கேக்காமெக் குடுக்கிற சாமி இது..


”ஆத்துலெ போட்டாலும் அளந்து போடு” ன்னு சொல்லுவாங்க. ஆத்திலெ கொட்ற அல்லது போட்றதுங்கிற முடிவுக்கு வந்தாச்சி.. அப்பொ எதுக்கு அளக்கும் அளவை எல்லாம்? அவங்க அந்தக் காலத்திலெ, எந்த அர்த்தத்திலெ சொன்னாங்களோ தெரியலை. ஆனா.. எனக்கு என்னமோ ஆலைக் கழிவுகள் எல்லாமே கணக்கு வழக்கு இல்லாமல் கொட்டிடக் கூடாதுங்கிற நல்ல மெஸேஜுக்காக சொல்லி இருப்பாங்களோ?? கொட்டுறது ஒரு பக்கம் இருந்தாலும், அதே ஆத்திலிருந்து மணல் அள்றதும் ஒரு வகையில் கணக்கு வழக்கு இல்லாமத்தான் நடந்துட்டு வருது. துட்டு பாக்குறதுக்கும் அது தான் நல்ல வழியாவும் இருக்கு.

ஆத்துலெ போட்றது, எடுக்குறது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனா வீட்டுக்கு பணம் அனுப்பும் ஆட்களுக்கும் இது பொருந்தும் தெரியுமா உங்களுக்கு? என் நண்பனின் கதை சொல்றேன் கேளுங்க. கஷ்டப்பட்டு படிச்சி வேலைக்கு சேந்தவன் அவன். செலவுக்கு கொஞ்சூண்டு வச்சிட்டு அம்புட்டும் வீட்டுக்கு அனுப்பினான் அந்த அப்பாவி. ரெண்டு வருஷம் கழிச்சி தங்கச்சி கல்யாணத்துக்கு தயார் ஆனது. இருக்கும் காசு எல்லாம் அனுப்பிய ஆசாமி, வீட்டிலெ எவ்வளவு இருக்குதுன்னு கேட்டா, கை விரிச்சிட்டாங்களாம். அப்புறம் கடனெ ஒடனெ வாங்கி கல்யாணம் நடந்தது. நீதி: எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், வேணும்கிற மட்டும் அனுப்புங்க.. அது அப்பா அம்மாவாக இருந்தாலும் கூட.

கேட்டாக் கொடுக்கிற பூமி இது. கேக்காமெக் கொடுக்கிற சாமி இது. இது ஒரு சினிமா பாட்டு. (அப்பாடா டைட்டில் வந்தாச்சி..அப்பொ கம்பரை இழுத்து வச்சி போஸ்டிங்கை முடிச்சிரலாமா? அதான் கிடையாது. அதுக்கு இன்னும், கடைசி வரை நீங்க வெயிட் செய்தே ஆகணும்). எந்த பூமி கேட்டதெல்லாம் கொடுக்குது? அந்தமான் பூமியில் பேரீட்சம்பழம் விளையுமா என்ன? நம்ம மக்கள் எப்படியோ காலிபிளவர் வரைக்கும் அந்தமானிலெ விளைய வச்சிட்டாங்க என்பது ஒரு கொசுறுத் தகவல்.

கொடுக்குற தெய்வம் கூரையைப் பிச்சிகிட்டுக் கொடுக்கும் என்றார்கள். கூரைகளே நாட்டிலெ இருக்கவே கூடாது என்பது அரசின் திட்டம். இந்த மாதிரி இருக்கறச்சே கொடுக்க நினைக்கிற கடவுள் கூட கான்கிரீட் கட்டர் மிஷின் எல்லாம் கொண்டு வந்து தான் கொடுத்தாகனும். ஆமா.. அப்பிடியே குடுத்தாலும் கூட, அப்புறம் முதல் செலவே, அந்த ஒடைச்ச Slab ஐ சரி செய்யும் வேலை தான் இருக்கும். என்கிட்டெ யராவது, ”கடவுள்கிட்டெ என்ன கேப்பீங்க” என்று கேட்டால், நான் என்ன சொல்வேன் தெரியுமா? ”எனக்கு என்ன தேவை?” என்பது அந்தக் கடவுளுக்கு தெரியாமலா இருக்கும்? ஆனா அழும் பிள்ளைக்குத் தானே பாலு?? தட்டுங்கள் திறக்கப்படும் என்றார்கள். மாணிக்கவாசகர் கொஞ்சம் வித்தியாசமானவர். பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பனிந்து என்பார். பால் வேணும் என்று புள்ளை நெனைச்சாலே தாய் வருவாங்கலாம்.. அந்தக் காலத்து அம்மா…

