அஞ்சலிக் கவிதை


boat tragedy

[அந்தமானில் படகு கவிழ்ந்து விபத்தான நிகழ்வில் தனது பேத்தியை இழந்து தவிக்கும் மூதாட்டியின் சோகம், கவிதை வடிவில் – இறந்து போன இருபத்தி இரண்டு இதயங்களுக்கு என் அஞ்சலிக் கவிதை – இரங்கல் மடல் இதோ]

மான் ஒத்த விழியாலெ
மான் பாக்கப் போனியே – அந்த
மான் பாக்கப் போனியே
மான் பாத்த கண்ணெ
நான் பாக்க முடியலெயெ
மீன் கொத்திப் பொண்ணே
மீன் கொத்தி வந்தியே..

மீன் பிடிக்கும் கைகாரி
வின்மீனுக்குப் போறதுக்கா
அந்தமான் பாக்கப் போனே
மீனோடு விளையாட நீ
மாண்டுதான் போகணுமா நீ?

காத்துவாங்க மேலே வந்த
மினைப்பாத்து நீயும் தான்
கதைகதையாச் சொன்னியே
மூச்சு விடாமெச் சொன்னியே
மூச்சு விட்டு வந்தியே..

பெட்டி மேலே ஏறி நின்னு
சறுக்கிட்டுத்தான் போனீயே
பெட்டிக்குள்ளெ சவமாத்தான்
பெருத்துத்தான் ஏன் வந்தே?

சவ்டாலாப் பேசிப் பேசி
சப்ஜாடாப் பேசுவியே?
சடலமாய் ஆகி வந்து
சலனமில்லாம கெடக்கிறயெ

செல் செல்லா சுத்துப் பாத்து
செல்ஜெயில் பத்திச் சொன்னியே
செல்போனில் தினம் தினம்.
செல் போன் இப்பொ
செல்லாத பொனாச்சே..

உன் நம்பர் நான் போட்டு
உன்னிடம் நான் பேசினப்பொ
நாசமாப்போன ரோமிங்னு
நாசூக்கா வச்சிட்டியே..
நல்ல நம்பர் பேச பாத்து
அனுப்புவேன்னு பாக்கிறச்செ
நம்பர் போட்டு ஒன் உடம்பை
நம்மகிட்டெ அனுப்பிடுச்சே..
நம்பத்தான் முடியலையே..

செத்த நேரம் தூங்கினாலும்
மொபைல் மேலே படுப்பியே
நூறு நம்பரை போடமட்டும்
சட்டுன்னு தான் மறந்தியே

இருந்து சேத்த காசெல்லாம்
இருப்பு வச்சி இருப்பு வச்சி
இறக்கெயில்லாமெப் பறக்க
இம்புட்டு நாளாத் தவிச்சியே
இருபத்தி ஆறுலெ கண்டம்னு
இருந்த எவனும் சொல்லலையே.
எருமை ஏறி வரும் எமன்
படகுலெ தான் வந்ததெத்தான்
பாவி மக பாக்கலையே
யாரும் தான் பாக்கலையே..

பொத்தி வச்ச எம் பொண்ணு
கொள்ளி வைக்கிறப்பொ வேணுமின்னு
கொள்ளெ ஆசையா இருந்தேனே
கொள்ளைலாபம் பாத்த பாவிமகன்
தொல்லெ குடுத்துப் புடிங்கிட்டான்
கொல்லெயிலெ போற மவன்
கல்லடிதான் படப்போறான் எமன்கிட்டெ.

ஏழுலெ சனின்னு
எல்லாரும் தான் சொல்லுவாக
இருபத்தி ஆறுலெ சனின்னு
இனிமேயா சொல்லுவாக
சுனாமி தின்ன மிச்சகடன்
தீர்த்துவைக்க என் பேத்தியா
உனக்கு கெடெச்சா..
கடன்காரக் கடலே
ஈரமில்லாம் கடலே..

ஆறாப்பு படிக்கும் இவ
மாறாப்பும் போடலையே
கடைவீதி போனாலே
கண்டதெல்லாம் கேப்பியே- கண்ணிலெ
கண்டதெல்லாம் கேப்பியே.
காதோரம் கொஞ்சிட்டுப் போனியே
ஆத்தா ஆத்தானு கதறினதை
காத்து கூட சொல்லலையே

மூலைக்கு மூலை போலீசுண்ணு சொன்னியே
தலைக்கவசம் இல்லாட்டி தகராறு என்றாயே
ஒருகவசம் கெடெச்சிருந்தா உன்சுவாசம் இருந்திருக்கும்
உன் சுவாசம் இல்லாமெ என் சுவாசம் எங்கிருக்கும்?

நல்ல தண்ணி குடிக்கத்தான்
தேடித் தேடிப் போவியே
அக்குவா மெரினில் தான்
ஏறித்தான் போனீயே
அக்குவா கார்டாட்டம்
நல்ல தண்ணி தருமுன்னு
தடுமாறி விழுந்திட்டியோ

காஞ்சீவரம் போனாலெ
காலாட்டி பொழைக்கலாம்னு
காலங்காலமா சொல்லுவாய்ங்க…
சீராட்டி வளத்த மவ
காலாட்டிப் போகையிலெ
கடலையும் தான் பாக்கையிலே
படகோட்டி வந்து தான்
கவுத்திட்ட கதையெத்தான்
கத்தின கதறலும் தான் கேக்கலையே
தேரோட்டிக் கண்ணனும் தான்.

