இப்படி திறந்த புத்தகமா இருக்கீகளே


பக்கம் 1

அன்மையில் முன்னாள் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் அந்தமானுக்கு வந்திருந்தார். தமிழ் அமைப்புகள், இலக்கியம் தொடர்பான ஆட்களை சந்திக்க வேண்டும் என்றாராம் (அதை அவரும், தனது குடும்ப உறுப்பினர்கள் காது படாமல் ரகசியமா சொன்னாராம். வர வர இந்த இலக்கிய மன்றக் கூட்டம் கூட, ஏதோ மலையாளப் படம் பார்க்கும் ரேஞ்சுக்கு ரகசியமா போய் வரும் நிலமைக்கு போய்விடும் போல் இருக்கு). நம் இலக்கிய கூட்டத்துக்கு வந்தார். மனுஷர் சும்மா சொல்லக் கூடாது. சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை பின்னி எடுத்தார். மருத்துவர் என்பதால் இலவச ஆலோசனை என்று ஆரம்பிக்க கடைசியில் ஸ்டார்டிங்க் டிரபிள் என்று அவரை மாத்ருபூதம் ஆக்கிவிட்டனர் நம் மக்கள்.

பெரும்பாலான டாக்டர்கள் தமிழ் தெரிந்தவர்களிடம் தான் வாழ வேண்டி இருக்கிறது. (சிலர் பலான டாக்டர்களாகவும் இருந்து விடுகிறார்கள்). ஆக மருத்துவக் கல்வியை ஏன் தமிழில் கற்றுத்தரக் கூடாது என்ற கேள்வியை அன்று முன் வைத்தோம். நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பதாய் பதில் வந்தது. அடுத்த வாரம் கூடிய கூட்டத்தில் அதே தலைப்பில் கருத்துக்கள் கூற முடிவு செய்து அலசினோம். ஆரம்பக்கல்வி தமிழில் படித்து பின்னர் மேற்படிப்பில் ஆங்கிலத்தில் மாறும் போது இருக்கும் சிக்கல்கள் பற்றி பேச்சு தான் மேலோங்கி இருந்தது. அந்தச் சிக்கல் தன் வாரிசுகளுக்கு வரக்கூடாது என்ற காரணத்திற்க்காய் ஆங்கில வழியில் பிள்ளைகளை சேர்ப்பதாய் (பல்வேறு காரணங்களோடும்) கூறினர்.

ஒரு கல்வி அதிகாரி தன் அனுபவத்தினை கூறினார். பள்ளி வரை தமிழ் வழியில் பயின்றவர் அவர். கல்லூரியில் ஆங்கில மீடியத்திற்கு (வேறு வழியின்றி) நுழைந்தார். கணிதப் பேராசிரியர் கணக்கை செய்து காண்பிக்கிறார் (ஆங்கிலத்தில் தான்). எல்லாம் புரிகிறது. கடைசியில் ஆமரெட் எங்கிறார் ஆசிரியர் (சாரி..சாரி… பேராசிரியர்). அவருக்கோ அந்த ஆம்ரெட் என்றால் என்ன என்றே விளங்கவில்லை. மற்ற வகுப்புத் தோழர்களிடம் கேட்கிறார். அவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லையாம். ஒட்டு மொத்தமாய் ஆமரெட் என்றால் அந்தக் கணக்கு முடிந்துவிட்டது என்று தோராயமாய் புரிந்து வைத்திருந்தார்கள். பின்னர் தான் ஆம்ரெட் என்பது Am I Right? என்று ஆங்க்கிலத்தில் சொல்லி இருக்கிறார் என்று புரிந்ததாம். ஆமா மற்ற எல்லா மாணவர்களும் ஏன் எல்லாம் புரிந்த மாதிரி இருந்தார்கள் தொறந்த புத்தகமா??