ஃப்ரீயா கொடுத்தா நம்மாளுங்க ஃப்னாயில் கூடக் குடிப்பாய்ங்க. அந்தமானிலிருந்து தமிழகம் போகும் போது ஒவ்வொரு வீட்டிலும் அந்த இலவச டீவியின் பயன்பாடுகள் பாத்தா ஆச்சரியமா இருக்கும். டேபிள் மாதிரி, டீப்பாய் மாதிரியாவும், எத்தனை விதங்கள். கேக்காமெக் குடுத்ததினாலெயே இந்த நிலை என்று சொல்ல முடியுமோ??

சமீபத்தில் லிட்டில் அந்தமான் தீவில், பார்த் நிர்மான் விளக்க விழா நடந்தது. அதில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பொது மக்களுக்கு விளக்கும் வேலை என் கைக்கு வந்தது. வழக்கம் போல் லெக்சர் முடித்து கேள்வி நேரம் வந்த்து. கேள்விகள் கேட்டாத்தான் குடுப்பாகளா?? கேக்காமெயே தரும் வசதி இல்லியா? (ஒரு வேளை தெரிந்தே கேட்டிருப்பாரோ?? ஒரு இஞ்ஜினியர் Right to Information – RTI Act பத்தி சொல்றதில், இந்த மாதிரியான குறுக்குக் கேல்விகள் தவிர்க்க முடியாதவை. எனக்கு சரக்கு இருக்கா இல்லையா என்று டெஸ்ட் செய்யும் உலக இயல்பு அது)

ஏன் இல்லை?. இதுக்காக செக்சன் 4 என்றே தனியா இருக்கு. பொதுமக்கள் கேக்காமலேயே, மக்களுக்கு தேவையான தகவல்களை அவர்களுக்கு புரியும் மொழியில் (புரியாட்டியும் கூட ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ) வெளியிட வேண்டுமாம். இதே செக்சன் 4 ல் இரண்டு உட்பிரிவுகள் இருக்கின்றன. Section 4(1)(c) & 4(1)(d) தான் இவைகள். இதிலெ என்ன சொல்றாங்க தெரியுமா? அரசு தயாரிக்கும் திட்டங்களின் விவரங்கள் அனைத்தும், அதில் சம்பந்தப்பட்ட மக்களுக்கு சொல்ல வேண்டும். அதே போல் அரசின் முடிவுகளுக்கான காரணங்களையும் அதனால் பாதிக்கப் பட்ட மக்களுக்கும் சொல்லியே ஆக வேண்டும். சொல்லலையா, ஒரு RTI போட்டு இந்த செக்சன் சொல்லிக் கேளுங்க.

இந்த சமாச்சரங்களை எல்லாம் ரொம்ப சூப்பரா அந்தக் காலத்திலெ நம்ம கம்பர் சமாளிச்சிக் காட்டி இருக்கார். (2005ல் வந்த தகவல் பெறும் உரிமைச் சட்டத்துக்கும் கம்பருக்கும் என்ன சம்பந்தம் என்பீர்கள்). நம்ம சட்டம் சொல்லுது: முடிவு எடுத்து விட்டு மக்களுக்கு தகவல் சொல்லு. ஆனா கம்ப(ர்)சட்டம் என்ன சொல்லுது தெரியுமா? முடிவு எடுக்கிறதுக்கு முன்னாடியே, கலந்து ஆலோசித்து விட்டால் அந்த சிக்கலே வராதே?? இராமாயணத்தில் ஒரு சூப்பர் சீன் வருது. (எல்லாமே சூப்பர் சீன் தானா??)

