[ காரைக்குடி கம்பன் கழகத்தில் தேர்வு செய்யப்பட்ட எனது ஆய்வுக் கட்டுரை… இவர்கள் முன்னர் படைக்கத் தவறியதால் இங்கு இவர்கள் முன் பதிகிறேன்]
கம்பனில் அரசு கடைபிடிக்கத்தக்க மரியாதை முறையியல்
(PROTOCOL)
முன்னுரை:
கம்பர் காலத்து அரசாட்சியும் இன்றைய காலத்து அரசாட்சியைனையும் ஒரே கண் கொண்டு பார்ப்பது என்பது ஓரளவு சிக்கல் நிறைந்த செயல் தான். எனினும் மக்களை ஆள்பவர்களைத் தேர்வு செய்வதில் தான் மாற்றம் இருக்கின்றதே ஒழிய ஆட்சி செய்யும் முறை, நெறி ஆகியவற்றில் கம்பகாலமும் இக்காலமும் ஒன்றும் வெவ்வேறதானதல்ல என்கின்ற மன அலசலின் முடிவாய்த்தான் இக்கட்டுரை எழுகிறது. பாலகண்டப் பகுதியில் வரும் அரசு கடைபிடிக்கத்தக்க மரியாதை முறையியல் குறித்து மட்டும் இனி காண்போம்.
அறம் சார்ந்த அரசு:
மக்களைக் காக்கின்ற அரசிடம் எப்போதும் அறம் சேர்ந்த்தே இருத்தல் வேண்டும். அறமற்ற வழிகளால் வருகின்ற பொருள் மீது எந்த அரசும் ஆசை வைக்காதிருத்தல் வேண்டும். சினம் கொள்ள வேண்டிய இடத்தில் சினமும் கொள்ளல் வேண்டும். அரசு பெற வேண்டிய வரிப்பணம் இவ்வளவு தான் இருக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்து கொள்ளல் வேண்டும். மக்கள் மீது சுமத்தப்படும் வரிகள் அவர்களுக்கு சிரம்ம் தராது விரும்பியே அதனைச் செலுத்தும் வகையில் இருத்தல் வேண்டும். தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாழும் மக்களிட்த்து மட்டுமல்லாது, அனைத்து உயிர்களிட்த்தும் அன்பு காட்டி இரக்க்குணம் கூட்டி வாழ்ந்திடும் அரசு இருத்தல் அவசியம் என்பதை கம்பர் தனது வரிகளில் காட்டுகின்றார்.
முறை அறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும்
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்கப்….
(நாட்டுப் படலம்)
பெண் கல்வியும் செல்வமும்:
ஒரு நாடு சிறப்புற்ற நிலையில் இருந்து, தொடர்ந்து அப்படியே இருந்திட வேண்டுமா? கம்பர் காட்டும் உன்னதமான வழி ஒன்று உளது. அந்த நாட்டில் உள்ள பெண்களிடம் நீங்காத செல்வமும், நீங்கிடாத கல்வியும் இருந்திட வழிவகை செய்திட வலியுருத்துகின்றார். மகளிரிடம் ஒரு முறை மட்டும் சேர்ந்திட்ட செல்வத்தினால் பயன் இல. அச்செல்வம் அவர்களிடமே நீங்காது இருந்திடவும் அரசு வழிவகை செய்திட வேண்டும். மேலும் மகளிர்க்கென கல்வியும் அதுவும் நீங்கிடாத கல்வியாய் அமைந்திட அறிவுரை தருகின்றார் கம்பர்.
பெருந் தடங் கண் பிறை நுதலார்க்கு எலாம்
பொருந்து கல்வியும் செல்வமும் பூத்தலால்..