பக்கம் 2:

புலிக்கு வாலாய் இருப்பதை விட பூனைக்கு தலையாய் இருப்பது நல்லது என்பார்கள் (யாரும் அப்படி சொன்ன மாதிரி தெரியலை. நமக்கு எப்பொ எது சாதகமா இருக்கோ அப்பொ அதெ சொல்லிவிட வேண்டியது தான்) சின்ன ஊரில் அதிகாரியாய் இருப்பதில் சில சவுகரியங்கள். எந்த விழா என்றாலும் தலைமை தாங்க அழைப்பு வரும். மைக் கையிலும் வரும். கவனமா போன தடவை பேசியதை தவிர்த்து பேச வேண்டும். (மொத்த கூட்டமும் அடுத்து வரும் கலை நிகழ்ச்சிக்காய் காத்திருக்க, அவர்கள் முன்னால் பேசுவது கொஞ்சம் சிரமம் தான்).

சமீபத்தில் ஒரு மாணவர் அறிவியல் பொருட்காட்சியினை திறந்து வைத்து தலைமை தாங்கும் வாய்ப்பு வந்தது. மனதிற்குள் இப்படி வேசவேண்டும் என்று ஒரு முன்னோடம் விட்டிருந்தேன். (ஹிந்தியில் பேச வேண்டும் என்பதால் கூடுதல் கவணம் தேவைப்படுகிறது). அந்தக் காலத்தில் நான் சிறுவனாய் இருந்த போது, என் அப்பா, என்னிடம் தண்ணீர் கொண்டு வா என்பார். நான் உடனே ஓடிப் போய் கொண்டு வந்து தருவேன். ஆனால் இப்பொ… நீங்க ஏன் போய் எடுத்துக்கக் கூடாது? என்னை மட்டும் ஏன் கூப்பிட்றீங்க? அக்கா கிட்டெ ஏன் சொல்லலை? இவ்வளவு கேள்வி வருது. தண்ணீர் கொன்டு வரத் தயார். ஆனால் இப்பொ எல்லாம் இந்த தகவல் தேவைப்படுது பசங்களுக்கு. We are living in the age of Informations. கேள்வி கேட்கும் ஆற்றலை வளர்ப்பது தான் அறிவியல் பூரவமான வாழக்கை. அந்த மாதிரியான கேள்விகள் கேட்பது நல்லது..” இப்படி சொல்ல உத்தேசித்தேன்.

மேடை ஏறிய பின்னர் தான் தெரிஞ்சது, மேடைக்கு முன்னர் எல்லாம் பிரைமரி ஸ்கூலில் படிக்கும் பசங்க.. எனக்கு குஷி ஆய்டுத்து. நான் அப்பா சொன்ன பேச்சைக் கேட்டேன்.. என்று ஆரம்பித்து, உணர்ச்சிவசப்பட்டு அப்பொ நீங்க?? என்று கூட்டத்தைப் பாத்து கேட்டேன். கேப்போம் என்று பதில் கோரஸா வந்தது. (இப்படி திறந்த புத்தகமா இருக்க்காகளே..).. சிலர் கேக்கிறதில்லை என்கிறார்கள் என்று சமாளித்து முடித்தேன்.

பக்கம் 3

அந்தமானில் நடந்த ஒரு கலை நிகழ்ச்சிக்கு சிவ கார்த்திகேயன் தொகுப்பாளராய் வந்திருந்தார். (அவர் ஹீரோ ஆகுறதுக்கு முன்னாடி நடந்த கதைங்க இது). நிகழ்ச்சி அமைப்பாளர்கள் முதல் இரண்டு வரிசைகளிலும் விஐபிகள் கொண்டு நிறைத்திருந்தார்கள். சிவ கார்த்திகேயன் தகிடுதத்தம் செய்து பார்க்கிறார். முதல் ரெண்டு ரோ ஆட்கள் சிரிப்பு என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் நரசிம்ம ராவ் அளவில் இருக்கிறார்கள். நாம அப்புடி இல்லீங்க.. சிரிப்பு வந்தா சிரிச்சி வைச்சிடுவோம்.. (சில சமயம் மயாணத்தில் யாராவது ஜோக் அடிக்க அங்கும் சிரித்த கொடுமை நடந்துள்ளது).

