மகளிர்க்கு மரியாதை


காதலுக்கு மரியாதை என்பது தான் அடிக்கடி காதில் விழும் வாசகம். காதல் என்றால், என்ன ஒரு மரியாதை பெறும் ஓர் இடமா? பொருளா? அல்லது ஊர் சிரித்தது என்றால் ஊரில் உள்ள மக்கள் சிரித்தார்கள் என்று பொருள் படும் ஆகு பெயரா? (எட்டாம் வகுப்பில் படித்த தமிழ் இலக்கணம் இன்னும் கொஞ்சம் ஞாபகம் இருப்பதை எப்படியெல்லாம் சொல்லி நிரூபிக்க வேண்டி இருக்கு!!) அப்பொ இது காதலர்களுக்குத் தரும் மரியாதையாக இருக்கலாம்.

மரியாதை தரும் நேரத்தில், சில மரியாதை இழக்கும் சம்பவங்களும் நடக்கும். எனக்குத் தெரிந்த ஒரு கல்யாண வீட்டில் நெருங்கிய உறவினர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்வு நடந்து வந்தது. மரியாதை என்றால் ஒன்றும் பெரிசா பூரண கும்ப மரியாதை எல்லாம் ஒண்ணும் கிடையாது. சும்மா ஒரு தேங்கா தரும் சம்பிரதாயம் தான். எல்லாருக்கும் தந்து முடித்தா? என்ற கேள்வியை ஒரு பெரியவர் கேட்டார். கூட்டத்தில் ஒருவர் கை தூக்கி, “எனக்கு வரவில்லை” என்றார். “ஓஹோ உனக்கும் தரணும் இல்லெ” என்று சொன்னது தான் தாமதம். அங்கே மோதல் ஏறபடும் அளவுக்கு நிலமை மரியாதை இழந்து நின்றது தான் வேடிக்கை.

ஆண்களுக்கு பெண்கள் சரிநிகர் என்று சொல்லி வருகிறார்கள் இந்தக் காலத்தில். என்னோட பையன் விழுந்து விழுந்து ஒலிம்பிக் பாத்துக் கொண்டிருந்த போது, “இன்னும் இந்த gender discrimination இருக்கிறதே?” என்கிறான். என்ன ஏடா கூடாமா அவன் கண்ணில் பட்டதோ என்று பாத்தா, வாலிபால் நெட் உயரத்தில் வேறுபாடு இருக்கிறதாம். நானும் ஏதோ, ஆண்களின் சராசரி உயரம் பெண்களின் சராசரி உயரத்தில் வேறுபாடு இருக்கலாம் என்று கூறி சமாளித்தேன். [எனக்கும் உண்மையில் பதில் தெரியலை. இப்படி ஏதாவது சொல்லி சமாளிக்க வேண்டியது தானே!]

மகளிர் மட்டும் என்றும் லேடீஸ் ஸ்பெஷல் என்றும் இப்போல்லாம் வந்துவிட்டன. அந்தமானில் மகளிருக்கென்று தனி ஜெயில் வைப்பர் தீவில் அமைத்து அன்றே மகளிருக்கு என்று தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அன்றைய ஆங்கில அரசு. அதை ஒட்டி தற்போது தான், மகளிர் ஸ்பெஷல் பஸ் இயங்க ஆரபித்துள்ளது. அதில் மகளிர் நடத்துனரையும் அந்தமான் நிர்வாகம் நியமித்துள்ளது. [குடும்பத்தை நடத்துவது கைவந்த கலையாய் வைத்திருக்கும் மகளிருக்கு பஸ்ஸை நடத்துவது சிரமமா என்ன?]

ஆனால் இந்த மகளிருக்கு மரியாதை என்பது என்னவோ இப்பொ வந்த சமாச்சாரமாய் தான் பார்க்கிறார்கள். சில ராணிக்கள் அந்தக் காலத்தில் ஆட்சி செய்திருந்தாலும், அந்த சந்தேகம் வரத்தான் செய்கிறது. தமிழர்களின் வாழ்வில் மகளிருக்கு மரியாதை தந்திருக்கிறார்கள் என்பதை சொல்ல முடியும். ஆதாரம்….?? (கம்பராமாயணம் வர இன்னும் கொஞ்சம் காத்திருங்க பிளீஸ்..) சமீபத்தில் தஞ்சைக்குச் சென்றிருந்தேன். 12ம் நூற்றாண்டு சிற்பம் ஒன்றை அங்கு உள்ள மியூசியத்தில் ஒரு சிலையாக வைத்திருந்தனர். சிலையின் பெயர் துவாரபாலகி. அதாவது பெண் போலீஸ் அல்லது Security Guard. அப்பொ…. நடுவில் தான் சிக்கல் வந்திருக்குமோ…