இதயம்னு ஒண்ணிருந்தா
அப்படியே கேட்டுக்கிங்க
நான் பட்ட வேதனை தான்
நாய்பட்ட பாடும் தான்
யாருமே தான் படாதிருக்க
பாடம் தான் நடத்திடுங்க
கோரமாய் படகுக்கொலை
கொஞ்சமும் நடக்காமெ
கெஞ்சிக் கேட்டுக்கிறேன்
கொஞ்சம் கேட்டிடுங்க.

வெண்பா எழுதலையோ வெண்பா…???


திருக்குறள் ஒரு வெண்பா என்று எல்லாருக்கும் தெரியும். ஆனா இந்த மாதிரி வெண்பாக்கள் எல்லாம் இப்பொ யாராவது எழுதுறாங்களா என்ற கேள்வியும் கூடவே வரும். என் மனசுலெ என்ன தோணுது தெரியுமா? அந்தக் காலத்திலெ கவிஞர்களும் குறைவு. வாசகர்களும் குறைவு. (ஆனா… ஆச்சரியம் ஆனால் உண்மை., படைப்புகள் அதிகம்). அரசனின் ஆதரவு பெற்ற படைப்புகளும், அரசவை கவிஞர்களின் இடுக்கிப் பிடிக் கேள்விகளையும் தாண்டித்தான் கவிதைப் பிரசவம் நடக்க வேண்டிய சூழல். இன்று அப்படி இல்லையே? படைப்புகள் ஏராளம்.. வாசக வட்டங்களும் ஏராளம். (எல்லாரும் படிக்கிறாய்ங்க என்ற குருட்டு நம்பிக்கையில் தான் நாம இங்கே எழுதிட்டே இருக்கோம்).

சபீபத்தில் ஒரு குழுவில் திருக்குறளையே, எளிமையா, இன்னும் எளிமையா வெண்பாவிலேயே எழுதி கலக்கி வருவதைப் பற்றி தகவல் வந்தது. படிச்சிப் பாத்தா விளக்கம் போட்டாப்லேயே இருக்குது… ஆஹா இப்படி இருந்தா தான் எல்லாருக்கும் சூப்பரா விளங்கிடுமே!! (இது விளங்கின மாதிரி தான் என்று புலவர்கள் புலம்புவதும் கேட்கிறது). எனக்கு ஒரு சந்தேகம். அந்தக் காலத்து ராஜாக்களுக்கு அம்புட்டு பாட்டுக்கும் அரத்தம் தெரிஞ்சிருக்குமா என்ன??

திருவைய்யாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் சார்பில் அந்தமானில் ஓர் ஆய்வு மாநாடு நடந்தது. அதில் பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். அந்தமான் மக்களுக்கு தமிழ் உணர்வு ஊட்டியதில் அந்த அறிஞர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. (அதுக்கு முன்னாடி தமிழ் உணர்வு இல்லாமலா இருந்தது என்று குறுக்குக் கேள்வி கேட்றாதீங்க..) அந்த அறிஞர் அணியில் புலவர் பூவை சு செயராமன் என்பவரும் வந்திருந்தார். அந்தமான் வந்து இறங்கியது தொடங்கி எல்லா இடத்திலும் அவரது வெண்பா பாடல் இயற்றும் திறன் கொடி கட்டிப் பறந்தது. அந்தமான் முருகம் பற்றி பல வெண்பா எழுதியுள்ளார் அவர்.

நமக்கும் ஒரு நப்பாசை ஒரு வெண்பா எழுதிப் பாக்கனும் என்று.. படிக்கிறதுக்கு நீங்க இருக்கறச்செ.. எனக்கு என்ன யோசனை??? அவரும் ஏதோ எளிமையாத்தான் சொல்லிப் பாத்தார். என்னோட மண்டைக்கு சரியா போய்ச் சேரலை. ஆனா… இந்த வெண்பா மேல் இருந்த ஆவல் மட்டும் கொஞ்சம் கொஞ்சமா மாறி காதலா ஆயிடுச்சி… இந்த ஒரு தலைக் காதலுக்கு வீட்டுக் கார அம்மா ஒன்னும் தடை போடலை. ஏதோ கிறுக்கும் மனுஷன் வெண்பா போட்டா என்ன? வம்பா எழுதினாத்தான் என்ன? ரம்பாவெப் பத்தியும் எழுதினாத்தான் என்ன? என்ற ஒரு நல்ல எண்ணமும் கூட இருக்கலாம்.

