உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு…
அந்தமானுக்கு செல்வது… அதுவும் விமானத்தில் செல்வது என்பது எப்போதுமே ஒரு ஆனந்தமான அனுபவம் தான். ஆனால் இந்த காலங்காத்தாலெ போற ஏர் இண்டியாவெப் பிடிக்கப் போறது இருக்கே… அது தான் சாமி கொஞ்சம் சிக்கலான விஷயம். அதிகாலை 5 மணிக்கு கிளம்பும் விமானம் ஏற, 3 மணிக்கே ஏர்போர்ட் வந்தாகனும். அப்பொ 2½ மணிக்காவது தங்கியிருக்கும் இடத்திலிருந்து கிளம்பணும். (ரொம்ப பக்கமா இருந்தா…) அப்பொ 1½ மணிக்கே எழுந்திருக்கணும். மேக்கப் போடும் இல்லத்தரசிகள், அடம் பிடிக்கும் வாண்டுகள் இவங்களுக்கு நான் நேரம் ஒதுக்கலை. அதை நீங்களே பாத்துகிடுங்க.
அப்படி ஒரு நாள் பாதி தூக்க கலக்கத்தில் கிளம்ப ரெடி ஆகிகிட்டிருந்த சமயம் தான் ஜீ மெயிலில் தகவல் வந்தது. [என்ன தான் நட்ட நடு ராத்திரி ஆனாலும் பேஸ்புக்லெ ஸ்டேட்டஸ் போட ஆளுங்க இருக்கிறப்பொ… நாம அதுக்கும் கொஞ்சம் டயம் ஒதுக்கித்தான் அட்ஜஸ்ட் செஞ்சிக்கணும் – துணைவியாருடன் இல்லாத போது மட்டும் தான்]
மின் அஞ்சல் ஜீமெயில் மூலம் காரைக்குடி கம்பன் கழகம், கம்பன் அடிசூடி அவர்கள் அனுப்பி இருந்தார். எனது சமீபத்திய வெளியீடான “பாமரன் பார்வையில் கம்பர்” புத்தகம் பரிசுபெற தேர்வனதாய் தகவல் சொல்லி இருந்தார். கம்பர் தொடர்பான புத்தகங்கள் குறைந்து விட்டனவோ அல்லது கம்பன் கழகத்தின் நிலைமை நம்ம புத்தகத்துக்கே பரிசு தரும் அளவுக்கு வந்து விட்டதோ என்று யோசித்தாலும் மனதில் ஓர் இன்ப அதிர்ச்சி தான். [ஒரு வேளை அந்தமானில் அம்புட்டு தூரத்திலெ இருந்து வந்திருக்கு புள்ளெ.. என்று பரிதாபப் பட்டு குடுத்திருப்பாய்ங்களோ.??!! இருக்கலாம்]
முதன் முதலாக 2011 செப்டம்பர் வாக்கில் கம்பரைக் கலாய்க்க ஆரம்பித்த போது, ரெண்டு தரப்பு ஆட்களிடம் பயந்து கொண்டிருந்தேன். [இன்னும் அந்தப் பயம் முற்றிலும் போய்விடவில்லை]. ஒன்று, தீவிர இந்து மத ஆதரவாளர்கள். குறிப்பாய் இராம பக்தர்கள். இரண்டாம் வகையினர் இந்தக் கம்பன் கழகத்து கம்பதாசர்கள்.
நினைத்த மாதிரியே, ஆரம்பத்திலேயே ஆப்பு வந்தது ஒரு வட இந்தியரிடமிருந்து. நான் ராமாயணத்தை இப்படி எழுதுகிறேன் என்று சொல்லியதைக் கேட்டே கடுப்பாயிட்டார் மை லார்ட்… யாரு உங்களுக்கு இப்படி எழுத பெர்மிஷன் கொடுத்த்து? என்று கேட்டு வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டார். (எதை என்று கேட்டு மேலும் என் மானத்தை வாங்காதீங்க ப்ளீஸ்]. நல்ல வேளையாக அவருக்கு தமிழ் தெரியாது என்பதால் நானும் தப்பித்தேன்.
