சுனாமி சுந்தரி


Tsunami

ரொம்பவுமே கஷ்டப்பட்டு ஒருத்தர் வேலை செஞ்சிருந்தா, ‘உயிரெக் குடுத்துச் செஞ்சிருக்காரு’ என்பார்கள். ஆனால் உண்மையில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்தவர்கள், ஆரம்ப காலத்தில் அந்தமான் வந்தவர்கள் தான். நான் சொல்வது எல்லாம் ரெண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாடி. ஒரு பக்கம் ஆதிவாசிகளின் விஷம் கலந்த அம்புத் தாக்குதல், மறுபக்கம் கொசுத் தொல்லையால் உயிரை விட்ட பரிதாபங்கள். இத்தனை அவலங்களையும் மீறித்தான் இங்கு செட்டில்மெண்ட் ஆரம்பிக்கும் வேலைகள் தொடர்ந்தன.

ஆனால் இன்றைய நிலை அப்படி இல்லை. 25 வருடங்களுக்கு முன்பெல்லாம். வீட்டைவிட்டு வெளியே வந்தாலே எல்லாமே தெரிந்த முகங்களாகவே இருக்கும். ஆனால் இப்போதோ ஆறு கிலோமீட்டர் நடையாய் நடந்தாலும், எல்லாமே புத்தம் புது முகங்களாய்த்தான் தெரிகின்றன. (பெண்களின் முகங்களும் அதில் சேர்த்தி என்பதால் அவ்வளவு சோகம் இல்லீங்கொ..). அந்தக் காலத்தை வுடுங்க… இந்தக் காலத்திலும் ஒருத்தர் அந்தமானுக்கு வரணும்னா எம்புட்டு யோசிக்கிறாய்ங்க? காலிஃபுளவர் நல்லா இல்லென்னு ஒரு குடும்பத் தலைவி தில்லிக்குத் திரும்பிச் சென்றதாய் தகவல் வந்தது. (கரண்ட் இல்லாததெப் பாத்து, அந்தமானே பரவாயில்லென்னு தோனியிருக்குமோ?)

ரெண்டே ரெண்டு நிமிஷத்தில் அந்தமான் வர முடிவு செய்து உங்களால் வர முடியுமா? அதுவும் முதன் முறையாக வருபவர். அப்படி வந்தவர் தான் சேலத்தைச் சார்ந்த வழக்கறிஞர் ஜெயராஜன் அவர்கள். ஃபேஸ்புக் மூலம் ஆன அறிமுகம் ஒன்றினை மட்டும் நம்பி, தன் மகள் மகனுடன் வந்து சென்றார். அவர் எளிய தமிழில் சட்ட நூலகளை எழுதியிருப்பது தெரியும் ஆனால், 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருப்பதும் அதுவும் அதில் இரண்டு நூல்களுக்கு மாநில அரசு விருதும் பெற்றிருப்பது வியப்பான செய்தியாய் இருந்தது..

with kudai

புத்தகம் எழுதுவதையே சின்னவீடு மாதிரி பொண்டாடிக்குத் தெரியாமல் செய்ய வேண்டிய, என் அனுபவம் வைத்து அவரிடம் கேட்டேன். அவர் தம் மனைவி, பல வருடங்கள் முன்பே இயற்கை எய்தின விபரம் சொன்னதும், என் சந்தேகம் அடங்கிவிட்டது. அதான் மூச்சுக்கு முன்னூறு முறை எங்காவது எதிலாவது ஷேர் செய்யப்பட்ட தகவல் உங்களுக்கும் வந்திருக்குமே..வரலைன்னா படிங்க…. மனைவியின் கிச் கிச் இல்லையென்றால் மனுஷன் எங்கிருந்து எங்கு வந்து விடுகிறான் என்பதற்க்கு மோடி தான் சிறந்த சான்றாம். உங்களுக்கு இன்னொரு சான்று வேண்டுமென்றால், இதோ பிடியுங்கள் இந்த ஜெயராஜன் அவர்களின் முன்னேற்றத்தை.