வெண்பா கத்துக்க, கூகுலாண்டவரிடம் போனா… பலரும் கலக்கு கலக்கு என்று வெண்பாவுக்கு சாமரம் வீசுற சேதிகள் தெரிஞ்சது. ஈஸியா எழுதலாம் வெண்பான்னு ஒரு புக் வேறெ இருக்கு. தேடி ஆன்லயனில் வாங்கப் போனா, Out of Stock என்று வந்தது. அம்புட்டு பேரு வாங்கி வெண்பா கவிஞர் ஆயிட்டாங்களா என்ன?? நாலு தளத்துக்குப் போனா, வடிவேல் காமெடி ரேஞ்சுலெ சுலுவா சொல்லித் தர ஆளிருப்பதும் தெரியுது. பத்தாக் குறைக்கு அந்தமான் நண்பர் காளைராஜன் வேறு 20 நிமிடத்தில் வெண்பா எழுதும் வித்தையினை விளக்குகிறார்.

அப்பொ எனக்குத் தெரிஞ்சதை உங்களுக்கும் சொல்லலைன்னா என் தலை வெடிச்சிடாது?? சொல்றேன்… எல்லார் மாதிரியும் நாமும் புலவர் பாஷையில் பேசாமல், பொத்தாம் பொதுவாவே பாப்போம். ஒரு நாலு வரி வெண்பா எழுதனுமா? ஒவ்வொரு வரிக்கும் நாலு வார்த்தைகளும், கடைசி வரிக்கு மூனு வார்த்தையும் எழுத வேண்டும்.

வரிகள் சரி. வார்த்தைகள் எப்படி இருக்க வேண்டும்? அங்கே தான் லேசா இலக்கண வகுப்பு வந்து சேரும். ரொம்பக் கவலைப் படவேண்டாம். அதுக்கு நாம எக்செல் வைத்தும் வேலை செஞ்சிக்கலாம். அதுக்கு முன்னாடி சின்னச் சின்ன வேலைகள் செஞ்சாகனும். ஒவ்வொரு வார்த்தையையும் பிரிக்கனும். அதாவது கூறு போடணும். (மீன், துண்டு போடற மாதிரி என்றும் வச்சிக்கலாம்). புள்ளி வச்ச எழுத்து வருதா? அங்கே கத்தி வைய்ங்க..கா, கீ தீ கோ இப்படி நீட்டி முழக்கும் நெடில் வருதா? அப்பவும் கூறு போடுங்க. சாதா எழுத்து ரெண்டு ஜோடியா வருதா?? ஒரே வெட்டா வெட்டலாம். ஒரு சாதாவும் ஒரு நீட்டி முழக்கும் எழுத்தும் வருதா?? அப்பொவும் வெட்டுங்க.. இந்த மூணு கேசிலும் பின்னாடி புள்ளி வச்ச எழுத்து வருதா? அப்பொ அங்கெ வைங்க அரிவாளை. இம்புட்டுத்தான் பீஸ் பீஸ் ஆக்கும் கலை. இப்போதைக்கு நம்ம நாம மூணு பீஸ் மட்டும் வச்சிட்டு வெண்பா எப்புடி சமைக்கிறதுன்றதைப் பாக்கலாம்.

சோதிகா சிம்ரன் எனத்திரிந்து தாழும் தமிழா
உனக்காய் வாழ்வது எப்போது?

இப்படி ஒரு சாம்பிள் பிட்டு போட்டு பீஸ் பீஸ் ஆக்கிப் பாக்கலாமே. ஒரு வார்த்தை எத்தனை பீஸ் என்று நம்மர் பிராக்கெட்லெ இருக்கு பாருங்க.
சோ / திகா(2); சிம் / ரன்(2); எனத் / திரிந்/ து(3); தா / ழும் / தமி / ழா(4); உனக் / காய்(2); வாழ் / வது(2); எப் / போ / து?(3);
எல்லாம் சரி… ஒரு எடத்திலெ 4 பீஸ் வருதே… அதெ மூணு பீஸா ஆக்க லேசா மாத்தலாமே…

சோதிகா சிம்ரன் எனத்திரியும் தமிழா
உனக்காய் வாழ்வது எப்போது?

சோ / திகா(2) சிம் / ரன்(2) எனத் / திரி / யும்(3) தமி / ழா(2)
உனக் / காய்(2) வாழ் / வது(2) எப் / போ / து?(3)

இப்பொ எல்லாம் மூணு பீஸுக்குள் ஆயிடுச்சி. அப்புறம், இதெ.. வெண்பா செக்கிங் மிஷின்லெ போட்டு சரியா இருக்கான்னு பாக்கனும். (அப்பொ இதுவரை பாத்ததெல்லாம் …என்ற கேள்வி எல்லாம் வேண்டாமே!!!)

ஒவ்வொரு பீஸையும் பாருங்க… புள்ளி வச்ச எழுத்தெ விட்டுட்டு ஓர் எழுத்தா இருந்தா அதுக்கு பேரு நேர். ரெண்டு எழுத்து வந்தா நிரை. அம்புட்டுத்தாங்க. இந்த பீஸ்களின் தொகுப்புக்கு சூப்பரா நம்மாளுங்க பேரு வச்சிருக்காங்க.. இப்போதைக்கு எக்செல்லெ ஒரு கம்பத்திலெ வார்த்தைகள் எழுதி அடுத்து நேரா?? நிறையாங்கிறது மட்டும் நீங்க சொல்லுங்க.. மத்தபடி தேமா புளிமா காய் கனி எல்லாம் எக்செல் பாத்துக்கும். (எப்படி என்பதை தனியா ஒரு போஸ்டிங்கில் பாக்கலாம்.)