விபீஷணன் அடைக்கலம் புக வந்திருக்கும் நேரம். ராமர் தான் தலவர். அவர்கிட்டெ முழு அதிகாரமும் இருக்கு. அவரு ஒரு முடிவு எடுத்துட்டா,யாரும் எதுவும் சொல்லப் போறதில்லெ. ஆனா.. நம்ம தலைவர் அப்படி செய்யலையே.. பாதிக்கப்படப் போகும் குரங்குப் படைகளிடம் கருத்துக் கேட்கிறார். மயிந்தன் என்ற புத்திசாலி வானரம் (நமக்கெல்லாம், அனுமன், வாலி சுக்ரீவன், அங்கதன் இவர்களை விட்டால் வேறு யரையும் தெரியாது) வீடணன் நல்லவரு, வல்லவரு என்று சொல்கிறார். அப்படிச் சொன்ன பிறகு, இவரை பக்கத்திலெ வச்சிக்கலாமா? தூரமா வெரட்டி விட்டு விடலாமா? யோசிச்சி சொல்லுங்க.. என்று வானரப் படைத் தலைவரிடமே (சுக்ரீவன்) கேட்கிறார்.

இது அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று ராமரின் சொல் வழியாக கம்பர் சொல்வதாகத் தான் எடுத்துக் கொள்கிறேன். உங்களுக்கு எப்படிப் படுது?? அதுக்கு முன்னாடி பாட்டுப் பாத்துருவோமா??

அப்பொழுது இராமனும் அருகில் நண்பரைஇப்பொருள் கேட்ட நீர் இயம்புவீர் இவன்கைப்பிகற்பாலனோ கழியற்பாலனோஒப்புற நோக்கி நும் முணர்வினால் என்றான்

இப்பொ சொல்லுங்க… கேக்காமலேயே குடுக்கணுமா வேணாமா?? அது சரி..நீங்க கேக்காமலேயே, என்னோட போஸ்டிங்கள் தொடரும்.

Goal Setting


எதை எதையோ செஞ்ச்சி வெட்டியா பொழுது போக்குறீங்களே…ஏதாவது MBA மாதிரி ஏதாவது படிச்சா என்ன?? என்று என் திருமதியார் நொய் நொய் என்று அனத்தி எடுக்க நான் இப்போது MBA முடித்து விட்டேன்.

நீதி : (எப்பொவும் என்னோட போஸ்டிங்க் படித்த பலர் அல்லது சிலர் கேட்கும் கேள்வி: என்ன சொல்ல வர்ரீங்க??…) அதனால நீதியை மொதலில் சொல்லி வைக்கிறேனே.. பொண்டாட்டி நொய் நொய் என்றால் கொஞ்சம் காது குடுத்து கேளுங்க..நல்லதும் நடக்கலாம் (சில சமயங்களில்)

எங்கே சுத்தியும் கடைசியில் கம்பராமாயணம் இழுத்து வரும் கலை (சிலர் கொலை என்றும் நினைக்கலாம்) மாதிரி MBA ல் எங்கு சுத்தினாலும் கடைசியில் சில பல M Factors சொல்லி விடுவார்கள்.

Money
Man
Material
Machinery இப்படியாக…

இன்னும் இதே போல் விடுபட்ட (பாடபுத்தகங்களில் சொல்லப் படாத) M Factors பத்தி யோசிச்சா… ஒரு லிஸ்ட் கெடைக்குது miscellaneous என்ற தொகுப்பில் அதனை அடக்கி விடலாம். அதில் Malaiyaalee, Madam, Methods, முகவெட்டு…இப்படி நிறைய சேத்துட்டே போகலாம்.

அது சரி.. தமிழில் Management தொடர்பான புத்தகங்கள் இல்லையே என்று கவலைப் படுபவரா நீங்க??

வள்ளுவரிடம் பாத்த Management Skills பத்தி இறையன்பு IAS ஜம்முன்னு ஒரு புத்தகமே போட்டிருக்காரு… அதன் ஆங்கில வடிவம் வேணுமா??? தேடுங்க.. கூகுலாண்டவர் அருள் புரிவார்.

சமீபத்தில் ராமர் ஒரு Management Guru என்று பெயரை விட அதிகமாய் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அதிகமாய் வைத்துள்ளவர் எழுதிய புத்தகம் மேலோட்டமா பாத்தேன்..(எதையுமே முழுசா பாப்பதில்லைங்கிறது தான் ஊருக்கே தெரிஞ்ச சேதியாச்சே..??)

ராமர் எப்படி Management பத்தி பாடம் எடுக்க முடியும்??