தினத்தந்தி நாளிதழ் நடத்தும் ’ஜெயித்துக் காட்டுவோம்’ என்ற மாணவர்கள் வழிகாட்டுதல் நிகழ்வில் சட்டப் படிப்பு பற்றி பேசி வருகின்றார் அவர். அந்தமானிலும் சட்டம் படித்தால் அதன் வருங்காலம் எப்படி இருக்கும் போன்ற விவரங்களை விரிவாய், எளிதாய் அங்கங்கே நகைச்சுவை மிளிரவும் சொல்லியது, பார்வையாளர்களை நன்கு எட்டியதினை அவர்களின் முகங்கள் சொல்லியது. பெரிய நகரங்களில் அதிக ஆர்ப்பாட்டங்களுடன் நடக்கும் சங்கதியினை அந்தமானில், அதுவும் தமிழர்களுக்காய் நடத்த வேண்டுகோள் வைத்தவுடன் ஒப்புக் கொண்டது அவரின் பெரிய்ய மனதைக் காட்டுகின்றது.

அப்படியே பேச்சு வாக்கில் சுனாமி பக்கம் திரும்பியது பேச்சு. சுனாமியன்றும் அந்தமான் தான் இருந்தீர்களா என்று, அவர் கேட்டு வைக்க லேசாக அந்த நினைவலைகள் (பத்து ஆண்டுகளுக்கு முன் ஓடி நிழலாடியது). நீங்கள் வேண்டுமானால் 2 நிமிடத்தில் முடிவு எடுத்து அந்தமான் வந்திருக்கலாம். ஆனால் அந்த சுனாமி என்ற அரக்கியோ அந்தமானிலிருந்து தமிழகம் போக 20 நிமிடங்கள் யோசித்திருக்கிறாள்… மேலும் தொடர்ந்தேன்.

2004ல் சுனாமி வந்தபோது உண்மையில் அதன் ஸ்பெல்லிங் கூட எனக்குத் தெரியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ”நமக்கெலாம் இது எதுக்கு தேவை இல்லாமல்?” என்று அதனை அவுட் ஆஃப் செலெபஸ் ஆக்கிய காரணத்தால் அதுவே நிறையப் பேரின் வாழ்க்கையையே அவுட் ஆக்கிவிட்ட அவலம் நிகழக் காரணமாய் அமைந்துவிட்டது. ஆனால் சுனாமி தாக்கிய அன்று தான் சமதர்ம சமுதாயம் காணமுடிந்தது. இருப்பவர் இல்லாதவர், பெரிய பதவியில் இருப்பவர் சாதாரண வேலையில் இருப்பவர், இப்படி எல்லாரும் நடுரோட்டில் உயரமான இடத்தில் சுனாமி பயத்தில் படுத்து உறங்கியது அப்போது தான்.

பின்னர் நண்பர் பழனிகுமார் முயற்சியில் குவைத் பொறியாளர் பேரவையில் சுனாமியினை எவ்வாறு கையாண்டோம் என்று பேச ஏற்பாடு ஆனது. அந்த அரங்கம் கூட கடலிலிருந்து அருகில் தான் இருந்தது. கூட்டம் ஆரமபம் ஆன போதே, நமக்கும் சுனாமிக்கும் சம்பந்தம் இல்லை என்ற தொனியில் குவைத் பொறியாளர்கள் பேசினர். என் பேச்சையும் அப்படியே தொடர்ந்தேன். நாங்களும் உங்களைப் போல் தான் இருந்தோம் 2004 டிசம்பர் 25 வரை. அடுத்த நாள் தான் அதைப் பற்றிய தகவல் இல்லாமல் இருந்தது எவ்வளவு பிழை என்று புரிந்தது.

