போட்டுத் தள்ளியிரலாமா???


சண்டைக்காட்சிகள் அரசல் புரசலாக வந்து கொண்டிருந்தன அந்தக் கால சினிமாக்களில். பாட்டுக்கு எந்த அளவுக்கு இசை இருக்கோ அதே அளவிற்குத்தான் சண்டைக் காட்சிகளிலும் இசை இருக்கும். கத்திச்சண்டை, கம்புச் சண்டை என்றால் அந்த கத்தி கம்புச் சத்தம் தான் இருக்கும்.

அப்புறம் முழுநீள சண்டைப் படங்கள் வந்த போது சண்டைகளோடு சத்தங்களும் கூடின. இப்போது Dts வசதிகளும், திருட்டு விசிடிகளில் பார்ப்பதை தடுக்கும் நோக்குடன் ஏக தடபுடலாய் சண்டைக் காட்சிகள் படம் ஆக்கப் படுகின்றன.

சுத்தி இருக்கும் எல்லாரையும் அடிச்சி துவைக்கும் நம்ம ஹீரோவுக்கு ஒரு அடியும் படாது என்பது எழுதப் படாத நியதி.

கம்பை சூப்பரா சுத்தி அடிச்சா ரஜனி ஸ்டைல் என்போம். ஆனால் முகநூலில் அதையே சாப்பிடுவது போல் ஒரு வீடியோ ஓடி வருகிறது.. அந்த வீடியோவில் தலைப்பு என்ன தெரியுமா? ரஜினியோட அப்பா. இது எப்படி இருக்கு..சூப்பரா இருக்கில்லெ…

சண்டைக் காட்சிகள்  எல்லாம் பித்தலாட்டம் என்பது நமக்குத் தெரியும். இருந்தாலும் நாம ரசிப்போம். இறைவனின் விளையாட்டும் அப்படித்தான் சண்டைக் காட்சிகள் போலத்தான் இருக்கும். சில நாட்கள் கழித்து யோசித்தால் சிரிப்பு தான் வரும்.

ஒல்லியான தேகம்..லேசான மயில் நிறம். காதல் வந்தது. (காதல் பார்வையில் கருப்பு எப்படித் தெரியுது??)..துரத்தி துரத்தி பின்னால் ஓடி காதல் செய்தான் காதலன். வழக்கம் போல நாலு டஜன் ஆட்கள் பின்னால் துரத்தி வர பில்லியனில் உட்கார வைத்து போலீஸ் மாமா ஆகி நடந்த திருமணம். சில வருடங்களில் அந்த தேகம் பெருத்து, இன்னும் கருத்து…அட..இதுக்கு போய் இவ்வளவு கலாட்டாவா என்று கணவனான காதலன் யோசிக்கிறான். இதுவும் விதியின் விளையாடு தான்.

சினிமாப்படம் என்று ஒரு படம். திரைப்படங்களையே கிண்டலடித்த திரைப்படம். சண்டைக்காட்சிகளையும் அந்தப் படம் விட்டு வைக்கவில்லை.. ஒரு குண்டு புறப்பட்டு வரும் இடத்திலிருந்து போய் சேருவதை நாசூக்காய் காமெடி செய்திருப்பர்.

அது சரி…வில்லன் ஒரு அடி அடித்தால் ஹீரோவுக்கு எதுவும் ஆகாது. ஆனா அதே ஹீரொ அரு அடி அடிச்சா வில்லன் அம்பேல் தான். ஏன் இப்படி நடக்கிறது.

சில குழந்தைகள் சேட்டை செய்தால், அவங்க சண்டைக்காரப் பரம்பரை என்று சொல்வார்கள். அதே போல், Sugar வந்திருக்கா என்று போனாலும், அந்த பரம்பரைக் கேள்வி வரும்.

என்னோட கேள்வி இந்த சண்டைக் காட்சிக்கும் பரம்பரை காரணம் இருக்குமோ?? யார் கிட்டெ கேட்க?? எனக்கு கம்பரை விட்டா யாரைத் தெரியும்??

கம்பர் தன்னோட iPod ஐ என்னிடம் குடுத்து பாட்டு பாரு விவரம் தெரியும் என்கிறார்.. பாத்தென்…அடெ..ஆமா..

கம்பராமாயணத்தில் ஒரு சீன் வருது. வில்லன் ஒரு அறை விட்டான். ஹீரோ வாங்கினான். ஆனால் ஹீரோ அதே மாதிரி அறை விட அந்த வில்லன் செத்தே போனானாம். (அறைஞ்சி செத்துப் போவது தான் இப்பொ உதை வாங்கி செத்து போவதாய் மாறி இருக்குமோ???)

ஆனா அடிக்கும் முன் எதையுமே பிளான் செய்யணும்கிற மாதிரி ஒரு மேட்டர் இருக்கு. இந்த சிச்சுவேஷனில் ஹீரோ அங்கதன். வில்லன் அசுணன் என்ற அரக்கன். அங்கதன் ஒரு அறை வாங்கினவுடன், இந்த அசுரண் தான் ராவணன்னு நெனைச்சி ஒரே அறை…ஆளு அம்பேல்…

மற்றம் மைந்தனும் உறக்கம் மாறினான்
இற்றிவன் கொலாம் இலங்கை வேந்து எனா
எற்றினானை நேர் எற்றினான் அவன்
முற்றினான் இகற்கு ஆதி மூர்த்தியான்.

வேறு எதாவது சண்டைக் காட்சிகளுடன் மீண்டும் வருவேன்.