சீதை பிறந்த வீட்டுக்கு போனப்பொ இரு நாள் ராமர் பொழுது போகாமெ ஒரு டிராமா (அதாங்க..அந்த கால கூத்து…) பாக்க போனாராம். அங்கே போனா…அங்க்கேயும் ராமாயணம் தான் கதையாம். ராமர் சீதையை பிரிஞ்ச சீன்.. நடிப்பில் பின்னி பெடலெடுக்கிறார் அந்த நடிகர். ராமர் யோசிக்கிறார்… அடப்பாவி.. நான் கூட இவ்வளவு கவலைப் படலையே?? இந்த நடிகன் இவ்வளவு கவலைப்பட்டது போல்… ராமன் கவ்லைப்பட்டு யாரிடமும் சபாஷ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.. ஆனால் நடிகனுக்கு சபாஷ் வாங்கியாக வேண்டும்.. (இந்த இடத்தில் சுகி சிவம் அவர்களுக்கு நன்றி சொல்லியாகனும்..இதை அவரிடம் சுட்டதுக்கு)

அப்பொ ராமகதையோ…ராமரோ..அவர்களை விடவும் போற்றுதலுக்கு உரியவர் அதை கதை வசனம் எழுதி டைரக்ட் செய்தவர் தானே.. ஆக கம்ப ராமாயணத்தில் Management Guru கம்பர் தானே?? (இதை நேரடியா சொல்லித் தொலைக்க வேண்டியது தானே?? எதுக்கு இவ்வளவு இழுவை?)

சரி இப்பொ… கம்பர் சொல்லும் Goal Setting கதைக்கு வருவோம்… அவர் சொல்லும் Sequence கொஞ்சம் பாருங்க…

1. Objective of the Job: என்ன செய்யனும்கிறதில் தெளிவு வேணும்.. இது தெரியாமா பொழுதன்னைக்கும் ஃபேஸ்புக்குலெ விழுந்து கிடந்தா என்ன யூஸ்??

2. Assighn the Job..: யாருக்கு என்ன வேலை தரனுமோ நச்சுன்னு அதைப் பாத்து குடு.

3. Give him the required resources: நல்ல மேனேஜருக்கு அழகு என்ன தெரியுமா?? நீ என்ன வேண்ணாலும் செய்யி… எனக்கு தேவை இதை முடிக்கனும்..அவ்வளவு தான். இதையெ சிடுமூஞ்சிப் பேர்வழிகள் எப்படி சொல்லுவாங்க தெரியுமா?? நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது… நம்மாளு எதையும் செய்யாமெ வந்து நிப்பான்.

4. Fix the Target: கெடு வச்சி கையில குடு..அவன் கிடு கிடுன்னு வேலை பாப்பான்..

5. Get Feed Back: வேலையைக் குடுத்தா முடிஞ்சதா வேலை?? அப்பப்பொ மொபைல்ல புடி… மயிலும் செய்..ஆளை கண்கானிச்சு ரிப்போர்ட் கேளுபா..

6. Review the Task: அலசு…அலசு…அழுக்கு போகும் வரை அலசு… வேலை முடியற வரை விடாம அலசு.

இதை எல்லாம் கம்பர் சொல்லி இருக்கார்… சொன்னா நம்ப மாட்டீங்க.. இடம் பொருள் விளக்கம் சொன்னா நம்புவீங்களா?? (உங்களை நம்ப வைக்கவே நான் இந்தப் பாடு பட வேண்டி இருக்கே???)

1. வேலையில் தெளிவு : சீதையினை தென் திசை சென்று தேட வேண்டும்.
2. Team Leader: அனுமனை appoint செய்தல்.
3. Resource: இரண்டு வெள்ளம்(மில்லியன் அல்லது பில்லியன் என்று என் ஊகம்) வானரப் படை தருதல்.
4. கெடு: முப்பது நாள் தான். (அட..இதைத்தான் நம்ம Right to Information – தகவல் பெறும் உரிமை சட்டத்திலும் கெடு வைத்தார்களோ??)
5. தகவல் அப்பொப்ப தரணும்
6. ஒரு மாசம் முடிஞ்சி மறுபடியும் சந்திப்போம்.

இது சுக்ரீவன் இட்ட Action Plan. கம்பர் தான் இங்கு Management Guru..

பாட்டு பாக்கலாமா??

வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி ஒருமதி
முற்று றாதமுன் முற்றுதிர் இவ்விடை
கொற்ற வாகையினீர் எனக் கூறினான்.

இப்பொ மேலாண்மை ஆசான் கம்பர் தான் என்றால் நீங்க ஒத்துக்கிவீங்க தானே???