கடுப்பான சிவ கார்த்திகேயன்..உண்மையிலேயே உங்களுக்கு காது எல்லாம் கேக்காதா? அல்லது வாய் பேச வராதா?.. ஆமா அப்படி வாய் பேசாதவங்க எப்படி சிரிப்பாங்க தெரியுமா என்றார். நானும் என் குடும்பத்தாரும் மொழி படத்தில் ஜோதிகா செய்ததை செய்து காட்டி.. அட இப்படி திறந்த புத்தகமா இருக்கீகளே என்று சபாஷ் வாங்கினோம்.

இலக்கியப் பக்கம்:

மேனேஜ்மெண்ட் குரு என்று பலரைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ராமர் தான் சரியான மேனேஜ்மெண்ட் குரு என்று வட நாட்டு புத்தகம் சொல்லி அது தமிழிலும் வந்துள்ளது. (ராம்ஜெத்மலானி ராம் நல்ல கணவர் இல்லை என்கிறார்). ஆனா சீதை என்ன சொல்றாங்க என்று பாக்கலாம். (எங்க ஆத்துக்காரருக்கு அவ்வளவு வெவரம் பத்தாது என்று நோபல் பரிசு வாங்கியவரின் மனைவியே சாதாரணமாய் சொல்லும் சூழலையும் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்க..)

ஒரு தலைவன் (அல்லது மேனேஜர்) எப்படி இருக்க வேண்டும்?. எல்லா சூழலிலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். மெமொ அடுத்த அளுக்கு தரும் போதும் சரி.. தான் மேலதிகாரியிடம் டோஸ் வாங்கும் போதும் சரி.. ஒரே மனநிலையில் இருக்கனும்(அதாங்க திறந்த புத்தகமா… ஓஹோ.. கல்லுளிமங்கன் அப்படியும் சொல்லலாமோ..சொல்லிக்கிங்க.. நீங்களாச்சி..உங்க மேனஜராச்சி). இப்படி ராமர் இருந்தாராம். யாரு சொல்றாங்க.. சீதையே சர்டிபிகேட் தர்ராங்க.

தலைக்கு கிரீடம் வருகிறது என்ற போதும் சரி… காட்டிற்கு போக வேண்டும் என்ற போதிலும் சரி இரண்டையும் ஒரே மாதிரி பார்த்த முகம் அந்த ராமரின் முகம். அவரின் முகம் இரண்டு சந்தர்ப்பங்களிலும் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரை மாதிரியே.. (நம்ம பாஷயில் திறந்த புத்தகமா) இருந்தாராம். அப்படி இருந்த ராமரை இலங்கையில் இருக்கும் போது நினைத்தாராம் சீதை. அதை படம் பிடித்துக் காட்டுகிறார் நம் கம்பர்.

மெய்த் திருப்பதம் மேவு என்ற போதினும்
இத் திருத் துறந்து ஏகு என்ற போதினும்
சித் திரத்தின் அலர்ந்த செந்தாமரை
ஒத் திருக்கும் முகத்தினை உன்னுவாள்

இப்பொ சொல்லுங்க.. மேனேஜ்மெண்ட் குரு யாரு? ராமர்? சீதை? கம்பன்?

இந்தக் குதி குதிக்கிறான்


பெயரை வைத்து சிலரும்… பெயரை மாற்றி வைத்து சிலரும் நல்ல காசு சம்பாதித்து வருகிறார்கள்.. ஆனால் பேருக்கு ஏற்ற மாதிரி இருக்காகளா என்பது தான் 3G கோடி கேள்வி..

என் முகத்தைப் பாத்தா கிருஷ்ணன் மாதிரி இருந்து எனக்கு கிருஷ்ணமூர்த்தி என்று பெயர் வைத்திருப்பாகள் என்று நான் சந்தோஷமா நினைத்துக் கொண்டிருக்க… சமீபத்தில் என்னைப் பார்த்த ஒரு நபர் பூதம் மாதிரி இருக்கீக என்றார்… என்னது என்று நான் கேட்க, மாத்ரு பூதம் என்று வேறு சொல்லி வைத்தார்…

இதை நானும் முகநூலில் போட்டு வைக்க நடுராத்தியில் “எனக்கு ஸ்டார்டிங்க் டிரபிள்..என்ன செய்யலாம்..” இப்படி கேள்வி எல்லாம் வருது. 