Venbaa Excel

சோ / திகா(2) – நேர் நிரை
சிம் / ரன்(2) – நேர் நேர்
எனத் / திரி / யும்(3) – நிரை நிரை நேர்
தமி / ழா(2) – நிரை நேர்
உனக் / காய்(2) – நிரை நேர்
வாழ் / வது(2) – நேர் நிரை
எப் / போ / து?(3) – நேர் நேர் நேர்

மூனு பீஸா இருந்து நேர் என்பதில் முடிந்தால், அடுத்த பீஸ் நேரில் தான் ஆரம்பிக்கனும். ரெண்டு பீஸ் இருந்தா அதுவே உல்டா..அதாவது நேரில் முடிஞ்சா அடுத்த பீஸ் நிரையில் இருக்கும். நிரையில் முடிஞ்சா நேரில் ஆரம்பிக்கும். இந்த ரூல்படி பாத்தா.. ரெண்டு இடத்திலெ ஒதெக்குது.. அதாவது எனத்திரியும் தமிழா என்ற இடத்தில் நேர் முன் நிரை வந்துள்ளது. அங்கே நேர் வர வேண்டும்.. அப்புறம் உனக்காய் வாழ்வது என்ற இடத்தில் நேர் முன் நேர் வந்திருச்சி.. அங்கே நிரை வர வேண்டும். அப்பொ லேசா மாத்திப் போடலாமே??

சோதிகா சிம்ரன் எனத்திரியும் எந்தமிழா
நீயுனக்காய் வாழ்வதே நன்று.

இப்படி ரூம் போட்டு யோசிச்சி, பீஸ் பீஸ் ஆக்கியா 1330 குறள் வள்ளுவர் எழுதி இருப்பார். என் கேள்விக்கு தமிழில் முனைவர் பட்டம் பெற்ற அந்தமான் அய்யாராஜு அவர்கள் சொன்ன பதில்: சைக்கிள் ஓட்டப் பழகும் போது தான் பிரேக் பெடல் பேலன்ஸ் பெல் பத்தி எல்லாம் யோசிக்கனும். ஓட்டப் பழகிட்டா அப்புறம் தானா வரும்… அப்படிப் பாத்தா நமக்கும் வெண்பா எழுத வருமா??? வரும்…ஆனா…

இவ்வளவு சீரியஸா அந்தமான் தமிழ் இலக்கிய மன்ற வாரக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது, நண்பர் கார்மான் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார்.. பாத்தா கவிதை.. இதோ..:

வெண்பா எழுதுவது
விளையாட்டாம்
விளக்கிக் கொண்டிருக்கிறார்கள்
தமிழ் இலக்கிய மன்றத்தில்.
ஏதோ தேமாவாம்
புளிமாவாம்…
எனக்குத் தெரிந்தது எல்லாம்
தேங்காயும் புளியங்காயும் தான்.
மாங்காயும் மாம்பழமும் தான்.
என்னை விடுங்கள்
வசன கவிதையோ
வருத்தக் கவிதையோ
நானும் என் கவிதையும்
வாழ்ந்து போகிறோம்.
முடிந்தால் வாழ்த்துங்கள்
வெண்பா வாழட்டும்.

இவர் இப்படி எழுதப் போக, நானும் பகவத் கீதையின் முதல் பதத்தை வைத்து நான் எழுதிய முதல் வெண்பாவை சபையில் வைத்தேன். இதோ.. உங்களுக்கும்…

திருதராட்டன் சொன்னார்; தவசஞ்சை, போரிடும்
யுத்தியுடன் தர்மப்போர் செய்யிடம் சென்றிட்ட
என்மகவும் பாண்டுவின் மக்களும் என்செய்தர்
என்றும் இருந்தே பகரு

ஏதும் பிழைகள் இருந்தால் திருத்தி அருள்க புலவர்களே..

மற்ற ரூல்கள் எக்செல் உதவியுடன் வெண்பா எழுதுவது எப்படி என்ற பதிவில் தொடரும்.

மீன் வாசம் மறையுமா??


சமீபத்திய சன் மியூசிக் சேனலில் அடிக்கடி வரும் பாட்டு “சர..சர..சாரக்காத்து வீசும் போது” என்ற பாடல் தான். பாடல் வரிகளை மீறி அதன் இசையும், அதற்கும் மேலாக அந்த நாயகியின் முக பாவங்களும்.. ஆஹா.. எத்தனை முறை பார்த்தாலும் சளைக்காது இருக்கிறது.

அதில் வரும் ஒரு காட்சியில், ஓடையில் மீன் பிடித்து அதனை வறுத்துத் தருவது மாதிரி ஒரு சீன்… பாக்கும் போதே வாயில் நீர் ஊறுது… மீன் மணமும் லேசா அடிக்குது… அதென்ன மீன் வாசம் என்று சொல்லாமல், மீன் மணம் என்று சொல்றேன்னு பாக்குறீங்களா??

