அந்த ஆளு சரியான ஜால்ரா என்பார்கள்… ஜால்ரா அடிப்பது என்னமோ அவ்வளவு ஜாலியான வேலெ மாதிரி நெனைக்கிறது அப்படியே தெரியும். ஒத்து ஊதுறது என்பது அதற்குச் சமமான தமிழ் வார்த்தையாகச் சொல்லலாம். ஒத்து ஊதுபவரிடம் ஒரு சிக்கல் இருக்கும். மெயின் கலைஞர் என்ன வாசிக்கிராறோ, அதை ஒத்தபடி தான் ஒத்து ஊத வேண்டும். அவருக்கு என்ன தான் ஆசையா இருந்தாலும் கூட, கும்கி படத்திலெ வரும் ஸொய்ங் பாட்டை வாசித்துவிட முடியாது. பல கணவன் மனைவி உறவுகள் இந்த ஒத்து ஊதும் தர்மத்த்தில் தான் ஓடிகிட்டே இருக்கு. அப்படியே அந்த ஒத்து ஊதலில் ஏதாவது பிசகினால் அப்புறம் தர்ம அடி தான்.
அலுவலகங்களிலும் இந்த ஜால்ரா சமாச்சாரங்கள் அதிகம் காணக் கிடைக்கும். அரசியலில் இது தான் பாலபாடமா இருக்குமோ!! (அரசியலை இங்கே இழுக்காமல் விட்றலாம்… இதுக்கு இதைப் படிக்கும் பலர் ஒத்து ஊதுவீங்கன்னு நெனைக்கிறேன்.) அது சரி ஜால்ராவுக்கும் ஜாங்கிரிக்கும் என்ன சம்பந்தம்…? (அது ப்ளோவிலெ வந்திடுச்சி…இதுக்கும் வெளக்கம் சொல்ல வேண்டியிருக்கு பாருங்க) அது வேறு ஒண்ணுமில்லீங்கோ, ஜாங்கிரி மாதிரி தித்திப்பாவும் இருக்கும். அதே நேரத்தில் சிக்கலாவும் இருக்கும். அளவோட இருக்கணும். அதிகமாப் போனா, திகட்டிடும் முடிச்சை அவிழ்க்கப் பாக்கக் கூடாது..அப்படியே ஸ்வாகா செஞ்சிரணும். ஜாலராவும் அப்படித்தானே?? என்ன ஏதுன்னு யோசிக்கவே படாது.. ஜிங்..ஜிங்.. தட்டிவிட வேண்டும். (இந்த வெளக்கம் போதுமா?)
சமீபத்தில் Office Procedures (அலுவலக நடைமுறைகள் – இப்படி சொன்னா சரியா??) பத்தி ஒரு நாள் டிரைனிங் கிளாஸ் எடுக்க அழைப்பு வந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கூடி இருந்தனர். பெரும்பாலும் போலீஸ், ரிசர்வ் போலீஸ், தீயனைப்பு போலீஸ், தபால்துறை, மற்றும் கூட்டுறவு தொடர்பான அலுவலகங்களின் கூட்டனியாய் வந்திருந்தனர். பொதுவா இந்தமாதிரி வகுப்புகளை அரசு ஊழியராய் சேரும் போது தான் நடத்துவார்கள். வந்திருந்த ஆட்களை பாத்தா, பழம் திண்ணு கொட்டை போட்ட ஆட்களாவே தெரிந்தனர். அறிமுகம் செய்து கொள்ளும் போதே, எத்தனை ஆண்டு அனுபவம் என்பதையும் சொல்லுமாறு வேண்டினேன். ஏழு முதல் முப்பது ஆண்டுகள் வரை பணி செய்த அனுபவசாலிகளுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய சூழல்.
