சட்டை செய்யாதவர்கள்…
ஆடையின்றிப் பிறந்தோம்… ஆசையின்றிப் பிறந்தோமா? என்ற கேள்வி கேட்கும் ஒர் அற்புதமான பழைய பாடல் கேட்டிருப்பீங்க. ஆடைக்கும் ஆசைக்கும் அப்படி என்ன சம்பந்தம்? ஆசையினைத் துறக்க அறிவுரை சொன்னவர்கள், முதலில் ஆடையைத் தான் துறக்கிறார்கள். (ஆனால் சினிமாவில் வரும் நாயகிகள் ஆடையினைத் துறந்து, நம் ரசிகர்களின் ஆசையினைத் திறந்து விடுகிறார்கள் என்பது தனிக்கதை)
ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்கிறார்கள். ஆதிகாலத்தில் நாமெல்லாம் கூட ஆடையின்றித்தான் இருந்தோம். நாகரீகம் என்று சொல்லி ஆடையில் ஆளை வகைக்படுத்தும் கலையும் ஆகரீகம் என்ற பெயரில் வளர்ந்தது தான் கொடுமையிலும் கொடுமை. அந்தமான் தீவுகளில் இன்னும் சில ஆதிவாசிகள் முழுநிர்வாணமாகவும், அரை நிர்வாணத்திலும் வாழத்தான் செய்கிறார்கள். ஆனால் காலில் சாக்ஸ், முழு பேண்ட், முழுக்கை சட்டை என்று திரியும் நவநாகரீக (என்று சொல்லிக் கொண்டு, 5 வயது சிறுமிகளை சில்மிஷம் செய்யும்) மனிதர்களை மட்டும் கொசு எப்படி தேடிக் கடிக்கிறது? ஆதிவாசிகளை கடிப்பதில்லையே? கடித்தாலும் மலேரியா போன்ற நோய்கள் அவர்களுக்கு அவ்வளவாக வருவதில்லையே? அப்பொ ஆடை வெறும் சுமை தானா?
கோட்டும் சூட்டும் மாட்டிக் கொண்டு வாழ்ந்த மோஹன்தாஸின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் தான் அவரை ஆடையைக் குறைத்து மஹாத்மா ஆக்கியது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியது மதுரை என்றும் சொல்கிறார்கள். ஆடை தயாரித்து வாழும் நெசவாளர்களும், விவசாயிகளும் மேலாடையில்லாமல் அமர்ந்திருக்க, அங்கே தான் ஆடைகுறைப்பு முடிவு எடுத்தாராம். காந்திப் பொட்டல் (அப்பொ பொட்டல் காடாய் இருந்த இன்றைய மென்யின் ரோட் இருக்கும்) அந்த இடத்தில் ஒரு சின்ன பொம்மை வடிவில் (வடநாட்டு சாமி மாதிரி) காந்தி சிலையும் வைத்திருக்கிறார்கள். காந்திய்ன் கொள்கைகளை மற்றவர்கள் மதிக்கிறார்களோ இல்லையோ, இன்றைய இளைஞிகள் தான் சரிவர ஆடைக் குறைப்பில் பின்பற்றுவதை மேத்தா கவிதை குத்தி காட்டி இருப்பதை படித்திருப்பீர்கள்.
சமீபத்திய பாலியல் பலாத்காரங்களுக்கு பெண்களின் ஆடையும் ஒரு காரணம் என்று சொல்லியவர்களை பெண்கள் அணி செமெ டோஸ் விடுகிறது. வெளிநாடுகளில் உடைகள் குறைந்தாலும், இல்லாவிட்டாலும் கூட பெரிதாய் பாதிப்பதில்லை. இங்கேயோ… மேலாடை கொஞ்சம் விலகினாலும் ஹார்மோன்கள் கலகம் செய்யுது. (ஆமா.. அந்த ஹார்மோன்கள் அங்கே மட்டும் ஏன் வேலை செய்வதில்லை??). முன்பெல்லாம் அந்தமான் வரும் வெளி நாட்டுப் பயனிகள் ஆடையில் அவ்வளவு கவனம் இல்லாது தான் இருப்பர். சமீப காலமாய் நம்மைக் கண்டதும், துண்டு போட்டு அங்கங்களை மூடும் தமிழ் கலாச்சாரத்துக்கு வந்து விட்டார்கள். (ம்… அவனவன் எடுக்கிற முடிவெல்லாம் நமக்குச் சாதகமவே அமையுது)
கோட் சூட்டு போடுவதில் ஒரு பெரிய்ய்ய கௌரவமே இருப்பதாய் பலர் யோசிக்கிறார்கள். அது வெள்ளையர்கள் ஆண்ட போது, அங்கிருந்து இந்தியாவிற்க்கும் இறகுமதி ஆன வெட்டிப் பந்தா அது. சுவாமி விவேகாநதரை பார்த்து ஒரு வெளிநாட்டுக்காரர் கேட்டாராம். “கொஞ்சம் நாகரீகமாய் உடை உடுத்தக் கூடாதா?” என்று. அதுக்கு அவர் சொன்ன பதில், “உங்கள் நாட்டு நாகரீகம் உடையில் இருக்கலாம். ஆனால் இந்திய நாகரீகம், நடத்தையில் இருக்கிறது”. என்றாராம். (ஊரெல்லாம் டாஸ்மாக் கடை திறது வைத்துவிட்டு, இன்னும் இந்த நடை நடத்தை என்றெல்லாம் சொல்ல முடியுமா?)
ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு வகையான உடை நமது இந்திய நாட்டில் தான். ஒரு நாடு… ஒரு உடை… என்றெல்லாம் கிடையாது இங்கே. (நான் எட்டாம் வகுப்பு படிக்கும் வரை வீட்டில் கைலி கட்ட அனுமதி கிடையாது. அது ஒரு மதத்தினர் மட்டும், கட்டுவதாய் இருந்தது. வேட்டியை விட சைக்கிள் ஓட்டுவதில் கைலி தான் ரொம்பவும் சௌகரியம் என்பதால் அனுமதி கிடைத்தது). வேலக்குப் போகும் பெண்களுக்கு சேலை ரொம்ப அசௌகரியம். அப்படி சேலையில் வரும் அம்மணிகளுக்கு, வேலையினை விட சேலையின் மீது தான் கவனம் அதிகம் இருக்குமோ!!
உச்சி வெயில் மண்டெயெப் பிளந்து, வேத்து விறுவிறுத்துப் போகும், இந்த இந்திய சூழலில் டை கட்டுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எனக்கு டை கட்டத் தெரியாது என்பது அந்தமானில் எல்லாருக்கும் தெரியும். ஒரு Engineers Day ல் வேடிக்கை விளையாட்டு என்று ஆட்களை மேடைக்குப் கூப்பிட, நானும் முந்திரிக் கொட்டையா மேடைக்குப் போயிட்டேன். அப்புறம் தான் தெரியுது. யாரு டை சீக்கிரம், அதுவும் பெர்பெக்ட்டா கட்றாங்களோ, அவங்க தான் வின்னர் என்று. (ஒருவர் ”எத்தனை நாட்?” என்று கேள்வி கேட்ட பிறகு தான், அப்படி ஒரு சங்கதி இருப்பதே தெரிந்தது). அதை வீடியோ எடுத்து லோக்கல் கேபிள் டிவீயும் அடிக்கடி என் மாணத்தை வாங்குது.
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம், என்று கவிஞர் கற்பனை செய்கிறார். கவிஞர்கள் கற்பனையில் கூட, மேலாடை போட்டுத்தான் பாத்திருக்கிறார்கள். மேலாடை இல்லாத கேரளா பக்கமும், சல்வார்களும் சங்கடமாய்த் தான் இருக்குது. (ஆத்தாளுக்கும் தாவணி போட்டும் அழகு பாத்தது சினிமா உலகம்)
கம்பனடிப்பொடி என்று இப்போதைக்கு அழைக்கப்படும், சா கணேசன் அவர்கள் சுதந்திரப் போராளி என்று பலருக்குத் தெரியாது. அவரை ஒரு ஆங்கிலேயர் சுட வந்தாராம். ”எங்கே சுடு பாக்கலாம்” என்று சட்டைடையைக் கழட்டிக் காண்பித்தாராம். அப்போது கழட்டினவர் தான். பின்னர் சட்டையப் பத்தின சட்டை செய்யாமல், செமெ ஜாலியா, உலகமெங்கும் கம்பன் கழகம் அமையப் பாடுபட்டவர் தான் அந்த சட்டை அணியாத தமிழர்.
ஆனால் சமீப காலமா சின்னத்திரை சட்டை கலட்டும் வேலையினைச் செய்து வருவதைப் பாக்க முடியுது. (ஆமா… பெண்கள்ளின் உடையை இதுக்கு மேல் குறைக்க முடியாது.. என்று ஆண்கள் பக்கம் வந்திருப்பாங்களோ!!). சந்தோஷத்துக்கும் ஆடைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா?? அப்படித்தான் தெரியுது. சின்னத்திரையில் வரும் ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சிகளில் கிளைமாக்ஸில் சந்தோஷத்தின் உச்சிக்கு போய் சட்டையைக் கழட்டும் (கன்றாவிக்) காட்சிகள் நடப்பதைப் பாத்திருக்கலாம்.
ஜி மெயிலில் கம்பர் ஒரு மெயில் அனுப்பியிருப்பதாய் என் மொபைலில் ஒரு நோட்டிபிகேஷன் வந்தது. ஓடிப் போய் தொறந்து பாத்தா… இந்த ஆடை கழட்டி எறிந்து சந்தோஷத்தை கொண்டாடுவதை தனது ராமாயணத்தில் சொல்லி இருப்பதாய் தெரிவித்திருந்தார். அதெ உங்களுக்கும் சொல்லுங்க என்கிறார். சொல்லிட்டாப் போச்சி…
இராம அவதாரம் நிறைவேறிய நேரம். அதான், இராவணன் இறந்து போய் கீழே கிடக்கிறான். வானுலக தெய்வங்களுக்கு ரொம்பவே குஷி ஆயிடுச்சாம். அப்பொ மூனு மணி நேரம் பாக்கும் கிளைமாக்ஸே இவ்வளவு திரில் இருக்கிறச்சே, ஆண்டாண்டு காலமாய் எதிர் பாத்த விஷயம் குஷியா இருக்காதா என்ன? வானத்திலிருந்து பூமிக்கே நேரா குதிச்சாங்களாம். அது மட்டுமா?? காலால் எட்டி உதைத்தனர் பூமியை. திரிகூட மலையே ரெண்டாய் ஆயிடுச்சாம். அப்புறம் நம்ம சங்கதி…?? ம்… அதான்.., தங்கள் மேலாடையையும் உடையையும் கலட்டி எறிந்து ஆடிப் பாடினார்களாம்.
குதித்தனர் பாரிடை குன்று கூறுறமிதித்தனர் வடகமும் தூசும் வீசினார்துதித்தனர் பாடினர் ஆடித் துள்ளினார்மதித்தனர் இராமனை வானுளோர் எலாம்.
சாமிகளே செஞ்சது… இந்த ஆசாமிகள் செய்வது தப்பா?? நன்றி கம்பரே..உங்கள் மெயிலுக்கு.