நண்பர்களே…
அடிக்கடி நீங்கள் கேட்டிருக்கும் வாசகம் இது. “அது அவன் பேசலை.. அவனுக்கு உள்ளே போன சரக்கு பேசுது…”. அப்பொ சரக்குக்கும் வாய் உண்டா பேசுறதுக்கு??
நாம நிதானமா ஏதாவது பேசும் போது அதன் பின் விளைவுகள் ஏதும் இருக்குமான்னு யோசிச்சி பேசுவோம்…
சில நேரம் சில பின் விளைவுகள் வருவதற்காகவும் பேசுவோம்.. போட்டுக் கொடுக்கும் வேலைகள்..
மேடைப் பேச்சாளர்கள் நீண்ட நேரம் பேச இந்த சரக்கு ஏத்திட்டு பேசுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்… நேரில் பார்த்தும் இருக்கிறேன்.
முழுமையான ஈடுபாடு, பேசும் பொருளின் ஆளுமை, நல்ல ஒத்திகை இவைகள் எல்லாம் தராத ஒரு தைரியத்தை ஒரு ரெண்டு பெக் சரக்கு தரும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை…
மக்களின் ரியாக்சன் தெரியாது பேச வேண்டுமா?? சரக்கு அடிச்சிட்டு பேசலாம்..
பேச பயமா இருக்கா…சரக்கடிச்சா… அந்த பயம் போகும் (எங்கே போகும்???..அந்த பயம் இருப்பது தெரியாமல் போகும்…ஆனா…மீண்டும் வரும்).
ஆக மொத்தம் சரக்கு ஏத்திட்டுப் பேசினால் உண்மைகள் தான் வரும் அல்லது உண்மை விளம்பிகளாக மாறி விடுவார்கள்.
அது சரி நம்ம சரக்குக்கு வருவோம்..
பேசுறவன்.. சரக்கு அடிக்கலாம்…உண்மை பேசலாம்… இதை ஒரு வகையில் நாட்டு நடப்பென்று ஒத்துக்கலாம்.
ஊமையன் சரக்கு அடித்தால்…
(சுத்தி வளைச்சி ஏதோ இலக்கியம் சொல்லனும்.. அவ்வளவு தானே… சொல்லுப்பா…)
ஆமாம்….
மறுபடியும் கம்பன். கோசலை நாட்டை வர்ணிக்க இயலும் போது தான் இப்படி ஊமையன் சரக்கடிச்ச மாதிரி, எப்படி சொல்றதுன்னு தெரியலையேப்பான்னு சொல்றார்..
ஆனா ஒரு சின்ன வித்தியாசம்…
நம்மாளுக பட்டை முதல் பாரின் சரக்கு வரை அடிப்பானுங்க..
நம்ம கம்பன் அடிச்சது என்ன சரக்கு தெரியுமா??
கள்ளு.. ஆமா…கள்ளு தான்..
அன்பு என்னும் கள்…
ஆங்கு அவன் புகழ்ந்த நாட்டை அன்பு எனும் நறவம் மாந்தி
மூங்கையான் பேசலுற்றான் என்ன யான் மொழியலுற்றேன்
(நாட்டுப்படலம் – பாடல் எண் -33; கோசல நாட்டு வளம்)
நாமளும் அந்த அன்பு எனும் கள் தினமும் பருகலாமே???