தந்தை பெரியார் அவர்கள், குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டுமென்றால் நிதி வாங்கித்தான் பெயர் வைப்பாராம். இங்கு அந்தமானில் உடற்கல்வி ஆசிரியராய் இருந்து ஓய்வு பெற்றவர்… கொஞ்ச நேரம் அவரிடம் பேசி அவரின் பின்புலம் பிறந்து வளர்ந்த சூழல் இதெல்லாம் கேட்டபிறகு பணம் வாங்காது பெயர் வைத்தாராம்..

பெயருக்கு பொருத்தமாய் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சென்னை அன்னா பொறியியல் கல்லூரியில் Soil Mechanics பாடம் எடுப்பவர் பூமிநாதன். Water Resources எடுப்பவர் கார்மேகம்…. Auto CAD ல் வல்லவர் சாந்தக்குமார்.. சாந்தமே வடிவாய்…

குள்ளமாய் இருக்கும் ஒரு டைரக்ட்ருக்கு கஜேந்திரன் என்று பெயர்.. அகத்தியர் பெருரும் குள்ள முனிக்குத் தானே இருக்கு.. பார்த்திபன் ஒரு படத்தில் இவரை (இவரையுமா??) படாத பாடு படுத்துவார். அப்பொ அவர் குதி குதி என்று குதிப்பார்.. அதுவும் காமெடியாகத்தான் இருக்கும்.

அது சரி…சாதாரண மனிதர்கள் கொஞ்சம் சரக்கு அடிச்சா அவங்களை மிதக்கிறான் என்கிறார்கள்.. அதுவே இன்னும் கூடுதல் ரவுண்டு கட்டி விட்டால் பறக்கிறான் என்பார்கள்..

மரம் ஏறும் மீனை சமீபத்தில் ஒரு படத்தின் பாட்டில் அழகாய் காட்டி இருந்தார்கள்… அந்தமானில் வேகமாய் போகும் கப்பல் பயணத்தின் போது பறக்கும் மீங்களையும் பாக்கலாம். சிறிது தூரம் பறந்து கப்பல் கூடவே வந்து மறுபடியும் கடலில் விழும்… எத்தனை முறை பாத்தாலும் சலிக்காது.. (ஆமா…இதையே 26 வருஷமா பாத்து வந்தாலும் கூட..)

அப்புறம்… இஞ்சி திங்கு கொரங்கு பாத்திருப்பீங்க…. (அதுக்காக Facebool ல போய் என்னோட Profile photo எல்லாம் பாக்காதீங்க..) ஆனா…நண்டு தின்னும் குரங்கு பத்தி தெரியுமா?? கிரேட் நிகோபார் தீவில் இருக்கிறது… உலகில் அரிய வகை இனம் என்று அறியப் பட்டிருக்கிறதாம் அது.

இன்னொரு பறக்கும் செய்தி. பெரும்பாலும் வௌவால்கள் பாழடைந்த கோவில்களில் பாக்கலாம்.. பெரிய கழுகு போன்ற அளவில் லிட்டில் அந்தமான் தீவின் டுகாங்க்கிரீக் பகுதியில் பாக்கலாம்..கூட்டம் கூட்டமா…

எல்லாம் சரி..எதுக்கு இந்த குதி குதிக்கிறே?? … திரும்பினால், கம்பர் ஏதோ சொல்ல வருகிறார்… இவ்வளவு கேட்டவங்க இதையும் தான் கேளுங்களேன். அனுமான் ஒரு மலையின் மேல் கால் வைக்கிறார். அந்த மலை அப்படியே சாய்கிறது. அந்த மலையின் மறு பக்கத்தில் இருந்த அரசர்களும் வீரர்களும் அப்படியே வானதிற்கு குதிக்கிறார்கள். அதைப் பாத்தா எதிரிகள் காலை வெட்ட வரும் போது வீரர்கள் குதி குதி என்று குதிக்கிறது மாதிரி இருக்கு என்கிறார் கம்பர்.