இது ரெண்டையும் விட, நல்ல வார்த்தைப் பிரயோகம் நாற்றம் என்பது தான். ஒரு காலத்தில் நல்ல அரத்தம் தரும் இந்தச் சொல், சமீப காலமாய் பொருள் மாறி நாத்தமடிக்க ஆரம்பித்து விட்டது. கற்பூரம் நாறுமோ.. கமலச் செவ்வாய் நாறுமோ என்று ஆழ்வார் பாசுரங்களில் வந்த காலம் போய், அது வேறு வாய்…இது நாற வாய்.. என்று வடிவேலு வாயில் வந்து விழுந்து கிடக்கிறது, இந்த மணம் கமழ்ந்த தமிழ் வார்த்தை.

அந்தமானில் விரல் விட்டு எண்ணும் அளவுக்கே, சைவ உணவு விடுதிகள் உள்ளன.. சைவக் காரர்கள், அசைவ ஆட்களோடு இருந்து சைவம் சாப்பிட பழகிக் கொள்ள வேண்டியது, இங்கு மிகவும் அவசியமான ஒன்று. காய்கறி மார்க்கெட் அருகிலேயே மீன் மார்க்கெட் இருப்பதும் இங்கே சர்வ சாதாரணம்.

மீன் வாசமே இப்படி என்றால்… கருவாடு வாசம் எப்படி இருக்கும்??
கோவை தொழில் நுட்பக் கல்லூரியில் படிக்கும் போது நண்பர்கள், ஆசை ஆசையாய் பரமக்குடி கருவாடுக்காய் ஏங்குவார்கள்… (மதுரை கிட்னி, சட்னிக்கு பேமசு என்பது போல், பரமக்குடி கலாட்டாவுக்கு அடுத்து கருவாடு தான் ரொம்ப பேமஸு). ஒரு படத்தில் கூட கருவாடு கூடை கூடையாய் கமல் கொண்டு வருவது போலவும், ஆட்டோக்காரர் படும் அவதியும் காமெடியாய் பாத்திருப்பீர்கள்.

அந்தமான் வந்த பிறகும் அந்த பரமக்குடி கருவாடுக்கு ஒரு டிமாண்ட் இருக்கத்தான் செய்கிறது. மறைந்த கக்கன் அவர்களின் மருமகன் நம்மூர் கருவாட்டுக்கு ரசிகர் என்ற ரகசியமான தகவல்… யாருக்கும் சொல்லிடாதீங்க..

கல்லூரிக் காலமாய் ஆகட்டும், அந்தமான் வந்த போதும் சரி… அந்த கருவாட்டை ஒரு வாசமில்லா மலரிது மாதிரி…. வாசமில்லா கருவாடு ஆக்கி எடுத்துச் செல்வது தான் பெரிய்ய கலை மாதிரி..
இதோ.. இந்த பிரச்சினையால், கருவாடு சாப்பிடும் ஆசையினையும் நாக்கையும் அடக்கும் அசைவ பிரியர்களுக்கான உன்னத டிப்ஸ்..

அரை கிலோ கருவாடை நாடு கடத்தி, வாசமில்லாமல் கொண்டு செல்ல வேண்டுமா..?? அதற்கு, அரைக்கிலோ கருவேப்பிலை வாங்குங்கள்.. முதலில் கருவேப்பிலையை படுக்க வைத்து அதன் மேல் பேப்பர் வைத்து கருவாட்டினை அடுக்கவும். பின்னர் அதன் மேல் இன்னொரு பேப்பர் வைத்து அங்கும் கருவேப்பிலை வைத்து சுருட்டவும்.. ஒவ்வொரு ரவுண்டிலும், கருவேப்பிலை வைக்க மறக்காதீர்கள்..

பேக்கிங்க் அளவு கொஞ்சம் பெரிசா இருக்கும்.. ஆனா மூக்கு மேலே வச்சி உறிஞ்சி பாத்தாலும் கூட, கருவாடு வாசம் வரவே வராது… கருவேப்பிலை தான் Default ஆக வந்து நிற்கும்..

ஒரு நாள் பரமக்குடியிலிருந்து பஸ்ஸில் கிளம்பினேன். ஏம்மா கருவாட்டுக் கூடெ.. ஏறாதே…எறங்கும்மா..என்று கராராய் மூக்கில் விரலை … கையை வைத்து… வைது கன்டக்டர் விரட்டினார்.. நான் போனேன் வக்காலத்து வாங்க…

நீங்க கருவாடு சாப்பிடுவீங்களா?? என்று கண்டக்டரைக் கேட்டேன்..
ம்..என்றார்..

அப்பொ..ஏன் இவங்களை இந்தக் கெடாசு கெடாசுறீங்க?? இது என் கேள்வி.

இந்தக் கருவாட்டுக் காரிக்கு டீஸண்டா(???) இருக்கும் நீங்க சப்போர்ட்டா??? இது அவர்களின் ஆச்சரியமான கேள்வி..