மீண்டும் சந்திப்போம்.

நூத்துக்கு நூறு


இந்தப் பெயரில் ஒரு பழைய படமும், அந்தப் படத்தில் நூத்துக்கு நூறு என்ற அட்டகாசமான TMS பாட்டும் இருக்கு தெரியுமான்னு நான் கேக்கிறேன்.

உங்கள் பதில், தெரியும் என்றால் உங்கள் வயது 45 +

அதே மாதிரி இன்னொரு டெஸ்ட்:

அந்தக் காலத்தில் Maths ல் மட்டும் தான் நூத்துக்கு நூறு வாங்குவாங்க.. என்று அடிக்கடி புலம்பும் நபரா நீங்கள்?? அப்பொ உங்கள் வயதும் 45 + தான்.

பத்தாம் வகுப்பு ரிசல்ட் வரும் நாளில் தினத் தந்தியில் வந்த ஒரு முழுப்பக்க விளம்பரம் பாத்து என் நண்பரின் துணைவியார் திருமதி நாச்சியார் தன் குழ்ந்தையை அங்கே சேர்க்க முயற்சிக்க… என் பொண்ணும் திருச்செங்கோடு போக வழி வகுத்து விட்டது.

சமீபத்தில் எனக்கு ஒரு போன் வந்தது பொண்ணு கிட்டெ இருந்து. நம்ம ஸ்கூல டைரக்டர் உங்க போன் நம்பர் வாங்கினார். யாராவது அந்தமானுக்கு வருவார்கள் போல் தெரியுது என்று.

நான்கு நாட்கள் கழித்து ஒரு போன் வந்தது. அழகு தமிழில் பெயர் அறிமுகம் செய்து கொண்டு பேசியது.. திருசெங்கோடிலிருந்து வந்ததாய்.

நானும் பந்தாவாய் English ல் பேச..(தமிழ் காரர் என்று தெரிந்த பிறகு கூட அவர் கிட்டெ English பேசுவதில் நம்ம ஆட்களுக்கு அலாதி சுகம் தான். நான் மட்டும் அதுக்கு விதி விலக்கா என்ன??)

வந்த பதில் : எனக்கு இங்கிலீஸ் எல்லாம் வராதுங்க..நான் அவ்வளவா படிக்காதவனுங்க…

அந்தமான் பாத்துட்டு நாளை கிளம்பும் தகவல் தெரிவித்தார்.
அடுத்த நாள் ஒரு சின்ன அந்தமான் ஆதிவாசியின் உருவம் பொறித்த நினைவுப் பரிசோடு ஏர்போர்ட்டில் அவரை சந்திக்க கிளம்பினேன்.

கதர் வெட்டியும் கதர் சட்டையும் எளிமையின் மொத்த உருவவுமாய் நின்றார். பரிசினை கறாராய் மறுத்தார். பரிசு வாங்குவது இல்லை என்ற கொள்கை முடிவில் இருப்பதாயும் சொன்னார். அன்போடு ஒரு காபி சாப்பிடலாமே என்றார்.

தான் படிக்கலை என்ற கவலையில் ஆயிரக்கணக்கான மாணவர்களை (மலேசியா உள்பட) படிக்க ஏதுவாய் கல்வி நிறுவனம் நடத்திவரும் வித்ய விகாஷ் கல்வி குழுமத்தின் தலைவர் தான் அந்தமான் வந்தவர்.

காமராசரும் நேருவும் திருச்செங்கோடுக்கு வந்த போது எடுத்த போட்டோவினை தந்தார். கர்மவீரரின் பாதையில் (தான் படிக்காவிட்டாலும் சமூகத்தை படிக்க வைக்க) கல்விக் பணி செய்வது சொல்லாமல் தெரிந்தது.

மனசு அவருக்கும் அவர் தம் குழுமத்துக்கும் 100 க்கு 100 போட்டது.

நல்லவங்க உலகத்திலெ கொறெஞ்ச்சிட்டே வாராங்களேன்னு பலர் சொல்வாய்ங்க..

என் கருத்து என்ன அப்படீன்னா…??? நல்லவர்கள் பாண்டவர் மாதிரி குறைவு. கெட்டவர்கள் அதிகமா இருப்பாக… கௌரவா மாதிரி.. 100 க்கணக்கா..

கம்ப ராமாயணத்திலெயும் இதே மாதிரி ஒரு பிரச்சினை வருது.