இப்பொவும் கூட பார்ட்டிகளில் (வார இறுதி கொண்டாட்ங்கள் நீங்கலாய்) கொஞ்சமாய் கூத்தடித்துவிட்டு பின்னர் சாப்பாடு தட்டு ஏந்தும் போது (பஃப்பே என்று நாகரீகமாய் அழைப்பர்). பெரும்பாலும் லேடீஸ் ஃபர்ஸ்ட் என்பர்கள். [ஒரு வேலை அவங்களை சாப்பிட விட்டு நாம இன்னும் கொஞ்சம் சுதி ஏத்திக்கலாம் என்ற நல்ல எண்ணமாகவும் இருக்கலாமோ!!] இந்த மகளிருக்கு மரியாதை தரும் வித்தை எப்பொ வந்திருக்கும்? [இந்த மாதிரி கேள்வி வரும் முன்னே…. கம்பராமாயணம் வரும் பின்னே… இது தான் தெரிஞ்ச விஷயம் தானே!!]

அனுமன் சீதையைக் கண்டு திரும்பின் பிறகு நடந்த சின்ன சம்பவம் பாக்கலாமே! ராமனிடத்தில் நடந்த சம்பவங்களை சொல்ல வேண்டும். என்னவோ ஏதோ என்று டென்ஷமாய் ராமனும்… அதை விட பதட்டமாய் லெட்சுமணன். வந்தார் அனுமன். ராமனை வணங்கவில்லை. அதற்குப் பதில் சீதை இருந்த தென்திசை பாத்து நிலத்தில் விழுந்து வணக்கம் வைத்தாராம். எப்புடீ நம்மாளோட மகளிருக்கு முதல் மரியாதை??

எய்தினன் அனுமனும் எய்தி ஏந்தல்தன்
மொய் கழல் தொழுகிலன் முளரி நீங்கிய
தையலை நோக்கிய தலைவன் கையினன்
வையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வாழ்த்தினான்.

அப்புறம்… எங்க வீட்லெ மீனாட்சி ஆட்சி தான். (அவங்க வீட்டைப் பாத்துக்க நான் ஜாலியா கம்பராமாயணம் படிச்சிட்டே இருக்கேன். ) ஆமா உங்க வீட்லெ எப்படி??

மதுரெ மதுரெ தான்…


சுத்தி சுத்தி எப்படியாவது மதுரைக்காரங்க வாயிலிருந்து அவர்களுக்கே தெரியாமல் வந்து விழும் வார்த்தைகள் தான் இந்த மதுரெ மதுரெ தான்.

எனக்கு என்னவோ மதுரை என்றதும் மல்லி தான் நினைவுக்கு வரும். அந்தமான் தீவுகளில் மல்லிகை பூ வந்து சேர்கையில் பக்கத்தில் போய் பாத்த தான் அட இது மல்லி..என்பதே தெரிய வரும்.

கையில் கிளி வைத்திருக்கும் மீனாட்சி இருக்கும் ஊரில் கிளி மாதிரி அழகான பெங்களுக்கு பஞ்சமே இல்லை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதுவும் அந்த 4ம் நம்பர் பஸ்ஸில் ஒரு வேளையும் இல்லாமல் சும்மா சுற்றுபவர்களும் இருக்காங்க..

வீட்டில் மதுரையா?? சிதம்பரமா?? என்று உலகத்தில் எந்த மூலையிலுன் கேட்கும் அளவுக்கு மதுரை பேமஸு. சமீப காலமாய் மதுரெ கிட்னிக்குமாடா பேமஸு என்ற வடிவேலுவின் டயலாக் அசத்தலோ ஆசத்தல்.

மதுரை மண்ணை அனுபவித்து வைரமுத்து கவிதையே பாடலாக தொகுப்பில் எழுதி இருக்கிறார். அதில் எனக்குப் பிடித்த வரிகள்..உங்களுக்கும் பிடிக்கும்..அட..அடடே என்று சொல்ல வைக்கும்.