”கம்பராமாயணம் நல்லா படிச்சிருந்தா இந்த புலம்பல் இருந்திருக்காது” – இப்படி ஒரு திடீர் குரல் வந்தது. குரல் வந்த திசை பார்த்து திரும்பினேன். சாட்சாத் மிஸ்டர் கம்பர் தான், நீயா நானா கோபிநாத் ஸ்டைலில் கோட் மாட்டிக் கொண்டு நிற்கிறார். ’சுனாமிக்கும் ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்று லேசாய் பக்கத்தில் போய் விசாரித்தேன். விரிவாய் இந்த பாமரனுக்கும், கம்பர் விளக்க ஆரம்பித்தார். ”சுனாமி பற்றிய அறிவு அந்தக் காலத்திலேயே தமிழ் மக்களுக்கு தெரிந்திருக்கு. அந்தச் சுனாமி என்கின்ற பேரு மட்டும் தான் புதுசு..” மேலும் தொடர்ந்தார்.

அந்தமானில் சுனாமி அடித்த போது எப்படி எல்லா பொருள்களும் ஒன்றாய் சேர்ந்து அடித்துக் கொண்டு வந்ததோ அதே போன்று அந்தக் காலத்து கதையிலும் ஒரு சீன் வருது. அங்கே என்ன என்ன அடிச்சிட்டு வருதுன்கிறதெப் பாக்கலாமா? சூரியன், சந்திரன், தேவர்களின் விமானங்கள். நட்சத்திரங்கள், மேகங்கள், உலகத்தில் இருக்கும் எல்லா பொருளும் ஒன்னு சேந்ததாம். எப்பொ? அநுமன் கடல் தாண்டி போறச்செ… அதுக்கு கம்பன் சொல்லும் உவமை என்ன தெரியுமா? ஒன்னோட ஒன்னு சேராமெ இருக்கிற பொருளை எல்லாம் சேத்து அடிச்சிட்டுப் போற ஊழி (அதாங்க சுனாமி) மாதிரி இருந்திச்சாம்.

இப்பொ பாட்டு போட்டா, நம்ம தில்லி சேகரோ அல்லது கடலூர் அசோகனோ, சுனாமி கதை சரி… எங்கே சுந்தரி கதை? என்பார்கள். அதையும் சொல்லிட்டாப் போச்சி… அது ஒன்னும் இல்லெ… சுனாமி பாதித்த கட்சால் தீவில் ஒரு தமிழ்க் குழந்தை ஆதரவற்று நின்று, பின்னர் போர்ட்பிளேயர் ஆசிரமம் ஒன்றில் பார்த்தோம். அடுத்த முறை சென்ற போது “எங்கே அந்த சுனாமி சுந்தரி?” என்று கேட்டு வைக்க, அதுவே பெயராகி விட்டது. (நீங்க ஏதாவது வில்லங்கமா எதிர் பாத்தீங்களா என்ன?)

இப்பொ பாட்டும் பாக்கலாம்:

செவ்வான் கதிருங்குளிர் திங்களுந் தேவர் வைகு
வெவ்வேறு விமானமு மீனொடு மேக மற்றும்
எவ்வா யுலகத்தவு மீண்டி யிருந்த தம்மின்
ஒவ்வாதன வொத்திட வூழிவெங் காலு மொத்தான்

மறுபடியும் கம்பனுடன் வருகிறேன் வேறு ஏதாவது ஒரு சாக்கில்.

கடல் முதல் குடம் வரை


“நீங்க உண்மையிலேயே சிவில் இஞ்சினியரிங்க் தான் படிச்சீங்களா..?? பேசாமெ தமிழ் வாத்தியார் வேலைக்குப் போயிருக்கலாமே..!!!” – இப்படி என் தர்ம பத்தினி அடிக்கடி கேட்பதுண்டு. இந்த மாதிரி எழுத ஆரம்பித்தது முதல் அடிக்கடி இந்தக் கேள்வி வருது வீட்டில். ஆனா சமீப காலமா என்னை அறிமுகம் செய்பவர்கள் கூட முதலில் இவர் RTI ல் Expert என்று ஆரம்பித்து பின்னர் தான் இஞ்சினியர் என்று அறிமுகம் தொடர்வர்.. என்ன செய்ய?? நானும் இஞ்சினியர் தான் இஞ்சினியர் தான் இஞ்சினியர் தான் என்று வடிவேல் பாணியில் மூன்று முறை கத்த முடியுமா என்ன??