அடுத்தவர் மனைவியை கவர்வது ஒரு செயல்.

அதை மனிதர்கள் செய்தால் பாவம்.

அரக்கர்கள் செய்தால் தண்டிக்கலாம்.

விலங்குகள் செய்தால்??…அது எப்படி தவறாகும்??

அது போக… சுக்கிரீவனை விட வாலி பலசாலி. கூட்டமும் அதிகமா இருக்கு. என்ன.. விலங்கோட இயல்பா இருந்தான்..அது ஒரு தப்பா… ??

இது லெட்சுமணன் போட்ட சின்ன பிளான்.

தலைவர் ராமர் ஒத்துக்குவாரா என்ன?? (நல்லதா இருந்தா கண்டிப்பா ஒத்துக்குவாரு)

ராமன் சொல்லும் வார்த்தைகளாக கம்பன் சொவது:

நல்லவங்க கொஞ்ச ஆளு தாம்ப்பா.. அப்படி இல்லாத ஆளுங்க எக்கச்சக்கம். நாம் சுக்ரீவனுக்கு தோஸ்த் ஆயிட்டோம். அவருக்கு நல்லதா யோசிக்கலாமே என்று சொல்ல வாலி வதம் தொடர்கிறது.

அட.. அங்கேயும் கம்பருக்கு 100 க்கு 100 குடுத்துட்டு அப்படியே பாட்டு பாத்துட்டு மத்த வேலையைப் பாப்போம்.. ராமர் வாலியை பாத்துக்கட்டும்… நாம நைஸா பாட்டை பாப்போமே…

வில் தாங்கு வெற்பு அன்ன விலங்கு எழில் தோள மெய்ம்மை
உற்றார் சிலர் அல்லவரே பலர் என்பது உண்மை
பெற்றாருழைப் பெற்ற பயன் பெறும் பெற்றி அல்லால்
அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்கொல் என்றான்.

அது சரி இவ்வளவு சொல்ற எனக்கு எவ்வளவு மார்க் தருவீங்க???

ஹிந்தியில் பான்ச் பான்ச்


அன்பு நெஞ்சங்களே…

ஒரு விஷயம் பத்தி ரெண்டு பேர் ரெண்டு விதமா புரிஞ்சிகிறதை பலதடவை கேட்டிருப்பீங்க…

வடிவேல் காமெடி ஒன்றில் வரும் காட்சி:

ஒருவர்: என்ன எப்படி இருக்கீங்க?
வடிவேல்: ஏதோ வண்டி ஓடுது.
ஒருவர்: வண்டி ஓடுதா???…அப்பொ வாங்கின கடனைக் கொடு
வடிவேல்: வாழ்க்கையைச் சொன்னேனப்பா..

1987 களில் அந்தமான் செல்ல கப்பலில் மூன்றே நாளில் போயிடுவேன் என்பேன். கேப்பவர்கள்.. மூ…ன்று நாளான்னு … பெரு மூச்சு விடுவார்கள்..

அதே போல் இங்கு பேசும் ஹிந்தியினை பூனேயில் பேசிவிட்டேன். அவர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

ஹிந்தியில் இருக்கும் இலக்கன விதிகளான…

மை வந்தால் ஹு வரவேண்டும்
தும் க்கு ஹோவும்
ஹம் என்று ஆரம்பித்தால் ஹைன் என்று முடிப்பது
இவைகள் எல்லாம் இங்கிருக்கும் உத்திர பிரதேச மக்கள் கூட இங்கே மறந்து விட்டார்கள்.

எனக்கோ பூனேயில் பெருத்த அவமானமாய் பட்டது.

இதை விட நம்பர்களை ஹிந்தியில் சொல்லுவதைப் போன்ற கொடுமையான விஷயம் ஒண்ணு கிடையவே கிடையாது. தமிழில் பத்து வரை தெரிந்து கொண்டு இருபது, முப்பது..என்று மட்டும் படித்தால் போதும்.

ஆனால் ஹிந்தியில் ஏக் சே லேகர் சௌ தக் மனப்பாடம் செய்தாக வேண்டும்.. மார்க் வாங்க அதை படிக்கலாம். மார்க்கெட்டில் இருக்கும் தமிழ் மக்கள் என்ன செய்வார்கள்… பாவம்!!