நானும் ஒரு கருவாட்டுக்காரன் தான் என்று அந்த கருவேப்பிலை பேக்கிங்க் காட்டினேன்… கருவாட்டுக் காரிக்கு சீட் கிடைந்தது… நாலைந்து பேர் வாந்தி எடுதார்கள் என்பதை நான் எழுதப் போவதில்லை..

அரைக்கிலோ கருவாடு வாசம் எடுக்க இவ்வளவு சிரமப் பட்டா… ஒரு கடலில் இருக்கும் மீன் பூரா வாசமில்லாமெ மணக்க என்ன செய்யலாம்???

கம்பர் உதவிக்கு வருகிறார்… நான் பார்த்திருக்கேன் என்று.. வடிவேலு ரஜினி ஸ்டைலில் “நான் கேட்டேனா” என்று என்னால் கேக்க முடியலை… “சொல்லுங்க வாத்தியாரே நீங்க” என்றேன்.

கம்பர் தொடர்கிறார்: இலங்கையின் பிரமாண்டம் பாத்து அப்படியே பிரமித்துப் போகும் அனுமன், அப்படியே அதன் கடல் மீதும் ஒரு பார்வை பாக்கிறான். கடலில் கலப்பவை எவை? எவை? என்று கண் பார்க்க, மனசு அதுக்கு மேலும் போய் பார்க்கிறது..

பூக்களின் மீதுள்ள தேன்; சந்தனக் குழம்பு, கஸ்தூரியின் (நடிகை இல்லீங்க) வாசனைக் கலவை; வானுலக fresh ஆன கற்பகப்பூ; யானையின் மத நீர் இதெல்லாம் கடல்லெ கலக்க… கடல்லெ இருக்கிற மீன் எல்லாம் புலால் நாத்தம் போய் மணக்க ஆரம்பிச்சிட்டதாம்…

தேனுன் சாந்தமும் மான்மதச் செறி நறுஞ் சோறும்
வான நான் மலர்க் கற்பக மலர்களும் வயமாத்
தான வாரியும் நீரொடு மடுத்தலின் தழீஇய
மீனும் தானும் ஓர் வெறி மணம் கழமும் அவ்வேலை.

இப்பொ சொல்லுங்க கருவாடு மணக்கிறதா??? நாத்தமடிக்குதா???

பூவோடு சேர்ந்த நாரு…


இந்தக் காலத்தில் நல்ல கூட்டனி மட்டும் அமைஞ்ச்சிட்டா ஆட்சி நிச்சயம். அந்தக் கால தர்மம் தலை காக்கும் என்பதெல்லாம் பழங்கதை. கூட்டனி ஆட்சியை பிடிக்க உதவும் என்பது தான் இப்போதைய கூட்டனி தர்மம்.

இங்கே தான் பூவோட சேர்ந்த நாரும் மணக்கும் எங்கிறதை சரியாக் கவனிக்கணும். இதையே வேண்டாத ஆட்களோட சேர்ந்தா..பன்றியோடு சேர்ந்த கன்னுக்குட்டியும்………..திங்கும்.

இன்னும் சில பழைய புதுசுகளும் இருக்கு… கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும். இது பழசு.

இளையராஜா வீட்டு இட்லி சட்டியும் இசை பாடும் இது புதுசு

ஏ ஆர் ரஹ்மானின் எதிர் வீட்டு ஃபிகரும் ஹம்மிங்க் தரும் என்பது சமீபத்திய ஜொள்ளர்களின் கண்டுபிடிப்பு.

காந்தி வேடத்தில் படத்திற்காய் நடிக்க இறங்கிய ஹாலிவுட் நடிகர்  பெங்கிங்க்ஷ்லி அசைவம் சாப்பிடுவதை விட்டு சைவத்திற்கு மாறிட்டார் என்பது  பழைய சேதி… நம்ம ஊர் பாரதியாய் நடித்தவரை சகீலாவோட நடிக்க வச்சி அழகு பார்த்தது தமிழ் உலகம். சில படங்களில் காமெடியனாகவும் வலம் வந்தார். என்ன செய்ய?

அம்பதுக்கும் மேலே கம்பராமாயணம் வச்சி போஸ்டிங்க் போட்டு விட்டேன். நானும் கொஞ்சம் நல்ல புள்ளையா மாறணுமோ???

சிலபேர்கூட சேரவே வேணாம்… அவர்களின் தொடர்பு கிடைத்தாலே போதும், வாழ்வு நிலை மாறி விடும்.

ஆனா சில பேரு எதைச் செய்தாலும் எதாவது கிடைக்குமா??என்று தான் கேட்கிறார்கள்??

இந்த மாதிரி போஸ்ட் போடுகிறீர்களே..அதனாலெ என்ன கிடைக்கும்? அதன் அரத்தம் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பது தான்… ஒண்ணுமே கிடைக்காதா?? அப்பொ சும்மாவே இருக்கலாமே…சரி சும்மா இருக்கும் இவரு என்னா சாதிச்சிட்டார்??

