாக பிடுங்கி.. கீழே போட… மரத்தின் கீழ் சிவன் இருக்க… அந்த மரம் வில்வ மரமாக போக… அன்றைய இரவு சிவராத்திரியாக இருக்க… அவன் கரடியிடம் தப்பி, சொர்க்கமே போனானாம். இப்படித்தான் போகுது கதை..

ஆனா.. கரடிக்கு நடைமுறை வாழ்வில் நல்லபேர் இல்லையே..!!!

இன்னும் சில இசகு பிசகான உதாரணங்கள் பாக்கலாமா??

ஆமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?

மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட மாதிரி (நான் வம்பாய் கம்பரை இழுப்பது போல்…இவ்வளவும் அதுக்குத்தானே!!!)

கொல்லன் தெருவில் ஊசி வித்த கதையா…

சம்மன் இல்லாம ஆஜர் ஆன மாதிரி…

இப்படி சொல்லிட்டே போகலாம்..(இதுக்கு மேலே தெரியாட்டி, இப்படியும் சொல்லி  சமாளிக்கலாம்!!)

ஆனா எல்லாருக்கும் இப்படி ஒரு எசகுபிசகான சூழல் கண்டிப்பா வாச்சிருக்கும். நான் இப்பொ சொல்லப்போறது ஒண்ணு இல்லெ..ரெண்டு இல்லெ.. மூனு.

அப்பா… இப்பவே கண்ணெக் கட்டுதே??? (வடிவேலு ஸ்டைலில் படிங்களேன்)

சூழல் ஒண்ணு:

பலான பார்ட்டிகளுக்கு கவனம் எதில் இருக்கும்? பணத்தில் தானே?.. ஆனா சோத்துக்கே லாட்டரி அடிக்கிற ஒருத்தன் அங்கே போனா…எப்படி இருக்கும்??

இரண்டாம் காட்சி:

அவங்க வீட்டுக்கு போனா… சூப்பரா காஃப்பி… அப்புறம் அருமையான அடை வடை  பாயாசம் இதெல்லாம் கெடைக்கும்னு நெனச்சிட்டு ஒரு வீட்டுக்கு போனா… அங்கே … ஹி..ஹி… வீட்ல ஊருக்கு போயிட்டாங்க… நான் தான் சமையல்… அப்பொ எப்படி
இருக்கும் உங்களுக்கு?? கடுப்பு வராது..??

மூன்றாம் ஸீன்:

கருணையே வடிவா ஒரு முனிவர். அவரை எப்படியாவது கல்யாணம் கட்டிக்கணும்னு ஒரு சூப்பர் பிஃகர் நெனைச்சா… அது எசகு பிசகா இருக்காது??

அது சரி… இந்த கதை இப்பொ எதுக்கு…

வேறெ எதுக்கு?? கம்ப ராமாயணம் சொல்லத்தான்..

ராவணன் விட்ட திரிசூலம் ஜடாயு மேலே பட்டு.. கீழே விழுந்திடுச்சாம்.. அது இப்படி
மூனு விதமான எசகு பிசகான காரியம் போல இருந்திச்சாம். இது கம்பன் சொல்லும் கற்பனை..

பாட்டு: வேணும்கிறவங்க படிக்க மட்டும்:

பொன் நோக்கியர்தம் புலன் நோக்கிய புங்கணோரும்
இன் நோக்கியர் இல் வழி எய்திய நல் விருந்தும்
தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் தம்மைச் சார்ந்த
மென் நோக்கியர் நோக்கமும் ஆம் என மீண்டது அவ்வேள்.

நாளை வேறு ஏதாவது கலாட்டா மாட்டுதான்னு பாக்கலாம்.. சரி…
எழுத நான் ரெடி.. படிக்க நீங்க ரெடியா??