பூவோடு சேர்ந்த நாரு…


இந்தக் காலத்தில் நல்ல கூட்டனி மட்டும் அமைஞ்ச்சிட்டா ஆட்சி நிச்சயம். அந்தக் கால தர்மம் தலை காக்கும் என்பதெல்லாம் பழங்கதை. கூட்டனி ஆட்சியை பிடிக்க உதவும் என்பது தான் இப்போதைய கூட்டனி தர்மம்.

இங்கே தான் பூவோட சேர்ந்த நாரும் மணக்கும் எங்கிறதை சரியாக் கவனிக்கணும். இதையே வேண்டாத ஆட்களோட சேர்ந்தா..பன்றியோடு சேர்ந்த கன்னுக்குட்டியும்………..திங்கும்.

இன்னும் சில பழைய புதுசுகளும் இருக்கு… கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும். இது பழசு.

இளையராஜா வீட்டு இட்லி சட்டியும் இசை பாடும் இது புதுசு

ஏ ஆர் ரஹ்மானின் எதிர் வீட்டு ஃபிகரும் ஹம்மிங்க் தரும் என்பது சமீபத்திய ஜொள்ளர்களின் கண்டுபிடிப்பு.

காந்தி வேடத்தில் படத்திற்காய் நடிக்க இறங்கிய ஹாலிவுட் நடிகர்  பெங்கிங்க்ஷ்லி அசைவம் சாப்பிடுவதை விட்டு சைவத்திற்கு மாறிட்டார் என்பது  பழைய சேதி… நம்ம ஊர் பாரதியாய் நடித்தவரை சகீலாவோட நடிக்க வச்சி அழகு பார்த்தது தமிழ் உலகம். சில படங்களில் காமெடியனாகவும் வலம் வந்தார். என்ன செய்ய?

அம்பதுக்கும் மேலே கம்பராமாயணம் வச்சி போஸ்டிங்க் போட்டு விட்டேன். நானும் கொஞ்சம் நல்ல புள்ளையா மாறணுமோ???

சிலபேர்கூட சேரவே வேணாம்… அவர்களின் தொடர்பு கிடைத்தாலே போதும், வாழ்வு நிலை மாறி விடும்.

ஆனா சில பேரு எதைச் செய்தாலும் எதாவது கிடைக்குமா??என்று தான் கேட்கிறார்கள்??

இந்த மாதிரி போஸ்ட் போடுகிறீர்களே..அதனாலெ என்ன கிடைக்கும்? அதன் அரத்தம் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது தான்… ஒண்ணுமே கிடைக்காதா?? அப்பொ சும்மாவே இருக்கலாமே…சரி சும்மா இருக்கும் இவரு என்னா சாதிச்சிட்டார்??

இப்படித்தான் ஒரு ஏர் போர்ட்டிலெ ஒரு மனுஷன் வெயிட்டிங்க் ரூம்லெ கடையை விரிச்சி தண்ணி சிகரெட் என்று ஜாலியா இருந்தாராம். அப்பொ நம்ம கிட்டெ அனத்தும் பார்ட்டி மாதிரி ஒரு ஆளு பொயி, ஐயா..எப்பொ இருந்து இந்தப் பழக்கம்.. சின்ன வயசில ஆரம்பிச்சது…ஆமா எதுக்கு?? என்று திருப்பிக் கேட்டாராம்.

இல்லெ இவ்வளவு காசை வெட்டியா கரி ஆக்கி இருக்கீங்க… அதெல்லாம் சேத்து வச்சிருந்தா சொந்தமா பிளைட்டே வாங்கி இருக்கலாமே??

போதையிலும் அந்த மனுஷன் தெளிவா கேட்டானாம், …சரி என்னையை விடுங்க..குடிக்காத ஆளு நீங்க..உங்களுக்கு சொந்தமா பிளைட் இருக்கா??

கேட்டு விட்டு தன் சொந்த பிளைட்டில் ஏறப் புறப்பட்டார் அந்த தாடி வைத்த விஜய் மல்லையா… (சும்மா நெட்டில் கிடைத்த கதை தான் இது)

மல்லையாகிட்டெ மல்லுக்கு நின்ற அந்த ஆளை நாமும் கொஞ்சம் அம்போன்னு விட்டுட்டு கம்பர் கிட்டெ போவோம்..நமக்கும் ஏதாவது ஞானம் கிடைக்குமான்னு பாக்கலாமே..

நம்ம ஆட்கள் எதையாவது கலக்கிகிட்டு இருந்தா, நம்ம கம்பர் எக்காலஜி பத்தி யோசிச்சிட்டு இருக்கார். அந்த எக்காலஜி கெடாமல் இருந்தா தான் குளங்களில் மீன்கள் இருக்குமாம். அப்படி இருந்த குளத்தில் திடீர்னு மீன் எல்லாம் காணாமல் போச்சாம். ஏன் தெரியுமா??

தெய்வீகப் பெண்கள் எல்லாம் தங்கள் அங்கங்களில் பூசி இருந்த சந்தனம் போக தேய்த்துக் குளித்தார்களாம். அப்புறம் அவர்கள் சூடியிருந்த பூ, அதில் இருக்கும் தேன் எல்லாம் சேர்ந்து அந்த எக்காலஜி மாறிப்போக..மீன் வாசம் போயே போச்சாம்… அங்கே வந்த பறவை எல்லாம் தீனி இல்லைன்னு ஓடிப் போச்சாம்.