அடுத்த அட்டாக் ஒரு மழையாளி மூலம் வந்தது. என் கையிலெ இராமாயணம் புக் பாத்து, (அட்டைப் பட ஆஞ்சநேயரெப் பாத்தே அடையாளம் கண்டுபிடிச்ச அன்பர் அவர்) என்ன இது கையில வாட்டர் பாட்டில் மாதிரி போற எடமெல்லாம் ராமாயணம் தூக்கிட்டு அலையறீங்க??? [அவர் சொல்ல வந்தது… ராமாயணத்தெ சாமி ரூம்லெ வச்சி படிச்சிட்டு பூட்டியிரணும். அதெ மீறி நாம யோசிச்சா.. அது அவருக்கு கொஞ்சம் வித்தியாசமா படுது]. நான் அவருக்கு பதில் சொன்னேன். இது வாட்டர் பாட்டில் மாதிரி, யூஸ் செஞ்சிட்டு தூக்கிப் போட முடியாது. இது கம்பராமாயண். மொபைல் மாதிரி. கூடவே கூட்டிட்டு போலாம். ஆனா நாம சார்ஜ் செய்ய வேணாம். அது நம்மை சார்ஜ் ஏத்தும். ஒரு மாதிரி என்னையெப் பாத்து, பேசாமெ போயிட்டார்.
கொஞ்சமா தைரியம் வரவழைத்து, கம்பர் மசாலா இல்லாமெ நல்ல சரக்கு மட்டும் வெச்சி, போன வருஷம் லேசா, ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதிப் போட்டேன் காரைக்குடி கம்பன் கழகத்துக்கு. அது தேர்வு செய்யப்பட்டபோது தான் தெரிந்தது. நல்ல சரக்குக்கு எல்லா எடத்திலும் மதிப்பு கெடெக்கும்கிறது. அப்போதிருந்து தான் கம்பன் கழக தொடர்பும் துவங்கியது. அப்பொ கூட நான் கம்பனை கலாய்க்கும் செய்தியினை அங்கே மூச்சு விடலையே… [ஆமா… கம்பனை கேவலப் படுத்துறியே என்று யாராவது சண்டைக்கு வந்திட்டா… என்ற பயம் ஒரு பக்கம்].
அப்படியே சுமுகமா போயிட்டு இருந்தப்பத்தான், சரஸ்வதி ராமநாதன் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள் அந்தமானுக்கு வந்தார்கள். கம்பரையும் கண்ணதாசனையும் வெளுத்து வாங்கும் அந்த அம்மையாரிடம், நானும்,,, என்று என் கம்பன் கலக்கல்களை காட்டினேன். புத்தகமாய் கண்டிப்பாய் வர வேண்டும் இவை. மதிப்புரை நான் தான் தருவேன் என்று குறிப்பு வேறெ… (அடெ… என் எழுத்துக்கு இவ்வளவு மதிப்பா??)
நினைத்த்து போல், மணிமேகலைப் பிரசுரம் நூலை வெளிக் கொணர, இந்த பொங்கலன்று அந்தமானில் வெளியானது. கம்பர் தொடர்பான நூல் தானே… கம்பன் கழகம் போன்ற அமைப்புகளிடம் கொண்டு செல்லலாமெ என்று மணிமேகலைப் பதிப்பகம் சொன்னாலும் கூட, இந்த மாதிரியான சரக்கு அங்கே விலை போகுமா? என்று தயங்கி அமைதி காத்தேன்.
கம்பர் என்னை முனைவர் பட்ட தேர்வு எழுதும் சாக்கில் காரைக்குடிக்கு அழைத்தார். தேர்வு எழுதிய பின்னர் ஓரளவு தைரியம் வரவழைத்து எனது நூலான, ”பாமரன் பார்வையில் கம்பர்” ஐ கம்பன் கழக செயலரான கம்பன் அடிசூடி பழ பழனியப்பன் அவர்களிடம் தந்து விட்டு [உங்கள் மனது புண்படும்படி ஏதும் நான் எழுதியிருந்தால் மன்னிக்கவும் – என்று மறக்காமல் சொல்லிவிட்டு] நகர்ந்தேன்.
கண்டிப்பாய் பாஸாகி விடுவேன் என்று போன, முனைவர் பட்ட நுழைவுத்தேர்வு ஊத்திகிடுச்சி.. ஆனால் தேறவே தேறாது என்று நினைத்துச் சென்ற கம்பன் கழகம் என்னை சூப்பர் பர்ஸ்ட் கிளாசில் பாஸ் செய்ய வைத்து விட்டது. பரிவட்டம் என்ன? மரியாதை என்ன? பாராட்டு என்ன? வாழ்த்துக்கள் என்ன?? என்ன என்ன என்ன என்று கேட்டுக் கொண்டே வரலாம். கம்பனை ஏன் உடாமெ இருக்கீங்க? என்று அடிக்கடி கேட்கும் என் மனைவியும் உடன் வந்து பாக்க,,, ஒரு வகையில் நல்லதாப் போச்சி..