சரி எல்லாருக்கும் தேவையான குடிநீர் பிரச்சினை பத்தி எழுதி அந்த கேள்வி கேட்கும் ஆட்களிடமிருந்து தப்பிக்கும் முயற்சி செய்யலாம் என்ற நோக்கில் தான் இந்த போஸ்ட் வருகிறது. (வழக்கம் போல் கம்பர் வந்தால் அதற்கு நான் பொறுப்பாளி கிடையாது). கடந்த செப்டம்பர் 15 பொறியாளர் தினத்தன்று ஒரு Technical Presentation தரும் பொறுப்பு என் தலையில் வந்து விழுந்தது. சாதாரணமாய் இந்த மாதிரி வேலைகள் என் தலையில் ஜம்முன்னு வந்து விழும்.

கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கும் மேலாய் அந்தமானில் கொட்டித் தீர்க்கும்
மழை. வானம் கொட்டியவை எல்லாம் வீனே கடலில் போகும் விநோதம். மழையை என்றைக்கோ ஒரு நாள் அதிசயமாய் பாக்கும் ராமநாதபுர மாவட்ட மக்களுக்கு இந்த மாமழை பார்த்து பொறாமை தான் வரும். 1970களில் பரமக்குடியின் வீட்டில் ஆள் உயர குழாயில் எப்பொ தொறந்தாலும் தண்ணி வரும். 80 களில் வீட்டில் தரையை ஒட்டி குழாய் இருந்தது. 90களில் தெருவில் வந்து விட்டது. 2000 ஆண்டு ஆளுயர பள்ளத்தில் இருந்து தண்ணி இறைக்கும் அவலம். 2010 முதல் அடி பம்ப் காலம். 2020ல் மின்சார பம்பு போட வேண்டி இருக்குமோ??? (அது சரி.. மின்சாரம் 2020ல் இருக்குமா??)

சரி… மழை நீர் சேகரிப்பு பத்திய டாபிக் பேசினா ரொம்பவும் பொருத்தமா இருக்கும்னு நெனைச்சி தயார் செய்ய ஆரம்பிச்சேன். Engineers Day செமெ மழையோடவே விடிஞ்சது.. நம்ம டாபிக்குக்காகவே தொடர்ந்து பெய்த மாதிரி.. அந்த அளவு ஊத்து ஊத்து என்று ஊத்தியது (அது சரி .. செமஸ்டர் பரிச்சை சரியா எழுதாமெ போனா, ஊத்திகிச்சின்னு ஏன் சொல்றோம்??) நெனைச்ச மாதிரியே அந்த டாபிக் அன்னெக்கி களை கட்டியது. மற்றவர்கள் உலக சமாச்சாரங்களை படம் போட்டு காட்ட, நான் மட்டும் உள்ளூர் பிரச்சினை பத்தி பேசினா.. கேக்க கசக்குமா என்ன??

தண்ணி பத்தின கணக்கு பாத்தா.. இப்பவே கண்ணெக் கட்டுதே…? ஒலகத்துலெ 70% தண்ணிதான் (அந்த தண்ணியெக் கணக்கிலெயே சேக்கலை). அதிலெ வெறும் 3% தான் குடிக்க லாயக்கா இருக்காம். அதிலும் 1% தான் கைக்கு எடும் தூரத்திலெ இருக்கு. மத்த 2% துருவப் பகுதியிலெ மாட்டிக் கெடக்குது. உலகத்து தண்ணி மொத்தத்தையும் ஒவ்வொரு ஆளுக்கும் கூறு போட்டு குடுத்தாலும் ஆளுக்கு 5100 கணமீட்டர் அளவுக்கு தண்ணி கெடைக்குமாம் 2025 ல் கூட. (அது 1989ல் 9000 Cubic Meter ஆக இருந்தது என்கிறது படிச்சா சோகம் அதிகமாகும்..)