பாண்டியர் குதிரைக் குளம்படியும் – தூள் 
பறக்கும் இளைஞர் சிலம்படியும் – மதி
தோண்டிய புலவர் சொல்லடியும் – இளந் 
தோகைமார்தம் மெல்லடியும் 
மயங்கி ஒலித்த மாமதுரை – இது 
மாலையில் மல்லிகைப் பூமதுரை!

நீண்டு கிடக்கும் வீதிகளும் – வான் 
நிமிர்ந்து முட்டும் கோபுரமும்
ஆண்ட பரம்பரைச் சின்னங்களும் – தமிழ் 
அழுந்தப் பதிந்த சுவடுகளும் 
காணக் கிடைக்கும் பழமதுரை – தன் 
கட்டுக் கோப்பால் இளமதுரை!

தமிழைக் குடித்த கடலோடு – நான் 
தழுவேன் என்றே சபதமிட்டே
அமிழ்தம் பரப்பும் வையைநதி – நீர் 
ஆழி கலப்பது தவிர்ப்பதனால் 
மானம் எழுதிய மாமதுரை – இது 
மரபுகள் மாறா வேல்மதுரை!  

போட்டி வளர்க்கும் மன்றங்களும் – எழும் 
பூசை மணிகளின் ஓசைகளும் – இசை
நீட்டி முழங்கும் பேச்சொலியும் – நெஞ்சை 
நிறுத்திப் போகும் வளையொலியும் 
தொடர்ந்து கேட்கும் எழில்மதுரை – கண் 
தூங்கா திருக்கும் தொழில்மதுரை!

ஆலைகள் தொழில்கள் புதுக்காமல் – வெறும் 
அரசியல் திரைப்படம் பெருக்கியதில்
வேலைகள் இல்லாத் திருக்கூட்டம் – தினம் 
வெட்டிப் பேச்சு வளர்ப்பதனால் 
பட்டாக் கத்திகள் சூழ்மதுரை – இன்று 
பட்டப் பகலில் பாழ்மதுரை!

நெஞ்சு வறண்டு போனதனால் – வையை 
நேர்கோ டாக ஆனதனால்
பஞ்சம் பிழைக்க வந்தோர்கள் – நதியைப் 
பட்டாப் போட்டுக் கொண்டதனால் 
முகத்தை இழந்த முதுமதுரை – பழைய 
மூச்சில் வாழும் பதிமதுரை

கடைசி வரிகள் பாடும் போது உங்களையும் அறியாமல் ஒரு சோகம் வரத்தான் செய்யும்… எப்படி இருந்த மதுரை இப்படி ஆயிடுச்சே என்ற கவலையும் கண்டிப்பாக சேர்ந்திருக்கும்.

சமீபத்திய மதுரையே இப்படி இருந்தா…கம்பன் காலத்து மதுரை எப்படி இருக்குன்னு பாக்க வேணாமா… வாங்க..ஏறுங்க…நம்ம Time மிஷினில் ஏறினால் கம்பன் காலத்துக்கு நொடியில் பயணம் at free of cost.

எல்லா உலகமும், எல்லா வகையிலும் புகழ்ந்து பாராட்டும் விதத்தில் இருப்பவை ரெண்டாம்..1. முத்து 2. தமிழ் (அதுவும் இயல்,இசை, நாடகம் மூன்றும் சேர்ந்தது). இந்த ரெண்டும் எக்கச்சக்கசக்கமாய் ஓர் எடத்திலெ இருந்தா அங்கெ செல்வங்களுக்கு குறையே இருக்காதாம்… அப்பேற்பட்ட இடம் தேவலோகம் தான்.. ஆனா மதுரையிலு இதெல்லாம் கீது..அதனாலெ மதுரெயும் தேவலோகம் தான் என்கிறார் கம்பர்.

அத் திருத் தகு நாட்டினை அண்டர்நாடு
ஒத்திருக்கும் என்றால் உரை ஒக்குமோ
எத் திறத்திலும் ஏழ் உலகும் புகழ்
முத்தும் முத் தமிழும் தந்து முற்றலால்.

இப்பொ மதுரெ மதுரெ தான் ஒத்துக்கிறீங்களா??? எங்கே..எல்லாருமா சேர்ந்து ஓ போடுங்க பாக்கலாம்.