ஆனால் மேடையில் உட்கார்ந்திருக்கும் போதும் சரி… பாராட்டும் போதும் சரி…என் மனதில் ஒரு சீன் தான் ஓடிக் கொண்டிருந்தது. கந்தசாமி பட்த்தில் சிபிஐ அதிகாரியான பிரபுவுக்கு முன்னால், வடிவேல் சொல்லிய அதே டயலாக் தான் அது.. உங்க ஜட்ஜ்மெண்டு ரொம்பத் தப்பு சார்…
இந்த ஆண்டும் ஆய்வுக் கட்டுரை ஒன்று அனுப்ப அதுவும் (அதுவுமா??) தேர்வு ஆகி இருந்தது. கட்டுரை வாசிக்க தயாரான போது, என்னையும் ஒரு அமர்வுக்குத் தலைமை ஏற்று நட்த்திட உத்தரவு வந்தது. (எங்கிட்டெ இருந்து மக்கள் ரொம்பவே எதிர் பாக்கிறாங்களோ??). கடமையை செவ்வனே முடித்து எழுந்தேன். (நான் கொடுத்த வேலையினைச் சரிவர செய்கிறேனா? என்று கண்கானிப்பு நடந்ததையும் மனதில் குறித்துக் கொண்டேன்). பின்னர் வேறு அரங்கில் என் கட்டுரை படிக்க, இலங்கை அறிஞர் மறவன் புலவு சச்சிதானந்தம் அவர்கள் தலைமை ஏற்ற அரங்கில் நுழைந்து எழுந்து பேச ஆரம்பித்தேன்… மன்னிக்கனும். உங்கள் கட்டுரையினை இப்படி அவசரகதியில் கேட்க நாம் தயாராயில்லை. நின்று நிதானமாய் சாப்பிட்டு விட்டு தொடரலாமே என்றார்… ம்…புலவரய்யா… உங்க ஜட்ஜ்மெண்டும் ரொம்பத் தப்பு ஐயா.. கடைசி வரையில் என் கட்டுரை படிக்க முடியாமலேயே போனது.
அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அப்படியே சந்தடி சாக்கில் ஒரு கம்பர் பாட்டு போடும்படியான நிகழ்வும் நடந்தது. கம்பன் அடிசூடி அடிக்கடி உண்ர்ச்சி வசப்பட்டார். கண்ணீர் பலமுறை அவரின் தொண்டை அடைத்து நின்றது. பேச்சும் அடிக்கடி தடைபட்டாலும்… ஒட்டுமொத்த கூட்டமும் அதற்கு அமைதி காத்து ஆதரவு தந்தது உணர்வு பூர்வமாய் இருந்தது.. அனைவரின் கண்களும் கொஞ்சம் கசியவே செய்தது… இராமாயணக் காட்சி போலவே…
காடுசெல்ல இராமன் தயாரான போது அழுத நேரம் தான் என் நினைவிற்க்கும் வந்தது சட்டென்று… கூட்டம் கூட்டமாய் அழுதார்களாம். யார்? யாரெல்லாம் என்று ஒரு பட்டியல் போடுகிறார் கம்பன். இதோ.. பட்டியல் உங்களுக்காய்…
1. ஆடிக் கொடிருந்த மகளிர்
2. அமுதகானமாய் ஏழிசை பாடிக் கொண்டிருந்ததவர்கள்
3. மாலையைக் கலட்டி எறிந்து ஊடல் கொண்டவர்கள்
4. (கொஞ்சம் வெக்கப்பட்டு பெட்ரூம் வரை எட்டிப் பாத்தா…) கணவரைக் கூடும் மனைவிகளும்..
இதோ பாட்டு:
ஆடினர் அழுதனர் அமுத ஏழ் இசை
பாடினர் அழுதனர் பரிந்த கோதையர்
ஊடினர் அழுதனர் உயிரின் அன்பரைக்
கூடினர் அழுதனர் குழாம் குழாம் கொடே..
அழும் உணர்ச்சி வெள்ளம் எந்த ஒரு இடம் என்ற அணை எல்லாம் தேக்காது சீறிப்பாயும் என்பதை கம்பரும்…. அதன் அடிநின்று கம்பன் அடி சூடியும் நின்றதை இரசிக்கவும் முடிந்தது.
ஆமா… உங்க ஜட்ஜ்மெண்ட் எப்படி?