அந்த அளவு தண்ணியே பொது மக்கள் தேவைக்கு போதுமானதா இருக்கும். ஆனாலும் பற்றாக்குறை.. குடம் குடமா வரிசையா நிக்குதே?? ஏன்.. அப்படி? ம்.. அப்படி கேளுங்க.. நம்ம ஆளுங்க இருக்காகலே உலக மக்களின் மூன்றில் இரு பகுதி மக்கள் கால்வாசி மழை பெய்யும் பகுதியிலெ இருக்காய்ங்க.. அப்புறம் இந்த மழை இருக்கே மழை.. அது நம்ம ரமணன் சொல்ற மாதிரி.. வரும்.. ஆனா வராது என்று பூச்சாண்டி காட்டும். உலகளாவிய கதையும் இது தான்.

சிரபுஞ்சி தான் உலகத்தின் அதிக ஈரமான பகுதி (குடை வியாபாரம் அங்கே பிச்சிட்டு போகுமோ?). வருட மழை நாலு மாடி அளவுக்கு பெய்யுமாம். ஆனாலு மழை இல்லாத சொற்ப காலம் குடிநீர் தட்டுப்பாடு இருக்குமாம். அந்தமானும் இதுக்கு விதி விலக்கு கிடையாது. 4 மாசம் தண்ணி கஷ்டம். (ராமநாதபுரம் அளவுக்கு இல்லை தான்) 8 மாசம் நல்ல மழை பெய்யும். வள்ளுவர் சொல்லும் நல்ல மழை என்பது தேவையான நேரத்தில் தேவையான அளவுக்கு தேவையான இடத்தில் பெய்யும் மழையாம். அதாவது மனைவியின் அன்பு அல்லது கோபம் மாதிரி. (இது வள்ளுவர் சொல்லாததுங்க)

அந்தமான்லெ அதிகமா காடு தான் இருக்கு. மரங்கள் எல்லாம் வெட்டி அணை கட்டுவது என்பது இயற்கைக்கு செய்யும் துரோகம் ஆயிடும். ஒரு யோசனை வந்தது NCC Officer ஒருவரின் மூளையில். கடலை ஒரு ஓரம் கட்டி அணை கட்டினா எப்படி என்று. அதன் ஆய்வு நம்ம கைக்கு வந்தது. Fishing & Shipping வேலைக்கு லாயக்கில்லாத… கடலின் ஒரு பகுதியை அணை போட்டு தடுத்து குடிநீர் பிரச்சினைக்கு முடிவு கட்டலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அப்பொ கடல் நீரின் உப்பை எப்படி எடுக்க.?? நம்ம டாஸ்மாக் ஐடியா தான்.. காட்டமா இருக்கும் சரக்கில் தண்ணி கலக்குறோமே, அதே … அதே தான். அப்படியே மழை தண்ணியை அதுலெ கலக்க கலக்க மூணு வருஷத்தில் நல்ல தண்ணி ஆகும் என்று Delhi IIT உறுதி செய்தது.

இவ்வளவு சொல்லிட்டு கம்பர் வரலை என்றால், அது நல்லாவா இருக்கு? கம்பர் ஏதாவது ஐடியா வச்சிருப்பாரோ? கேட்டேன். அவரோ, “பேசாமெ கடல்நீர் முழுசா வெளியே போகுற மாதிரி ஒரு மதகு வச்சிட்டா??” இப்படி கேக்கிறாரு கம்பர். என்ன சாமி இது… இப்படி யாராவது செஞ்சிருக்காகளா? மறுபடியும் கம்பர்: “நான் எழுதின ராமாயணம் ஒழுங்கா படிச்சா இந்த சந்தேகம் வராது”. ஓடிப் போய் படிச்சா… ஆமா…விளங்குது.