இந்த அலுவலக நடைமுறைகள் பற்றி 60 பவர்பாய்ண்ட் ஸ்லைட் தயாரிக்கும் போதே, என் உதவியாளர் சந்தேகம் எழுப்பினார்… சார் இதை நாமளே முக்காவாசி ஃபாலோ பன்ற மாதிரி தெரியலையே??? இதையே வைத்து வகுப்பை ஆரம்பித்தேன். தெரியாம செய்றதை, இனி தெரிஞ்சே செய்ய வைக்கிறதுக்குத் தான் இந்த டிரைனிங் உதவும். ”நீங்க பாட்டுக்கு ஏற்கனவே ஒரு பிரச்சினையில்லாம ஓடிக்கிட்டிருக்கிற அரசு இயந்திரத்தை, உங்க அலுவலக நடைமுறை அறிவை பயன்படுத்தி, நிப்பாட்டி வச்சிராதீங்க” – என்ற வேண்டுகோளோடு நடைமுறைக்கு ஒத்துப் போகும் குணமும் இருக்கணும் என்று ஆரம்பித்தேன்..
நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது. கோப்புகளில் எழுதுவது பற்றி வரும் வரை. அதில் தான் சிக்கலே வந்தது. கீழ்நிலை பணியாளர்கள் எழுதியதை மாற்றம் செய்து தரச் சொல்லியோ, எழுதிய பக்கத்தையே கிழிச்சிட்டு ”புதுசா எழுதி தாங்க” என்று சொல்வதையோ, செய்தல் கூடாது என்கிறது நடைமுறை. ஆனா தினம் தினம் இந்த அவஸ்தையில் பலர் இருப்பது தெளிவாய்த் தெரிந்தது. அதிகாரிக்கு விருப்பம் இல்லாத கோப்பு வந்தால் அதனை அவர்தம் விருப்பம் போல் மாற்றி எழுத அதிகாரிகள், சற்றே மூளையினைக் கசக்க வேண்டும். கொஞ்சம் அதிகமாவே எழுதனும். தேவையா இதெல்லாம்.? தனக்கு எப்படி வேணுமோ அப்படி ஊழியர்கள் எழுதிட்டா, அப்புறம் அதிகாரி சும்மா ஒரு கைநாட்டு வச்சா முடிஞ்சது ஜோலி… இப்படி ஒத்து ஊதும் கலைக்கு ஒத்துப் போகும் அதிகாரிகள் அதிகம் என்று சண்டைக்கு வந்தனர் மகளிர் பயிற்சியாளர்கள். மீறி எழுதினா, தண்ணியில்லாக் காடு தானாம்… (அது சரி..அந்தமானுக்கே வந்தாச்சி..அப்புறம் வேறு எங்கே தான் மாத்திட முடியும்?)
தன் கீழ் பணியாற்றும் ஊழியர்களை சுதந்திரமாய் வேலை செய்ய அனுமதி அளிக்கும் உயர் அதிகாரி தான் நியாயமான முறையில் பணியாற்ற முடியும். அந்த மாதிரியான அனுமதி கொடுக்காத போது அதன் Scrutiny அவ்வளவு தெளிவாக இருக்காது என்று எவ்வளவோ சொல்லிப் பாத்தேன். அதெல்லாம் கதைக்கு ஆவாது சார்…என்று தான் ஒத்து ஊதினர். கடைசியில் சரி நீங்கள், உங்கள் கீழ் வேலை பார்க்கும் ஆட்களிடம் இதனைச் செய்யாது இருங்கள் என்று சொல்லி முடித்தேன்.
நிலைமை சீரியஸாக போகவே, தமிழருவி மணியன் புத்தகத்தில் படித்த Noting பற்றிய செய்தியினை விவரித்தேன். ஒரு அலுவலகத்தில் எல்லாம் … எல்லாம் தான்… முடிந்த பிறகு Approved என்று எழுதி கையொப்பம் இட்டாராம் ஓர் அதிகாரி. பின்னர் ஏதோ கொடுக்கல் வாங்கலில் சிக்கல் வரவே, கோப்பை வரவழைத்து, Not Approved என்று அர்த்தம் வரும்படி Not சேர்த்து எழுதி விட்டாராம். பின்னர் வரும்படி போய்விடும் என்று பயந்த, பாதிக்கப்பட்டவர் நன்கு, அதிகாரியைக் கவனித்து வைக்க, மீண்டும் கோப்பு பறந்தது. Not Approved என்பது ஒரு எழுத்து d சேர்த்த பின்னர் Noted Approved என்றாகி விட்டதாம். இப்படி தேவைக்கு ஏற்ப எழுதும் அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு ஜால்ரா அடித்து முடித்தேன்.