(நாட்டுப் படலம்)
பேரிடர் மேலாண்மை:
இந்தியக் கடலோரப் பகுதிகள் சந்தித்த 2004ஆம் ஆண்டின் சுனாமிப் பேரலை இந்திய அரசின் திட்டமிடும் இயக்கத்தையும் சற்றே மாற்றி அமைத்திருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது. இத்தகைய பேரிடர் மேலாண்மையின் இருப்பை உணர்ந்து இதன் மீது கவனமும் செலுத்த ஆயத்தமாய் உள்ளது இப்போதைய அரசு. ஆனால் கம்பர் காலத்து கோசல அரசு இதற்கெல்லால் ஏற்கனவே தயாரான நிலையில் இருந்த்தை கம்பர் கூறும் போது ஆச்சரியப்படாமல் இருக்க வாய்பில்லை. நிலத்தை அழித்துக் கொண்டிருத்தல் தான் கடல் நீரின் தன்மை என்கிறார் கம்பர். அத்தன்மை உடைய கடல் நீர் ஊழிக் காற்றால் மேலும் உந்தப்பட்டால் என்ன ஆகும்? கடல் நீர் தன் எல்லையினைக் கடந்து நிலத்தினூடே பாய்ந்து வரும். அப்படி வந்தாலும் எந்த அழிவும் இல்லாத சிறப்பைப் பெற்றதாக கோசல நாட்டின் பெருமை தனைக் கம்பர் கூறுகிறார். பேரிடர் மேலாண்மையின் ஆசான் என்று நாம் கம்பரை அழைக்க யார் தடை சொல்ல இயலும்?
.வீடு சேர நீர் வேலை கால் மடுத்து
ஊடு பேரினும் உலைவு இலா நலம்
கூடு கோசலம்
(நாட்டுப் படலம்)
குற்றமிலா குடிமக்கள்:
அரசு இயந்திரம் என்று, இதயமிலாத தன்மை பற்றிச் சொல்லிட்டாலும், அரசு என்பது, இதயமுள்ள மக்களின் கூட்டுத் தொகுப்பு தான் என்பதனை யாரும் மறுதலித்திட இயலாது. அத்தகைய அரசின் அங்கமாய் அமைந்திட்ட குடி மக்களும், தத்தம் பொறுப்பினை உணர்ந்து வாழ்தல் மட்டுமே, ஒட்டு மொத்த அரசின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்பதாய் அமையும். அயோத்தி நகரின் மாண்பினைப் பேச வந்த கம்பர், இத்தகைய குடிமக்களைப் பெற்ற அரசு என்பதாய் கவி வரைகின்றார். குற்றமே இல்லாத தரம சிந்தனையுடன் வாழும் அரசன் போலவே அளவற்ற குடிமக்கள் இருந்த்தாய் அறிவிக்கின்றார் கவிஞர். மக்கள் எவ்வழி..மன்னர் அவ்வழி. இது பெரும்பாலோர் கூற்று. பெருங்கவியோ மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி என்கின்றார். ஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக் கோன் நிகர் குடிகள் என்ற நகரப் படலத்தின் கம்ப வரிகளே இதற்கு சான்று பகர்கின்றன.
அரசின் கடமைகள்:
அரசு என்பது எப்படி அமைந்திட வேண்டும்? என்பதில், திடமான சிந்தனையினைக் கம்பர் தந்திருக்கின்றார். அரசோடு அறிவு கைகோர்த்திருத்தல் வேண்டும். அந்த அறிவு உண்மையான அறிவாய் அமைந்திருத்தல் வேண்டும். மேலும் முதன்மையுடையனவாகவும் இருந்திடல் வேண்டும். கருணை, தருமம், சாந்தம் இவைகளும் அரசோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருத்தல் வேண்டும். வீரம் அரசோடு கை கோர்த்திருத்தல் மிக அவசியம். அந்த வீரமோ, வலிமையோடு கூடியதாயும் இருந்திட