தேக்கு உறு சிகரக் குன்றம் திரிந்து மெய்நெரிந்து சிந்த தூக்குறு தொலர் வாளர் துரிதத்தின் எழுந்த தோற்றம் தாக்குறு செருவில் நேரார் தாள் அற வீசத் தாவி மேக்குற விசைத்தார் என்னப் பொலிந்தனர் விஞ்சை வேந்தர். அது

சரி..இதெப் படிச்சிட்டு நீங்க என்ன குதி குதிக்கப் போறீங்களோ… யார் கண்டா???

மறுபடியும் மாத்ருபூதம்


சமீபத்தில் என்னைப் பாத்த ஒரு கப்பல் அதிகாரி, உங்கள் முகம் பாத்தா மாத்ருபூதம் சாயல் இருக்கே என்றார்… சரி மாத்ருபூதம் சாயலில் ஒரு போஸ்ட் இதோ…

ஆலும் வேலும் பல்லுக்குறுதி.. நாலும் ரெண்டும்
சொல்லுக்குறுதி என்பார்கள்.

இதில் ஆலங்குச்சி & வேலங்குச்சியால் பல் துலக்குவது பல்லுக்கு உறுதி தரும் என்பது எல்லார்க்கும்
தெரியும். அது என்ன அடுத்த நாலும் ரெண்டும்? அது வேறு
ஒன்னுமில்லை மாமு… நம்ம திருக்குறளும் நாலடியாரும்
தான் அந்த ரகசிய சமாச்சாரங்கள்.

நான் சொல்லுக்குறுதி என்பதை குடும்ப உறுதிக்கு
பாக்குறேன். குறளும் நாலடியும் நல்ல குடும்பத்துக்கு என்ன டிப்ஸ் தருதுன்னு பாக்கலாமா??

அதுக்கு முன்னாடி ஒரு சின்ன தகவல்: அந்தமானில் யுவ சக்தி என்ற ஒரு தொண்டு நிறுவனம் ஓர் ஆய்வு நடத்தியது. அதில் குடும்ப சிக்கல்களுக்கு என்ன காரணம்னு பாத்ததில் பெரும்பாலும் கணவன் மனைவிக்குள் சுமுக உறவு (உடலுறவு உட்பட) இல்லாதது தான் என்று தெரியவந்தது.

இந்த ஆய்வு முடிவுகள் அந்தமான் தாண்டி தமிழகம் மற்றும் இந்தியாவின் இதர பகுதிக்கும் செல்லுபடி
ஆகும் என்பது என் நம்பிக்கை.

சொல்லிக் கொடுக்காத இந்த செக்ஸ் பிரச்சினைகளினால்
வீடுகளில் எவ்வளவு சிக்கல்கள்?

சமீபத்தில் சன் நியூஸ் டாக்டர் எக்ஸ் நிகழ்சியில் ஒரு சம்பவம். நான்கு வருடமாய் கணவன் மனைவிக்குள் உறவு என்பதே இல்லையாம். குழந்தை இல்லையே என்று கேள்வி வேறு. ஐடி வேலை செய்யும் தம்பதிகளாம்… இது
கூடவா தெரியாது? இதுக்கெல்லாமா இன்டக்க்ஷன்
டிரைனிங் தருவாங்க??

சரி நாலும் ரெண்டும் இந்த பிரச்சினைக்கு என்ன ஆலோசனை சொல்லுது? முதலில் குறள் இதுக்கு என்ன சொல்லுதுன்னு பாக்கலாமா?

குடும்பம் சிக்கல் இல்லாம இருக்கனும்னா உறவு நல்ல விதமா இருக்கனும். இரவில் நடக்கும் உறவில் ஊடல் அதிகம் இருக்கட்டும். பின்னர் கூடல் வரட்டும் என்று கடைசி குறளாக 1330வது பாட்டில் சொல்கிறார்
ஜொள்ளுவர் சாரி வள்ளுவர். ஊடல் தான் இன்பம். ஊடலுக்குப் பிறகு வரும் கூடல் என்பது அந்த
ஊடலுக்கே இன்பமாம். அடடா… என்னமா எழுதியிர்க்காரு ?