அனுமன் முதன் முதலாக Gate way of Lanka வைப் பார்க்கிறார். அது எப்படி எல்லாம் இருக்கு என்பதாய் சொல்கிறார் அனுமன் வாயிலாக. மேருமலை வச்சி செய்த வழியோ? தேவலோகம் போகும் படிக்கட்டோ? ஏழு உலகமும் ஆடாமல் இருக்க முட்டு கொடுத்த தூணோ? இவ்வளவு சொல்லிட்டு, கடல் நீர் வழிந்தோட செய்த மதகோ…?? என்ற கேள்வியோடு அனுமன் பார்வையில் செல்கிறது கம்பன் அறிவியல் பார்வை.?

மேருவை நிறுத்தி வெளி செய்ததுகொல்? விண்ணோர்
ஊர் புக அமைத்த படுகால்கொல்? உலகு ஏழும்
சோர்வு இல நிலைக்க நடு இட்டது ஒரு தூணோ?
நீர்புகு கடற்கு வழியோ? என் நினைந்தான்.

கம்பனின் வேறு பார்வையினை வேறு நாளில் பார்ப்போம்.

சும்மா இரு


சும்மா இருத்தல் சுகம் என்று ஒரு தத்துவம் இருக்கு தெரியுமா??

நம்ம ரஜினி சார் சொல்லும் சும்மா..சும்மா… வே ஒரு அலாதியான அழகு தான்.

ஹிந்திப் பாட்டு சும்மா சும்மா தேதே கேட்டிருப்பீங்க… ஹிந்தி சும்மா மட்டும் சும்மா கிடைக்காதுங்க… (ஹிந்தி தெரியாத மக்களுக்கு : சும்மா என்றால் முத்தம் என்று அர்த்தம்)

சும்மா இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை வடிவேல் ஒரு படத்தில் காட்டி இருப்பார்.

ஓரு பொறுப்பான பையனை கூப்பிட்டு கேட்டாகளாம், என்னப்பா செய்றே என்று.

பையனும் பதில் சொன்னான்… என் அப்பாவுக்கு உதவியா இருக்கேன்.

அது சரி … அப்பா என்ன செய்றார்??

அப்பாவா… அவரு சும்மா இருக்கார்.

இது எப்படி இருக்கு???

பிரச்சினைகளுக்கு முடிவுகள் என்று ஒரு பட்டியல் போடும் போது, சும்மா இருத்தலும் ஒரு முடிவு என்கிறார்கள்.

இது எப்படி ஒரு தீரவு ஆகும்?

எனக்கு ஒரு சப்போர்டிங் டாக்குமென்ட் கெடைச்சது.

1869களில் அநாதை ஆசிரமம் கட்ட ஆயிரம் ஏக்கர் நிலம் 88 ரூபாய்க்கு 21 ஆண்டுகள் லீசுக்கு ஆங்கில அரசு ஒரு பாதிரியாருக்கு (டாக்டர் திஸ்ஸாட்) தந்ததாம்.

அவருக்கு என்ன பிரச்சினையோ, ஒரு அஞ்சு ஆறு வருஷத்துக்கு சும்மாவே இருந்திட்டாரு.

ஆங்கில அரசும் அதை திரும்ப வாங்கி பெரிய அளவில் டெவலப் பன்னாங்க…

அது தான் இன்று இந்தியாவின் ஒரே இயற்கைத் துறைமுகம் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம்.

திஸ்ஸாட் சுறுசுறுப்பா இயங்கி இருந்தா ஒரு ஆசிரமம் வந்திருக்கும்.

சும்மா இருந்ததால் துறைமுகம் வந்தது…

சும்மா வலைப்பூ படிச்சி வைக்கும் மக்களே… கலைப்படாதீங்க.. ஏதாவது நல்லது நடக்கும்…. சும்மா இருங்க…

சும்மா இருத்தலும் சுகம் தான்…. சும்மா சொன்னேன்…

(ஆதாரம் : கடல்வழி வாணிபம் – நரசய்யா; இவர் விசாகப்பட்டினத்தில் தலைமைப் பொறியாளராய் இருந்து ஓய்வு பெற்றவர்.)

அப்பொ ரிடையர் ஆனா நமக்கும் வேலை இருக்கு!!!!