விருப்பம் தெரிவிக்கின்றார் கவிச்சக்கரவ்ர்த்தி. இத்துடன் கொடை நீதி நெறியில் தவறாது நிற்கும் திறன் அவை அணைத்தும் அரசின் அத்தியாவசியத் தேவைகள் என்கிறார் கவிஞர். அவரது வார்த்தைகள் இன்றளவும் இம்மியும் மாற்றமில்லாமல் பயன் படுத்த ஏதுவாய் இருப்பது தான் காலம் கடந்து வாழும் கவியின் சிறப்பு. இதோ அரசு நியதியினை கம்பர் அன்றே சொன்ன தீர்க்க தரிசன வார்த்தைகள்:
ஆதிம் மதியும் அருளும் அறனும் அமையும்
ஏதில் மிடல் வீரமும் ஈகையும் எண் இல் யாவும்
நீதிந் நிலையும்
(அரசியல் படலம்)
மன்னராட்சியில் மக்களாட்சியின் மாண்பு:
இன்றைய அரசின் மிகப்பெரிய குற்றச்சாட்டே, அவை மக்களை விட்டு விலகி இருப்பதான காரணம் தான். மக்களால் மக்களுக்காக ஆள உருவான அரசே இப்படி மக்களை விட்டு விலகி நிற்பது வேதனையான உண்மை. ஆனால் மன்னராட்சி நடந்த கம்ப காலத்தில் அரசு எவ்விதம் மக்களோடு இருந்த்து என்பதை ஒரு சிறு சம்பவம் கொண்டு விளக்குகின்றார் கம்பர். காப்பிய நாயகனான இராமபிரான் நகர்வலம் வந்த போது எதிர்ப்பட்ட மக்களை எவ்விதம் எதிர் கொண்டார் என்பது எல்லோரும் கவனிக்கத்தக்கதான ஒன்று. கருணையான முகம் துணை கொண்டு, செந்தாமரை மலர் போன்ற ஒளி வீசும் முகத்தின் தன்மை சற்றேனும் குறையாமல் குடிமக்களை வினவுகின்றாராம். அரசின் பார்வைக்கு தரத்தக்க செய்திகள் ஏதும் உண்டா? அரசின் முடிவுகள் உங்களுக்கு ஏதும் சிரமத்தை தரவில்லையே? இல்லறம் இனிதாய் இல்லாளும், வாரிசுகளுடனும் இனிதாய் சுகமாயும் நோயற்று வலிமை பெற்றவர்களாக இருக்கிறார்களா? என்ற நலன் விசாரிப்பை நல்கிச் செல்கிறார் கம்பர் கதை நாயகன் வாய் வாயிலாக.
எதிர்வரும் அவர்களை எமையுடை இறைவன்
முதிர்தரு கருணையின் முகமலர் ஒளிரா
எது வினை இடல் இலை இனிதும் நும் மனைவியும்
மதிதரு குமர்ரும் வலியர்கொல் எனவே
(திரு அவதாரப் படலம்)
பொதுவான நடைமுறை விதி:
இன்றைய நவீன காலத்து மேலாண்மை சார்ந்த அறிவியல் துறை வெளிப்படையான நிர்வாகம் நடந்திட அரசின் எல்லா நடவடிக்கைகளையுமே எவ்வித செய்திடல் வேண்டும் என்பதைனை விதிகளாக்கி அதனை பொதுவான நடைமுறை விதி (Standard Operating Procedure) என்று பெயரிட்டு அழைப்பர். கம்பன் காவியத்தில் இப்போற்பட்ட அரசின் சிறு நடைமுறையிலும் எவ்வப்டி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்ட்தாய் குறிப்பு வருகின்றது. எனவே அப்பேற்பட்ட நடைமுறை விதிகள் இருந்திருக்கின்றது என்பதையும் அதனைத்தான் அக்கால அரசு கடைபிடித்திருக்கின்றது என்பதினையும் ஊகிக்க முடிகின்றது. ”முகந்தனர் திருவருள் முறையின் எய்தினார்…” என்ற எழுச்சிப் படலப் பாடல் மூலம் தூதுவர்கள் அரன்மனையில் நடந்து கொள்ள வேண்டிய முறை இருந்ததை கம்பர் கவி உறுதி செய்வதை உற்று நோக்கி காண்க.