அவர்கள் கண்டுபிடித்த எளிமையான ஹிந்தி நம்பர்கள் இப்படி வரும்…

15  சொல்ல பந்தராவுக்கு பதிலா ஏக் பான்ச்
47  சொல்லனுமா?  சவுந்தாலீஸ் (சரி தானா??) சொல்லனுமா ?? சார் சாத் போதும்
55 க்கு பச்பன்… இதை தமிழ் மக்கள் பான்ச் பான்ச் என்பர்.

மெயில் டைட்டில் வந்தாச்சி..முடிச்சிரலாமா..?? அப்படி முடிச்சா கம்பர் ஏமாந்து விடுவாரே..  அவரையும் வம்புக்கு இழுக்கலாம்.

இந்த குறுக்கு வழியை நமக்கு சொல்லிக் கொடுத்ததில் கம்பருக்கும் பங்கு உண்டு.

பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பத்தி கோசலையிடம் ராமன் சொல்கிறான். அது என்ன பெரிய்ய பத்தும் நாலும் தானே!! என்கிறார்.

பதிநான்கு ஒரு தடவையும், பத்தும் நான்கும் என்று ஒரு முறையும் சொல்லிப் பாருங்கள்.. இரண்டாவதில் மனம் இளகி நிற்கும்.

சித்தம் நீ திகைக்கின்றது என் தேவரும்
ஒத்த மாதவம் செய்து உயர்ந்தோர் அன்றே
எத்தைக்கு உள ஆண்டுகள் ஈண்டு அவை
பத்தும் நாலும் பகல் அலவோ என்றான்.

பெற்ற தாயிடம் 14 ஆண்டுகள் பத்தும் நாலும் நாள் போல போயிடாதான்னு கேட்டது நல்லதாய் தான் படுது.

இனிமே பச்பன் கபி நஹி… பான்ச் பான்ச் தான்..

( T-3 ல் 36வது கேட்டுக் போனால் பிரீபெய்ட் டாக்சி வரும் பலர் சொன்னதை என்னால் விளங்கி கொள்ள முடியலை… அங்கே தீன் சே என்று யாரும் சொல்லலை)

இருந்தாலும் கம்பன் சொல் விளையாட்டுகள் தொடரும்.

T N Krishnamoorthi

Dredging Corporation of Rama


Dredging Corporation of Rama

ஏற்கனவே ராமர் பேரைச் சொல்லி ஏகப்பட்ட சிக்கல்லெ ஒரு சேது சமுத்திரத் திட்டம் இருக்கு. அதுவும் அந்த Dredging – அதாங்க கடலை ஆழப்படுத்தும் வேலைதான் சிக்கலின் உச்சம். இதிலெ ராமரே ஏதோ தோண்டும் கம்பெனி வச்சி நடத்துற மாதிரி இதென்ன
டைட்டில்?

அதுக்கு முன்னாடி ஒரு Objection.

எப்பவுவே ஏதாவது கலாச்சிட்டதுக்கு அப்புறம் தான் ராமர் கம்பர் வருவாங்க… இன்னெக்கி என்ன உடனே அப்பியரன்ஸ்??

சரி.. கலாய்ச்சிட்டு அப்புறம் வருவோமே..??

1987 களில் கடலுக்கு அடியில் உள்ள மண் சோதனைக்காக (Boring work – sub soil
investigation) ஒரு தீவுக்கு போயிருந்தேன். அடிக்கடி சினிமாவில் காட்டும் மேன்ஷன்
பாணியில் ஒரு கும்பலுடன் தங்க நேர்ந்தது.

பஞ்சதந்திரம் படகும்பல் ஸ்டைலில் மக்கள் செமெ ஜாலியாய் இருந்தார்கள் (பெண்கள்
விஷயத்தில் எல்லரும் ராமர் மாதிரி)

முதல் கேள்வி : (ராகிங் பாணியில்) நீ என்ன பண்ண வந்த ஆளு சொல்லு..?

(கேள்வியே எனக்குப் புரியலை… கொஞ்சமா தைரியத்தை வரவழைத்து)

நீங்க என்ன என்ன பண்ற ஆளுஙக? கேட்டேன்.

வந்த பதில் பட்டியல்.