உயர் அதிகாரிக்கு எது பிடிக்கும்? எப்பொ எதைப் புடிக்கும்? இந்த மாதிரி தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்கள் வருவதில்லை. நமக்கு எதுக்கு அதெல்லாம், ரூல்படித்தான் எழுதுவேன் என்பவர்களுக்கு சிக்கல் தான். உயர் அதிகாரிக்கும் பிடிக்கனும் அதே சமயம் ரூல் படியும் இருக்கனும் என்று உழைப்பது ஒரு கலை தான். அது எல்லாருக்கும் அவ்வளவு சுலபத்தில் வந்துவிடாது தான். (கவலைப் படாதீங்க, நானும் உங்க லிஸ்ட்லெ தான் இருக்கேன்.)
அது சரி மேலதிகாரி மனசு கோணாமல் நடப்பது அல்லது ஜால்ரா அடிப்பது என்னமோ இப்ப வந்த சங்கதி என்று நினைக்கிறீங்களா?? உங்க கணக்கு தப்புங்க… இதை நிரூபிக்க இப்பொ நானு கம்பராமாயணத்தெக் கொண்டுவர வேண்டி இருக்கும். தேவலிங்களா??
விபீஷணனை தம் கட்சியிலெ சேத்துக்கலாமா என்று ராமர் பொதுக்குழு கூட்டி கேட்கிறார். சுக்ரீவன், கூடவே கூடாது என்கிறார். அப்புறம் தளபதி மாதிரி அனுமன், சேத்துகிடலாம் என்று சொல்ல, அந்தத் தீர்மானம் நிறைவேறுகிறது. சுக்ரீவன் ராமனின் பல்ஸ் பிடிச்சிப் பாத்து வைக்கிறார். என்னெக்காவது தேவைப்படும் என்று. சரியான சான்ஸ் மாட்டுது. கும்பகர்ணனைப் பத்தி நல்லவர் என்று விபீஷணன் சொல்கிறார் மேலதிகாரி ராமரிடம்.
சட்டுன்னு உடனே ஜிங் என்று ஜால்ரா அடிக்கிறார், நம்ம சுக்ரீவன். இவரை நம்ம கூட சேத்துகிட்டா நல்லது என்று. இதிலெ வேடிக்கை என்னென்னா, அதை ராமரும் ஒத்துக் கொள்வது தான். அந்த அதிகாரி ராமர். அங்கே ஊழியர் சுக்ரீவன். கொஞ்ச நாளுக்கு முன் எடுத்த முடிவுக்கும் இப்போது எடுத்த முடிவிற்கும் எவ்வளவு வித்தியாசம். வாலிருக்கும் ஜந்துக்கே விளங்கிடுச்சி.. உங்களுக்கு வெளங்காமெப் போகுமா என்ன??
பாட்டுப் பாருங்க:-
என்று அவன் உரைத்தலோடும் இரவி சேய் இவனை இன்று
கொன்று ஒரு பயனும் இல்லை கூடு மேல் கூட்டிக் கொண்டு
நின்றது புரிதும் மற்று இந் நிருதர்கோன் இடரும் நீங்கும்
நன்று என நினைத்தேன் என்றான் நாதனும் ஈது என்றான்.
[அப்படி விபீடணன் சொன்னவுடன், சூரிய புதல்வனான சுக்கிரீவன். இன்னெக்கி இந்த கும்பகர்ணனை கெடாசுரதாலெ எந்தப் புண்ணியமும் இல்லெ. நம்ம கூட சேத்துகிட்டா, விபீஷணனுக்கும் நல்ல கம்பெனி கெடைக்கும். இதுதான் சூப்பர் ஐடியா என்று சொல்ல, ராமரும் சூப்பரோ சூப்பர் என்று சொல்லி ஏத்துக் கிட்டாராம்]
இனிமேல் உங்க ஆபீசர் மனசு கோணாத மாதிரி வேலை செய்வீங்களா?? கம்பரை எப்படி எல்லாம் பயன் படுத்த வேண்டி இருக்கு??