சிலர் சிலர் கிட்டெ போனாலெ..என்ன நடக்கும் என்பதும் ஊகிக்கலாமே??

அள்ளல் நீர் எலாம் அமரர் மாதரார்
கொள்ளை மா முலைக் கலவை கோதையின்
கள்ளு நாறலின் கமல வேலி வாழ்
புள்ளும் மீனுணா புலவ் தீர்தலால்.

அது சரி நீங்க எங்கே யார் கூடப் போய் சேரப் போறீங்க??

அழகிய தமிழ் மகள்


சினிமாவில் கமல், மனிரத்னம், ரஹ்மான் இப்படி சிலர் வந்ததால் தமிழர்களின் கொடி பறக்கிறது. என்ன தான்  சிலர் தமிழர்களின் பெயரை எவ்வளவோ மேலே கொண்டு வந்தாலும் இந்த வட நாட்டவர்களுக்கு தமிழர்கள் என்றால் கொஞ்சம் இளக்காரம் தான்.

அதுவும் ஹிந்தி சினிமாக்களில் காட்டப்படும் தமிழன் எப்போதும் காமெடியன் தான். ஐயோ, ஐயோடா, ஐயய்யோ இவைகள் தான் தமிழன் வாயிலிருந்து வரும் வார்த்தைகள். இதுக்கு ஒரு முடிவே கிடையாதா என்று வடிவேல் ஸ்டைலில் கேக்க மட்டும் தான்முடியும்!!!

அந்தமானில் 15 – 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழர்கள் ஐயாலோக் என்று கேவலமாக நடத்தப்பட்டார்கள். அப்போதெல்லாம் தமிழர்கள் பெரும்பாலும் கூலித் தொழிளார்களாக மட்டுமே இருந்தனர். இப்போது இந்த அய்யாலோக் என்பது மாறிவிட்டது. ஏனென்றால் பல துறைகளில் தமிழர்கள் மேலே வந்துவிட்டனர். அரசியல், வியாபாரம், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் இப்படி எல்லா துறைகளிலும் தமிழர்கள் டாப்பில் வரத்துவங்க… அந்த ஐயா லோக் மறைந்து விட்டது.

ரொம்ப சுகமா கம்யூட்டரில் தமிழ் எழுதுகிறேன். அப்படியே இலக்கிய காலத்தை கொஞ்சம் புரட்டிப் பாத்தா??? அவங்க என்ன கம்ப்யூட்டர் வச்சிட்டா எழுதுனாங்க..அந்தக் காலத்தில் ஏது அழகி??… இப்பவே நம்ம ஆட்களுக்கு தமிழ் மெயில் எழுதுறது ரொம்ப சிரமமா இருக்கு. ஏடு எழுத்தாணி வைச்சி எப்பிடி அந்தக் காலத்திலெ எழுதி இருப்பாங்க? என் கவலை என்னென்னா?? Ctr Z, Ctr C, Ctr V போன்ற வசதி இல்லாம எப்படி எழுதி இருப்பாங்க…??

இந்தக் கவலை ஒருபக்கம் இருக்கட்டும். கவியரசர் கம்பன் கனவு கண்ட பத்தி நான் கண்ட கனவு கேளுங்க…

ராமாயணம் எழுதுறப்பொ கொஞ்சம் அசதியா படுக்கிறார் நம்ம கம்பர். பத்தாயிரம் பாட்டு எழுதுறது என்ன சும்மாவா?? கனவு வருகிறது. அழகிய பெண் ஒருத்தி கெஞ்சியபடி : “காப்பியம் எழுதுறீங்களாம்லெ.. என்னையும் சேத்துக்கோங்களேன்.. ப்ளீஸ்”.

கம்பன் : யார் நீ?
அழகி: தெரியவில்லையா? நானும் தமிழின் மகள் தான்.

கம்பன்: அழகிய தமிழ் மகளே!!! உன் பெயர்?
அழகி: “ஐயோ”

கம்பன்: ஏன் இந்த பயம்? பயப்படாமல் சொல். உன் பெயர்??

அழகி: கவியரசரே… என் பெயர் தான் “ஐயோ”.. தமிழின் புதல்வி நான். என்னை யாரும் எந்தப் புலவரும் பாடுவதில்லை. உங்கள் இதிகாசத்திலாவது என் பெயர் வரட்டும்…ப்ளீஸ்..

 தூக்கம் கலைந்து உடனே எழுத்தாணி பிடிக்க… கவிதை கனவில் வந்த அழகிய தமிழ் மகளையும் சேர்த்து வருகிறது. ஐயோ என்ற அமங்கலச் சொல் கம்பன் கைபட்டு மங்கலமாய் இராமனை வர்ணிக்கும் விதமாய் மிளிர்கிறது.

பாடல் இதோ…
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
ஐயோ
இவன் வடிவு என்பதோர் அழியா அழகு உடையான்.

இனி மேல் வட நாட்டவர் யாராவது ஐயோன்னு தமிழனை அவமரியாதை செய்தால் உங்களுக்கு இராமனை நினைக்கும் வாய்ப்பு அளித்ததாய் சந்தோஷப்படுங்கள்.

இல்லாவிட்டால் ஐயோ ஐயோ என்று வடிவேலு ஸ்டைலில் ஜாலியா இருங்க..