சட்டியை வழிச்சு எடுத்த மாவில் ஊத்தும் தோசை அதிக
டேஸ்டா இருக்குமே.. அந்த மாதிரி..

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
கூடி முயங்கப் பெறின்.

இது தெரியாம எத்தனை பேர் எடுத்தேன் கவித்தேன்னு
இருந்து வாழ்க்கையினை தொலைத்திருக்கிறார்கள்.
(நல்லதா நாலு விஷயம் சொல்லிக் கொடுக்க மறந்திட்டோமோ??)

சரி.. இது இப்படி இருக்க…. நாலடியார் ரெண்டடி மேலே
போறார்.

அதற்கு முன்பு பாலகுமாரன் எழுதியதில் ஒரு சின்ன பிளாஷ்பேக் அடிச்சிட்டு அப்புறமா நாலடியாருக்கு
வரலாம்.

பாலகுமாரன் நாவலில் வரும் காட்சி. கணவன் அலுவலகம் போக மனைவி கையை ஆட்டி விட்டு டாடா பை பை சொல்லி விசுக்கென்று வீட்டிற்குப் போவாள். கணவன்
திரும்பி வந்து கண்டிப்பான்.

அம்மனீ உனக்கு அவ்வளவு வேலை இருந்தால் வீட்டில் இருந்தே வழி அனுப்பு. கதவு வரை வந்துவிட்டால் என் தலை மறையும் வரை இருந்து விட்டு வழி அனுப்பி உள்ளே போ. என்பான்.

ஏன் தெரியுமா? விசுக்கென்று உள்ளே போனால் ஏதோ ஒழிந்தான் பிங்களன் மாதிரி போய்த் தொலைந்தான்
என்பது போல் தெரியுமாம்.

சாதாரன ஒரு டாடா பை பைக்கே இப்படி என்றால் இரு மனமும் உடலும் சேரும் உடலுறவு எப்படி இருக்கனும்? ஊடல் சரி..அப்புறம் கூடலும் சரி..முடிந்து விட்டு
அக்கடான்னு கிடாசிட்டு போயிடனுமா?? இங்கே தான்
நாலடியாரைக் கொண்டு வர்ரேன்.

முதலில் கூடி பின்பு ஊடுவது காம இன்பத்திற்கு சுவை
சேர்க்கும் வித்தை என்பதாய் பாட்டு வருகிறது.

முயங்காற் பாயும் பசலைமற் றூடி
உயங்காக்கால் உப்பின்றான்காமம் –
வயங்கோதம் நில்லாத் திரையலைக்கும்
நீள்கழித் தண்சேர்ப்ப!! புல்லாப் புலப்பதோர் ஆறு

{ திகழ்கின்ற கடலானது நிலையாய் இல்லாது அலைகளால் மோதப்படுகின்ற குளிர்ந்த கரையையுடைய மன்னா!! தலைவனும் தலைவியும் கூடா விட்டால்
பிரிவுத் துன்பத்தால் உடலில் பசலை உண்டாகும். ஊடல் கொண்டு வருந்தாவிட்டாலோ காமம் சுவையுடையது ஆகாது. எனவே முதலில் கூடிப் பின்பு ஊடுவது
காம இன்பத்துக்குச் சுவை உண்டாவதற்கு ஒரு வழியாகும்}

ஊடல் பிறகு கூடல் – இது வள்ளுவர் பாஃர்முலா
கூடலுக்குப் பிறகும் ஊடல் – இது நாலடியார் தத்துவம்.

ரெண்டும் சேர்ந்தால்…???

முதலில் ஊடல்… பிறகு கூடல் … மறுபடியும் ஊடல்…

இதுதான் நாலும் வேலும் வாழ்க்கைக்கு உறுதி என்கிறேன்
நான்..

ரொம்ப காலம் கடந்த ஞானமோ???