குத்துற ஆளு (Post Office வேலை – ஸ்டாம்ப் மேல் குத்துவதால்)
சொறுகுற ஆளு ( Telephone Exchange – connection தருவது)
அடிக்கிற ஆளு (வாத்தியார்)
புடிக்கிற ஆள் (X Ray Technician – படம் புடிப்பவர்)
விக்கிற ஆளு (கடை வைத்திருப்பவர்)

இதே ஸ்டைலில் பதில் சொல்லணுமாம் நானு.

சொன்னேன் என் வேலையை. அவர்கள் பெயர் வைத்தார்கள்

கொடையிற ஆளு என்று. சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டேன்.

சரி குடைதல் என்பதை Boring என்பதாய் வைத்துக்கொண்டால் Dredging க்கு என்ன சொல்வது

தோண்டல், ஆழப்படுத்தல், கடலை ஆழப் படுத்தல், கடலை தூர் வாருதல்..இப்படி ஏதாவது இருக்கட்டும்.

இப்ப ராமர் கம்பரை கொண்டு வரட்டுமா??

ராமர் Dredging செஞ்சிருக்காரா??

இதென்னெ கேள்வி சின்னப் புள்ளத் தனமா இருக்கே? என்று வடி வேல் ஸ்டைலில்
கேக்கிறீங்களா…

நீங்க தைரியமான மனிதரா..??

ஆமாவா…

இந்தா புடிங்க மொபைலை.. லையன்ல இருக்கிறது யாரு தெரியுமா??

விசுவாமித்திரர்..

கோபம் வந்தா சாபம் குடுத்துடுவாரா??

அப்பொ நானே பேசட்டா..??? … ம்.. அவரும் நம்ம பிரண்டு தான்.

நான்: ஹலோ.. விசுவாமித்திரருங்களா…???

விமி : யார்ரா அது என் நம்பருக்கே போன் போட்டு நான் தானான்னு கேக்குறது??

நான்: கோவிச்சுக்காதீங்க சாமி.. உங்க சிஸ்ய புள்ளைங்க யாராவது போன் எடுப்பாங்கன்னு கேட்டேன் சாமி..

விமி : ஆமா.. நீ யாரு சொல்லவே இல்லெ…

நான் : நான் தானுங்க..  இந்த wordpress லெ கம்பராமாயணம் பத்தி கொஞ்சம் கலாய்க்கிற
பார்ட்டிங்க..

விமி: ஓ..ஹோ..அந்த பார்ட்டியா? சரி..என்னெ வச்சி காமெடி கீமடி பண்ணலையே?

நான்: உங்களை கலாய்க்க முடியுமா? ஒரு சின்ன கேள்விங்க.. ராமன் Dredging
செஞ்ச்சிருக்காரா??

விமி: இது கூட தெரியாம எழுத வந்திட்டியா?? ஜனகன் கிட்டெ ராமரைப் பத்தி சொல்றப்பொ என்ன சொன்னேன் தெரியாதா??

நான்: தெரியலையே சாமி:

விமி: அஸ்வமேத யாகத்தைக் காக்க, மேடும் பள்ளமுமா இருந்த நிலத்தை சீராக்க.. கடலை தோண்டினார் ராமர்.

நான்: அப்படியே அந்த கம்பர் பாட்டு சொன்னீங்கன்னா நல்லா இருக்குமே

விமி: என்ன வெளையாட்டா… மனுஷன் 10000 பாட்டு எழுதியிருக்கான்.. எவன் ஞாபகம் வச்சிருப்பன். போனை வை.. மெயில் பண்றேன்..

நான்: சாமி.. pdf லே அனுப்புங்க சாமி … பாண்ட் பிராபளம் வரப்போகுது…

விமி: இப்பொ போனை வைக்கப் போறியா.. சாபம் தரட்டுமா..

நான்: டிக். (அப்பா.. மனுஷன் கிட்டெ சாபம் வாங்காமெ பேச என்ன பாடு பட வேண்டி இருக்கு???)

Pdf ல் கிடைத்த பாடல் இதோ:

இடறு ஒட்ட இன நெடிய வரை உருட்டி இவ்வுலகம்
திடல் தோட்டம் எனக் கிடந்த வகை திறம்பத் தெவ்வேந்தர்
உடல் தோட்ட நெடு வேலாய் இவர் குலத்தோர் உவரி நீர்க்
கடல் தோட்டார் எனின் வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமா??

ராமர் தோண்டினாரோ இல்லையோ நான் இன்னும் கொஞ்சம் கம்பராமாயணத்தைத் தோண்டனும்.