இப்படித்தான் ஒரு ஏர் போர்ட்டிலெ ஒரு மனுஷன் வெயிட்டிங்க் ரூம்லெ கடையை விரிச்சி தண்ணி சிகரெட் என்று ஜாலியா இருந்தாராம். அப்பொ நம்ம கிட்டெ அனத்தும் பார்ட்டி மாதிரி ஒரு ஆளு பொயி, ஐயா..எப்பொ இருந்து இந்தப் பழக்கம்.. சின்ன வயசில ஆரம்பிச்சது…ஆமா எதுக்கு?? என்று திருப்பிக் கேட்டாராம்.

இல்லெ இவ்வளவு காசை வெட்டியா கரி ஆக்கி இருக்கீங்க… அதெல்லாம் சேத்து வச்சிருந்தா சொந்தமா பிளைட்டே வாங்கி இருக்கலாமே??

போதையிலும் அந்த மனுஷன் தெளிவா கேட்டானாம், …சரி என்னையை விடுங்க..குடிக்காத ஆளு நீங்க..உங்களுக்கு சொந்தமா பிளைட் இருக்கா??

கேட்டு விட்டு தன் சொந்த பிளைட்டில் ஏறப் புறப்பட்டார் அந்த தாடி வைத்த விஜய் மல்லையா… (சும்மா நெட்டில் கிடைத்த கதை தான் இது)

மல்லையாகிட்டெ மல்லுக்கு நின்ற அந்த ஆளை நாமும் கொஞ்சம் அம்போன்னு விட்டுட்டு கம்பர் கிட்டெ போவோம்..நமக்கும் ஏதாவது ஞானம் கிடைக்குமான்னு பாக்கலாமே..

நம்ம ஆட்கள் எதையாவது கலக்கிகிட்டு இருந்தா, நம்ம கம்பர் எக்காலஜி பத்தி யோசிச்சிட்டு இருக்கார். அந்த எக்காலஜி கெடாமல் இருந்தா தான் குளங்களில் மீன்கள் இருக்குமாம். அப்படி இருந்த குளத்தில் திடீர்னு மீன் எல்லாம் காணாமல் போச்சாம். ஏன் தெரியுமா??

தெய்வீகப் பெண்கள் எல்லாம் தங்கள் அங்கங்களில் பூசி இருந்த சந்தனம் போக தேய்த்துக் குளித்தார்களாம். அப்புறம் அவர்கள் சூடியிருந்த பூ, அதில் இருக்கும் தேன் எல்லாம் சேர்ந்து அந்த எக்காலஜி மாறிப்போக..மீன் வாசம் போயே போச்சாம்… அங்கே வந்த பறவை எல்லாம் தீனி இல்லைன்னு ஓடிப் போச்சாம்.

சிலர் சிலர் கிட்டெ போனாலெ..என்ன நடக்கும் என்பதும் ஊகிக்கலாமே??

அள்ளல் நீர் எலாம் அமரர் மாதரார்
கொள்ளை மா முலைக் கலவை கோதையின்
கள்ளு நாறலின் கமல வேலி வாழ்
புள்ளும் மீனுணா புலவ் தீர்தலால்.

அது சரி நீங்க எங்கே யார் கூடப் போய் சேரப் போறீங்க??

தூண்டில் போட்டா மீனு – (எக்செல் பாடம் 4)


யாராவது திடீரென்று ஆர்வக் கோளாறில் ஹிந்தியில் எழுதுவோம் என்று இறங்குவார்கள்.. அது கொஞ்ச ஆட்களுக்குப் புரியும்.. மிச்ச ஆட்களுக்குப் புரியாது… இதுவும் நடந்துகிட்டே தான் இருக்கும்…

இந்த பிரச்சினையையும் நாம எக்செல் கத்துகிட்டே சரி செய்யலாம்..

அதாவது நீங்க நெனைக்கிற வார்த்தைகள் (அது English, தமிழ் எதிலும் இருக்கலாம்) எல்லாம் ஒட்டுக்கா ஒரு Column ல போட்டு வாங்க… அதுக்கு நேர் எதிரே ஒரு column ல், ஹிந்தி words எல்லாம் போட்டு எழுதிட்டு வாங்க.. இப்பொ நாம என்ன செய்யப் போறோம்னா…, நீங்க ஒரு வார்த்தையை செலெக்ட் செய்தா அதுக்கு சரியான ஹிந்தி வார்த்தை என்ன என்று உங்களுக்கு காட்டும்… (அது சரி… ஒரு பாக்கெட்டிலிருந்து எடுத்து இன்னொரு பாக்கெட்டில் தரனும் அவ்வளவு தானே?? கூடவே எகசெல் கத்துக்கிடுவோம்.

ஓகே நான் ரெடி…நீங்க ரெடியா???

ஒரு வாத்தியார் கேட்டாராம்: 3 ம் 3ம் கூட்டினா 6 வரும்; அப்போ 13ம் 13ம் கூட்டினா என்ன வரும்?