விசாரிப்பு மரியாதை:
பொதுமக்களின் பார்வையில் அரசு கடைபிடிக்கத் தக்க மரியாதை முறையியல் (PROTOCOL) என்ற வார்த்தைப் பிரயோகம் அரசு சார்ந்தவர்களை கௌரவப்படுத்தும் போதும், அவர்களை அமர வைத்தலின் போதும் தான் பொதுவான தேவையாக்க் கருதுகின்றனர். அவ்வரிசையில் மாற்றம் ஏற்படும் போது அதனை அரசின் அங்கம் வகிப்போர் தனக்கு இழைக்கப்பட்ட அவமானமாய்க் கருதுகின்றனர் இன்றும் ஆளும் அரசின் அதிகாரிகள். இந்தச் சிக்கல் கம்ப காலத்திலும் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால் சனகனின் சபையில் தசரதர் விசாரிக்கும் போது, மிகுந்த எச்சரிக்கையுடன் குற்றமற்ற முறையில் வரிசை முறையோடு விசாரித்த குறிப்பை கம்பர் ஏன் குறிப்பிட்டிருக்க வேண்டும்? ”வழு இல் சிந்தனையினான் வரிசையின் அளவளாய்” என்ற எதிர்கொள் படல வரிகள் இதற்கு சான்று பகர்கின்றன.
அனைவர் மேலும் அன்பு:
இன்றைய காலகட்டத்தில் குடும்ப அரசியல் என்பதினை மத்திய மாநில அரசியல் காட்சிகளில் சரவ சாதாரணமாய் இந்திய நாடு முழுவதும் காணக் கிடைக்கின்றது. அனைவருக்கும் வாய்ப்பு தரும் அரிய முயல்வு, தெரிந்தோ தெரியாமலோ முறியடிக்கப் பட்டுவிடுகின்றது இந்தக் குடும்ப அரசியல் காரணமாய். கம்பர் இதனை ஆதரிக்கின்றாரா? என்ற கேள்வியினை எழுப்பி அதற்கான விடையினைக் கம்பரிடமிருந்தே பெறவும் முடிந்தது. சனகர் அரண்மனையில் திருமண விருந்து நடக்கின்றது. அப்போது தாழ்ந்த நிலையில் உள்ளோர்க்கும் அழைப்பு தந்து அவர்களும் வந்துள்ளனர். அவர்களை உபசரிக்கும் விதம்தனைப் பார்த்தால், மாப்பிள்ளையினை எப்படி உபசரிப்பரோ அதே மாதிரியாய் இருந்ததாய் கம்பர் காவியம் அறியத் தருகின்றது. ”கொண்டாடலின் அன்புதான் இழிந்துளார்க்கும் இராமற்கும் ஒத்த்தே” என்ற உலாவியல் படலப் பாடல் அதனை உறுதி செய்கின்றது.
முடிவுரை:
கம்பன் காலத்து அரசியல் சூழல் மன்னராட்சி உள்ளடக்கியதான ஒன்று. ஆனால் அதிலும் மக்களாட்சியின் மாண்பினை பல இடங்களில் கம்பர் கண்டு நமக்கு பாடலாய்த் த்ந்திருக்கின்றார். அவைகள் இப்போதைய அரசின் நடந்து கொள்ள வேண்டிய மரியாதை முறைகளில் சற்றும் மாற்றமில்லாது இருப்பது தான் வியப்பான செய்தியாகும். அரசு கடைபிடித்த மரியாதை முறையியல் கம்பகாலத்தில் ஓங்கி செழிப்பாய் இருந்திருக்கின்றது. பாலகாண்ட்த்தினுள் மட்டுமே ஆதாரமாய் கிடைத்தவைகளை இக்கட்டுரையில் பதிவு செய்திருக்கின்றேன். இன்னும் முழு காப்பியத்திலும் இதன் தொடர்புகள் இருக்கின்றது என்பதையும் அறிஞர் பெருமக்கள் ஒப்புக் கொள்வர். இந்த மரியாதை முறையியல் இக்காலத்து மக்களாட்சிக்கும் ஒத்துப் போவதாய் ஒப்பு நோக்கும் போது தான் கம்பரின் பார்வையில் இருக்கும் விசாலம் புலனாகின்றது.