பையன் திரும்பக் கேட்டானாம்: போங்க சார்…ஈஸியான விடை எல்லாம் நீங்க சொல்லிட்டு கஷ்டமானதை எங்க கிட்டே கேக்கிறீங்க…

இதே மாதிரி அந்த கஷ்டமான வேலையை நீங்க செய்ங்க.. நானு ஒரு சின்ன சாம்பிள் செஞ்சி காமிக்கிறேன்… நீங்க பெரிச்ச்சா ஏதாவது செய்ங்க…

ஒரு சின்ன Data base கையில எடுக்கலாம்.. நம்ம இந்திய state & Capital அதை இப்படி entry பண்ணுங்களேன்.

A1 Name of the State
B1 Capital
A2 Tamil Nadu
B2 Chennai
A3 West Bengal
B3 Kolkotta
A4 Gujarath
B4 Gandhi Nagar
A5 Jammu Kashmir
B5 Sri Nagar

முடிஞ்ச்சதா??? அப்புறம் அப்படியே அந்த State பெயர் எல்லாம் select செய்யுங்க… அதாவது A2 முதல் A5 வரை. அதை அப்படியே வச்சிட்டு இந்த Formula Bar இருக்கு பாருங்க…அதான் நாம எது டைப் செஞ்சாலும் அது அந்த செல்லிலும் வரும்..அந்த பெட்டியிலும் வருமே…அதே..அதே தான், அதுக்கு இடது பக்கம் ஒரு பொட்டி இருக்கு பாருங்க…அதான் பெயர்ப்பெட்டி (Name Box)… அங்கே mouse வச்சாலே சொல்லும். பொதுவா அந்த எடத்திலே A1, B1 … மாதிரி Cell Address தான் இருக்கும்.. (ஆமா திஹார் ஜெயிலில் இருப்பவங்களுக்கு Cell Address இருக்குமா???)

அந்த Name Box ல் Mouse pointer வச்சி ஒரு பேரு குடுங்க…கொஞ்சம் சம்மந்தம் உள்ள மாதிரி குடுங்க..ஏன்னா இந்த பேரு பின்னாடி தேவைப்படும்…அதான் இப்பவே சொல்லி வைக்கிறேன்.. நான் தரும் பேர்.. StateName

இதுக்கப்புறம் நம்ம State பெயர்கள் & Capitals இரண்டையும் சேத்து select செய்ங்க… அதவது A2 முதல் B5 வரை தேர்வு செய்து அதுக்கும் ஒரு பேரு..சொல்லுங்க பாக்கலாம்.. StCapiTable. ம்..அது…

இப்போ மெயினான விஷயத்துக்கு வருவோம்.. C10 க்கு போய் கொஞ்சம் மந்திர தந்திர வேலைகள் செய்வோம்… இந்த Cell ல் நாம வெறும் State பேரு மட்டுமே select செய்ற மாதிரி வரணும்…எப்படி??? ஏற்கனவே நாம சொல்லி வச்சிருக்கோம்..Validation…அதை இங்கே புகுத்தி வைக்கலாமே…

Click Data in Menu Bar…and then Click Validation [2003 user may find this in down & 2007 user have to trace this in right side]

ஒரு ஜன்னல் வரும். அதில் Settings ல் Allow என்று இருப்பதில் List தேடிப் பிடிச்சி கிளிக்குங்க.. ஆச்சா.. சத்தமில்லாம Source க்கு கீழே போய் =StateName அடிங்க…(இப்போ தெரியுதா?? ஏன் அந்த பெயரை ஞாபகம் வச்சிக்கணும்னு சொன்னேங்கிறது??).

ஒகே சொன்னவுடன்…சூ..மந்திரக்காளி… ஒரு சின்ன Drop Down Arrow வந்திருக்கும். தட்டிப்பாருங்க..அட…நம்ம அடிச்ச State பேரு எல்லாம் இருக்கும்..

அடுத்த வித்தை..D10 ல் C10 ல் எந்த State இருக்கோ,அதன் Capital வரவழைக்கனும்… இவ்வளவு சொல்றவன் இதை சொல்ல மாட்டேனா??? (ரகசியம்..யாருக்கும் சொல்லிடாதீங்க)

D10 ல் தர வேண்டிய பார்முலா இதோ =VLOOKUP(C10,StCapiTable,2,false)

இதுக்கு என்ன அர்த்தம்???

C10 — State க்குத் தகுந்த மாதிரி Capital பேரு தரணும் StCaiTable …மொத்தமா ஒரு பேரு (அதாங்க…ரெண்டாவதா குடுத்தோமே அதான்).
2 – ரெண்டாவது Column ல் இருப்பதை பொறுக்கி நமக்கு தரணும்
false – சரியான மேட்சான ஆள் பெயர் தான் வேணும்..No Approximation.. முடிஞ்சதா???

இப்போ.. C10 ல் State Name மாத்துங்க…D10 ல் Capital name மாறுதா?? அப்படியே ஹிந்தி வார்த்தைகள் நீங்களே டிரை பண்ணுங்க..அது தான் உங்களுக்கு Home Work.

Civil Engineers அதிகம் பயன்படுத்தும் Rate Analysis இந்த VLOOKUP வைத்து கலக்கலாம்.

அடுத்த பாடம்… இஞ்சி பூண்டு பேஸ்ட்…பேஸ்ட் ஸ்பெஷல்..(எக்செல் பாடம் – 5) ….விரைவில்…